New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்- பா. சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்- பா. சிவக்குமார்
Permalink  
 


சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்

E-mailPrintPDF

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -சங்ககாலப் போரில் நீர் நிலைகளை அழித்தல், வயல்வெளிகள் மற்றும் ஊரை நெருப்பிட்டு அழித்தல், காவல்மரங்களை அழித்தல், அரண்களை அழித்தல், வழித்தடங்களை அழித்தல், ஊர்மன்றங்களை அழித்தல், விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், பகையரசரின் உரிமை மகளிரின் கூந்தலை மழித்தல் மற்றும் கவர்ந்து வருதல் போன்ற செயல்களில் சங்ககால அரசர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற அரசன் பகையரசரின் நாட்டில் உள்ள வயல்கள், ஊர்மன்றம், வழித்தடங்களில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர். இக்கழுதை உழவு, வன்புலப் பயிர்களின் விதைப்பு   மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும் 
தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,

“……………………………………….கொடாஅ 
உருகெழு மன்ன  ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்           (புறம்.392: 5-8)1
என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. 

பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4)  என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை, கடுந்தேர் குழித்த ஞள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர்……………………”        (புறம்.15:1-3)2
என்ற பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. 

கழுதை உழவின் பின்புலம் 
பகைவர் புலத்தைக் கழுதை கொண்டு உழுவதற்கான காரணம் கழுதையை ஒரு கீழ்நிலை விலங்காக அன்றைய சமூக மக்கள் கருதியிருந்தனர். தவறு செய்பவர்களின் தலைமுடியை மழித்து அதில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வந்து அவர்களின் தவற்றிற்குத் தண்டனை வழங்கும் மரபு தற்காலம் வரை நாட்டுப்புற மக்களிடையே நிலவி வருகின்றதைக் காணும் போது அன்றைய சமூக மக்கள் முதல் இன்றைய நாட்டுப்புற மக்கள் வரை கழுதையை ஒரு கீழ்நிலை விலங்காகப் பார்த்துள்ளமையைக் உணரலாம்.

பகைவர் புலத்தில் வரகும், கொள்ளும் விதைப்பதற்குக் காரணம் சங்கச் சமூகத்தில் வன்புலம், மென்புலம் ஆகிய இருநிலங்களைக் காணமுடிகின்றது. இதில் மென்புலம் என்பது மருத நிலங்களைக் குறிப்பனவாகும். வன்புலம் என்பது முல்லை குறிஞ்சி நிலங்களைக் குறிப்பதாக அமைகிறது. இங்கு மருத நிலம் வளமிக்கதாகவும் செல்வச் செழிப்பாகவும் இருந்துள்ளது. வளமிக்க மருத நிலத்தில் நெல்லும், கரும்பும் பயிர்களாகவும் வளமற்ற வன்புலத்தில் வரகும், கொள்ளும் பயிர்களாகவும் இருந்தன. இவ்விரு நிலங்களில் மருத நிலத்து வாழ்வோர் மற்ற வன்புலத்தில் வாழ்வோரையும் அவர்களின் பயிர்களையும் கீழானவையாகப் பார்க்கும் நிலை நிலவியிருக்க வேண்டுமெனக் கருதலாம். எனவே, தனக்கு திறை செலுத்த மறுத்த மருதநில மன்னர்களை வன்முறைப் போரால் அழித்தொழித்தும் சினம் தணியாமல் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு கீழ்நிலை விலங்கான கழுதை கொண்டு உழவு செய்தும் வன்புலப் பயிர்களான வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர் என அவதானிக்கலாம்.

மேற்கண்டவற்றிலிருந்து ஒரு மன்னனை உளம் தொடர்பாக அவமானப்படுத்தும் நோக்கில் இக்கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும்  நிகழ்த்தப்பட்டுள்ளமை தெளிவாகிறது. சங்ககால அரசர்கள் பகை மன்னர்களை உளவியல் சார்ந்தும் துன்புறுத்தியுள்ளமை, கழுதையினை ஒரு கீழ்நிலை விலங்காக சங்க மக்கள் கருதியுள்ளமை, வன்புல – மென்புல மக்களிடையேயுள்ள பொருளாதார, சமூக  ஏற்றத்தாழ்வு போன்றவற்றைக் அறியமுடிகிறது.

சான்றுகள்:
1. புறநானூறு ; திணை பாடாண் திணை; துறை கடைநிலை. பாடியவர்: ஒளவையார் ; பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி. 
2. புறநானூறு ; திணை : பாடாண். துறை : இயன்மொழி;  பாடியவர் :கபிலர். பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

sivasivatamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard