New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா? - முருகேசு பாக்கியநாதன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா? - முருகேசு பாக்கியநாதன்
Permalink  
 


சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா?

E-mailPrintPDF

ஆய்வு: சங்க நூல்கள்; சாதியத்தின் ஊற்றுக்காலா?அறிமுகம்: சங்க நூலகள் யாவை?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர், மூவேந்தர்களும் சங்கச் சான்றோராகிய புலவர்களுமாகும். மூன்று சங்கங்கள்; தமிழ்கூறு நல்லுலகில் இருந்ததாகவும் அதனை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று காலவகையில் அடக்கியிருந்தார்கள் முதற் சங்கத்தில் 4440 புலவர்களும் அது 4449 ஆண்டுகள் இருந்ததாகவும், இடைச்சங்கத்தில் 3700 புலவர்களிடம் 3700 புலவர்கள் வாழ்ந்தாகவும் மூன்றாவது சங்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டென்றும் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற தமிழ்க்கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களாக உள்ளதனால் அவ்வெழுத்து வளர சில நூற்றாண்டு காலம் சென்றிருக்கும் என்பதனால் கி;பி 1ஆம் நூற்றாண்டில் கடைச்சங்கம் இருந்திருக்கலாம் என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவா.; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 5ஆம் நூற்றாண்டென்றும் வாதிடுவர். இங்கு எமது கட்டுரைக்கு கால ஆராய்ச்சி என்பது முக்கியமல்ல. முச்சங்கக் கருத்தினை ஏற்போராக ஊ.வே.சாமிநாதையர், கே.எஸ்.சீனிவாசகபிள்னை, கா.சு.பிள்ளை, தேவநேயப்பாவாணர், மா.இராசமாணிக்கனார் ஆகியோர் இருந்துள்ளனர்.

தற்போது கிடைக்கும் சங்க நூல்கள் என்று நோக்கும் போது தொல்காப்பியமே தற்போது நமக்குக் கிடைக்கக்கூடிய முதல் நூலாகப் போற்றப்படுகின்றது. இதனை இடைச்சங்கத்து நூல் என்று வகைப்படுத்துவர். தற்போது கிடைக்கக்கூடிய ஏனைய சங்க நூல்களாக எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் குறிபிடலாம். இந்த ஆய்வுக்கட்டுடையில் சங்கநூல்களாகிய தொல்காப்பியத்திலிருந்தும், எட்டுத் தொகை நூல்களிலும் காணப்படும் சில கருத்துக்களும் சொற் பயன்பாடு;;களும், எதிர் காலத்தில் தோன்றி இன்று வரை தலைவிரித்தாடும் சாதியத்திற்கு வித்திட்டதா என்பதனை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சாதி என்பது யாது?
சாதி என்பதனை நோக்கினால் இது இந்து சமயத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பாரிய விருட்சமாகும். இதனைத் தமிழினத்தின் தொழுநோய் என்றுகூடக் கூறலாம்.  மக்களில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்து அவர்கள் சாதியில் குறைந்தவர்கள் என்றும் தீட்டு உள்ளவர்கள் என்றும் விலக்கி வைக்கப்படவேண்டியவர்கள் என்றும் தீண்டதாகதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மற்றையோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களாகவும் வகுக்கப்பட்டுள்ளனர். தமிழனுக்கு சாதி என்பது தீராத வியாதி போன்றதாகும். சாதி என்பதனை அடிச்சொல்லாகக் கொண்டு; சாதியம் என்ற சொற்பிரயோகம் தோன்றியது. இது சமுதாயத்தில் சாதியின் பிரிவினைகளை வெவ்வேறு தளங்களில் எடுத்துச் செல்வதற்கு ஒரு கொள்கை போன்று பயன்படுத்தப்பட்ட பெயரே சாதியம் எனலாம் அதனை ஆங்கிலத்தில்  Caste and Castism  என்ற வகையில் அர்த்தப்படுத்தலாம். உதாரணமாக இந்தியாவில் வேலைக்கான விண்ணப்பங்களிலும் பாடசாலை விண்ணப்பங்களிலும் சாதி பற்றிய வினா உள்ளதனைக் குறிப்பிடலாம். இதனை கேம்பிரிஜ் ஆங்கில தமிழ அகராதியில் நோக்கும் போது, சாதி என்கின்ற பதத்திற்கு Caste  என்கின்ற சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் காஸ்ற் என்ற பதம் ஆங்கில அகராதியில் இடையிட்டு வந்த ஒரு சொற்பதமாகும். இச்சொல்லின் மூலம் போத்துக்கேய மொழியிலேயே முதலில் காணப்பட்டது. போத்துக்கேயரே முதன் முதலில் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இருந்த சமுதாய நிலை சாதியத்தை அடிப்படையாக வைத்து மக்களில் ஒரு பகுதியினரை மற்ற இன்னொரு பகுதியினர் அடக்கி ஒடுக்கி வாழுவதனைக் கண்டார்கள். இதனை அவர்கள் சாதிப்பிரிவு என்றும் அந்தந்தப் பிரிவினருக்குக் கொடுத்த பல சாதிப்பிரிவினரையும் அறிந்து கொணடதன் காரணமாக அவர்கள் எழுதிய அகராதியில் இச்சொல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரலாம். சாதி என்பதன் விளக்கமானது கேம்பிறிட்ஜ் அகராதியில் பினவருமாறு கூறப்பட்டுள்ளது. A system of dividing Hindu society into classes, or any of these classes  சாதி என்கின்ற பதத்தினை வகை, வகுப்பு, தராதரம், என்ற பகுப்புக்குள் அடக்கலாம். ஆங்கிலத்தில்Kind, Sort, Class, Class of Quality என்ற வகையிலும் கூறலாம். ஆனால் அன்றாடம் நாம் பயன்படுத்தும்; சாதி என்ற சொல் சமூகத்தின் தொழில் அடிப்படையிலும் அதனைத் தொடர்ந்து வரும் பொருளாதார அடிப்படையிலும் பாகுபாடான முறையில் வகுக்கப்பட்டு அறிமுகப் படுத்தப்பட்டதாகும். ஆரியர் வகுத்த சாதியப் பிரிவுகளாக சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவுக்குள் அடக்கியிருந்தனர்.

தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் சமூகப் பிரிவினைகள்
தொல்காப்பிய பொருளதிகாரத்தின் கற்பியலிலும், மரபியலிலும்; சமூகப் பிரிவுகள் பற்றிய கருத்துக்கள் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. ஆனால் பலவிதமான அகப் புறக் காரணங்களின் அடிப்படையில் பொருளதிகாரத்தின் மரபியல் தொல்காப்பியத்தின் ஒரு பிற்சேர்க்கை என்றும் இப்பகுதி மூல நூலில் தொல்காப்பியரால் சேர்க்கப்படவில்லை என்றும் வாதிடுவோரும் உண்டு. இதனை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் பலர் பிராமணர்களாக இருந்ததனாலும் அவர்களுக்கு இருந்த மனுதர்ம சாஸ்திரச் செல்வாக்கினாலும் கி.பி 10 - 12ஆம் நூற்றாண்டிலேயே பிராமண ஆதிக்கம் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பின்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாகும். இதில் குறிப்பிடப்படும் நான்கு சாதி அமைப்புக்கள் தொல்காப்பியத்தில் பிற்சேர்க்கையென்று முனைவர் பா. இறையரசன் நிறுவுகிறார்.

தொல்காப்பியர் வாழ்ந்த காலம் ஆரியப் பண்பாட்டுத்தாக்கம் தமிழகத்தில் ஊடுருவிய காலமாகவிருந்தது. ஆரியரின் நால்வகை வருணப் பாகுபாடுகள் தமிழ்;மண்ணில் நன்கு ஊன்றிவிட்ட காரணத்தினால் வாழ்வில் ஒன்றிச் சேர்ந்துவிட்ட நால்வகை வருண மரபானது தொல்காப்பியரால் தவிர்க்க முடியவில்லையென்றே கூறமுடியும். 

ஒரு இலக்கணகாரணாக நின்று அவர்காட்டிய வருணப்பாகுபாடுகள் அந்தணர், அரசர், வணிகர், வேளாண் சமூகம் என்பனவாகும். அக்காலத்தில் இத்தகைய வைப்பு முறையினால் மேலோர், கிழோர் என்னும் பார்வை அவரால் முன்வைக்கப்பட்டது.

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”    பொரு – கற்பியல் சூத் - 144

உரையாசிரியர் கருத்துப்படி மேலோர்களாகிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவர்க்கும் சடங்குடன் கூடிய திருமண விழாவிற்கு உரித்துடையவர் என்றும் நான்காமவராகிய சூத்திரற்கு அவ்வாறான திருமண விழா எதுவும் இல்லை என்றும் அதற்கு வேறு காலம் உண்டு என்றும் கூறப்பட்டது. இங்கு சூத்திரர் என்போர் கீழோர் எனப்படும் வேளாண் மாந்தர் என்று கொள்ளப்பட்டது. சூத்திரர் என்ற பிரிவிலேயே தற்போது இருக்கக்கூடிய ஏனைய சமூகப் பிரிவுகள் யாவும் இருந்தன என்றும் கூறமுடியும்.

இந்த இடத்தில் தொல்காப்பியரால் ஆரியர்களிடத்தில் இருந்த சமூகப் பகுப்பு முறையான மேலோர் என்றும் கீழோர் என்ற பாகுபடுத்தப்பட்ட பிரிவானது முதலில் தமிழரது இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் இவ்வாறான ஒரு சமூகப் பிரிவுகள் பற்றி தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் வேறு எங்கும் தமிழரது ஒரு சமூக நடைமுறையாக குறிப்பிடப்படவில்லை. இலக்கியத்திற்குக் கண்டதே இலக்கணமாகும். அதன் பிரகாரம் தொல்காப்பியத்திற்கு முந்திய எந்த இலங்கியங்களிலும் சாதியப் பிரிவுகள் பற்றிக் குறிப்பிடாததனாலேயே ஆரியர் குறிப்பிட்ட வருணப்பரிவுகள் தவிர்ந்த எந்தச் சமூகப்பிரிவுகள் பற்றியும் தொல்காப்பியர் கூறிவில்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.  வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் சங்கத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள் எதிலும் காணதது வியப்பாயுள்ளது. 

“ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே” என்று சூத்திரம் 619 மரபியலில் இல் கூறப்படுகிவதன் மூலம் ஊர், நகர், இயற்பெயர், சிறப்புப்பெயர் எனத்தத்தம் தொழிலுக்கேற்ற தொழிற் கருவி ஆகியன சகல பிரிவுகளுக்கும் பொருந்தும் என்பதனால் தொழிலுக்கேற்ற ஒரு சமூகப்பிரிவு இருந்ததற்கான சான்றாக அறிய முடிகின்றது. இதன் மூலம் பிராமணன், அரசன், வணிகன், சூத்திரன் (வேளாண் மாந்தன்) ஆகியோர் தவிர்ந்த வேறு தொழிற் பிரிவினரும் வாழ்ந்தார்கள் அவர்கள் தனித்தனிப் பிரிவுகளாகவும் அவர்களுக்கு வேறு வேறு தனித் தொழில்களும் இதன் மூலம் அவர்களது ஏற்றத்தாழ்வுகளும் குறிப்பிட்டுக் காட்டுவதே எதிர்காலத்தில் சாதிப்; பிரிவுகளுக்கு வித்திட்டதெனலாம். 

வணிகர்கள் ஒரு தனிச் சமூகப்பிரிவாக நோக்கப்பட்டார்கள். ஆரம்பகாலத்தே இதனையும் ஒரு தனிச் சாதிப்பிரிவாகவே சமூகம் அங்கீகரித்தது. அடுத்து சூத்திரர் என்பதனை சத்திரியர், பிராமணர், வைசியர் என்ற மூன்று பிரிவுகளுக்குள் அடங்காத பிரிவுக்குள் அடக்கினர். தொல்காப்பியத்திலோ சங்ககாலத் தொகை நூல்களில் குறிப்பிடும் சாதிப்பிரிவுகள் எதனையும் அங்கு காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூத்திரர் என்ற பகுப்பு, மேலோர் என்று குறிப்பிட்ட சாதிகள் தவிர்ந்த ஏனையோரையும் அடக்கியிருந்தன.

வேளாண் மாந்தர் இயல்பு பற்றி தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”         தொல் - பொரு – மரபியல் – 625

இங்கு சூத்திரர் என்போரை வேளாண்மாந்தர் என்று அழைக்கின்றார். இதன் பிரகாரம் வேளாண்மை செய்வோர் நிலவுடமைக்காரர் மட்டுமல்ல மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்களாவர். இதன் காரணமாகவே அந்நிலத்தில் வாழ்ந்து வேளாண்மைக்கு உறுதுணை புரிந்த அத்தனை மக்களையும் தேவந்திரகுல வேளாளர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கலாயினார். இவர்களே பள்ளர் என்று இன்று அழைக்கப்படும்; விவசாய உதவியாளர் சமூகமாக சங்ககாலத்திலிருந்தே இருந்துள்ளனர். ஆனால் அக்காலத்தே பள்ளர் என்ற பெயர் தொல்காப்பியத்திலோ, சங்க எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களிலேயோ எங்கும் காணப்படவில்லை. மருத நிலத்துத் தெய்வம் இந்திரனாவான் அங்கு வேண்மை செய்த இனம் தேவேந்திரனை அடியொற்றி வந்த இனமாகியால் எதிர்காலத்தில் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் எனத் தம்மை அழைத்துக்கொண்டனர். முன்பு ஒரே பிரிவினராக நோக்கப்பட்ட வேளாண் மாந்தர் 12ஆம் நூற்றாண்டின் பின்பு சோழ அரசர்களினால் வடக்கிலிருந்து கொண்டுவந்து குடியமர்த்தப்பட்ட் பிராமணர்களுக்கு நில புலன் கொடுப்பதற்காக இவர்களிடம் இருந்த நிலபுலன்கள் பறிக்கப்பட்டே பிரமதேயம் என்ற குடியிருப்புக்களைத் தோற்றுவித்ததார்கள். இதன் காரணமாக அப்போது நில புலன்களுடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்த ஒரு பகுதி வேளாண் மாந்தன் நிலபுலன் பறிக்கப்பட்டு விவசாயத்திற் உதவி செய்யும் ஒரு சமூகமாக ஆக்கப்பட்டதே இந்த தேவேந்திரகுல வேளாளர்களின் கதையாகும்.   

மேற்படி பாடலின்; பிரகாரம் வேளாண் மாந்தர்க்கு உழுதுண்ணும் வேளாண்மைத் தொழில் வாழ்க்கையே உண்டு அத்தோடு பிறவகையான வாழ்க்கை இல்லை என்று கூறுகின்றார். இதில் இருந்து வேளாண்மைத் தொழிலும் இது தவிர்ந்த வேறு தொழில்களும் இருந்துள்ளன என்றும் அவற்றைச் செய்வதற்கு வேறு தொழிலாளர்கள் இருந்துள்ளனர் என்ற கருத்து இங்கிருந்து பெறப்படுகின்றது. வேளாண் மாந்தர் என்ற தொல்காப்பியரின் பதமே எதிர் காலத்தில் வேளாளர் என்னும் சாதியப்பிரிவு தோன்ற அடிப்படையாய் அமைந்தன. ஆனால் ஆரிய இனத்தில் சூத்திரர் என்ற பிரிவில் வேளாளர் என்ற சாதியப் பிரிவு காணப்படவில்லை. இப்பிரிவானது தமிழனுக்கே முழுக்க முழுக்க உரித்தான ஒரு சாதியப்பிரிவாக தொல்காப்பியரை அடியொற்றி அமைக்கப்பட்டு விட்டது.  

அரசருக்கும், அந்தணருக்கும், வணிகருக்கும்; வேளாண் மாந்தரும் அரசரிடம் இருந்து பெறுவன என்பன 625, 626, 627, 628 ஆகிய சூத்திரத்திரங்களில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியர் இவைபோல அவை எளியோற்கு இல்லை என்று கீழ்வரும் சூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

“அன்ன ராயினும் இழிந்தோர்க்கு இல்லை” தொல் - மரபியல் – 629  

அவர் அத்தகைய மரபுடையோராகினும் இழிந்தநிலையில் உள்ளவர்களுக்கு அவையில்லை என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதன் மூலம் இழிந்தோர் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதனை  நோக்கவேண்டும். இதன் மூலம் அரசன், பிராமணன், வணிகர், வேளாண் மாந்தர் என்போர் உயர்ந்தோர் என்றும் ஏனையோர் இழிந்தோர் என்ற நிலைப்பாடே தொல்காப்பியர் காலத்தே இருந்ததனையே அவர் அங்கு குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் எனலாம். இவைககைள் யாவற்றையும் வகைப்படுத்தி நோக்கும் போது மேலோர், கீழோர், இழிந்தோர் என்ற தொல்காப்பியர் குறிப்பிடுவது எதிர்காலத்தே இதனை அடியொற்றியே சாதிகள் பலவாகத் தோன்றிற்றெனலாம். இழிவு என்ற சொல்லடியில் இருந்தே இழிந்தோர், இழிபிறப்பாளான், இழிசனன், எழியன், எழியவன் என்று கீழ்சாதியினரைக் குறிக்கும் சொற்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறலாம்.

புறநானூற்றுச் செய்தி
பாடியவர்: கணியன் பூங்குன்றனார்
தலைப்பு: பெரியோர், சிறியோர்
பாடல் 192. திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புகுவது அன்றே வாழ்தல்

முதலிரு வரிகளில் கூறுவது அறநூற்காலமாகிய திருக்குறள் எழுந்த காலத்துக் கருத்துப்போன்று அமைகின்றது. நோயுள்ள இடத்தில்த்தான் மருத்துவனுக்கு வேலையுண்டும். புறநானூறு எழுந்த 3ஆம் சங்க காலத்தில் இது சொல்வதற்கான ஒரு தேவை இருந்துள்ளது. மக்களிடையே பிரிவுகள் அது சாதி அடிப்படையில்கூட இருந்திருக்கலாம், ஏற்றத் தாழ்வுகள் இருந்திருக்கலாம். ஆதனை அறிவுறுத்தும் பொருட்டு இதனைக் கூறப்பட்டதாகக் கொள்ள முடியும். நாம் யாவரும் ஒரு ஊரில் வாழும் உறவினர் போன்று ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனையே இங்கு இவ்வாறாகக் குறிப்பிடப்படுகின்றது என்று நோக்க முடியும். எமக்கு எல்லா ஊரும் ஒன்றே. மனிதனுக்கு எங்கு சென்றும் வாழும் உரிமை உள்ளது. அதற்குத் தடையேதும் இல்லை. அங்கு வாழும் மக்கள் யாவரும் எமது உறவினர், உறவினர் போன்றவர் என்ற கருத்து வெளிப்படுகின்றது. இவ்வாறான ஒரு புத்திமதி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் புலவனுக்கு இருந்ததாலேயே அதனை இவ்வாறாகக் கூறுகின்றார். அத்தோடு தொடர்ந்து கூறும் வரிகளும் ஏதோரு தேவைக்காக அறிவுரை கூறுவதாகவே அமைந்துள்ளர். நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, ஒருவரைத் திட்டுதல், ஏசுதல், கோபித்தல் என்பனவும் அத்தகையவற்றிலிருந்து அமைதியடைதல், ஆறுதல் அடைதல் என்பது பிறரால் வருவதில்லை இரண்டையுமே நாமே செய்கின்றோம். இதற்காக எம்மால் யாரையும் குறை கூற முடியாது. எம்மிலேயே குற்றம் குறை காணவேண்டும். சாதல் அந்த உலகில் ஒரு புதிய செய்தியல்ல. பிறந்தவன் இறப்பான் என்பது நியதி. ஆகவே வாழுவதே இனிமையானது, இன்பம் தருவது என்பதாக அறிவுரையாகவே அமைகின்றது. இது பிரிந்து வாழும் சமூகப் பிரிவினருக்காகவே கூறப்பட்டுள்ளதாகவே கொள்ள முடியும். இறுதி வரிகளில் கூறப்படும்.

“காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”  அதாவது சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். ஏந்தப் பிரிவினையும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம். அவனது நன்நடத்தையாலேயே அவனை மதிப்போம் என்ற பொதுவுடமைக் கருத்தினை 2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறுகின்றார். 

திருக்குறள்ச் செய்தி
திருவள்ளுவர் ஆண்டு என்று கணிக்கப்பட்டதன் பின் அதன் காலம் கி.மு 231ஆம் ஆண்டு என்று குறிபிடப்படுகின்றது. (தமிழ் இலக்கிய வரலாறு- முனைவர். பா. இறையரசன்) திருக்குறள் எழுந்த காலம் அறநெறிக்காலம் என்று குறிப்பிடுவர். அப்பிடியாயின் அது கி.பி 3 நூற்றாண்டு நூலாக வேண்டும். மனிதனை தொழில் அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்படுவது பற்றி கூறப்படும் ஒரு குறளை நோக்குவோமாயின். அதனை எமது சமுதாயம் சமத்துவமாக வாழந்தது என்ற சிறப்புக் கருதிச் சொல்வதுண்டு. ஆனால் அதன் முழுக்கருத்தையும் நோக்கும் போது தொழில் ரீதியான சாதியப் பிரிவுகள் அன்றே தோன்றிவிட்டதனைக் காட்டுவதாக அமைகின்றது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”   என்றவாறாகக் கூறப்படுவது – எல்லா உயிர்களும் பிறக்கும்போது அதன் இயல்புகள் ஒன்றே, அதில் எதுவித வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு அவனது செய்தொழிலால், அக்காலத்திலிருந்து இன்று வரை செய் தொழில் பரம்பரை பரம்பரையாகவே தொடர்கின்றன. சுலவைத் தொழில் செய்தவன் பிள்ளை அதனையே செய்ய வேண்டும், புலைத் தொழில் செய்தவன் அதனையே செய்ய வேண்டும், முடிதிருத்தும் தொழில் செய்தவனின் பிள்ளை அத்தொழிலையே செய்ய வேண்டும் என்பது எழுதாத விதியாக இருந்து வருவதனை வள்ளுவர் காலத்திலேயே “செய்தொழில் வேற்றுமை யான்” என்று குறிப்பிடுவதிலிருந்து தொழில் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்படுவது விளங்குகின்றது. ஆனால் அதற்கு சாதி என்ற பெயர் கொடுக்கப்படவில்லை. செம்மொழி மகாநாட்டின் மகுட வசனமாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற ஒருபகுதியை மட்டுமே குறிப்பிட்டார்கள். இதில் மனித இன உயிர்கள் யாவும் என்ற உயரிய கருத்துப் புலப்படுகின்றதே. ஆனால் இரண்டாவது வரியான “செய்தொழில் வேற்றுமை யான்” என்பதனைச் சேர்க்க கருணாநிதி அவர்கள் வேண்டுமென்றே மறந்தாரா?. 

சங்கத் தொகை நூல்களில் புலையன், புலைத்தி
சங்க நூல்களில் “புலை” என்ற சொற்பதத்தினை நோக்கலாம். புலை என்னும் வேர்ச்சொல்லை அடியொற்றியே புலையன் என்ற சொல் வழக்கு வந்துள்ளது எனலாம். புலை என்பதற்கு தமிழ் அகராதியில் முக்கியத்துவம் அற்ற, குரூரமான, அழுக்கான, சுத்தமற்ற என்று ஒத்த பதங்கள் கூறப்பட்டுள்ளன. புலை என்பதலில் இருந்தே புலால், பிலால் என்ற சொற்களும் பிறந்ததாக உள்ளன. புலால் என்பது மீன், மாமிசம் என்பனற்றிற்கும் வழங்கப்படுகின்றது. புலால் நாற்றம் என்பதனை மீன் நாற்றம், இறைச்சி நாற்றம் என்ற பாவனையும் உண்டு. புலால் உணவு என்பது மாமிச உணவைக் குறிக்கும். மீனோ அல்லது மாமிசமோ நாற்றமுடையதே இதன் நாற்றத்தினை நுகரவே அதனை ஈ மொய்க்கின்றது. ஆகவே அதில் ஒரு வெறுப்புக்குரிய மணம், அசிங்கம், அழுக்கு ஆகியன தோன்றக் காரணமாகின்றன. புலால் உண்பவன் புலையன், இழிதொழிலைச் செய்பவன் புலையன் என்ற கருத்துப்பட அது வழங்கிவந்துள்ளது. புலை என்ற சொல் ஏனைய திராவிட மொழிகளிலும் இதே சாரப்படியான அர்த்தம் கொண்ட சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.. கன்னட மொழியில் பொலே என்பது குழந்தைப் பேறினால் ஏற்படும் சுத்தமற்ற தன்மை, பெண்களின் மாதவிடாய் ஆசூசம் என்று குறிப்பிடப்படுகின்றது. கொடகு மொழியில் மாதவிடாய் ஆசூசம் அல்லது பிரசவத்தினால் ஏற்படும் ஆசூசம் அல்லது இறப்பினால் ஏற்படும் ஆசூசம் என்று கொள்ளப்படுகின்றது. இவ்வாறாக திராவிட மொழிக் குடும்பங்கள் பலவற்றிலும் ஒரே விதமான அர்த்தம் கொண்ட சொல்லே வழங்கி வந்தமையால் ஒரு இழிந்த மனிதனை அழைக்க புலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அத்தோடு தெற்கத்தைய மொழிகள் யாவற்றிலும் புலையன் என்பது ஒரு இழிந்த சாதிக்குப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். புலையன் என்ற சொல்லே திரிபடைந்து பறையன் என்றாகவும் வந்திருக்க முடியும்;. 

சங்க நூல்களில் குறிப்பிடப்படும் இசைக் கலைஞர்களான பாணன், கிணையன் ஆகியனவும் தொழில் ரீதியாக பாணன் வீணை வாசித்து அரசர்களிடமும் செல்வந்தர்களிடமும் தங்கள் இசையினை அரங்கேற்றி அதனைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாகும். இவர்கள் செல்வந்தர்களின் தூதர்களாகவும் செயற்பட்டுள்ளார். எனினும் இவர்கள் ஏழ்மையின் எல்லையில் இருந்த காரணத்தினாலும் சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோராகவே கணிக்கப்பட்டனர். இவர்களின் மனைவிகள் விறலியர் என அழைக்கப்பட்டனர். இவர்களே பாணன் வாசிக்கும் வீணையின் இசைக்கு நடனம் ஆடுபவர்களாகவும் இருந்தனர். இவர்களை விடத்;தாழ்ந்தவர்களே கிணையர் என்போராகும். இவர்கள் தொழில் சிறு பறை வாசிப்பதாகும். இத்தகைய சிறு பறையே கிணை எனப்படும். இவர்களே அரசர்களின் அறிவித்தல்களைப் பறை அறைந்து பொது மக்களுக்குத் தெரிவிப்பவர்களாவர். இவர்களின் வளர்ச்சியே இன்றைய பறையர்கள் எனப்படும் சாதியின் தொடர்ச்சியாகும். அடுத்ததாக சங்க நூல்களில் குறிப்பிடப்படுவோர் துடியர், இவர்கள் துடி எனப்படும் ஒரு வகைப் பறையை இசைப்பவர்களாவர். இவர்களே போர்ப்பறை முழங்குபவர்களாவர். இவர்கள் யாவரும் நாடு நாடாகவும் ஊர் ஊராகவும் திரிந்து தமது கலையினை சந்தைப் படுத்தியே தமது சீவியத்தைக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு நாடோடி வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்களாவர். சங்ககால நூல்களில் குறிப்பிடப்படும் புலை என்பனை அடியொற்றிப் பிறந்த புலால் என்பது மச்ச, மாமிசம் என்ற பொருளில் கி.மு 3ஆம் நூற்றாண்டின் நூலாகிய திருக்குறள் என்னும் நீதி நூலில் “புலால் மறுத்தல்” என்னும் ஒரு அதிகாரமே வகுக்கப்பட்டிருப்பதனைக் காண்க. ஆனால் திருக்குறளில் சாதிப்பிரிவுகள் பற்றி எங்கும் குறிப்பிடப்பவேயில்லை. இதன் அடிப்படையிலும் ஏனைய நீதி நூல்கள் தோன்றிய காலம் சமண சமயம், புத்தசமயம் ஆகியன தமிழ்நாட்டில் நிலைபெற்ற காலமாகையால் திருக்குறள் என்னும் நீதி நூல் கி.பி 3ஆம் நூற்றண்டில் தேன்றியதாலேயே சாதி பற்றிய எந்தக்குறிப்புக்களும் திருக்குறளில் இடம்பெறவில்லை என்று ஹாட் கூறுகின்றார்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா? - முருகேசு பாக்கியநாதன்
Permalink  
 


சாதிப்பிரிவு பற்றிய சங்க நூற் சான்றுகள் 

“இந்நான் கல்லது உணாவும் இல்லை,
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை”        புறநானூறு 335 வது பாடல் வரி 6லிருந்து

என்பதனை நோக்கினால் புறநானூற்றுக் காலத்தே துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே இருந்ததாகவும் வேறு எந்தக் குடிகளும் இல்லை என்பதாக “புலவர் மாங்கு கிழார்” குறிப்பிடுவது ஈண்டு நோக்கற்பாலது. பாணன் என்பதே புலையன் என்று கலித்தொகை 85ஆம் மற்றும் 95ஆம் பாடலிலும் குறிப்பிடுவதனை கீழே பார்க்கலாம். துடி என்பது ஒருவகைப் பறையாகும் இதனை முழங்குபவன் துடியன் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். துடியன் என்பதனை நற்றிணை பாடல் 77 வரி 1ரூ2 இல் குறிப்பிடுவதனை கீழே நோக்கின் மலையமான் திருமுடிக்காரி புலையனது துடி முழங்கச் செல்லுகிறான். என்பதில் இங்கு புலையன் பறை அடிப்பவனாகக் குறிப்பிடப்படுகின்றான் ஆகவே துடியன் என்பது கூடக்காரணப் பெயராக வந்த சொல்லாகவிருக்கலாம். ஆகவே பாணன், துடியன், பறையன் என்பனவற்றைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் புலையன் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதனை நோக்குகலாம்.

புலையன், புலைத்தி என்ற பதம் மேற்குறிப்பிட்ட பல குழுவினருக்கும் பாவிக்கப்பட்டுள்ளதனை நற்றிணை 90 வது பாடலின் 3வது அடியில் “வறன் புலைத்தி எல்லித் தோய்ந்த” என்றவாறாக புலைத்தி என்கின்ற பரத்தை என்ற வகையில் இங்கு பாவிகப்பட்டுள்ளது. குறுந்தொகையின் 330 வது பாடலின் முதல் வரியில் “நலத்தகைப் புலைத்தி பசைதோய்ந்து எடுத்து” இங்கு புலைத்தி என்ற பதம் உரையாசிரியரினால் வண்ணாத்தி என்று பாவிக்கப்படுவதனை நோக்குக. புறநாநூற்றில் 311 பாடல் வரி 2 இல் “புலைத்தி கழீஇய தூவெள் அறுவை” என்றவாறாக இங்கும் தூமைச் சேலை துவைக்கும் வண்ணாத்தி என்ற கருத்திலேயே புலைத்தி என்று பாவிக்கப்பட்டது. நற்றிணை பாடல் 77 வரி 1ரூ2 இல் “மலையன் மாஊர்ந்து போகிப் புலையன், பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு அவர்” என்றாவாறாக மலையமான் திருமுடிக்காரி தன் குதிரைமீது அமர்ந்து செல்ல புலையனது துடி முழங்க செல்லுகிறான். என்பதில் இங்கு புலையன் பறை அடிப்பவனாகக் குறிப்பிடப்படுகின்றான். அவனே துடியன் என்றும் அழைக்கப்பட்டான். இங்கு புலையன் என்பதோ அல்லது புலைத்தி என்பதோ இழி தொழிலாகக் கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே மேற்குறிப்பிட்ட சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளதனைக் காண்க. தொடர்ந்து நற்றிணை செய்யுள் 347 வரி 5 இல் “தண்ணுமை” என்னும் பறை புலையனால் போருக்கு வீர மறவர்களை அழைப்பற்காக அறையப்படுவதாகக் குறிப்பிடுகின்றது. மேலும் கலித்தொகை பாடல் 68 வரி 19 இல் “பொலிகொனப் புகுந்தநின் புலையனைக் கண்ட யாம்” என்றவாறாக  நீ மணம் செய்கின்ற மனையாகக் கருதி எம்முடைய மனையிலே பொலிக பொலிக என்று கூறி புலைத் தொழிலையுடைய பாணன் என்று உரையிற் குறிப்பிடுன்றது. அதே கலித்தொகையில் மேலும் பாடல் 85 வரி 22இல் “பொய்போர்த்துப், பாண்தலை யிட்ட பலவல் புலையனை” என்று குறிப்பிடுவதும் பாடல் 95 வரி 10இல் “பிரியாக் கவிகைப் புலையன்றன் யாழின்” என்ற இரண்டு பாடலிலும் பாணனையே இங்கு புலையன் என்று குறிப்பிடப்படுகின்றது. 

புலையனது பார்வையினையே உதாரணமாகக் காட்டும் பாடல் ஒன்று கலித்தொகையில் செய்யுள் 55 இல் வரி 19 இல் இது அவ்வாறாகக் கூறப்படுகின்றது, “புலையர் போல புன்க ணேக்கி” அதன் விளக்கம் சாயலிருந்தபடி மெத்தென நடக்கும் மயிலுமன்று, சொல்லுச் சொல்லத் தளருமாயின் கிளியுமன்று, என்று அவ்விடத்து அத்தன்மையதாகிய உறுப்புக்கள் பலவற்றையும் பொய் பாராட்டி, வலையர் அம்மாக்களின் சோர்வைப் பார்க்குமாறுபோல என் நெஞசழிந்த செவ்வியைப் பார்த்துப் புலையர் நோக்குமாறு போன்று வருத்தமுண்டாகுமாறு நோக்கி தொழுதலைச் செய்தாய் என்பதாக உரையாசிரியரால் கூறப்படுவதனை நோக்குக. இது போன்ற கருத்தே புறநாநூறு பாடல் 259 வரி 5 இலும் காணமுடியும். “முருகுமெய்ப் புலைத்தி போலத்” என்று வரும் பாடல் ஆநிரை கவர்ந்த மறவர், ஆநிரையோடு திரும்பிச் செல்லாது, அதனை மீட்க வருபவர்களை எதிர் கொண்டு மறைந்திருந்த வேளை வெறியாடும் புலைச்சிபோல் தாவித்திரியும் ஆநிரைகளை மீட்டுக்கௌ;ளக் கருதி என்றவாகக் கூறப்படுவதிலிருந்து ஒருவருக்கு சுவாமி உருவேறி வெறியாட்டுச் செய்வது என்பது ஒரு புலைச்சி போன்ற ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கே அப்படியான உருக்கொள்ளுதல் வரும் அவ்வாறு உருக்கொண்டு துள்ளுதல் ஆநிரை மீட்க வருபவர்களும் வெறிபிடித்தவர்கள் போல் வருவர் என்பதாகும். 

“இழி” என்ற சொற்பதம் கீழோர், தாழ்ந்தோர் என்ற வகையிலேயே சங்க நூல்களில் பிரயோகத்தில்; இருந்துள்ளன. இழி என்ற அடிச்சொல்லிலிருந்தே “இளிசனம்” “இளிசனர்” சொற்கள் தோன்றின. கலித்தொகையில் பாடல் 94இல் வரி 28இல் இந்த வiகையில் பாவிக்கப்பட்டுள்ளனதனை நோக்க முடியும் “இழிந்ததே கூனின் பிறப்பு கழிந்தாங்கே” என்று வருவதை நோக்கவும். புறநானூறில் பாடல் 110 வரி  “இவைநுமக்கு உரிய அல்ல, இழிந்த” என்ற வரியிலும் அதேவிதமாக புறநானூற்றில் பாடல் 204 வரி 1ரூ2 களிலில் “ ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர், ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்று” என்றவாறாகவும் இழிவு என்பதற்கான விளக்கமாகமும் குறிப்பிடப்பட்டுள்ளதனை நோக்குக.

சங்ககாலத்தே மீன்பிடித் தொழில் செய்தவர்களும் கீழ்நிலைச் சாதியாராகவே கருதப்பட்டனர். உயர்ந்தோர்கள் புலால் உணவினை உண்பதில்லை என்றும் அதன் காரணமாக புலால் எனப்படும் மீனைப் பிடிப்பவர்களும் தாழ்ந்தோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். அகநானூற்றில் பாடல் 110 வரி 1ரூ2 “இவைநுமக்கு உரிய அல்ல இழிந்த, கொழுமீன் வல்சி என்றனம் இழுமென” என்றவாறாகவும் கலித்தொகையில் பாடல் 121 வரி 20 இல் “எறிதிரை தந்திட இழிந்தமீ னின்றுறை” என்ற இரண்டு பாடல்களிலும் மீனின் இழிவு குறிப்பிடப்பட்டுள்ளதனை அறிக.  புறநானூற்றின் செய்யுள் 300 வரி 1 இல் “நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்” என்றவாறாக மீன்பிடிப்போரைப் பரதவர் என்ற பதப் பாவனை முதலில் அறியப்பட்டுள்ளது. இதுவே இறுதியில்  பரவர் என்ற பெயராகத் திரிபடைந்து பிரயோகத்திற்கு வந்தது எனலாம். 

புறநானூறு பாடல் 82 இல் “சாறுதலைக் தொண்டென்ப பெண்ணீற் றுற்றெனெப், பட்ட மாரி ஞாயிறு ஞாயிற்றுக், கட்டில் நிணைக்கும் இழிசினன் கையது, போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ” என்ற பாடலில் தோல் தொழில் செய்பவன் பற்றிய கருத்து பின்வருமாறு, ஊரிலே விழா நடக்கின்றது அதற்குப் போக வேண்டும். மனைவிக்கு பேறுகாலமாக உள்ளது. இழிசினனாகிய புலயன் ஊசியால் விரைந்து தோலால் செய்யப்பட்ட கட்டிலினை விரைவாகத் தைக்கின்றதனை இச்செய்யுள் விளக்குகின்றது. 

புறநானூற்றின் பாடல் 170 வரி 4ரூ5 ஆகியனவற்றில் “ வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென, இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப” என்று பாடுவது யானைத் தந்தத்தில் விளைந்த முத்தை விறலியருக்கும் கள்ளினைப் பாணருக்கும் கொடுத்த தலைவனது குடிகள் உழுதுண்டு வாழும் கருமை நிறமுடைய கைகளையுடை இழிப்பிறப்பாளன் கை சிவக்கும்படியாக தனது பறையை உலைக் களத்தில் உள்ள உலைக்கல் சிவப்பது போல் அவனது கை சிவந்துள்ளது என்று பாடப்படுவதனால் இழிசனனே பறை அடிப்பவன் என்று தெளிவாகக் கூறப்படுகின்றது. 

ஏவலிழையர் என்பது இளையஏவலாளி என்ற சொல்லும் தண்ணுமை என்கின்ற ஒரு வகை பறையை இசைப்பவனை இளையர் என்றும் பதிற்றுப்பத்து 41 வது செய்யுளிலும் 51 வது செய்யுளிலும் குறிப்பிடப்படுகின்றர். பதிற்றுப்பத்து பாடல் 41 இல் 

“புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கி
காவில் தகைத்த துறைகூடு கலப்பயைர்”

இச்செய்யுளில் ஒரு பாணர் விறலியர் கூட்டம் பரிசில் பெற விரும்பி தங்களது இசைக் கருவிகளுடன் அரசனை நாடிச் செல்லுவதனை விளக்குகின்றது. புணருதற்குரிய முறுக்கேறிய நரம்பினையுடைய இன்னிசையினைத் தரும் யாழ்களை ஏவலிழையர் சுமந்தபடி செல்லுகின்றனர். தண்ணுமை எனும் முழவும்(ஒரு வகைப் பறை), ஒரு பக்கம் மட்டும் அடிக்கும் ஒருகண் மாக்கிணை என்னும் பறையும். பிற இசைக்கருவிகளும், மூங்கிலை இடையிட்டு அறுத்துச் செய்த பெருவங்கியம் என்னும் கருவியோடு ஒருங்கே சேர்த்துக் காவடித் தண்டில் இரண்டுபக்கமும் ஆடற்றுறைக்குத் தேவையான உடைகள் மற்றும் கருவிகளுடன் தோழில் சுமந்த வண்ணம் கூட்டமாக பாணர், விறலியர், ஏவலிளையர், மறவர் கலப்பையர் என்னும் கூத்தர் ஆகியோர் செல்வதாகப் புலவர் குறிப்பிடுகின்றார்.

சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரி என்ற வகையில் ஒரு ஊர் அழைக்கப்படுகின்றது. புறஞ்சேரி என்பதற்கு ஊருக்குப் புறத்தே சமூகத்தில் தாழ்ந்தோர் வாழும் இடம் என்றே கருதப்படுகின்றது. அங்கேதான் பாணன், விறலியர், துடியன், தண்ணுமையன், பறையன், புலையன், துடியன் ஆகியோர் வாழும் இடமாகவிருந்தது. மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனன் நாட்டியம் ஆடக்கூடாது என்றும்;, இசைக்கருவி இசைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. அதனைச் செய்பவர்கள் கீழ் சாதியினர் என்றே குறித்துள்ளனர். இத்தகைய பகுப்பே பாணர்களையும், விறலியர்களையும், பறையரையும், தேவடியாள்களையும், துடியரையும் ஒதுக்கப்பட்டோர் என வகைப்படுத்தத் தூண்டியது எனலாம். பாணன், விறலியர், துடியன், தண்ணுமையன், பறையன் ஆகியோர் அரசர்களிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவர்களாகவும் அவர்களை அண்டிப் பிழைப்பு நடாத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஒரு சில பாணர்கள் பின்னர் சங்கச் சான்றோர்கள் என்று அழைக்கப்பட்ட புலவர்களாகவும் வந்துள்ளனர் என்று பிறையன் பெபன்பேகர் (டீசலயn Pகயககநnடிநசபநச) தனது நூலான  “Caste in Tamil Culture: The Religious Foundations of Sudra Domination in Tamil Srilanka” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

முடிவுரை
தொல்காப்பியம் ஆரியர்கள் வகுத்த நான்கு வருணப்பிரிவுகள் தவிர வேறு எந்தச் சாதிப்பிரிவுகளையும் காட்டாததனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு சாதியப் பிரிவுகள் எதுவும் தமிழ் சமுதாயத்தில் எதுவும் இருக்கவில்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. எட்டுத்தொகை நூல்களில் காட்டப்பட்ட மேற்படி உதாரணங்களில் இருந்தும் ஆரியர் கொடுத்த வருணப் பிரிவுகளிலிருந்தும் இன்றைய சாதியப் பிரிவினைகளுக்கு அங்கு காட்டப்பட்ட சமூகப் பிரிவுகளே மேலும் விரிவடைந்த ஒரு சாதிய இறுக்கம் கொண்ட சமுதாயமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது என்ற முடிவுக்கு வருவதற்கு கொடுக்கப்பட்ட சகல சான்றுகளும் உறுதுணை புரிகின்றன.

உசாத்துணை நூல்கள்
1.தொல்காப்பியம் - பொருளதிகாரம் - பேராசிரியர் சண்முகம்பிள்ளை
2.கலித்தொகை – சி.வை.தாமோதம்பிள்ளை பதிப்பு
3.புறநானூறு – புலியூர்க் கேசிகன் தெளிவுரை 
4.அகநானூறு – புலியூர்க் கேசிகன் தெளிவுரை 
5.குறுந்தொகை – புலியூர்க் கேசிகன் தெளிவுரை
6.நற்றிண – புலியூர்க் கேசிகன் தெளிவுரை
7.பதிற்றுப்பத்து - புலியூர்க் கேசிகன் தெளிவுரை
8.பரிபாடல் - புலியூர்க் கேசிகன் தெளிவுரை
9.பண்டைய தென்இந்தியாவின் சாதிபற்றிய ஆதாரங்கள் - பேராசிரியர் ஜேர்ச்.எல்.ஹாட்
10.தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பா. இறையரசன்
11.தொல்காப்பியச் சிந்தனைகள் - சோ. விக்டர்\

packsmuru100@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard