New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு - - சு. குணேஸ்வரன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு - - சு. குணேஸ்வரன்
Permalink  
 


திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு

E-mailPrintPDF

சு. குணேஸ்வரன் -அறிமுகம் 
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக்  கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது. 

ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது;  அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் 
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்; 
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் 
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
 

என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை  ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை 
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு -  முருகு -  ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார். எனவே முருகனிடம் அருள் பெற்ற புலவன் ஒருவன் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாத மேலான பரிசாகிய வீடுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வழிப்படுத்தும் காரணத்தாலேயே புலவராற்றுப்படை என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படலாயிற்று. 

திருமுருகாற்றுப்படையின் உள்ளடக்கம் 
திருமுருகாற்றுப்படை முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திரு ஆவினன்குடி (பழனி), திரு ஏரகம் (சுவாமிமலை), திருத்தணி (குன்றுதோடல்), பழமுதிர்ச்சோலை ஆகியன பற்றிக் கூறுகின்றது.

திருப்பரங்குன்றம் என்ற முதலாவது பகுதியில் முருகனின் திருவுருவச் சிறப்பு, முருகன் அணியும் மாலைகள், சூரரமகளிர் செயல்கள், முருகன் சூரனைச் சங்காரம் செய்த திறன், மதுரையின் பெருமை, திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகு ஆகியன எடுத்துக்காட்டப்படுகின்றன. திருச்சீரலைவாய் என்ற இரண்டாம் பகுதியில் முருகன் அடியார்க்கு அருள் புரிய எழுந்தருளும் யானையின் இயல்பு, முருகனின் ஆறு திருமுகங்கள் ஆற்றும் செயல்கள், பன்னிரு திருக்கரங்கள் ஆற்றும் செயல்கள், முருகன் எழுந்தருளியிருக்கும் தோற்றம் என்பன சொல்லப்படுகின்றன. திருஆவினன்குடி என்ற மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்கள், தேவருடன் முருகனை வழிபட வரும் மகளிர் வனப்பும் ஏனையவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. திரு ஏரகம் என்ற நான்காம் பகுதியில் அந்தணர்களின் இயல்பும், அவர்கள் முருகனை வழிபடும் முறைமையும் கூறப்பட்டுள்ளன. குன்றுதோறாடல் என்ற    ஐந்தாம் பகுதியில் குன்றக்குரவை நிகழ்ச்சி, முருகனை வணங்க வரும் பாடுமகளிர் ஆடுமகளிர் மாண்புகள் அவர்களின் சிறப்புக்கள் ஆகியனவும்; பழமுதிர்ச்சோலை என்ற ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்கள், அதற்கு ஆற்றுப்படுத்தும் முறை, முருகனின் அருள்பெறும் வழி, அவன் அருள் புரியும் வகை, பழமுதிர்ச்சோலையில் உள்ள அருவியின் சிறப்பு ஆகியன விதந்துரைக்கப்படுகின்றன. 

திருமுருகாற்றுப்படையில் சமயம் 
முருகனின் தோற்றப்பொலிவு – 
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக அமைவது திருப்பரங்குன்றம். இது ‘கூடல்நகர்’ என்று சொல்லப்படுகின்ற மதுரையில் அமைந்திருக்கின்றது. “மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து” (திருமுருகு:42) என்ற வரிகள் ஊடாக மந்திகளும் கூட அறியமாட்டாத மரங்கள் அடர்ந்து செழித்து வளர்ந்த மலைச்சாரலில் வண்டுகளும் மொய்க்காத சுடர்போன்ற சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்த மாலையை உடையவனாக முருகன் விளங்குகின்றான். அழகான இயற்கை வனப்பின் மத்தியில் அமைந்திருக்கும் முருகனின் தோற்றப்பொலிவு பற்றி விபரிக்கும்போது கற்புமிக்க தெய்வயானையின் கணவன் என்றும், கடம்பமாலை புரளும் மார்பினன் என்றும் வர்ணிக்கப்படுகிறது. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனின் அடையாள மாலையே கடம்பமாலை. கடம்பமரம் அவன் விரும்பி உறையும் மரமாக பழமுதிர்;ச்சோலையில் குறிப்பிடப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும் முருகனுக்குரிய பூ காந்தள்பூ. அதனாலேயே ‘காந்தள் கண்ணி சூடியவன்’ என்றும் பாடப்படுகிறது. 

திருச்சீரலைவாய் பதியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளின் தோற்றப்பொலிவு பற்றி விபரிக்கும்போது ஆறுமுகன் யானைமீது ஏறிவரும் காட்சியும் ஆறுமுகங்களின் இயல்புகளும் பன்னிரு கரங்களின் தொழில்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. முருகப் பெருமானின் வாகனங்களில் ஒன்றாக யானை பற்றிக் கூறும்போது விரைவான நடையினையும் கூற்றுவனை ஒத்த வலிமையுமுடைய யானைமீது வரும் முருகன் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் வகை சொல்லப்படுகிறது. 

முருகனின் அருட்சிறப்பு, வீரம் –
இறைவனின் அருள் பற்றிய செய்திகளில் தீவினை புரிவோரை அழிக்கும் செயல் சொல்லப்படுகிறது. இறை அருளால் மழை பொழிதலும் தவமும் அறமும் மிகுதலும் இயல்பு. இதனாலேயே வள்ளுவர் கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பைக் கூறுவார். நக்கீரரும் அவ்வாறு எடுத்துக்காட்டுகிறார். “காமம் சூல் மாமழை…” (திருமுருகு:7) என்ற அடிகள் இதனைப் புலப்படுத்துகின்றன. 

திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும் முருகனின் சிறப்புப் பற்றிச் சொல்லப்படும்போது குறிப்பாக முருகனின் போர்த்தொழில், சூரனை வதம் செய்த புராணக்கதை நினைவுபடுத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் அமைந்திருக்கும் கூடல்நகரில் 

“செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி 
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க,
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்” 4


என்ற வரிகள்; ஊடாக போர்த்தொழில் இல்லாதபடியால் தூக்கிக்கட்டப்பட்ட கொடிகளும் பந்து பாவைகளும் அறுப்பார் இன்றி அசைந்து கொண்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. அவை இன்னமும் அசைந்துகொண்டிருப்பது எம்மை வெல்லும் ஆண்மையர் எவரும் இல்லை. எம் பகைவரை நாங்கள் பெண்டிர் போலக் கருதுகிறோம். ஆண்மை உள்ளவர் எனில் இவற்றை அறுங்கள் என்பதைக் கூறுவனபோல் அங்கு தூக்கிக்கட்டிய கொடிகளும் பந்து பாவைகளும் அசைகின்றன என்று நக்கீரர் பாடுவார். இவ்வாறான மதுரை மாநகரின் மேற்கே அமைந்திருக்கும் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும் முருகன் பகைவரை அழித்த மேன்மையுடையவன் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சூரனை வதம் செய்த புராணக்கதை அதிகமும் திருமுருகாற்றுப்படையில் எடுத்துக் காட்டப்படுகிறது. “செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை” (திருமுருகு) 5 என பகைவர்களாகிய அசுரர்களை அழித்த இடியினைப் போன்ற ஆற்றல் பெற்ற கையினை உடையவன் முருகன் என அவனின் வீரம் எடுத்துரைக்கப்படுகிறது.

முருகன் சூரனை வேலால் எறிந்து கொன்ற வகையும் சூரன் கடலின் நடுவே மாமரமாக தோற்றங்கொண்டு தலைகீழாக மாயவித்தை காட்டியபோது அம்மாமரத்தை வெட்டிய வெற்றியும் “கவிழ் இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து, எய்யா நல்இசை” (திருமுருகு:59-61) என்ற அடிகளில் வெளிப்படுகிறது. 

திருப்பரங்குன்றத்தில் சூரரமகளிர்  இயல்பு கூறப்படும்போது அம்மகளிர் தலையில் சூடிய பூக்களுடன் ஆடிப்பாடும்போது விளாமரத்தின் சிறிய தளிரைக் கிள்ளி முருகனை நினைந்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுகின்றனர். அப்போது “கோழி ஓங்கிய வென்றுஅடு விறற்கொடி வாழிய பெரிது”(5) என்று அசுரரை வென்று அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றியைக் கூறும் கோழிக்கொடி வாழிய என வாழ்த்துகின்றனர். பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமையால் படைத்தற் கடவுளாகிய பிரமனை சிறையிட்ட புராணக் கதை மூன்றாவது படைவீடாகிய திருஆவினன்குடியில்  சொல்லப்படுகிறது. அதனால் ஏனைய இரு கடவுளரும் தத்தமது தொழிலை ஆற்றமுடியாமல் திருஆவினன்குடி நோக்கி வருகின்றனர். அதனோடு தேவர்களுக்குத் தீங்கு விளைவித்த மூன்று அசுரருடைய முப்புரங்களையும் எரித்த சிவனின் கதையும், கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரனின் கதையும் சொல்லப்படுகின்றது. 

வழிபாட்டு முறைமை 
அந்தணர் வழிபாடு – 

திருஏரகம் என்ற நான்காவது படை வீட்டில் எழுந்தருளும் முருகனை அந்தணர்கள் வழிபடும் முறை சொல்லப்படும்போது அந்தணர்கள் எவ்வாறான இயல்பு கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் வழிபாடு இயற்றும் முறையினையும்  திருஏரகத்தில் நக்கீரர் எடுத்துரைப்பார். 

அந்தணர்கள் ஓதல் முதலிய ஆறுவகையான நன்மை பொருந்தியவர்கள். அவர்கள் நற்குடியில் தோன்றியவர்கள். நாற்பத்தெட்டு வருடம் பிரமச்சரியம் கைக்கொண்டு இல்லற வாழ்க்கையைப் பயின்றவர்கள். நித்திய ஓமம் செய்பவர்கள் என அந்தணர்களின் இயல்புகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் உதயகாலம், மத்தியான காலம், அத்தமன காலம் ஆகிய வழிபடவேண்டிய முக்காலமும் அறிந்தவர்கள். பூணூல் தரித்தவர்கள், துவைத்துப் புலராத ஆடையை அணிந்துகொண்டு ‘சரவணபவ’ என்னும் வேதமந்திரத்தை ஒலித்து வழிபடுபவர்கள் (இந்த ஆறு எழுத்தும் ‘நமோ குமாராய’ என்பர் நச்சினார்க்கினியர்) என்று முருகனை வழிபடும் முறை சொல்லப்படுகிறது.

குரவைக்கூத்து, வெறியாட்டு – 
குரவைக்கூத்து மற்றும் வெறியாட்டு வழிபாட்டு முறைமை குன்றுதோறாடலிலும் பழமுதிர்ச் சோலையிலும் நிகழ்த்தப்படுவன பதிவு செய்யப்பட்டுள்ளன.
குன்று தொறு ஆடல் என்பது குன்றுதோறும் ஆடல் எனப் பொருள்படும். முருகனின் ஐந்தாவது படைவீடாகிய இங்கு முருகனை குறவர்கள் வழிபடும் முறை எடுத்துக்காட்டப்படுகிறது. 

இங்கு முருகனுக்குப் பூசைசெய்யும் பூசாரி தலைமாலையை உடையவனாய் நிற்க,  குறவர்கள் நல்ல வாசனை மிகுந்த சந்தனத்தைப் பூசி (வேட்டைத் தொழிலைச் செய்யும் குறவர்கள்) நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் ஊறவைத்து முற்றி விளைந்த தேனால் ஆன ‘கள்’ளின் தெளிவை தம் சுற்றத்தவருடன் உண்டு மகிழ்ந்து ‘தொண்டகம்’ என்ற வாத்தியத்தை முழங்கி அத்தாளத்திற்கு ஏற்ப குரவைக்கூத்து ஆடுகின்றனர். 

பழமுதிர்ச்சோலையில் ‘வெறியயர் களன்’ (திருமுருகு:220) என்றொரு தொடர் வருகிறது. இது வெறியாட்டை நிகழ்த்தும் வேலன் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்யும் இடமாகும்.  பண்டைக்கால மக்கள் தமக்கு உடல் நலம் இல்லாதபோதும் தமக்கு பிற குறைகள் உண்டானபோதும் வேலன், கட்டுவிச்சி ஆகியோரிடத்துக் குறிகேட்டல் வழக்கம். அதன்போது முருகப் பெருமானுக்கு வழிபாடு இயற்றுவர். வேலன்மேல் எழுந்தருளும் முருகன் அடியார் குறை தீர்த்தல் வழக்கம். இவ்வாறான ஒரு வெறியாட்டு நிகழ்வு மிக அழகாக இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தெய்வமாடும் குறப்பெண் கோழிக் கொடியுடன் மயிலையும் மலைக்கோயிலில் பொருத்தமாக அலங்கரித்து, வெண் சிறுகடுகை நெய்யுடன் கலந்து வாயிற்படிகளில் தடவி தன் வழிபாட்டுக்குரிய மூலமந்திரத்தை மெதுவாக ஓதி, மலர்கள் தூவி, வணங்கி, வெவ்வேறு இரண்டு நிறமுடைய ஆடைகளை உடுத்து, சிவந்த நூலை கையில் காப்புக் கட்டி, கொழுத்த கிடாயினது குருதியோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறுபலியாக இட்டு, மஞ்சளோடு சந்தனம் முதலியன கலந்து தெளித்து, செவ்வலரி மாலையையும் ஏனையவற்றையும் பந்தலில் தொங்கவிட்டு, ‘மலைப்பக்கங்களில் வாழும் நல்ல ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் நெருங்காது நீங்குக’ என்று வாழ்த்தி  வாசனைத்தூபம் காட்டி, குறிஞ்சிப் பண்ணைப் பாடி, அருவியின் ஓசைபோல் வாத்தியங்களை முழங்கி, கண்டவர் அச்சம் கொள்ளும்படி இரத்தத்தோடு கலந்த தினையரிசியைப் பரப்பி வைத்து தெய்வமாடும் அக்குறப்பெண்ணானவள் தன்மீது முருகக்கடவுள் வரும்படி வழிபாட்டினை இயற்றினாள். இவ்வாறாக குறவர்கள் நிகழ்த்திய அற்புதமான வழிபாட்டுக் காட்சியை நக்கீரர் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். 

இவ்வாறான வழிபாட்டினை அங்கு கூடியிருக்கும் குறவர்கள் வெறியாட்டுக்களம் ஆரவாரிக்கும் படியாக பலவித இசைக் கருவிகளையும் இசைத்து முருகப் பெருமானுடைய யானையை வாழ்த்தி தாம் வேண்டியவற்றைப் பெற்றதுபோல முருகனை வழிபடும்போதில் முருகப்பெருமான் அவ்விடங்களில் தங்குதற்கும் உரியவனாவான். இத்தகைய வழிபாட்டு  முறைமையை எடுத்துக்காட்டி குறித்த புலவர் வீடுபேறு பெறுவதற்கு ஆற்றுப்படுத்தப்படுகிறார். 

‘கல்தறி’ நட்டு வணங்குதல்
பழமுதிர்ச்சோலையில் முருகனின் இருப்பிடங்கள் பற்றிக் குறிப்பிடும்போது “சதுக்கமும் சந்தியும், புதுப்பூங் கடம்பும், மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்” (திருமுருகு:225-226) என்று ஒரு தொடர் வருகிறது. இங்கு ‘கந்துடை நிலை’ என்பது இறைவனின் அருட்குறியாக கல்தறி நட்டிருக்கும் இடத்தைக் குறிக்கின்றது. பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை மலர்களால் அலங்கரித்து அவ்விடத்தை மெழுகி விளக்கேற்றி வணங்கினர் 

“கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் 
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்” 6

என பட்டினப்பாலையாலும் இது அறியப்படுகிறது. எனவே திருமுருகாற்றுப்படையில் வரும் ‘கந்துடைநிலை’ என்ற தொடர் ‘கல்தறி’ நட்டு வணங்கும் பண்டைய வழிபாட்டை வெளிப்படுத்துகிறது. இதுவே பிற்காலத்தில் சிவலிங்க உருவமாகக் கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகிறது. 

பண்பாட்டு விழுமியம் 
மானிடநேயம்

குன்றுதோறாடலில் குறவர்கள் முருகனுக்கு விழா எடுக்கும்போது குரவைக்கூத்து ஆடுகின்றனர். அதன்போது தம் அயலூரில் வாழும் சுற்றத்தவரையும் அழைத்து அவர்களோடு கள்ளுண்டு மகிழ்ந்து குரவையாடுதல் எடுத்துக் காட்டப்படுகிறது. இதனை

“கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கண் தேறல் 
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து 
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர” 7

என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன. இவ்வாறு குறவர்கள் சுற்றஞ்சூழ குரவையாடி முருகனைப் பாடிப்பரவுதலைச் சிலப்பதிகாரக் குன்றக்குரவையிலும் காணலாம். 

பழமுதிர்ச்சோலையில் முருகனை எழுந்தருளச் செய்வதற்கு இடம்பெறுகின்ற குறமகளின் வழிபாட்டு முறையில் “நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி” என்ற அடிகளின் ஊடாக மலைப்பக்கங்களில் உள்ள முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நல்ல ஊர்களை வாழ்த்துகிறாள். இந்தப் பரந்த மனப்பாங்கு பண்டைத்தமிழர் வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருந்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. 

அதுமட்டுமல்லாமல் திருமுருகாற்றுப் படையின் ஆறாவது படைவீடாகிய பழமுதிர்ச்சோலையில் நடைபெறும் பூசைகளின் இறுதியில் முருகப்பெருமான் தோன்றும்போது அங்கு முருகனுக்கு ஏவல் புரியும் அணுக்கத் தொண்டர்கள் உனக்காக முருகனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அவர்கள் “பெருமையுடைய முருகப் பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய யாசகனாகிய புலவன் ஒருவன் நினது பெரும் புகழைக் கூறவிரும்பிக் கேட்போர்களுக்கு இனிமையானவும் நல்ல உறுதிப் பயனைத் தரத் தக்கனவுமாகிய திருநாமங்களைப் மிகப் பற்பலவாகச் சொல்லித் துதித்துக் கொண்டு வந்துள்ளான். ஆதலால், அப்புலவன் நின் அருள் பெறத்தக்கவன்” 8 என்று குறிப்பிடுகின்றனர். 

இதனூடாக முன்பின் அறியாத புலவனுக்காக முருகனிடம் விண்ணப்பம் செய்து முருகனின் அருள்கிடைக்க அந்த மலைவாழ் மக்கள் உதவுவர் என்று நம்பிக்கை ஏற்படுத்துகின்றார். இவ்வாறான மானிடநேயப்பண்பு நிறைந்தவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். 

அன்பின் மகத்துவம்
பழமுதிர்ச்சோலையில் முருகன் உறைந்திருக்கும் இடங்கள் பற்றிய விபரணம் வருகிறது. தன்பால் அன்புடையார் ஏத்துதலால் முருகன் மனம் பொருந்தி எவ்விடத்திலும் உறைவான் என்ற செய்தி அங்கு சொல்லப்படுகிறது. வெறியாடுகளம், காடு, சோலை, ஆறு, குளம், ஊர், நாற்சந்தி, முச்சந்தி, ஐஞ்சந்தி, புதிதாக மலர்ந்த கடம்பமரம், ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரம், ஊர் அம்பலம், அருட்குறியாக நடப்பட்ட தறி ஆகியவற்றில் முருகன் உறைந்திருப்பான். இங்கு வழிபாட்டிற்குத் தகுதியற்றது என்று குறிக்கப்பட்ட இடம் எதுவுமில்லாமல் அன்புடையார் இருக்கும் இடந்தேடி வந்து முருகன் அருள்புரிவான். இதற்கூடாக வழிபாட்டு இடங்களால் எந்தவித ஏற்றத்தாழ்வும் பாராட்டலாகாது அன்பு ஒன்றே வேண்டற்பாலது என்பது புலனாகிறது. இவ்வாறான மானிட நேயத்தை திருமுருகாற்றுப்படை குறிக்கும் ஆறுபடை வீடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதை கண்டுகொள்ளலாம். 

தழையாடை 
பண்டைக்கால மகளிர் தழையாலேயே ஆடை இயற்றி உடுத்தும் வழக்கம் உடையவராக இருந்தனர். இதனை குன்றுதோறாடலில் தழையாடை, பூமாலை ஆகியவற்றோடு மயில்போன்ற சாயலுடைய நடையுடைய பெண்களுடன் (குன்றக்குரவை ஆடும் குறவர்களுடன்) முருகன் எழுந்தருளும் காட்சி வர்ணிக்கப்படுகிறது. 

“முடித்த குல்லை, இலையுடை நறும்பூ
செங்கால் மரா அத்த, வால்இணர், இடைஇடுபு, 
கரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ.” 9 

என்ற வரிகளால் நறிய பூங் கொத்துக்களையும் மராமரத்து மலர்க் கொத்துக்களையும் இடையே இட்டுத் தொடுக்கப்பட்ட தழையை ஆடையாக உடுத்தனர் என்ற செய்தி வெளிப்படுகின்றது. 

தத்துவக் கருத்து 
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருக்கும் அழகை இயற்கை அழகுடன் எடுத்துக்காட்டும் பகுதியில் அழகிய தத்துவக் கருத்தினையும் புலவர் உள்ளுறுத்தியுள்ளார். 

“இருஞ்சேற்று அகல்வயல் வரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாட் தாமரைத் துஞ்சி வைகறைக் 
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக் 
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்…” 10

என்பதன் ஊடாக கரிய சேற்றினை உடைய வயலில் விரிந்து மலர்ந்த தாமரை மலரில் இரவெல்லாம் உறங்கி, வைகறைப் போதில் மணம் கமழ்கின்ற நெய்தல் மலரில் தேனை உண்டு, சூரியன் தோன்றிய பின்னர் அழகிய சுனைப் பூக்களை நாடும் அழகிய வண்டுக்கூட்டம் ஆரவாரிக்கின்ற வளம் நிறைந்த திருப்பரங்குன்றம் என்பதில்; செந்தாமரையில் தேன் பருகச்சென்ற வண்டு அதில் திளைத்துக் கிடந்தபோது தாமரை மலர் மூடிக்கொண்டது. இரவெல்லாம் அதில் சிக்கிக்கிடந்து பொழுது புலர்ந்ததும் தாமரை கட்டவிழ்ந்து கொள்ள அவ்வண்டு வெளியேறியது. இக்காட்சியானது உயிர்கள் அறியாமை என்னும் சேற்றில் பிணிப்புண்டு நிற்க அவனருளால் அத்தளையில் இருந்து நீங்குவதுபோல இருந்தது. இதனை,  “சிறந்த தத்துவக் கருத்தொன்று வண்டின்மேல் வைத்துப் புலப்படுத்தப்படுகிறது.” 11 என மொ.அ துரை அரங்கசாமி குறிப்பிடுவார். 

வீடுபேற்றுக்கு வழிகாட்டுதல் 
முருகனை எங்கு காண்பேன் என வினவியவனுக்கு முருகன் உறையும் ஆறுபடை வீடுகளையும் கூறி வீடுபேறு பெறுவதற்கு வழிப்படுத்துதல் திருப்பரங்குன்றம் என்ற முதலாவது பகுதியில் 

“சேவடி படரும் செம்மல் உள்ளமொடு 
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்,
செலவுநீ நயந்தனை ஆயின், பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப 
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே” 12

என்று முருகனின் திருவடிகளை நினைத்து மேன்மையான மனத்தோடு நல்வினைகளைச் செய்யும் கொள்கையோடு செல்பவனே நீ விரும்பினாயானால் வீடுபேறு வாய்க்கப்பெறுவதோடு நீ நினைத்த காரியங்களையும் நல்வினைப் பயனால் அடையப்பெறுவாய் என்று வீடுபேற்றைப் பெறுவதற்கு ஆற்றுப்படுத்தும் செய்தி சொல்லப்படுகிறது. 

பழமுதிர்ச்சோலையில் இடம்பெறும் வெறியாட்டு விழாவினை விபரித்து, குறித்த இடங்களில் நீ முருகப்பெருமானைக் கண்டால் செய்யவேண்டியவை யாவை எனவும் கூறி அனுப்புகிறான். நீ முருகனைக் கண்டவுடனேயே முகத்தாலே விரும்பி நோக்கி வாயாலே புகழ்ந்து வாழ்த்தி கையைத் தலைமேல் குவித்து தொழுது அவன் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி அக்கடவுளைப் பலவாறு துதித்து வழிபடவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதன்போது முருகன் சரவணப் பொய்கையில் தோன்றியது முதல் சூரனைக் அழித்தது வரையிலான முருகனின் சிறப்புக்கூறி வணங்கவேண்டும் என்று கூறுகிறார். அப்போது அங்கு செவிப்போரும் முருகனிடம் உன்னைப் பற்றிக் கூறுவர். முருகக்கடவுள்வீடுபேறு பெறக்கருதி வந்த உனது வருகையை முன்னரே அறிவேன் அஃது உனக்கு எய்துதல் அரிதல்ல.’ என்றுகூறி வீடுபேறு தந்து அருள்வான் என்றும் புலவரை வழிப்படுத்துகிறார். 

முடிவுரை 

எனவே, திருமுருகாற்றுப்படையில்  முருகனின் பிறப்பு முதலான புராண வரலாறு, முருகன் உறைந்திருக்கும் இடங்கள், அங்கு வழிபாடு இயற்றுவோரின் இயல்புகள், அருவ மற்றும் உருவ வழிபாட்டு முறைகள், குறிப்பாக வெறியாட்டு, குன்றக்குரவை, பலியிடுதல், கல்தறி நடுதல் முதலானவையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறைகளில் உணவு, உடை, வழிபாடு, பிறர் நலன் வேண்டும் பண்பு ஆகியனவும் பண்பாட்டுச் செய்திகளாக வெளிப்படுகின்றன. 

திருமுருகாற்றுப்படையில் எடுத்துக் காட்டப்படும் பழந்தமிழர் வழிபாட்டுச் செய்திகள் பிற்காலத்தில் வந்த சிலப்பதிகாரத்திலும் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பழந்தமிழர் வழிவந்த வழிபாட்டு நடைமுறைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அதிகம் பதிவுசெய்துள்ள திருமுருகாற்றுப்படை பண்டைத்தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியை அறிந்து கொள்வதற்குரிய மூலாதாரமாகவும் விளங்குகின்றது. 

அடிக்குறிப்புகள் 
1.    தொல்காப்பியம் - பொருளதிகாரம் - சி. கணேசையர் பதிப்பு, (1948) ப.389.
2.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், ப.2. 
3.    ஆறுமுகநாவலர், ஸ்ரீலஸ்ரீ., (நச்சினார்க்கினியர் உரைக்கருத்தைத் தழுவிச் செய்த புத்துரை), (2011) திருமுருகாற்றுப்படை, ப. 6.
4.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், ப.8.
5.    மேலது, ப.6.
6.    பட்டினப்பாலை, பாடல் 246.
7.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், ப.13.
8.    நாராயண வேலுப்பிள்ளை, (1994) பத்துப்பாட்டு - தெளிவுரையுடன், ப.74.
9.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், பக்.13-14.
10.    மேலது, ப.8.
11.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், ப.36.
12.    மேலது, ப.7.

துணைநூற் பட்டியல்
1.    மோகன், இரா., (உரையாசிரியர்), (2004) பத்துப்பாட்டு - மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 
2.    ஆறுமுகநாவலர், ஸ்ரீலஸ்ரீ., (நச்சினார்க்கினியர் உரைக் கருத்தைத் தழுவிச் செய்த புத்துரை), (2011) திருமுருகாற்றுப்படை, வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம், கனடா.
3.    நாராயண வேலுப்பிள்ளை, (1994) பத்துப்பாட்டு - தெளிவுரையுடன், முல்லை நிலையம், சென்னை.

kuneswaran@gmail.com

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard