New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்

சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி  தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

ஒழுக்கம்
ஒழுக்கம் என்பதற்கு நன்னடத்தை என்பது பொருள்.ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கை. நான்மணிக்கடிகையில் ஒழுக்கம் பற்றிய செய்திகள் 5 இடங்களில் (8,23,42,88,96) சொல்லப்பட்டுள்ளன.

ஒழுக்கத்தை நல்லொழுக்கம்,தீயொழுக்கம் எனப் பிரித்து 4 பாடல்களில் நல்லொழுக்கத்தையும், ஒரு பாடலில் (23) தீயொழுக்கத்தையும் பற்றி விளம்பிநாகனார் கூறியுள்ளார்.

நல்லொழுக்கம் செல்வத்தை ஒத்தது ஆகும். இதனை நீங்கினால் செல்வம் தங்காது என்று கூறியுள்ளப் பாங்கு இங்கு நோக்கத்தக்கது ஆகும்.

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் (நான். 8;:1)
திருவும் திணை வகையான் நில்லா (நான்.42:1)

என்ற பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது.மேலும் மற்றொரு பாடலில் ஓழுக்கத்திற்கு அடிப்படையாக அமைவதே கல்வி என்று கூறியுள்ளார்.இதனை

 

ஆசாரம் என்பது கல்வி (நான்.96:1 )

அன்புடைமை
தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்றே அன்பு.வள்ளுவர் அன்புடைமை என்ற ஒர் அதிகாரத்தை வகுத்துள்ளார்.
எல்லாச் செல்வமும் உடையனாயினும் அன்பில்லாதவன் உலகத்தில் நன்கு மதிக்கப்பட்டான் என்பதை,

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றார் எய்தும் சிறப்பு (75)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.நான்மணிக்கடிகையில் ஒரு பாடலில் அன்பின் மிக்கவரைப் பிரிந்து வாழ்தலை விட நெருப்பில் புகுந்து உயிர் துறத்தல் சிறந்தது என்று கூறுகிறது.இதனை

…………………………………………..பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று (நான்.15:3-4)

என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.இதன் மூலம் அன்பின் மிக்காரைப் பிரியாமல் இருப்பது சிறந்தது என்பது புலப்படுகிறது.

சுற்றம் சுழ இருத்தல்
சுற்றத்தாரைத் தழுவிக் கொண்டு வாழ்தலும்,தன்னிடத்தினின்றும் நீங்காமல் இருக்கச் செய்தலும் சிறந்தது ஆகும்.நான்மணிக்கடிகையில் சுற்றம் பற்றிய செய்திகள் 3 இடங்களில் (16,51,87) சொல்லப்பட்டுள்ளன.

சுற்றத்தினரை விலக்கி வாழ்வது ஒருவன் கெடுவதற்கு வழிவகுக்கும் என்பதை,
…………………………………………கேடுக்கல்
கேளிர் ஒரீஇ விடல்  (நான்.87:3)

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.

மானம்
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் மானத்துடன் வாழ்வதே சிறந்தது. ஒருவர் தாம் நின்ற நிலையினின்று தாழாமலும், அங்ஙனம் தாழ்வு வந்தவிடத்து வாழாமலும் இருப்பது மானம் ஆகும். ;நான்மணிக்கடிகையில் மானம் பற்றிய செய்திகள் 2 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.இதனை,

……………………………………………………உள்ளம்
குறைபட வாழார் உரவோர் (நான்.4:1-2)
…………………………………………………. தனக்கு ஒவ்வாச்
சொற்பட வாழாதாம் சால்பு  (நான்.4:2-4)

மேற்கூறப்பட்ட பாடல் வரிகளின் மூலம் அறிவுடையோர் தம் நிலை தாழ்ந்தால் உயிர் வாழ மாட்டார்கள் என்றும் சான்றோர்கள் பழிச்சொல் உண்டானால் உயிர் துறப்பார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.

நடுநிலைமை
ஒருவர் பக்கம் சேராமல் இருவர்க்கும் பொதுமை உடையவராய் இருத்தல் நடுநிலைமை ஆகும்.கோடி நன்மை கிடைப்பதானாலும் நடுநிலை தவறுதல் கூடாது என்று 27 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

…………………………………………நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள் பெறினும் (நான்.27:2-3)

என்ற பாடல் அடிகளின் மூலம் அறியலாம்.

ஒற்றுமை உணர்வு
ஒற்றுமையே பலம் என்பது பழமொழி. இப்பழமொழிக்கு ஏற்ப அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை,

மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை (நான்.23;:1)

என்ற பாடல் வரியின் மூலம் உணரமுடிகிறது.இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒற்றுமை உணர்வு இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளதை அறியமுடிகிறது.அதாவது சண்டையில்லாமல் இருப்பது சிறந்தது.

நட்பு
தமிழ் - தமிழ் அகர முதலி நட்பு என்பதற்கு சிநேகம், உறவு, சுற்றம், நண்பன், யாழின் நாலாம் நரம்பு, காதல், அரசாங்கம், ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர், என்று விளக்கம் அளிக்கிறது.மனிதனுக்கு நட்பு என்பது ஒரு வலிமையாகவும், ஒரு உற்றதுணையாகவும் அமைந்து வாழ்வினை சிறக்க செய்ய உதவுகிறது.நான்மணிக்கடிகையில் நட்பு குறித்த செய்திகள் எட்டு பாடல்களில் (19, 22, 25, 27, 39, 64,77, 101) இடம்பெறுகின்றன.பொய்த்தன்மையினால் நட்பு முறியும் என்பதை,

பொய்த்தல் இறுவாயை நட்புக்கம் (நான்.19:1)         

என்ற பாடலடி சுட்டுகிறது.

கல்வி
நான்மணிக்கடிகையில்28பாடல்கள்(10,18,21,22,24,26,30,31,32,53,55,58,66,72,74,75,76,78,81,83,85,94,95,96,98,99,104,105)கல்வியைபற்றியவையாகஅமைந்துள்ளன.இப்பாடல்களில் கல்வித் தொடர்பான கருத்துக்கள் 40 இடங்களில் கூறப்பட்டுள்ளன.

கல்வி கற்க வேண்டிய பருவம் இளமைப் பருவம் ஆகும்.அப்பருவத்தில் தான் கல்வி கற்க வேண்டும் என்பதை,

இளமைப் பருவத்துக் கல்லாமைக் குற்றம் (நான்.94:1)

என்ற பாடலடி இளமையில் கல்வி பயிலாமல் இருப்பது குற்றம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் பழமொழி நானூறு என்ற நூலும் இக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இளமையில் கல் என்கிறது இதனை,           

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ -ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே,இல்லை
மரம் போக்கி கூலிகொண் டார்  (பழமொழி.2)

என்ற பாடல் உணர்த்தியுள்ளது

நன்றி உணர்வு
ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது நன்றி உணர்வு ஆகும். நன்றி உணர்வு  பற்றிய செய்திகளை விளம்பிநாகனார் 4 பாடல்களில் (13, 47, 61, 70) கூறியுள்ளார்.இதனை,

…………………………………பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்  (நான்.13:1-2)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகிறது.

பிறரை மதி
ஒவ்வொரு மனிதனும் பிறரை மதிக்க வேண்டும்.பிற்கால நீதி இலக்கியமான உலக நீதியும் மதியாதார் தலைவாசலை மிதிக்க வேண்டாம் என்கிறது நான்மணிக்கடிகையின் 24 ஆம் பாடல் பிறரை மதிக்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை,

……………………………..இகழ்ந்தொரு
பேணாது செய்வது பேதைமை  (நான்.24:1-2)                                    

மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது பிறரை மதிக்காமல் இருப்பது பேதமை  என்று குறிப்பிடுகிறது.

விருந்தோம்பல்
சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறம் விருந்தோம்பல் ஆகும். இல்லத்திற்கு புதிதாக வருபவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கே விருந்தோம்பல் ஆகும். நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல் குறித்த செய்திகள் 3 இடங்களில் (47, 63, 94 ) சொல்லப்பட்டுள்ளன.இதனை,
நன்றூட்ட நந்தும் விருந்து (நான்.63:4)
தமரல்லார் கையத்து ஊண் (நான்.94:4)

…………………….சென்ற                    
விருந்தும் விருப்பிலார் முன்சாம் (நான்.47:1-2)

மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது விருந்தினருக்கு நல்ல உணவு அளிக்க வேண்டும் என்றும் அன்புடையவர் வீட்டிற்கு மட்டுமே விருந்திற்குக்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

கடுஞ்சொல்
பிறர்க்கு துன்பந்தரும் கடுஞ்சொற்களை சொல்லாமல் இருப்பது சிறந்தது. ஒருவர் கூறும் கடுஞ்சொல்
பிறரை வருத்தும் தன்மை உடையது. நான்மணிக்கடிகையில் கடுஞ்சொல் குறித்த செய்தி ஒரு பாடலில்
இடம்பெறுகிறது.

………………………………..இனிப்பில்லா
வன்சொலால் ஆகும் வசைமனம் (நான்.106:1-2)

என்ற பாடலடியானது கடுஞ்சொல்லால் பழிச்சொல் உண்டாகும் என்பதை சுட்டுகிறது.

பிறருக்கு கொடுத்து உண்
ஒருவொரு மனிதனும் பிறர்க்கு கொடுத்து உண்ண வேண்டும் என்ற இக்கருத்து நான்மணிக்கடிகையில் இடம்பெறுகிறது.இதனை,
ஈத்துண்பான் என்பான் இசை நடுவான் (நான்.62:1)

என்ற பாடலடி சுட்டுகிறது. பிறர்க்கு கொடுத்து உதவும் பண்பால் ஒருவன் புகழ் பெறுவான் என்பது இங்கு நோக்கதக்கது.

பிறரை நாடி உண்ண கூடாது
ஒருவர் எப்போதும் பிறரை நாடியிருந்து உணவு உண்டு வாழ்வது சிறந்த பண்பு ஆகாது.இப்பண்பை தவிர்த்தல் வேண்டும் என்று 89 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

அருக்குக யார் மாட்டும் உண்டி சுருக்கு (நான்.89:3)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

வெறுத்த மனத்தோடு வாழக் கூடாது
வெறுத்த மனத்தோடு வாழ்பவனாகில் பலராலும் வெறுக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதை 61 ஆம் பாடல் தெளிவுற கூறுகிறது.இதனை,

முன் தக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்           (நான்.61:1)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

சோம்பல் 
சோம்பல் தன்மை ஒவ்வொரு  மனிதனுக்கும் ஒரு போதும் இல்லாமல் இருப்பது சிறந்தது.வள்ளுவர் இதனை பற்றி மடியின்மை என்ற பெயரில் தனியே ஒர் அதிகாரத்தை வகுத்துள்ளார்.ஒருவன் கெட்டு போவதற்கு வழி வகுப்பது சோம்பல் என்று 90 ஆம் பாடலில் விளம்பிநாகனார் எடுத்துரைத்துள்ளார்.இதனை,

மடிமை கெடுவார்கண் நிற்கும்                       (நான்.90:1)

என்ற பாடலடியில் அறியலாம்.    

பலதார மணம்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அறம்.ஒருவர் வறுமையின் துன்பத்தை அடைய இம்மணம் வழிவகுக்கும் இதனை,

……………………….நிரம்பிடும்பை      (நான்.97:2-3) 
பல்பெண்டிர் ஆளன் அறியும்                      

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.இதன் மூலம் பலதாரம் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

மது அருந்துதல்
மது என்பது ஒரு போதைப் பொருள். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும்.மது தொடர்புடைய செய்திகள் இரண்டு பாடல்களில் (80,97) இயம்பபடுகின்றன.

……………. …………………மெய்க்கண்
மகிழான் அறிப நறா (நான்.80:3-4)

மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது மது ஒருவரின் பேச்சு தன்மையை பாதிக்கும் இயல்புடையது என்பதை விளக்கிறது.

கொல்லாமை
அறமாகிய செயல் என்பது எந்த உயிரையும் கொல்லாமையே (கு.321) ஆகும்.கொல்லாமை நெறியனை வலியுறுத்த விழைந்த வள்ளுவர் அதற்கென ஒரு அதிகாரத்தை அமைத்துள்ளார்.கொல்லாமை பற்றிய செய்திகள் மூன்று  பாடல்களில் (28,61,92,) சொல்லப்படுகின்றன.

கொலைபாலும் குற்றமே யாம் (நான்.28:4)

……………………….கொன்றான்
மேல் நிற்கும் கொலை  (நான்.92:3-4)

இனிது உண்பான் என்பான்
உயிர் கொல்லாது உண்பான் (நான்.61:1)

மேற்கூறப்பட்ட பாடலடிகள் உயிர்களைக் கொல்லுதல் குற்றம் என்றும், கொலைப்பாவம் கொன்றவனையே சென்றடையும் என்றும்,உயிர் கொலை செய்யாது உணவு கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளன.

ஊன் உண்ணாமை
ஊன் உண்டலை,புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கண்டித்துள்ளார்.
நான்மணிக்கடிகையில் ஊன் உண்ணாமை குறித்த செய்திகள் 2 பாடல்களில் 3 கருத்துக்களாக இடம்பெறுகின்றன.

அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம் (நான்.28.:1)

விலைப்பாலில் கொண்டூன் மிசைத்தலும் குற்றம் (நான்.28:2)

…………………………………ஊன் உண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு (நான்.40:3-4)

மேற்கூறப்பட்ட  பாடலடிகள் ஆனது ஊன் உணவுக்காகப் பிற உயிர்களை வளர்ப்பது குற்றம் என்றும் ஊன் உணவை விலைக்கு வாங்கி உண்பது குற்றம் என்றும் மக்கள் உயிர்க்கு ஊன் உண்ணாமையே பற்றுக்கோடு என்று விளக்கியுள்ளது.

இகழ்தல்
தன்னை உயர்த்திக் கொண்டும் மற்றவரை தாழ்த்தி உரைப்பது இகழ்தலாகும். இகழ்தல்  என்ற சொல்லிற்கு கழக பேரகராதி இகழ்தல், இழித்துரைத்தல், அவமதித்தல், சோர்தல், மறுத்தல் இழிவு,குறைவு,பொறுப்பு என்று விளக்கியுள்ளன. நான்மணிக்கடிகையில் இகழ்தல்; பற்றிய செய்திகள் 3 பாடல்களில் ( 3,24,53 ) 3 கருத்துக்களாக இடம்பெறுகின்றன

இகழ்வது பேதைமை என்றும் ஒருவரை இகழ்ந்து கூறுவதை விலக்குவது நல்லது என்று விளம்பிநாகனார் பின் வரும் பாடலடிகள் மூலம் கூறியுள்ளார்.

எள்ளற்க என்றும் எளியர் என்று  (நான்.3:1)
……………………இகழ்ந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை                      (நான்.24:1-2)
எள்ளற் பொருளது இகழ்தல்                            (நான்.53:1)

புறங்கூறுதல்
ஒருவரை கண்டவிடத்துப் (நேரில்) புகழ்ந்து கூறி காணாதவிடத்து பழியுரைப்பது புறங்கூறுதல்.இச்செயல் இழிவான செயல் ஆகும்.குறைக்கூறி மகிழக்கூடாது என்றும் புறங்கூறுதல் கொலை செய்தலை ஒக்கும் என்கிறார்.இதனை,

…………………………..பிறனைக்
கொலையொக்கும் கொண்டு கண் மாறல் (நான்.8:2-3)

வைததனால் ஆகும் வசையே  (நான்.103:1)

உயர்ந்த பொருளை தகாதவரிடம் பெறுதல் கூடாது 
எத்தகைய உயர்ந்த பொருளாக இருந்தாலும் தகாதவரிடம் பொருள் பெறுதல் கூடாது.என்பதை,
………………………………………என் பெறினும்
கொள்ளற்க கொள்ளார் கைம் மேற்பட (நான்.3:1-2)

என்ற பாடலடி சுட்டுகிறது.

புகழ்
நான்மணிக்கடிகையில் புகழ் குறித்த செய்திகளை விளம்பிநாகனார் இரண்டு பாடல்களில் (7,17) கூறியுள்ளார்.இதனை,

…………………………….இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக                    (நான்.17:1-2)

………………..தன்னோடு
செய்வது வேண்டின் அறம் செய்க                   (நான்.17:2-3)

என்ற பாடலடிகள் ஆனது உலகில் இனிது வாழ புகழுடன் வாழ அறம் செய்ய வேண்டும் என்று 
இயம்பியுள்ளது.

முடிவுரை
நான்மணிக்கடிகையில் பிறரை மதிக்க வேண்டும், நட்பு கொள்ள வேண்டும்,கல்வி கற்க வேண்டும்,கொடுத்து உண்ண வேண்டும்,அன்பு கொள்ள வேண்டும்,புகழுடன் வாழ வேண்டும் .  ஊன் உண்ண கூடாது,பிற உயிர்களை  கொள்ள கூடாது, புறங்கூறுதல் கூடாது,சோம்பல் கூடாது என்றும், இகழ்தல் கூடாது,மது அருந்துதல் கூடாது, கடுஞ்சொல் கூடாது என்று தனிமனித நெறிகளை விளக்கியுள்ளது.

 

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001  முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
3.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம்  கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
4. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000 தமிழ் -தமிழ் அகர முதலி

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard