New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியரும் அறிவியலும்! - முருகேசு பாக்கியநாதன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
தொல்காப்பியரும் அறிவியலும்! - முருகேசு பாக்கியநாதன்
Permalink  
 


தொல்காப்பியரும் அறிவியலும்! -

E-mailPrintPDF

ஆய்வு! தொல்காப்பியரும் அறிவியலும்! -தொல்காப்பியர் அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும். தொல் - கா - பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கௌ;ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280 ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம்.

தொல்காப்பியத்தின் காலம்

தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கிமு 10,000; ஆண்டிற்கு பலகாலத்திற முற்பட்டது என்றும,. பொள்ளாச்சி மகாலிங்கம் கிமு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கிமு 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கிபி இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்காப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞாகளால் ஏற்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய அமைப்பு
தொல்காப்பியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பதாகும் மேலும் ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. எழுத்திகாரம் 483 நூற்பாக்களையும், சொல்லதிகாரம் 456 நூற்பாக்களையும், பொருளதிகாரம் 656 நூற்பாக்களையும் மொத்தமாக 1650 நூற்பாக்கள் உண்டு. நாம் இங்கு நோக்கப்போவது பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களின் 9வது இயலான மரபியலின் ஒரு பகுதியாக உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் என்பதாகும்.

தொல்காப்பியத்தில் அறிவியல் 
தொல்காப்பியர் காலத்திலே இன்று வழங்கிவரும் அறிவியல் என்பது இருக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொண்டு ஆனால் அன்று தொல்காப்பியராலோ கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டில் அவர்களாலே சிந்திக்கப்ட்ட சிந்தனையின் ஊற்றுக்களே பின்பு சிறிது சிறிதாக மனிதன் சிந்திக்கத் தொடங்கியவுடன் அறிவியல் அல்லது உயிரியலில் விஞ்ஞான அறிவாக பரிணமிக்கத்; தொடங்கியதெனலாம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியரின் சிந்தனை யாவருக்கும் ஒரு வியப்பானதாகவேயுள்ளது. 

பொருளதிகாரத்தில் மரபியலில் கூறப்படும் பல விடயங்கள் விஞ்ஞான ரீதியாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ள பல விடயங்களை அவர் தனது அறிவியல்க் கண்கொண்டு எழுதி எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். விலங்குகளின் உணர்திறனை அழகுறக் கூறுகின்றார்.
தொல்காப்பியத்தில் உயிர்களது பகுப்பும், சிறப்பும், மரபும்.

ஓன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே தொல்- பொரு சூத்: 571

இங்கு உயிர்களின் உணர்திறனும் அதன் பாகுபாடும் பற்றிக்கூற வந்த தொல்காப்பியர் ஓரறிவு உயிர் என்பது உடலால் மட்டும் உணர்ந்து அறிவதாகும் என்றும், ஈரறிவு உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறிதல் என்றும் மூவறிவு என்பது உடம்பு, வாய், மூக்கு ஆகிய மூன்றினாலும் அறிவது என்றும் நாலறிவு என்பது உடல், வாய், மூக்கு, கண் என்பனவற்றினால் உணரும் உயிர் என்றும் ஐந்தறிவு என்பது உடல், வாய், மூக்கு, கண், செவி என்ற ஐந்து உறுப்புக்களினால் அறிவது என்பதாகும், ஆறறிவு என்பது மேற்குறிப்பிட்ட ஐந்தறிவுடன் சேர்ந்து பொருட்களையோ, ஒரு காட்சியினையோ அன்றி தனது உயிரினையோ, ஒரு கருத்தினையோ பகுத்து அறிந்து கொள்வதே அந்த ஆறாவது அறிவு என்றார். இதனையே தற்காலத்தே பகுத்தறிவு என்பர். இது மனித இனத்திற்கே பொருந்தும்.

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 572

புல், மரம் முதலியன ஓரறிவை உடையன என்றும் இவ்வாறு ஓரறிவை உடையன வேறும் உண்டென்றும் அவை கொட்டி, தாமரை என்றும் இது உடலால் மட்டும் உணர்திறனைப் பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். 

நத்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 573

நத்து என்பது சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்றும் கொள்வர். முரள் என்பது சிப்பி, கிளிஞ்சல், ஏரல் என்றும் கொளவர். இவை ஈறறிவு உயிரினம் என்பதாகும் அதேபோல மற்றைவையும் அடங்கும். இது உடலாலும் வாயினாலும் இரண்டு அறிவனையும் பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுவர். 

சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 574

கறையானும், எறும்பும் மூன்றிவு உடையதென்றும் இவ்வாறாக வேறு வகைகளும் உண்டென்றும் இவை உடலாலும் வாயினாலும் மூக்கினாலும் அறியும் திறன் பெற்ற உயிர்கள் என்பர்.

“நண்டும தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல்” -பொரு சூத் 575

நண்டும் தும்பியும் நான்கு அறிவினையுடையன. அதேபோல் இவ்வாறாக வேறுவகை உயிரினங்களும் உண்டு. இவை உடல், வாய், மூக்கு, கண் ஆகியவற்றினால் அறியும் திறன் பெற்றன.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 576

நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐவகை அறிவினை உடையன. இவ்வாறு வேறும் உண்டு அவை பாம்பு, மீன், முதலை, ஆமை போன்றவையாகும். இவை உடல், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்களால் அறிந்து கொள்ளும் தன்மையனவாம்.

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 577

மக்கள் ஆறறிவு உயிர்களாகும்; என்று குறிப்பிட்டு அதுபோல வேறும் உண்டு என்பதனால் அவற்றுள் தேவர், அசுரர், இயக்கர் முதலானோர் அடங்கும் எனபர். மனிதர் உடல், வாய், மூக்கு, கண், செவி, மனத்தினால் அறியும் பகுத்தறிவு ஆகிய ஆறறிவு உடையர் என்பர். இதனைவிட மேலும் கூறும்போது

ஒருசார் விலங்கும் உளவென மொழிப தொல் -பொரு சூத் 578

விலங்கின் ஒரு பகுதியின ஆறறிவுடையதெனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதாவது கிளி, யானை, குரங்கு ஆகியனவற்றினைக் குறிப்பிடுகின்றார். குரங்கில் இருந்தே மனிதனது பரிணாம வளர்ச்சி உருவானது என்ற 1870ல் உருவாக்கிய சாள்ஸ் டார்வினின் மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு கண்டுபிடிப்பதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே குரங்கினை மனித உணர்விற்குச் சமனான உணர்வு உள்ள பிராணி என்பதனைக் கண்டறிந்த பெருமகன் தொல்கப்பியராகும இதனால் அவரையும் நாம் தத்துவஞானி என்றே அழைக்க முடியும்.. அது போலலே ஆட்களை அறிந்து வைத்திருத்தல், பல காலத்திற்கு நினைவில் வைத்திருத்தல், சொல்லும் வேலைகளை ஞாபகமாக வைத்திருந்து செய்தல், மனிதன் அதனைச் சொல்லாவிடினும் அச்செயலைத் தானாகவே செய்தல் என்னும் தொழிற்பாடுகளினால் அவற்றையும் சிலவகைகளில் ஆறறிவுடன் உள்ள பிராணிகளாக யானை கிளி குரங்கு போன்றவற்றினையும் சேர்க்கின்றார்.

இவ்வாறாக புதிய கோணத்தில் அறிவியல் சிந்தினையோடு நோக்கியதாலேயே இவ்வாறான ஒரு புதிய கருத்தினை முன்வைத்து தொல்காப்பியர் எழுதியது எமது தமிழுக்கு அவர் கொடுத்த பெருமையெனலாம். இவ்வாறு அறிவியல் ரீதியில் மரபியலில் ஆய்ந்த தொல்காப்பியர். இவ்வாறு தமிழ் ஒலிப்பிறப்பினை ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களும் அறிவியல் ரீதியான சிந்தனைக்குரியன.

தத்துவ மேதை அரிஸ்ரோட்டில் அவர்களின் உயிரியல் பாகுபாடு

கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டில்
இவர் கிமு 4ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவமேதையாகும். இக்காலம் தமிழ் நாட்டில் கடைச்சங்கம் இருந்த காலமாகும். இங்காலத்தே கிரேக்கர்களுடன் வணிகத் தொடர்பு தமிழர்களுக்கு இருந்தததென்பது சங்க இலக்கிய நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் அரசர்களின் காவற் கடமைகளில் யவனர்கள் இருந்தார்கள் என்று அதே சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. யவனர்கள் என்போர் கிரேக்கர்களாகும். அத்தோடு எமது சங்க கவிதைகளின் பாடுபொருட்களும் கிரேக்க இலக்கிய பாடு பொருட்களும் அக்காலத்தே சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரே வகையாக இருந்தததென பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளாரும் குறிப்பிடுவது ஈண்டு கவனிக்கத் தக்கது. ஆகவே கல்வியியலிலும் ஏதோவொரு தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு தொல்காப்பியரதும் அரிஸ்ரோட்டிலதும் உரியிற்கோட்பாடு எமது சிந்தனையினைத் தூண்டுகின்றது. சில தமிழறிஞர்களின் கருத்துப்படி தொல்காப்பியரும் கிமு 5ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டைச் சேர்நதவர் என்றே கருதுகின்றனர். அப்படியாக நோக்கின் இருவரும் ஒரே காலத்தவர் என்றும் கொள்ள முடியும். இருவரும் ஒரே விதமாக வேறு வேறு கோணத்தில் உயிரிகளைப் பற்றிச் சிந்தித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அரிஸ்ரோட்டில் உயிர்ப் பகுப்புப் பற்றி என்ன நோக்கியுள்ளார் என்பதனை இவ்வேளையில் பார்ப்பதும் பயனுள்ளதாவிருக்கும். இவர் முதற்பகுப்பாக இரத்தம் உள்ள உயிரிகள் என்றும் இரத்தம் அற்ற உயிரிகள் என்றும் வகுக்கின்றார். ஆனால் தற்போதைய விஞ்ஞானப் பகுப்பாய்வு மேலும் ஒருபடி மேலே சென்று இதே உயிரிகளை முள்ளந்தண்டு உள்ளனவென்றும் முள்ளந்தண்டு இல்லாதனவென்றும் பகுக்கின்றது. இரத்தம் உள்ளன என்று வகுத்ததில் மனிதனும் வேறு பாலூட்டிகளும் முட்டையிடும் பறவைகளும் மீன் இனமும் வரும். இரத்தம் இல்லாத உயிரிகள் எனும்போது பூச்சி, புழுக்களும் கடின ஓடுகளையுடைய கடல்வாழ் உயிரினங்களையும் அதாவது சிப்பி, ஒக்டபஸ் (Octopus ), கணவாய் போன்றனவும் அடங்கும். அவர் உயிரிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் (Hierarchical ) அதனை அமைக்கின்றார். இதனால் இதனை Ladder of Life or scala naturae or Great Chain of Being என்று உயிரிகளின் ஏணி என்றும் மிகப் பெரிய தொடர் சங்கிலி என்றும் அழைக்கிறார். இவ்வாறாக புல்லில் இருந்து மனிதன் வரை அதன் முதன்மைத் தன்மையிலிருந்து இவர் பாகுபடுத்தியுள்ள உயிரிகளை 11 தரங்களில் பிரித்துள்ளார். 

எந்த மிருகங்களுக்கும் ஒரே நேரத்தில் தந்தமும் கொம்பும் ஒன்றாக இருப்பதில்லை. யானைக்குத் தந்தம் இருப்பதுபோல் மாட்டிற்கு கொம்பு உண்டு ஆனால் குதிரைக்கு இரண்டுயேயில்லை. ஆனால் மாட்டிற்குக் காலில் குளம்பு உள்ளது போல குதிரைக்குக் குளம்பு உண்டு. மாடு இரைமீட்டு அசை போடும் மிருகம் ஆனால் குதிரை அப்படியாக அசைபோட்டு உணவை உண்பதில்லை. இந்த வகையாலும் உயிரிகளைப் பாகுபடுத்தியுள்ளார். அடுத்தாக வெப்பச் சூழலிலும் குளிர்ச் சூழலிலும் வாழும் உயிரினங்கள் என்ற வகையிலும் பாகுபடுத்தியுள்ளார்..

அரிஸ்ரோட்டில் அவர்கள் உயிர் வகைகளைப் பாகுபடுத்தும் போது 
• Soul of an organism - உயிருள்ள வாழும் தனித் தாவரம் 
• Vegitative Soul - இதனைத் தாவரங்களின் உயிர் என்றும் கூறலாம். பதியமுறை ஆன்மா என்று கூறலாம் Vegitative என்பதன் Cambridge Dictionary கருத்துப்படி மூளை இயக்கமல்லாதது என்பது பொருள். இது தனது இனப்பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்குமாகச் செயற்படுகின்றது.
• Sensitive Soul- இதனை உணர் திறன் உள்ள உயிர் வகைகளாகப் பிரித்துள்ளார். இது சில தாவரங்களுக்கும் ( தொட்டாற் சிணுங்கி) பிராணிகள் ( புழு வகைகளைத் தொட்டால் அது தனது பாதுகாப்புத் தேடி உடலைச் சுருட்டிக் கொள்ளும். மனிதன் நெருப்பினைத் தொட்டால் சுடும் என்ற உணர்வினை உணர்ந்தவன். இதனை அவன் தனது பகுத்தறிவால் அறிவான்.
• Rational soul - இதனை பகுத்தறிவு உயிர்கள் என்ற வகையில் அடக்கியுள்ளார். இதற்கு மனிதனே உதாரணம். ஒரு வேலையைத் தொடங்கும் போது அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்த்து தனக்குப் பாதுகாப்பானதாகவும், பிரயோசனப்படும் வகையில் செய்வது பகுத்தறிவின்பாற்படும். 
• மிருகங்களை Vegetative soul மற்றும் Sensitive soul என்ற இரு வகைக்குள்ளும் அடக்குகின்றார். பகுத்தறிவு மூளை இயக்கமல்லாத உணர்வுபூர்வமான உயிர் என்ற வகைக்குள் அடக்குகின்றார். இது இனப்பெருக்கத்திற்கும், இடம்பெயர்ந்து திரிவதற்கும், உணர்திறன் உள்ளதுமான வகைக்குள்ளும் சேர்க்கின்றார்.
• மனிதனை Vegetative soul, Sensitive soul, Rational soul என்ற மூன்று வகைகளினுள்ளும் அடக்குகின்றார். விலங்கினுக்குரிய முதல் இரண்டு இலக்கணங்களையும் சிறப்பாக பகுத்தறிவினையும் மனிதனுக்கு சேர்த்துள்ளதே சிறப்பம்சமாகும்.

தொல்காப்பியர் அறிவு என்பதனை அரிஸ்ரோட்டில் உயிர் என்கின்றார். அறிவு என்பது அறியும் திறன் என்பதாகும். அது தொடுதல், கேட்டல், பார்த்தல், சுவைத்தல், சுவாசித்தல், மனிதனின் சிந்தித்தலினாலும் அதனைப் பகுத்து அதன் சரி, பிழைகளை ஆய்ந்தறிவதாலுமே மனிதனுக்குக் கிடைக்கும் பகுத்தறிவு என்பதாம். ஆனால் மூளையைப் பயன்படுத்தாததலாலும், உணர்திறத்தாலும் பகுத்தறிவாலும் மட்டும் உயிர்களாகத் தனித்துப்பிரிக்க முடியாது. ஒரு உடம்பிற்கு ஒரு உயிர் மட்டுமேயுண்டு அதனை எவ்வண்ணம் மனிதனுக்கு Vegetative soul, Sensitive soul, Rational soul ஆகிய மூன்று Soul களும் உண்டு என்று கொள்ள முடியும். Soul என்பதனைத் தமிழில் உயிர் என்றும் சமஸ்கிருதத்தில் ஆன்மா என்றும் கொள்வர். எது எவ்வாறெனினும் தொல்காப்பியரது பகுப்புக்களும் அரிஸ்ரோட்டல் அவர்களது பகுப்புக்களும் நவீன விஞ்ஞானத்திற்கு மேலும் ஆய்விற்கு ஒரு வழியைத் திறந்து விட்டுள்ளதென்றே கூறவேண்டும். தொல்காப்பியரது பகுப்பில் கூடுதலாக உயிரின் பகுப்பினைவிட அறிவு பற்றி விளக்கமே உள்ளதனைக் காணலாம்.

உசாதுணை நூல்கள்
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை – பேராசிரியர் மு.சணமுகம்பிள்ளை.
தொல்காப்பியம் - பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - கணேசையர் பதிப்பு
Wikipedia a Free Encyclopedia – search on Aristotle.
Wikipedia a Free Encyclopedia – search on Charles Darwin.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard