New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனை -செ.ரவிசங்கர்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனை -செ.ரவிசங்கர்
Permalink  
 


வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனை

E-mailPrintPDF

முன்னுரை
செ.ரவிசங்கர்திருக்குறள் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது, யார் எழுதினார், எந்த சமயத்தைச் சார்ந்தவர் எழுதினார், யாருக்காக எழுதப்பட்டது, இது போன்ற பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் திருவள்ளுவர் இயற்றினார் சங்கம் மருவிய காலத்து நூல், சமண சமயத்தவர் எழுதியது, உலக மக்களுக்காக பொதுவாக எழுதப்பட்டது போன்றவற்றை மையமாகக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை இன்று போற்றி வருகிறோம் எனவே தான் மு.வ அவர்கள் சமயங்களின் அடிப்படை உண்மையும் ஒன்றே என்ற தெளிவு பெற்றுவிட்ட காரணத்தால் எல்லாச் சமயங்களையும் ஊடுருவிட பார்த்து அடிப்படை உண்மையை மட்டும் உணர்த்தும் பான்மையைத் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.

மிக முன்னேனறியுள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலும் காணமுடியாத அரசியல் பொதுமையை - தேசியம் முதலியவற்றையும் கடந்த அரசியல் பொதுமையைத் திருவள்ளுவர் அன்றே உணர்ந்திருந்தார், எல்லாக் காலத்து மக்களுக்கும் பொதுவாக அமைந்துள்ள பான்மையை காலங் கடந்து வாழும் பொதுமையை திருக்குறளில் காண்கிறோம். இதற்குக் காரணம் திருவள்ளுவர் தாம் வாழுங் காலத்து மக்களை மட்டுமில்லாமல் வருங்காலத்து மக்களையும் தம் உள்ளத்தால் உணர்ந்து தழுவிய உயர்ந்த நோக்கமே ஆகும். உயர்ந்த நோக்கமும் தெளிவும் இருந்த காரணத்ததல் என்றும் உள்ள வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளை மட்டும் உணர்த்தியுள்ளார். திருக்குறள் உணர்த்தும் கருத்துக்கள் குறைந்து நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து விழுக்காடு எதிர்காலமும், எதிர்கால உலகமும் ஏற்கத்தக்க பொதுமை வாய்த்தனவாக உள்ளன என்பார். (கலைக்கதிர் - 1969. ப.24-27) இக்கூற்றுக்கேற்ப வள்ளுவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானவையாக அமைந்துள்ளன. அதில் மனித சமுதாயம் மேம்பட தேவையான கருத்தினைக் கொண்டு வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

வள்ளுவரின் உறவு உருவாக்கம்
சங்க இலக்கிய காலத்தில் மக்களின் உறவு என்பது ஆண் பெண் உறவு, பெற்றோருக்கும் மக்களுக்கான உறவு, தனி மனிதன் சமுதாயத்தோடு கொள்ளும் உறவு, வள்ளல்கள் - புலவர்களது உறவு, வள்ளல்கள் கலைஞர்களது உறவு என அமைந்திருந்து, ஆனால் சங்கம் மருவிய காலத்தில் மனித உறவு என்பது ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருந்துள்ளது. அது பொருளாதார நிலையைக் கொண்ட அல்லது சமய நிலையைக் கொண்ட என்பது சரியாகத் தெரியவில்லை ஆனால் சங்கம் மருவிய காலத்தைப் பற்றி கருத்துரைக்கும் போது கோ.கேசவன் பொதுவாகவே ஒரு வர்க்கத்துக்கு இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு, பொருளாதார நலன்களைப் பொறுத்துத்தான் பகைவடிவமெடுக்கும், அத்தகைய நேரங்களில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்த்தின் மீது தன் நலன்களை வலுவில் திணிக்கும், வலிய முறையில் அழிக்க நினைக்கும் என்பர் சமூக வரலாற்றிஞர் மாரிசுகார்ன் போர்த் எனவே இந்தப் பகை முரண்பாட்டுப் போராட்டத்தில் தங்களுடைய நிலங்களை மன்னர்களின் உதவிகொண்டு மீட்க வேண்டும் எனும் பொருளாதார நோக்கில் வேளாளர்கள் ஈடுபட்டனர். வணிகரால் அலட்சியம் செய்யப்பட்டிருந்த கைவினைஞர்களையும் தங்களோடு அரவணைத்துக் கொண்டு போராடினர். இந்தப் போராட்டத்தின் போர்வையாகச் சமயம் பயன்பட்டது என தமது நூலில் குறிப்பிடுகிறார்.

இந்த அளவில் போராட்டம் நிறைந்த சூழ்நிலையில் வள்ளுவர் மனித இனம் உறவோடு வாழ்வதற்கான சிந்தனையைக் கூறியுள்ளனர். அவற்றுள்

1.    விருந்தோம்பல்
2.    பேசும் முறை
3.    புகைவநன எதிர்கொள்ளும் திறம்
4.    உதவிசெய்தல்
5.    உறவு மேம்பாடடைய

என்று சிலவற்றை திருக்குறளில் காணலாம்.

விருந்தோம்பல்

மனித சமுதாயம் உறவுடையதாக அமைய உணவு உபசரிப்பு என்பது மிக முக்கியமானதாகும். மகாபாரதத்தில் கர்ணன் உணவு வழங்கியற்காகவே துரியோதனனுடன் இறுதிவரை இருந்தான். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி அந்தவகையில் வள்ளுவர் விருந்தோம்பல் செய்யும் நிலையை மிகவும் சிறப்பாக கூறுகிறார்.

“விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று” (82)

ஒரு மனிதன் தான் உண்ணுகின்ற உணவு அவனது சாவை நீக்கும் மருந்து என்றாலும் விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்து விட்டுத் தான் மட்டும் வீட்டிற்குள் உள் இருந்து உண்பது விரும்பத்தக்க செயல் ஆகாது முதலில் தமது விருந்தினர் தான் தமது உறவினர், அவர்களது உறவை வளர்த்துக் கொள்வது முக்கியமானது. நாம் அவர்களுக்கு உணவளிக்காமல் இருந்தால் அவ்வுறவு வளர்வது கிடையாது, மாறாக உறவு அழிந்து போய்விடும். எனவே தான் வள்ளுவர் அவர்களை வெளியில் வைத்து உண்ணக் கூடாது என்கிறார். அதுபோலவே வீட்டிற்கு வந்த விருந்தினரை நன்முறையில் மனம் முன்வந்து உபசரிக்க வேண்டும் அது வல்லது முகம்கோணி உபசரித்தால் அவர்களுடனான உறவு முறிந்து விடும் என்பதை

“ மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”   (90)

என்கிறார். விருந்தினர் மன மகிழ்ச்சியாக உண்ணுமாறு உணவு பரிமாற வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஏன் வந்தோம்? என நினைத்து மீண்டும் வரமாட்டார்கள், அத்துடன் நமக்கும் அவர்களுக்குமான உறவு என்பது போய்விடும் என்கிறார். 

பேசும் முறை
ஒருவர் மற்றொருவருடன் பேசும் முறையில் தான் நட்பு என்பதும் உறவு என்பதும் ஏற்படும், ஒரு மனிதன் சக மனிதனிடம் தவறான முறையில் பேசி விட்டால் மறுமுறை அந்த மனிதன் பேசமாட்டான் உறவு என்பது வளராமல் நின்று விடும். எனவே தான் வள்ளுவர் குறளில் பல இடங்களில் பேசும் முறையை குறிப்பிடுகிறார்.

“ யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”  (127)

அதாவது மக்கள் வேறவற்றைக் காவா விடினும் நாவையாவது காத்துக் கொள்ள வேண்டும். அதைக் காவா விடில் சொற் குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர். அது போலவே

“ தீயினாற் சுட்ட புண் உள்ளாறு மாறாதே
நாவினால் சுட்ட வடு”   (129)

ஒருவன் ஒருவனை நெருப்பினால் சுட்ட புண் காட்சிப் பொருளாகிய உடம்பையே சுட்;டதினால் அப்பொழுதேயோ அப்புண் ஆறிவிடும், ஆனால் நாவினால் சொன்ன வார்த்தை ஒருகாலும் ஆறாது, உள்ளத்தை விட்டு அகலாது. இது போன்று பேசுவதால் இரண்டு பேருக்குமான உறவு என்பதும் முறிந்து விடும், அதனால் நல்ல கனிவான பேச்சுக்களை மட்டும் பேச வேண்டும், அன்பான சொற்களைப் பேசுவதால் மற்றவர்களிடத்தில் உறவினை வளர்த்துக் கொள்ள முடியும்.

பகைவனை எதிர்கொள்ளும் திறம்
தனக்கு எதிரியாக இருப்பவனை மீண்டும் மீண்டும் எதிரியாக வைத்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் எதிரியை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும், அதற்கான செயல்பாடுகளை வள்ளுவர் மிகவம் நுட்பமாக எடுத்துரைக்கிறார். உலக வழக்கத்தில் மன்னித்துக் கொள்ளுதல் என்பது தான் உறவு மேம்பாட்டிற்கான வழியாகும் எனவே தான் வள்ளுவர்

“  அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”   (151)

“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறுத்தல் அதனினும் நன்று”     (152)

என்று கூறுகிறார். தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம் போல, தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாகும். புழிக்குப் பழி வாங்கக் கூடிய அல்லது தீங்கு செய்தாரைத் தண்டிக்கக் கூடிய காலத்துப் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறையாகும் என்கிறார் வள்ளுவர்.

இவ்வாறாக பிறர் செய்த தீங்கை மன்னித்த விடத்து அவனிடம் நம்மீது பகை நீங்கி அன்பு பெருகும் அதன் மூலம் உறவு பெருகும் என்பது வள்ளுவரின் சிந்தனை இதனை விடுத்து தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கு தாமும் துன்பம் செய்வது உறவு மேம்பாட்டிற்கு உகந்தது அல்ல என்பதை வள்ளுவர் தமது குறள்களில் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

“ ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” - 155

“ ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
போன்றும் துணையும் புகழ்” - 156

அதாவது பிறர் செய்த தீங்கை பொறுக்காமல் அவனுக்கு தீங்கு செய்து தண்டிப்பதை செய்கிறவர்களை அறிவுடையோர் பொருத்துக் கொள்ள மாட்டார்கள், அத்தீங்கைப் பொறுத்துக் கொள்கின்றவர்களையே அறிவுடையோர் பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர். தமக்குத் தீங்கு செய்தவரை தண்டித்தல் ஒரு நாள் தான் இன்பம் ஆனால் பொறுத்துக் கொண்டால் உலகம் உள்ள வரை இன்பம் என்பதனால் தனக்குத் துன்பம் செய்தவன் மீது நாம் கொள்கின்ற  நல்வினை அவனை நம்மீது உறவு உடையவனாக மாற்றும், காலம் செல்லச் செல்ல நமக்குத் தீங்கு செய்தவன் தனக்குத் தானே நொந்து போய் தன் தவறினை உணர்ந்து கொண்டு தம்மிடம் உறவு உடையவனாக மாறிவிடுவான், அதனால் தான் வள்ளுவர் இது போன்ற கருத்துடைய குறள்களை எடுத்துரைக்கிறார். இது இன்னா செய்தவன் பின்னாளில் திருந்திக் கொண்டு நல்வழியில் நடப்பதற்கான வழியாகவும்அமையும், அதன் மூலம் அவன் பலபேரிடம் உறவு உடையவனாக மாறி விட வாய்ப்புள்ளது. எனவே தான் வள்ளுவர்

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நான
நுன்னயம் செய்து விடல்”  - 314

என்று குறள் அமைத்துள்ளார். தமக்குத் தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது, அவர் வெட்குமாறு அவர்க்கும் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாகும் என்கிறார். வள்ளுவர்.    வள்ளுவர் கூறுகின்ற இந்த உத்தி சமுதாயத்தில் உறவினை வளர்த்துக் கொள்ள உதவுகின்ற உத்திமுறையாகும் எனவே தனிமனிதன் தான் வாழும் சமூகத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றும், தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கட்கு தன்னாலியன்ற உதவிகளைச் செய்யக் கடமைப்பட்டவன் என்றும், தன் சமுதாயத்திற்கு வரத்தக்க இடையூறுகளை நீக்கும் முயற்சியில் தன்னை இழக்கவும் கடமைப்பட்டவன் என்றும் தமிழர் கருதியுள்ளனர். சமூக நலத்திற்குகந்த ஈகை, ஒப்பரவு, நடுநிலை, விருந்தோம்பல், நன்றி முதலான பண்புகளை வளர்த்துள்ளனர் என்கிறார் தட்சிணாமூர்த்தி

பொதுவாக தமிழர்களின் சிந்தனை உறவு கொண்டு வாழ்வதாகவே அமைந்துள்ளது மனித இனம் உறவு கொண்டு வளரவேண்டிய உத்திகளை வள்ளுவர் தமது குறளில் கூறும் போது

“ இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள”  - 223

என்கிறார். இக்குறளுக்கு உரையெழுதிய பாவாணார் யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும் அவ்விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும் வேண்டும் என்கிறான். இக்குறளில் இல்னென்னு மெவ்வ முரையாமை யீதல் என்னும் தொடர் உறவுக்கு மேன்மை தரும் விதமாக அமைந்துள்ளதை பாவாணார் விளக்குகிறார்.

1.    யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இனி வரவைச் செல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல்
2.    அவ்விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ்விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்த
3.    இல்லாதான் என்னிடம் இப்பொழுது பொருளி;ல்லையென்று ஈயத்தார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல்

இது பிறருக்குக் கொடுப்பதன் மூலம் உறவு வளர்த்துக் கொள்ளும் வழிமுறையாக அமைவதைக் காட்டுகிறது.

புறம் பேசாமை
உறவுகளை இன்றைய சமுதாயத்தில் அழித்துக் கொண்டிருப்பது புரணி பேசுவது ஆகும். ஒருவரைக் காணாமல் இருக்கும் போது அவரைப் பற்றிப் பேசுவது, கண்டவிடத்து அவரைப் புகழ்ந்து பேசுவது இவற்றைத் தவிர்த்தால் ஆரோக்கியமான உறவு வளரும் சமுதாயம் நன்றாக இருக்கும் என்னும் நோக்கில் வள்ளுவர்

“ அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை” - 182

“ புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
ஆறம்கூறும் ஆக்கம் தரும்” - 183

என்றுரைக்கிறார், அதாவது ஒருவனைக் காணாவிடத்துப்  பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல் மற்றும் ஒருவன் பிறனைக் காணாதவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடந்து உயிர் வாழ்தலினும் சாதல் நலம் என்கிறார் வள்ளுவர் இது போன்ற செயல்கள் நல்ல உறவினை வளர்க்காது, இதனை விட்டொழித்தால் நல்ல உறவு வளரும் என்கிறார்.

உதவி செய்தலால் உறவு வளரும்
எத்தனையோ வழிகளில் உறவு மேம்பாட்டாலும் உதவி செய்வதன் மூலம் நல்ல உறவு என்றைக்கும் வளரும் என்பதை மிகவும் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர். உதவி பிறருக்குச் செய்யும் போது, அவர் திருப்பி நமக்கு என்ன செய்வார் என எதிர்பாராமல் செய்வது அதனால் சிறந்த உண்மையான உறவு வளரும் என்பதை வள்ளுவர்

“ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”  - 103

என்கிறார். அதாவது இவருக்கு இன்ன செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆராய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரிது ஆகும். ஆனால் அதன் பின்பு இருவருக்குமான உறவு என்பதும் ஆழமானதாக அமையும்.

முடிவுரை
திருவள்ளுவர் தமிழகத்தின் தலைசிறந்த மனிதர், அவர் தம்முடைய வாழ்க்கையின் அனுபவத்தின் வாயிலாகக் கண்ட உண்மைகளை தமது நூலில் ஆக்கித் தந்துள்ளரோ? என எண்ணத் தோன்றுகிறது. எல்லாத் துறை சார்ந்த கருத்துக்களையும் உள்ளது உள்ளவாறு உண்மையாகவே எழுதியுள்ளார். காதல், இல்லறம், அரசியல் பொருள் பற்றிய சிந்தனை போன்றவை எல்லாக் காலத்திற்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. அந்த வகையில் மனித உறவு வளர மேம்பட அவர் தந்துள்ள சிந்தனைகள் போற்றத்தக்கனவாக அமைந்துள்ளன.

பயன்பட்ட நூல்
1.திருக்குறள்
பரிமேலழகர் உரை
பழனியப்பா பிரதர்ஸ்
மதுரை

kailairavisankar@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard