New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“ - ச. மகாதேவன்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“ - ச. மகாதேவன்
Permalink  
 


திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“

E-mailPrintPDF

முன்னுரை

திருவள்ளுவர்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின.  அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன.  கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன.  அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர்.  பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர்.  வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

 “ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு
 உயிர் போனாற் பிணமாச்சு உயிர்போ முன்னே
 பூணப்பா வாத பித்த சேத்து மத்தாற்
 பூண்டெடுத்த தேகவளம் புகலுவேனே“

என்று நாடி நூல்கள் கூறுவதை இலக்கியமாகத் தமிழில் தந்தனர்.  பஞ்சபூதங்களில் வாயுவின் கூறாக வாதமும், தேயுவின் கூறாகப் பித்தமும், அப்புவின் கூறாகக் கபமும் வருவதாகக் கூறிய முனிவர்கள் நோய் நீக்கும் மருந்துப்பெயர்களைச் சிறுபஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகம் என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு வைத்தனர். இக்கட்டுரைக் குறிப்பாகத் திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகளை விளக்க முயல்கிறது.
 
திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள்

 “நல்ல மருத்துவம் என்பது நோயை நீக்குவது அன்று, நோயே வராமல் தடுப்பது“ என்ற கருத்தாக்கமே, திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனையாக அமைகிறது.
 முன்வேளை உண்ட உணவு செரித்தபின் அடுத்த வேளை உணவு உண்பவனுக்கு மருந்தே வேண்டாம் என்பது வள்ளுவரின் அற்புதமான மருத்துவச் சிந்தனையாய் அமைகிறது.

 “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
 அற்றது போற்றி யுணின்.“

 உணவு செரிக்கும் குடலை, 1. இரைக்குடல் (அமர்வாசயம்) : உண்ட அன்னசாரம் அமருமிடம் 2. செரிகுடல் (பகிர்வாசயம்) : அன்னம் சீரணித்தபின் சாரம் வெறு திப்பி வேறாகப் பிரியுமிடம் 3. நீர்க்குடல் (சலவாசயம்) : நீர்க்குழியும் நீர் இறங்குமிடமும் 4. மலக்குடல் : மலக்குழியஜம் மலமிறங்குமிடமும் 5. வெண்ணிர்க்குடல் : (சுக்கிலவாசயம்) : வெண்ணீர் பிரியுமிடம் என்று ஐந்து வகைகளாகப் பிரி்த்த சித்த மருத்துவம், உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உண்ணக் கூடாது என்கிறது.  அதிவேக உலகில் கிடைக்கும் பீசா போன்ற உணவுகள், நெய்யில் பொரித்த உணவுகள், குடலையும் உடலையும் கெடுக்கும் உணவுகளாகக் கருத வேண்டியிருக்கிறது.  தேவையற்ற வாயு தொடர்பான நோய்களைத்தரும் உணவுப் பொருட்கள் குறிப்பாக உருளைக் கிழங்கில் செய்யப்பட்ட பொருட்களால் வயிறு கெட்டு நோய்கள் உண்டாகும்.

 “அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
 பெற்றா னெடிதுய்க்கும் மாறு“

 முன்புண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து உண்பவன் உடல் நெடுநாள் நீடித்து வாழும் என்கிறார் திருவள்ளுவர்.
 “அனைத்து நோய்களின் பிறப்பிடம் தவறான உணவுப் பழக்கவழக்கமே“ என்பது வள்ளுவப் பேராசானின் கருத்தாக அமைகிறது.  உணவே மருந்து எனும் கொள்கை உடையவர்களாகத் தமிழர்கள் இருந்தனர்.  சமையலறையில் அஞ்சறைப் பெட்டியை மருத்துவரின் நோய் நீக்கும் பெட்டியைப் போன்று தமிழர்கள் கருதினர்.

 “தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
 நோயள வின்றிப் படும்“

 உடல்நிலை கெட்டுப் பசித்தீ குறைந்து செரிப்புத்தன்மை இழந்த காலத்திலும் முன்பு உண்டதைப்போல் அதிகமாக உண்டால் நோய் பெருகும் என்கிறார்.  திருவள்ளுவர்.  அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற நிலையில் வாழ்ந்த சித்தர்கள் உடல்நலம் பேணினால்தான் உள்ளநலம் பேணமுடியும் என்றனர்.  அதனால்தான் திருமூலமாமுனிவர்

 “உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்தே
 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“

என்கிறார்.  குழந்தை அளவுக்கதிகமாகப் பால் உண்டோ, பிற காரணங்களால் மாந்தமோ ஏற்பட்டால்,

 “சீர்சிறந்த மாசிக்காய் திப்பிலி கோரோசனமும்
 கார்சிறந்த கோட்டம் கருஞ்சீரம் – பேர் சிறந்த
 அக்கார காரம் அரைத்துமுலைப் பாலிலிட
 இலக்கணமே தீரும் இது“
 என்று குணபாட நூல் கூறுகிறது.

 வளி, அழல், ஐயம் ஆகிய முக்குற்றங்களும் மாறுபாடில்லாதபடி தடுக்க வேண்டியதைத் தடுத்தும் வேண்டுவனவற்றைக் கூட்டியும் உணவுப் பொருட்களின் பண்பினை அறிந்து உண்டால் நோயுண்டாகாது என்று கூறும் வள்ளுவர்.

 “மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின்
 ஊறுபாடில்லை உயிர்க்கு“

என்கிறார்
 காயம் (உடல்) அழியாதிருக்கக் காயம், கல் போலாக்கும் முறையைத் திருமூலர் மணி, மந்திரம், அவிழ்தம் என்கிறார்.
 
“மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
 மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
 மறுப்ப தினிநோய் வாரா திருக்க
 மறுப்பது சாலையு மருந்தென லாமே“

என்று திருமூலர் கூறும் செய்தியை ஒத்துத் தேரையர்

 “தணியாத நோயுந் தணியப் புரியும்
 மணிமந்திர வவிழ்த மார்க்கப் – பிணியை
 உசாவி யியற்றும் அறிவுள்ளவரைக் கண்டால்
 மசாவும் பயப்படு மம்மா“
 என்கிறார்.

 உடலுக்கு ஏற்றபடி உண்வைக் குறைத்து வாழ்வதைத் திருவள்ளுவர், நோய் வாராமல் தடுக்கும் உயர்ந்த முறையாகக் கருதுகிறார்.

 “இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
 கழிபேர் இரையான்கண் நோய்“

 அளவு தெரியாமல் உண்பது விலங்குகளின் இயல்பு அளவறிந்து உண்ணுதலே யோகிகளின் இயல்பு.  உண்டால் மட்டும் போதாது, உண்டதை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும் என்பதை “மும்மலம் அறுநீர்“ அதாவது மும்முறைக் கழிவை வெளியேற்றும் செயலும், அறுமுறைச் சிறுநீர் கழிக்கவும் வேண்டுமென்று சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.

 உடல்தீயை 1. சமாக்கினி 2. விஷமாக்கினி 3. தீஷணாக்கினி 4. மந்தாக்கினி என்று சித்த மருத்துவம் நான்கு வகையாகப் பிரிக்கிறது.

1. சமாக்கினி : ஒருவன் வேண்டும் அளவு உட்கொள்ளுகின்ற உணவு நீர் எல்லாம் முறைப்படி, கால அளவுக்கு மாறுபடாமல் நன்றாகச் சீரணிக்கச் செய்யும் தீயே சமாக்கினி என அறியவும்.
 2. விஷமாக்கினி : இஃது உண்ணப்பட்டவைகளை உடனே சீரணிக்காமல் நெடுநேரம் கழித்துச் செரிப்பிக்கும்.   அப்படிச் செரிப்பித்தாலும் அவை விஷமச் சீரணமாகும்.
3. தீஷணாக்கினி : வெந்ததும் வேகாததுமான உணவுப் பொருட்களைப் புசித்தாலும் அதனை இரசத்தோடும் (சாரம்) கூடவே செரிப்பிக்கும்.
4. மந்தாக்கினி : விருப்பத்தோடு உண்ட பாகமான உணவுப் பொருள்கள் உடனே செரிப்பிக்காமல் வாயுவால் வயிற்றிரைச்சல், குடலிரைச்சல், வயிற்றுப்புசம், உடல் கனத்தல், என்னும் இவைகளை உண்டாக்கி நெடுநேரத்திற்குப் பிறகுச் செரிப்பிக்கும்” (சித்த மருத்துவ நோய் நாடல் நோய் முதனாடல் திரட்டு பாகம் – 1) என்ற நூல் குறிப்பிடுகிறது.

 இந்நான்கு தீயும் உணவினால் உண்டாகிறது என்பதால், திருவள்ளுவர் நோய் நீக்குதலை ’மருந்து’ என்ற அதிகாரத்தில் உணவைக் கட்டுப்பாட்டில் வைக்கச் சொல்கிறார்.  நோய்க்குக் காரணம் வாய் என உரைக்கும் திருவள்ளுவர் நோயை நீக்குவதை விட, நோய் வரும் காரணத்தைக் கண்டறிந்து நீக்குதல் மேலானது என்கிறார்.

“நோய்நாடி நோய் முதனாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்“

 தலைவலி வருகிறது என்றால், தலைவலிக்கு மருந்து தராமல், தலைவலி உருவாகிற காரணத்திற்கு மருந்து தருவதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

முடிவுரை

 வள்ளுவம் வாழ்க்கை நெறி, வள்ளுவர் உளவியல் அறிந்த மாமருத்துவர்.

 “புல்லும் மரனும் ஓரறிவினமே!
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே“

என்று மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் முதல் வள்ளுவப் பேராசான்வரை அனைவருமே உடல், உளநோய் நீக்கும் சித்தர்களே.

 “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
 றப்பானாற் கூற்றே மருந்து“.

 என நோயுற்றவன், அதைத் தீர்ப்பவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து செய்பவன்,  அம்மருந்தைச் செலுத்துவோன் ஆகிய நால்வரும், ஒரு மனத்தோடு கூடி ஒத்துழைத்தால் நோய் தீரும் என்கிறார் வள்ளுவர்.  உணவைக் கட்டுப்படுத்துதலே உண்மையான நோய்க் கட்டுப்பாடு எனும் வள்ளுவரின் பார்வையே உலகில் உன்னதமான மருத்துவப் பார்வை.


குறிப்பு நூல்கள்
1. குணபாடம் (பொருட் பண்பு நூல்)
 - வைத்திய இரத்தினம் க.ச.முருகேச முதலியார்,
 இந்திய மருத்துவம், ஓமியோபதித் துறை, சென்னை – 600 106.
2. குணபாடம் – தாது சீவ வகுப்பு
 டாக்டர் ஆர். தியாகராஜன்,
 இந்திய மருத்துவம் மற்றும், ஹோமியோபதித் துறை, சென்னை.
3. சித்த வைத்தியத் திரட்டு – மரு.க.நா.
 குப்புசாமி முதலியார், மரு.க. சு. உத்தமராயன்
 இந்திய மருத்துவம், ஹோமியோபதித்துறை, சென்னை.
4. நோய் நாடல் நோய் முதல் நாடல் திரட்டு
 டாக்டர். ம. சண்முக வேலு, இந்திய மருத்துவம், சென்னை
5. திருக்குறள் – பரிமேலழகர் உரை
 சாரதா பதிப்பகம், சென்னை.

mahabarathi1974@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard