சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துபவனாக மனிதன் அமைகின்றான். அம் மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளபவனும் அவனே. தான் சூழலில் ஏற்படுத்திய மாற்றம் தன் வாழ்வியற் சூழலின் இயல்பிற்கு எதிராக அல்லது தனது சூழலிற்குக் கேடுவிளைவிப்பதாக மாறுவதைக் கண்ட அவன் ‘சூழல்’ என்பதைத் தனித்தன்மையுடன் கவனிக்க முற்பட்டான். அவனது கவனிப்பு தற்காலத்தில் ‘சூழலியல்’ எனும் தனித்துறை உருவாகக் காரணமாக அமைந்தது. சூழலியல் குறித்த இந்த கவனிப்பு மனிதன் இயற்கையுடன் மாறுபடாத, ஒன்றி இயங்கிய காலத்திலேயே தமிழனிடம் இருந்து வந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
உயிரிவகைப்பாடு
தனது வாழ்வியற் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களைப் பற்றியும் தான் பொதுவான அறிவுடையவனாக விளங்குவதே சூழலியல் அறிவின் முதற்படியாகும். தனது சூழலில் என்னென்ன இருக்கின்றது? என்ற வினாவிற்கான விடையை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயங்கும் அனைத்து உயிரினங்களும் அறிந்திருத்தல் வேண்டும். இதில் விலங்குகளைநோக்கும் பொழுது தனது சூழலில் இயங்கும் பொருட்களில் இவையிவற்றை உண்ணவேண்டும். இவ்வுயிரினத்தை இம்முறையில் தாக்கி அழிக்கவேண்டும் என்னும் நிலையில் துல்லியமான அறிவுடையனவாக விளங்குவதை அவற்றின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. மனிதனைப் பொருத்தமட்டில் அவ்வகையில் தெளிவான அறிவுடையவனாக விளங்குகின்றானா? என்பது கேள்வியாகவே உள்ளது. பண்டைத் தமிழினம் தான் இயங்கிவரும் சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியரின்
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”1
எனும் நூற்பாவான் விளங்கும். தன்னைச் சுற்றியியங்கும் உயிரினங்களை அவற்றின் உணர்வின்வழி அறிகின்ற அறிவின் அடிப்படையில் வகைப்படுத்தியதுடன்
“புல்லும் மரனும் ஓரறி வினவே”2
“நந்தும் முரளும் ஈரறி வினவே”3
என எவ்வெவ்வுயிர் எவ்வகை அறிவுப்பகுப்பினுள் அடங்கும் என அறிவியல் அடிப்படையில் வகைப்படுத்திய பெருமை உலகமாந்தருள் பண்டைத்தமிழருக்கே உரியதென்றால் அது மிகையாகாது. உயிர்கள் இன்னின்னவை என்று அறிந்திருந்ததுடன் அவற்றின் தன்மைகளையும் வேறுபடுத்தி நன்காராய்ந்திருந்த தமிழர்கள் அவற்றை வகைப்படுத்தியும் கண்டனர் என்பதற்கு மேற்கூறிய தொல்காப்பிய அடிகள் சான்றாக அமைகின்றன.
உயிரி உடற்கூறியல் அறிவு
தனது சூழல்உயிரிகள் பற்றிய தெளிவான அறிவுடன் அவ்வுயிரிகளின் உடற்கூறுபற்றியும் செறிவான அறிவுடையவர்களாகப் பண்டைத் தமிழ் மக்கள் விளங்கினர்.
“புறக்கா ழனவே புல்லெனப் படுமே”4
“அகக்கா ழனவே மரமெனப் படுமே”5
எனும் தொல்காப்பிய நூற்பாக்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. இது போன்ற பல நூற்பாக்கள் மரபியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று உழுந்தினைக் கண்ணால் பார்த்தும் அறிந்திராமல் உழுந்திட்டு ஆட்டிப் பதப்படுத்தப்பட்ட மாவுப்பொட்டலங்களை வாங்கி இட்டிலியாகவும் தோசையாகவும் சமைத்து உண்ணுகின்ற நகரத்தார் மற்றுமின்றி அதனை விதைத்து உழுது அதனைக்கொண்டு பணம் பார்க்கின்ற உழவன் கூட ‘உழுந்து’ எனப் பெயரளவில் மட்டுமே சொல்கின்றான். அது பற்றிய நுணுக்கமான பார்வை அவனிடம் இல்லை எனலாம். தான் வாழும் இயற்கைச் சூழலில் இருந்து விலகிச் சென்றமையையே இது காட்டுகின்றது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு தாவரங்களின் தன்மையினை நன்கு வேறுபடுத்தி அறிந்திருந்த தமிழ் மக்களுள் ஒருவரான இளம்புல்லூர்க்காவிதி என்னும் புலவர்
“……… மயிர்க்காய் உழுந்தின்”6
என உழுந்து என்பது மயிர்களைப் போன்று அமையப்பெற்ற மேற்பரப்பை உடையகாய் எனச் சுட்டுவதிலிருந்து அவர் உழுந்தினை உற்றுநோக்கிப் பிற காய்களுக்கும் உழுந்திற்கும் இடையேயான வேறுபாட்டை உணர்ந்து சுட்டியுள்ளமை அறியவருகின்றது.
வண்டுகள் பல பறப்பதை நாம் பார்த்துள்ளோம். அவற்றின் உடலமைப்பு பற்றி நம் கவனத்தைச் செலுத்திப் பார்ப்பதில்லை. தனது சிறகைக்கொண்டு பறக்கின்றது என்பது நாம் பறப்பவற்றைப் பற்றி பொதுவாக அறிந்து வைத்துள்ளதாகும். ஆனால் அது மேற்புறத்தமைந்த புறச்சிறகுடன் அதற்குள் உட்புறமாக அமைந்த அகச்சிறகையும் உடையது என்பதை
“………. அஞ்சிறைத் தும்பி”7
எனும் குறுந்தொகைப் பாடலடி புலப்படுத்தும். ஒரு சிற்றினம் என்றாலும் அதனை உற்றுநோக்கி நன்கறிந்துகொள்ளும் தன்மை பண்டைத் தமிழ் மக்களிடம் இருந்துள்ளது என்பதை, தங்கத்தை உரைத்து அதன் சுத்தத் தன்மையைச் சோதிக்கும் கட்டளைக்கல்லில் பொன்னை உரைப்பதால் உண்டான கோடுகளைப் போன்று இடையிடையே பொன்னிறக் கோடுகளையும் நீலமணிபோன்ற வண்ணத்தையும் உடைய தும்பியைப் பற்றி
“கட்டளை யன்ன மணிநிறத் தும்பி”8
என ஐங்குறுநூறு கூறுவதிலிருந்து அறியமுடிகின்றது. தன் சூழலில் தன்னுடன் இயங்கிக்கொண்டிருக்கும் உயிரினங்களை உற்றுநோக்கி அவற்றின் உடற்கூறியலைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ள தமிழர்களின் திறமை போற்றத்தக்கதாகும்.
சூழல் தொகுதியும் திணைப்பகுப்பும்
பண்டைத் தமிழரின் செறிவான சூழலியல் அறிவின் வெளிப்பாடே திணைப்பகுப்பாகும். தான் வாழும் உலகப்பரப்பின் தன்மைகளை வேறுபடுத்தி ஆராய்ந்தறிந்திருந்த தமிழன் அவற்றின் புவியியல் தன்மையின் அடிப்படையில் ஒவ்வொரு வேறுபட்ட நிலப்பரப்பையும் தனித்தன்மையுடைய ஒரு திணை எனக்கொண்டு ஐந்திணையை வரிசைப்படுத்தினர். உலகப்பரப்பில் உள்ள இந்நிலவியல் வேறுபாடானது அனைத்து நாடுகளிலும் அமைந்துள்ள ஒரு பொதுமைச் சூழல் எனினும் அதனை வகைப்படுத்தி பன்னெடுங்காலத்திற்கு முன்பே பதிவு செய்த இனம் தமிழினமாகும். பண்டைத் தமிழன் வகைப்படுத்திய இத்திணை ஒவ்வொன்றும் ஒரு தனித்த சூழல்தொகுதி (நுஉழளலளவநஅ) ஆகும். இயற்கையோடு இணைந்திருந்த தமிழன் தனது சூழலைத் துல்லியமாக அறிந்து தான் வாழும் பரப்பின் தனித்தன்மையை சூழல் தொகுப்பினைத் தெளிவாக வகைப்படுத்த அவனுக்கு உதவியது அவனது சூழலியல் அறிவேயாகும்.
திணையை ஐந்தாய் வகைப்படுத்திய ஆதித்தமிழன் அதனை வரிசைப்படுத்தும் பொழுது குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் எனும் நான்கையும் முன்வைத்து ‘நானிலம்’ எனச் சுட்டியும் எஞ்சிய பாலையை ‘நடுவுநிலைத்திணை’ எனவும் சுட்டுகின்றான். தான் வாழும் சூழல் தொகுதியை நன்கறிந்திருந்தமிழன் தனித்தன்மையுடன் நிலைத்திருந்த நிலையான சூழல் தொகுதியை உற்றுநோக்கி அதன் நிலைத்தன்மை கருதி பாலை ஒழிந்த நான்கு நிலத்தினையும் ‘நானிலம்’ எனப் பாகுபடுத்தினான். நிலையான நான்கு நிலங்களிற் திரிந்து வளமிருப்பின் நானிலத்துள் ஒன்றாயும் வளமின்றியிருப்பின் பாலையாகவும் தோன்றும் நிலையானதிலிருந்து திரிந்து நிலையற்றதாக உருவாவதை நடுவுநிலைத் திணையெனக் கூறி திணையை ஐந்தாக இல்லாமல் நான்காக்கினர்.
தமிழன் வகைப்பகுடுத்திய திணைகள் ஒவ்வொன்றும் இயற்கையேயன்றி செயற்கையன்று. இயற்கையாக இயல்பாய் அமைந்த நிலத்தை அடிப்படையாகக்கொண்டு தன் வாழ்வியலை அமைத்துக் கொண்டானே தவிர தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக தான் வாழும் நிலத்தில் எந்தவொரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திவில்லை அல்லது மாற்றியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு திணையில் ஏற்படும் பாதிப்பு பிற திணையையும் பாதிப்பதாய் அமையும். குறிஞ்சி நிலத்தின் வீழருவி முல்லையில் ஓடி மருத்தில் பரவி வளப்படுத்தி நெய்தல் நிலத்தில் கழிமுகக் காடுகளை வாழ்வித்து கடலுள் அடங்குகின்றது. குறிஞ்சியில் போதிய மழை இல்லையெனில் இவை நிகழ்வதற்கு இடமில்லை என்பது வெளிப்படை. குறிப்பிட்ட சூழல் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்தினால் அது அச்சூழல் தொகுதியில் வாழும் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதனுடன் இணைந்த அனைத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கும் என்பது தற்காலச் சூழலியலாளரின் கருத்து. பண்டைத் தமிழரின் செயல்பாடானது அவ்வாறு அமையவில்லை எனலாம்.
சூழல் பேணிய தமிழன்
தற்காலத்து மனிதன் தன் பேராசையால் உற்பத்திப் பெருக்கத்தினை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயற்கையை வரையறையின்றிச் சுரண்டியதன் விளைவாக இயற்கைச் சூழலில் அமைந்த உயிர்ப்பன்மயப் பரவலில் (biodiversity) இடம்பெற்றிருந்த பல சிற்றினங்களை இல்லாமற் செய்துவிட்டான். பல்வேறு உயிரினங்களின் வாழிடங்களின் மீது மனிதன் செலுத்திய ஆதிக்கம், தன் வசதிக்காக ஏற்படுத்திய சூழலியல் எதிர்ச்செயல்பாடுகள் பிற உயிரின அழிவிற்குக் காரணமாக அமைந்தன. பிற உயிர்களுக்குப் பிரச்சனை எனும் பொழுது அதுபற்றிய கருத்தே இல்லாமல் மேன்மேலும் சூழலுடன் மோதிய மனிதன் தன்னினத்ததிற்கே தனது செயல்பாடு குந்தகம் விளைவிக்கிறது எனும் நிலையில்தான் சூழலியல் பற்றிய கவனிப்புதேவை என்பதை உணர்ந்துள்ளான். ஆனால் பண்டைத் தமிழன் எக்காலத்திலும் தனது சூழலுக்கு எதிரானவனாய் அமையவில்லை மாறாகத் தன் சூழலைப் பேணவே செய்துள்ளான். தான் பயனடைய வேண்டி உயிர்காக்கும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தும் பொழுதிலும் மரத்தினை அழிக்காது பாதுகாத்துப் பேணவேண்டும் என்ற உயரிய சிந்தனை பண்டைத் தமிழனிடம் இருந்ததை,
“மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”9
எனும் நற்றிணை அடி விளக்குகிறது. இது மனித சமுதாயத்தில் ‘மரத்தைக் கொன்று மருந்து கொள்ளார் உலகோர்’ எனும் நீதி நிலவியதைக் கூறுவதாக அமைந்துள்ளது. சுயநல நோக்கில் மரங்களை முடிந்தவரை அழித்துவிட்டு உலக வெப்பமயமாதலுக்கும் மழையின்மைக்கும் வருந்தும் தற்கால மனிதனுக்கு முன்னர் இயற்கைபேணிய பண்டைத் தமிழன் உயர்ந்து நிற்கின்றான்.
வினை முடித்து தலைவியைக்காணத் தேரில் விரைந்து வரும் தலைவன் தன் வேட்கையாற் பிறந்த வேகத்தினிடையேயும் கடற்கரை நண்டுகள் தேர்க்காலில் சிக்கி வருந்தாவண்ணம் காக்கும் தன்மையை,
“புணரி பொருத பூமண லடைகரை
யாழிமருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந் தூர”10
எனும் பாடலடிகள் காட்டுகின்றன. அறுவடைக் காலத்தில் தனது வயலில் உறையும் சிறுபறவைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனும் உணர்வுடன் அறுவடைக்கு முன்பே அவற்றை வெளியேற்ற வேண்டி தண்ணுமை என்னும் பறையறைந்து அவற்றைத் தன் வயலிலிருந்து வெளியேற்றிய பின்பே அறுவடையைத் தொடங்கினர் பண்டைத் தமிழர். தண்ணுமையோசை கேட்டுப் பயந்த பறவைகள் வேறு பாதுகாப்பான இடம் சென்றுரைந்தன.இதனை,
“வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்…”11
“அறைக்கரும்பி னரிநெல்லின்
இனக் களமர் இசைபெருக”12
எனும் சங்கப்பாடலடிகள் உணர்த்தும். இவை உயிர்ப்பன்மையப் பரவலாகிய தன் சூழலில் வாழும் பல்லுயிரிகளையப் பேணும் சிந்தனை தமிழனிடத்தில் இருந்தமையைக் காட்டுகின்றன.
முதற்பொருளும் கருப்பொருளும்
‘சூழலியல்’ என்று பல்வேறு வல்லுநர்களாலும் வகைப்படுத்திக் கூறப்படுகின்ற யாவற்றையும் பண்டைத் தமிழன் முதற்பொருள், கருப்பொருள் என்ற இருநிலைகளில் வகுத்துக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சூழலியல் வல்லுநர்கள் நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு அவற்றை ஆதாரமாகக்கொண்ட இயற்கை, அவற்றைச் சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள், காலநிலை,அதன் இயக்கம், அதில் ஏற்படுகின்ற பாதிப்புகள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் ஆகியவற்றையே ‘சூழலியல்;;’ என்னும் சொல்லாட்சியில் முன்வைக்கின்றனர். இதனை ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நிலமும் காலநிலையும் அடங்கிய முதற்பொருளாகவும், உயிரினங்களைப் பற்றிக் கூறும் கருப்பொருளாகவும் கூறியிருக்கின்றான் தமிழன். உணவு, விலங்கு, பறவை, தொழில் போன்றவை சூழலியலில் பெரிதும் பேசப்படுகின்ற அடிப்படையான விடயங்களாகும். இதனை,
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு….”13
எனும் தொல்காப்பிய நூற்பாவோடு பொருத்திப் பார்ப்போமானால் தற்காலச் சூழலியலின் அடிப்படை விடயங்களைத் தொல்காப்பியர் குறிப்பிட்டிருப்பது விளங்கும்.
தனது சூழலில் நிலைபெற்றிருந்த பல்வகை உயிரிகள் அவற்றின் உடற்கூறியல் மற்றும் அவை இயங்கும் முறைமை பற்றிய அறிவு அவற்றைத்தான் எவ்வகையிலும் ஊறு செய்யாது வாழும் முறைமை எனப் பல்வேறு வகையிலும் சூழலியல் அறிவுடையவனாகப் பண்டைத் தமிழன் விளங்கியிருக்கின்றான் என்பதை அறியமுடிகிறது. ஆனால் தமிழ்ச் சமுதாயமும் இன்று பல்வேறு சூழலியல் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது. பண்டைத் தமிழர்களின் திணைப்பகுப்பினை நாம் உணர்ந்து அதனை வெளிக்கொண்டு சென்றிருப்பின் ராச்சல் கார்சனின் மூளையில் ‘மௌனவசந்தம்’ தோன்றுவதற்கு இடமில்லாமல் இருந்திருக்கும். அனைத்துச் சூழலியலையும் உள்ளடக்கிய தமிழனின் ‘திணையியல்’ இன்று எங்கோ ‘சூழலியல்;’ எனும் உருப்பெற்று ஆங்கிலநூற்களின் மொழிபெயர்ப்பாய் தமிழனின் முன்வைக்கப்படுவதையும் அவன் அதை அறியாப் பொருளாய் நோக்குவதையும் எண்ணிப் பார்க்கும் பொழுது விந்தையுடன் வேதனை தருவதாகவும் அமைகின்றது. இதற்குக் காரணம் தற்காலத் தமிழன் பண்டைத் தமிழனின் சூழலியல் அறிவினை நவீன நாகரிக வசதி மற்றும் அந்நிய மோகத்தின் காரணமாக இழந்ததுதான்.
சான்றாதாரங்கள்
1. தொல்காப்பியம். மரபியல்.நூற்பா. 27
2. மேலது.நூற்பா. 28
3. மேலது.நூற்பா. 29
4. மேலது. நூற்பா. 86
5. மேலது. நூற்பா. 87
6. நற்றிணை. பா.எ. 89
7. குறுந்தொகை. பா.எ. 2
8. ஐங்குறுநூறு. பா.எ. 215
9. நற்றிணை. பா.எ. 226
10. மேலது. பா.எ. 11
11. புறநானூறு. பா.எ. 348
12. பொருநராற்றுப்படை.அடி. 193. 194
13. தொல்காப்பியம். அகத்திணையியல்.நூற்பா. 20