New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம் -ப.ஜெயபால்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம் -ப.ஜெயபால்
Permalink  
 


கன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம்

E-mailPrintPDF

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

ஐரோப்பியர் வருகையும் இலக்கண உருவாக்கமும்
பதினெட்டு மற்றும் அதற்கு பின்னான காலகட்டங்களில் ஐரோப்பியர் எழுதிய தமிழ் இலக்கணநூல்கள் நெடிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கண வரலாற்றினை எழுத முற்பட்ட இளவரசு (1965), இளங்குமரன் (1988) ஆகியோரின் நூல்களில் இந்நூல்கள் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஐரோப்பியரால் எழுதப்பட்ட ஆரம்பகால இலக்கண நூல்கள் போர்த்துகீசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகான இலக்கணநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூலாக சீகன்பால்குவின் Grammatica Damulica (1716) என்னும் நூல் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே சில இலக்கணநூல்கள் உருப்பெற்றுள்ளன. ‘அச்சுத் தமிழின் தந்தை’ எனப் போற்றப் பெறும் ஹென்றிக் ஹென்றிக்குவிஸ் (Enrique Henriques) (1520-1600) அவர்களால் தமிழ் மொழி ‘மலபார்’ என்று குறித்த வழக்கினை அடிப்படையாகக் கொண்டு ‘மலபார் இலக்கணம்’ (Arte da Lingua Malabar) ஒன்று இயற்றப்பட்டுள்ளது. ஹென்றிக்குவிஸைத் தொடர்ந்து இரண்டாவது இலக்கண நூல் எழுதியதாக அறியப்படுபவர் தெகோஸ்ற்றா (Balthazar de Costa). இவர் எழுதிய தமிழ் இலக்கணநூல் ‘Arte Tamilica’ (1679).    தமிழ் இலக்கணம் எழுதியவராக அறியப்படும் மூன்றாமவர் பிலிப்பஸ் பால்தேயுயஸ் (Philippas Balclaeus)  (1632-1672). இவர் 1672 இல் கிழக்கிந்திய மலபார் கடற்கரையைப் பற்றியும், சோழ மண்டல கடற்கரையைப் பற்றியும் பயண குறிப்பு நூல் ஒன்றினை எழுதியுள்ளார். டச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அதே ஆண்டில் ஜெர்மனியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 1704 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் பிந்தைய நாளில் முழுமையான இலக்கணநூல் தொகுப்பதற்கான வேலையை பால்தேயுயஸ் செய்துள்ளார். 

தெகோஸ்ற்றாவின் இலக்கணநூலை அடிப்படையாக வைத்துக் கொண்டு சீகன்பால்குவின் Grammatica Damalica (1716) என்னும் பேச்சுத் தமிழை ஒட்டிய இலக்கணநூல் வெளிவந்துள்ளது.

சீகன்பால்குவின் கிராமட்டிகா தமுலிக்கா
பார்த்தொலோமியுஸ் சீகன்பால்கின் Grammatica Damulica எனும் இலக்கண நூல் 1716 இல் ஜெர்மனி நாட்டில் ஹாலே நகரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் முகவுரையில் “தமிழ் இலக்கணம், பல எடுத்துக்காட்டுகள், விதிகள், சொல் அடுக்கு வரிசை கொண்டது; தமிழ் என்ற மலபார் மொழியைச் சுலபமாகக் கற்கும் வழி. இம்மொழி கிழக்கிந்தயரிடையே பேசப்படுவது. இதுவரை ஐரோப்பாவில் அறியப்படாதது” என்று குறிப்பிட்டுள்ளது (ஞானசேகரன், 1981:2). சீகன்பால்கு கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு தனது இலக்கணநூலை இலத்தீனில் படைத்துள்ளார். இந்நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பை சீகன்பால்கு பற்றிய விரிவான ஆய்வுடன் டேனியல் ஜெயராஜ் ‘Tamil Language for Europeans:Ziegenbalg’s Grammatica Damulica (1716)’ எனும் தலைப்பில் 2010 இல் வெளியிட்டுள்ளார். இந்நூல் சீர்மை செய்யப்பட்டுத் திருத்தங்களுடன் மூலநூலில் சுட்டப்பட்டுள்ள சொற்களின் அடிக்குறிப்புடன் அமைந்துள்ளது. சீகன்பால்கு பயன்படுத்திய தமிழ்ச் சொற்களில் குறில் நெடில் பாகுபாடு இன்றியும் மெய்கள் புள்ளி பெறாமலும் அமைந்துள்ளன. இதனை டேனியல் ஜெயராஜ் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது திருத்தம் செய்து நவீன எழுத்து மொழியில் கொடுத்துள்ளார்.

சீகன்பால்கு தாம் இலக்கணம் படைக்கும் முன்பு தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம் மற்றும் நன்னூலைத் தனது ஆசிரியர் உதவியுடன் கற்றுக் கொண்டு அதன் பிறகு இலக்கணம் எழுத முனைந்துள்ளார். தென்னிந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தும் நோக்கில் ஹென்றிக்குவிஸ், தெகோஸற்றா, பால்தேயுயஸ் மற்றும் சீகன்பால்கு போன்ற அறிவாண்மையாளர்களின் பணி இருந்தது. இவர்கள் எழுதிய இலக்கண நூல்களே ஐரோப்பியர் தமிழ் இலக்கணம் படைப்பதற்கு முன்னோடியாக அமைந்திருந்தது. சீகன்பால்கு தான் இலக்கணம் இயற்றுவதற்கு முன் மாதிரியாக தெகோஸ்ற்றா எழுதிய ‘Arte Tamalica’ எனும் நூலை வைத்துக் கொண்டு தனது நூலைப் படைத்துள்ளார். தெகோஸ்ற்றா பயன்படுத்திய உதாரணங்களை விடுத்து வேறு உதாரணங்களைப் பயன்படுத்தியுள்ளார். சில இடங்களில் அவரையே பின்பற்றியும் உள்ளார். சில எளிமைப்படுத்தும் வேலைகளை முன்னைய இலக்கண நூலிலிருந்து தன்னுடைய நூலில் செய்துள்ளார். தெகோஸ்ற்றாவின் Arte Tamalica (11.15) நூலில் முன்னிலை ஒருமை ‘நீய’ என்று குறிப்பிட்டுள்ளது. அதனை ‘நீ’ என்று சீகன்பால்கு எளிமைப்படுத்தியுள்ளார். மேலும் சீகன்பால்கு ஒருமை (Singular), பன்மை (Plural) இவற்றிற்கு தனிவசனம் (Singular), வெகுவசனம் (Plural)  எனும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதுவும் தெகோஸ்ற்றாவால் கையாளப்பட்டுள்ளது (Daniel Jeyaraj, 2010:22). தெகோஸ்ற்றா இலக்கணநூலின் கட்டமைப்பிலிருந்து சில மாற்றங்களுடன் சீகன்பால்கு தனது நூலை அமைத்துக் கொண்டுள்ளார்.

சீகன்பால்குவின் Grammatica Damulica எட்டு இயல்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது 1. தமிழ் மொழியின் எழுத்துகள் (Letter), 2. எழுத்துகளின் உச்சரிப்பு, 3. பெயர்ச்சொல் மற்றும் அவற்றிற்கான நான்கு வேற்றுமைப் பாகுபாடுகள் (Declension), 4. பண்படைகள் (Adjectives), 5. பதிலீட்டுப் பெயர்கள் (Pronouns), 6. வினைச்சொற்கள் (Verbs), 7. ஒரு நிலைச் சொற்கள் (Particles), 8. தொடரியல் (Syntax) என்னும் வரிசையில் அமைந்துள்ளன. அன்றைய எழுத்து மொழியினை விளக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள சில பேச்சு வடிவங்களோடு (ஒண்ணு, மண்ணு, அஞ்சு, வேணும்) அமைந்துள்ளது. சீகன்பால்குவின இலக்கணம் சிறு எண்ணிக்கையிலான சொல் வடிவங்களை அடக்கிக் கொண்டு பேச்சு வழக்கில் அமைந்துள்ளது. எழுத்து, சொல், தொடர் இவற்றின் இலக்கணங்களை விளக்கும் நோக்கில் நவீன எழுத்து மொழியில் அமைக்கப்பட்டுளளது. சீகன்பால்கு தனது இலக்கண நூலில் (Grammatica Damulica) எழுத்ததிகாரத்தை விளக்கும் பொழுது எழுத்துகள் பற்றியும் அவற்றின் உச்சரிப்புப் பற்றியும் குறுகிய அளவிலே நிறுத்திக் கொள்கிறார்.

1.எழுத்துகள் (Letters)
2.உச்சரிப்பு (On the Reading and Prouniciation of this Language)


எழுத்திலக்கணம் எழுத்துகள் மற்றும் உச்சரிப்பு அளவிலே போதுமானது என சீகன்பால்கு நினைத்திருக்கக்ககூடும். எழுத்துகளுக்கிடையிலான புணர்ச்சி மாற்றம் பற்றி அவர் பேசவில்லை. சொற்களைத் தொகுத்துக் கொடுப்பதிலேயே தன்னளவில் நின்று விடுகிறார். இதற்கு இன்னுமொரு காரணம் சீகன்பால்கு தனக்கு முன்னோடி நூலாக தெகோஸ்ற்றாவின் நூலைக் கையாண்டதே. அதிலுள்ள பகுப்பின் அடிப்படையிலேயே தனது நூலைப் படைத்துள்ளார். சீகன்பால்கு தமிழ் மரபிலக்கணங்களைக் கற்றுள்ள போதிலும் அதிலிருப்பது போன்ற பகுப்பு முறையையோ அமைப்பு முறையையோ கைகொள்ளவில்லை.

நெடுங்கணக்கு
வேதக் கல்வியைப் பிழையறக் கற்பதில் மொழியாய்வு தொடங்கியது. வேதக் கல்வியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு ஓர் ஊடகமாக உருவாக்கபபட்டதே நெடுங்கணக்காகும். பிரதியை உருவாக்கித் தருவதில் நெடுங்கணக்கின் உருவாக்கம் என்பது மொழியில் அமைந்த பெரிய பண்பாட்டு மாற்றம் எனலாம். கிரேக்க இலக்கணக் கலைஞர்கள் நெடுங்கணக்கை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னரே மொழியமைப்புப் பற்றிய சிந்தனைகளும் அவை தொடர்பான தத்துவார்த்த மற்றும் தருக்கவாதங்களும் தோன்றின என்பர் (சு.இராசாராம், 2010:70). கிரேக்கர்கள் போனீஸியர்களிடமிருந்து தம் மொழிக்கான நெடுங்கணக்கை உருவாக்கிக் கொண்டுள்ளனர். அதன் பிறகே இலக்கண உருவாக்கம் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ‘Grammar’ என்னும் ஆங்கிலச் சொல், நெடுங்கணக்கின் எழுத்தைக் குறிக்கும் ‘Grammaar’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. (சு.இராசாராம், 2010:70). தமிழில் வாய்மொழி மரபுகள் எழுத்துவடிவம் பெற வேண்டும் எனும் அறிவார்ந்த சிந்தனைத் தோற்றம்பெற்ற காலந்தொட்டே எழுத்துருவாக்கம் தோற்றம்பெறத் தொடங்கியது. எழுத்துமொழி உருவாக்கம், குறிப்பாக இலக்கியமொழிப் பொதுநிலையாக்கம் (Standardization of Literary Language) இக்காலந்தொட்டுத் தொடங்கியதாக அனுமானிக்கலாம் (சு.இராசாராம், 2010:71).

ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு மரபிலக்கண நெடுங்கணக்கு முறையும், ரோமன் எழுத்துமுறையும் இணைந்த எழுத்துவடிவம் இடம்பெறத் தொடங்கியது. 1788 இல் வில்லியம் ஜோன்ஸ் எழுதிய ‘ரோமன் எழுத்துக்களில் ஆசிய சொற்களின் எழுத்தியல் குறித்த ஆய்வு என்னும் கட்டுரை இதனைப் பற்றி பேசியுள்ளது    (இராம. சுந்தரம், 2007:98). இக்கட்டுரை ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளின் ஒலியியல் ஆய்வோடு தொடர்புடையதாக இருப்பினும் எழுத்துப் பெயர்ப்பை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. ஆசிய மொழிச் சொற்களை ரோமன் எழுத்துகளில் எழுதுவது பற்றி விரிவாகப் பேசுவதோடு சமஸ்கிருதச் சொற்களை வங்காள ஒலிப்புடன் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. சமஸ்கிருத-வங்காள மொழிகளின் உச்சரிப்பிலுள்ள வேறுபாடு காரணமாக, ஒலி பெயர்ப்புக்குப் பதில் எழுத்துப் பெயர்ப்புக்கு முன்னுரிமை தருகிறார். சமஸ்கிருதத்தின் தேவநாகிரி எழுத்துவடிவம் “பிற எல்லாவற்றையும் விட இயல்பாக அமைந்துள்ளது” என்கிறார் (இராம. சுந்தரம், 2007:98). ஜோன்ஸ் இந்த எழுத்துப் பெயர்ப்பில் ஆங்கில நிகரன்களைக் காட்டிலும் இத்தாலி நிகரன்கள் உகந்தாகக் கருதி அதனைப் பயன்படுத்தியுள்ளதை அவர் குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது. “உயிருக்கு இத்தாலியன், மெய்யிற்கு ஆங்கிலம்” என்கிற வாசகம் இவரது எழுத்துப் பெயர்ப்பு முறையை விளக்கும். “கூடுமானவரை மூல ஒலிக்கேற்ற மூல ரோமன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டும்” என்பது இவர் நோக்கமாக இருந்தது (இராம. சுந்தரம், 2007:98-99). ஜோன்ஸ் தந்தது எழுத்துப் பெயர்ப்பு முறைதான் என்ற போதிலும், உலகலாவிய ஒலியியல் முறைக்கு ஒரு முன்னோடியாக இது அமைந்தது. எழுத்து வடிவங்களை மையப்படுத்தாது ஒலிகளை நேரடியாகக் கொண்டு அமைந்த பன்னாட்டு ஒலிப்புமுறை நெடுங்கணக்கு (International Phonetic Alphabet) அட்டவணை போன்றவற்றை இதற்குச் சான்றாகக் காட்டலாம் (இராம. சுந்தரம், 2007:99).

ஜோன்ஸ் செய்த இந்த முயற்சியைப் போன்று சீகன்பால்கின் இலக்கண நூலில் பார்க்க முடிகின்றது. தமிழ் நெடுங்கணக்கு வரிசையைக் குறிப்பிடும் பொழுது அதற்கு இணையாக ரோமன் எழுத்துப் பெயர்ப்பைப் பயன்படுத்தியுள்ளார். சீகன்பால்கு இத்தாலி நிகரன்களைக் கையாண்டுள்ளார். உதாரணமாக ககரம் (Ka)  பற்றிக் குறிப்பிடுகையில் ga, gi, gu, gai, go... என்றும் சகரம் (ca) பற்றிக் குறிப்பிடுகையில் tscha என்றும் எழுத்துப் பெயர்ப்பை ஒலிப்பு அடிப்படையில் அமைத்துள்ளார்.

எழுத்து வடிவம்
தமிழ் நெடுங்கணக்கின் அச்சு வடிவம் என்பது பிரதி உருவாக்கத்தின் பெருமாற்றம். அச்சுருவாக்கம் எழுத்தின் நவீன வடிவங்களை உருப்பெறச் செய்திருந்தன. தமிழ் எழுத்து அச்சு உருவங்கள் ஐரோப்பாவில் 300 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தன. தமிழ் வரிவடிவம் அச்சில் 1577 ஆம் ஆண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹென்றிக்குவிஸ் (1520-1600) எழுதிய இலக்கணத்தில் மலபார் அகரவரிசை எழுத்துக்களோடு தமிழ் உதாரணங்கள் அனைத்தும் ரோமன் எழுத்துப்பெயர்ப்பில் இடம்பெற்றிருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் உருப்பெற்ற தமிழ் எழுத்துகளின் கையெழுத்து வடிவம் பற்றியும் அச்சுவடிவம் பற்றியும் அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. சீகன்பால்கு அவர் காலத்து எழுத்துகளை அப்படியே பதிவு செய்ய நினைத்துள்ளார். சீகன்பால்கு தரும் எழுத்துகளில் எகர ஒகர வேறுபாடின்றியும் மெய்கள் புள்ளி பெறாமலும் இடம்பெற்றுள்ளன. எழுத்துகள் முறையான வடிவங்களின்றி சிறிதும் பெரிதுமாக அமைந்துள்ளன. சீகன்பால்கு ஆய்த எழுத்திற்கான வடிவம் கொடுக்கையில் கூ (ak) என்று பயன்படுத்தியுள்ளார். இந்த ‘கூ’ என்பது உச்சரிப்பு அடிப்படையில் பேச்சு வழக்கிற்கான ஒரு வடிவமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. சீகன்பால்கு அச்செழுத்துகளின் ஆரம்ப வடிவைத் தருகின்றார். ஊகாரம் எழுதப்படும் பொழுது குறில் எழுத்தோடு ளகர உயிர்மெய் இணைந்து ஒரே எழுத்தாகவும் ஒளகாரத்தின் வடிவம் ஒகரத்தை அடுத்து ளகரம் தனியாகவும் எழுதப்பட்டுள்ளது. எகர எழுத்தின் நேர்க்கோட்டில் ஒரு பிறை வடிவம் சேர்த்து ஞகர மெய்யின் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரகரம் மற்றும் துணையெழுத்தின் வடிவம் ஒன்றாகவே உள்ளது. தனிமெய்கள் புள்ளி பெறாமலும், உயிர் மற்றும் உயிர் மெய்களில் குறில் நெடில் வடிவ வேறுபாடின்றியும் அமைந்துள்ளன.

ஒலிபெயர்ப்பு அடிப்படையில் எழுத்துகளின் வடிவங்களை அணுகியுள்ளது போன்று சொற்களின் வடிவங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார். அக்கால பேச்சு மொழியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட சீகன்பால்கு பேச்சு வழக்குச் சொற்களின் வடிவங்களையே தன் நூலின் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்குக் கவனிக்க வேண்டியது அவர் உதாரணங்களாகப் பயன்படுத்திய சொற்களின் தமிழ் வடிவங்கள் சில பேச்சு மொழியாகவும் சில இலக்கிய வழக்காகவும் அமைந்துள்ளன. நன்னாக (நன்றாக), செலை (சிலை) போன்ற சொற்கள் பேச்சுவடிவிலே அமைந்துள்ளன. இலக்கிய வடிவாக அமைந்துள்ள சில சொற்களின் ஒலிபெயர்ப்பு பேச்சு வடிவாகவும் பெண் (Pon), வீடு (Wudu), சில இடங்களில் பேச்சுவழக்கு மொழி ஒலிபெயர்ப்பில் இலக்கிய வடிவாகவும் பிடவை (Pudawai), கேழ்வி (Kelwi) அமைந்துள்ளளன. சொற்களின் வடிவங்களை அமைத்துக் கொடுப்பதில் சீகன்பால்குவிற்கு இருவிதமான கண்ணோட்டம் இருந்தாலும் இவை மரபிலக்கணத்திலிருந்து மாறுபட்ட நவீன எழுத்து வடிவினைப் பிரதிபலிக்கின்றன. “தமிழ்ச் சொற்களின் வடிவம் சொற்களின் சொல்லெழுத்து வரலாற்று மாற்றங்களைப் புலப்படுத்துகிறது. சான்றாக ஒன்று என்பதை ஒண்ணு, மூன்று என்பது மூணு என்று சீகன்பால்கு எழுதியுள்ளதன் மூலம் ‘ன்ற்’ என்பது குறிலுக்கு முன்னால் ‘ண்ன்’ என்றும் நெடிலுக்கு முன்னால் ‘ண்’ ஆகவும் மாறிவிட்டதைப் புலப்படுத்துகிறது” (செ.வை.சண்முகம், 1993:38-39). சீகன்பால்கு காலத்தில் குறில், நெடில் எகர ஒகர வேறுபாடுகள் குறிப்பிடாத நிலையில் அவர் குறிப்பிடும் பேச்சுவழக்குச் சொற்களின் வடிவமும் ஒரு சில இடங்களில் மாற்றாகக் கொடுக்கப்படுகிறது. படித்தென், படிச்சென் எனும் பேச்சுமொழி வடிவம் மாற்று வடிவம் பெற்றுள்ளதைக் காணலாம்.

உச்சரிப்பு
ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கணங்கள் தமிழ்மொழியின் அச்சு வடிவத்தைப் பற்றிய நீண்டகால வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. எழுத்துகள் உருவம் பெற்ற பிறகு அது எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் அடுத்த கவனமாக இருந்தது. பேச்சுமொழி, எழுத்துமொழியின் உச்சரிப்பு வடிவங்களை இவர்களின் இலக்கணங்களில் பதிவு செய்கின்றனர். அ - ãnna, ஆ - ãvanna, க - kãnnã, கா - kãvennã என்று பேச்சுமொழியில் நெடுங்கணக்கு உச்சரிக்கப்படும் முறையைக் குறிப்பிடுகின்றனர். அதே போன்று எழுத்து மொழியில் கரம் (gãrãm), காரம் (gãrãm) இணைந்து அகரம், ககரம், ஈகாரம், கீகாரம் என்று உச்சரிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளனர். உயிரெழுத்துகளில் குறில் ஒலிகளே பெரும்பாலும் மாற்று உச்சரிப்புகளைப் பெற்றுள்ளன. 

சீகன்பால்கு உச்சரிப்பினைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொற்களில் உச்சரிப்பு அழுத்தம் பெறும் இடங்களை வைத்துக் கொண்டு முதல், இடை, கடையில் வரும் எழுத்துகள் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதனை இவர் உச்சரிப்பு அடிப்படையிலேயே பார்க்கின்றனர். ஒரு சொல் உச்சரிக்கப்படும் பொழுது அது அழுத்தம் பெறும் இடத்தினைப் பொருத்து அச்சொல்லின் உச்சரிப்பு முக்கியத்துவப்படுகிறது எனும் வரையறையை அமைத்துக் கொண்டுள்ளார்.

முதல் எழுத்து உச்சரிப்பு அழுத்தம் பெறும் பொழுது இறுதி எழுத்துகள் அதனை விட குறைவாகவே உச்சரிப்புப் பெறுகின்றன. முதல் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொண்டதற்கான விருப்பம் இறுதி எழுத்துகளை உச்சரிப்பதில் அமைவதில்லை. (எ.டு. பிதா, மாதா, கிறுபை, ஆதி, சாதி). முதலில் அழுத்தம் பெறும் எழுத்துகளோடு சில மெய்கள் இணையும் பொழுது அவை உச்சரிப்பில் எங்ஙனம் முக்கியத்துவப்படுகின்றன என்று சொல்லின் இறுதியில் வரும் மெய்களைப் பட்டியலிடுகின்றார். (எ.டு. கண், மகன், தாகம், மனுஷன், பகல், கதிர்). அதேபோன்று இடையில் சில மெய்கள் மட்டுமே வர அவை எங்ஙனம் உச்சரிப்பில் அழுத்தம் பெறுகின்றன எனக் காட்டுகின்றார் (எ.டு. உங்கள், பக்கம், இரக்கம், காற்று). சீகன்பால்கு உச்சரிப்பு அடிப்படையில் வகைப்படுத்தும் சொற்களைப் பேச்சுமொழி அடிப்படையிலேயே அமைத்துக் காட்டுகிறார். (காத்து-காற்று, கத்தன்-கர்த்தன்). பேச்சுமொழியில் சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுமோ அதனை அப்படியே எழுத்து மொழியில் தருகிறார். உச்சரிப்பு அடிப்படையில் சொற்கள் அடையும் மாற்றங்களையும் குறிப்பிடுகின்றார். சொல்லில் வரும் இகரம் உச்சரிப்பில் உகரம் மற்றும் ஒகரமாக மாற்றம் கொள்ளும் என்று உச்சரிப்பு அடிப்படையில் தனது எழுத்துப் பெயர்ப்பை சீகன்பால்கு அமைத்துக் கொண்டுள்ளார். (பிடவை - Budavei, வீடு - Wudu, பிள்ளை - Bullei). சீகன்பால்கின் உச்சரிப்பு அனுபவம் என்பது எழுத்து மொழி சார்ந்தும் பேச்சுமொழி சார்ந்தும் அமைந்துள்ளதை அவர் தரும் உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தனியான சொற்களின் உச்சரிப்பினைத் தொடர்ந்து இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் இணையும் பொழுது அவை எவ்விதம் உச்சரிப்பு மாற்றம் கொள்கின்றன என்பதையும் விளக்குகின்றார். இரண்டு சொற்களின் இணைவில் (க, ச, த, ப) வலிமிகும் இடங்கள் (நன்னாகக்கேழ்கிறது (நன்றாகக் கேட்கிறது) – Nannga Kelkiradu, ஆகாதவர்களாயப் போனோம் - Agadawergalai Ponom) அழுத்தம் பெற்று உச்சரிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்துகிறார். இரண்டிற்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து தொடராக வந்து உச்சரிக்கப்படும் பொழுது அவை முழுமையாக உச்சரிக்கப்படுவதில்லை. (நரகத்துக்குப் போற வழி (நரகத்துக்குப் போகிற வழி), சறுவத்துக்கும் வல்லவராமிருக்கிறச் சறுவேசுரன் (சருவத்துக்கும் வல்லவராயிருக்கிற சருவேசுரன்). சீகன்பால்கின் உச்சரிப்புப் பற்றிய புரிதல் எழுத்துவடிவம் கொள்ளும் பொழுது அவை அப்படியே பேச்சுவழக்கினைக் கொள்வதில்லை. நவீன எழுத்து வடிவினைப் பின்பற்றுகின்றன.

புணர்ச்சி
புணர்ச்சி என்பது சொல்லும் சொல்லும் இணைவு பெறல் என்பதைவிட எழுத்தும் எழுத்தும் என்பதே பொருத்தமாக இருக்கும். ஐரோப்பியர் தமிழ் இலக்கணம் படைக்கும் பொழுது புணர்ச்சி விதிகளை நேரடியாக விளக்காமல் சொற்சேர்க்கையினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கிச் செல்கின்றனர். தொல்காப்பியர் குறிப்பிடும் திரிதல், கெடுதல், மிகல் எனும் மூன்று மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி அணுகப்பட்டுள்ளது. சீகன்பால்கு மரபிலக்கணங்களைச் சாராது பேச்சுமொழிக்கான இலக்கணம் படைக்கும் பொழுது அங்கு புணர்ச்சியைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இவர் சொற்களைத் தொடர்ந்து எழுதும் பொழுது சொற்களுக்கு இடையிலான இடைவெளியின்றி எழுதுகின்றார் (பரலோகத்தினுடையபாக்கியம், நம்மைப்படைபித்தஆண்டவர்). சீகன்பால்கு எழுத்துவடிவம், எழுத்துமுறை என அனைத்தும் அவர் காலத்து தமிழ் எழுத்துக்கள்/சொற்கள் அமைந்துள்ள விதத்திலேயே அமைந்துள்ளதால் சொற்களுக்கிடையிலான இடைவெளியின்றி எழுதுவதையும் அங்ஙனமே அமைத்துக் கொண்டுள்ளார். பெரும்பாலும் சொற்களை, தொடர்களைத் தொகுத்துத் தரும் முயற்சியாகவே இருந்துள்ளது. இது ஆரம்பகால அச்சுவடிவம் என்பது எகர ஒகர வேறுபாடின்றியும், மெய்கள் புள்ளி பெறாமலும் சொற்கள் இடைவெளியின்றியும் இருந்துள்ளதைக் காட்டுகின்றது.

சீகன்பால்கு தனது இலக்கணத்தைத் தமிழ் மரபிலக்கண அமைப்பிலிருந்து தனித்துவப்படுத்துகின்றார். ஒரு குறிப்பிட்ட நிலையினருக்கு மட்டுமான இலக்கண கல்வி என்பது சமூகத்தில் அதன் பயனை அறிந்திராத விளிம்புநிலை மக்களைச் சார்ந்து அமைகின்றது. செய்யுள் வழக்கிலும் உயர்ந்தோர் பேச்சு வழக்கிலும் எழுத்தப்பட்ட இலக்கணம் அந்நிலையிலிருந்து மாறி பேச்சுமொழிக்கான இலக்கணமாக உருப்பெற்றது. பேச்சுமொழிச் சொற்களைச் சேகரித்து உருவாக்கப்பட்ட சீகன்பால்கின் இலக்கண அணுகுமுறை என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கு ஈடுசெய்யும் வகையில் தொடரிலக்கணத்தை முன்னிறுத்துவதாக அமைகின்றது. அந்த அளவிலேயே தனது எழுத்திலக்கணத்தை அமைத்துக் கொண்டுள்ளார். தமிழ் நெடுங்கணக்கை அறிமுகப்படுத்தல், அவற்றின் வடிவம், உச்சரிப்பு மாற்றம் எனும் நிலைகளில் பயிற்சி முறையிலான இலக்கணத்தைத் தருகின்றார். பேச்சுமொழிக்கான இலக்கணம் படைக்கும் சீகன்பால்கின் நோக்கமானது தனது முந்தைய கால மரபைக் கட்டுடைத்து அவர்கால மொழியின் வழக்குநிலையைப் பதிவு செய்வதாக உள்ளது.

உதவிய நூல்கள்
1.Daniel Jeyaraj, 2010, Tamil Language for Europeans:Ziegenbag’s Grammatica Damulica (1716), Harrassowite Verlag, Wiesbaden.
2.Ziegenbalg,B., 1716, Grammatica Damulica Letters & Impensis, Orphanotrophei, Hallee Savonum, German.
3.இராசாராம்,சு. 2010, இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், 
காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்.
4.சண்முகம்,செ.வை., 1993, கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப்பணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை.
5.சண்முகதாஸ்,அ., 1997, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், புபாலசிங்கம் 
புத்தக சாலை, கொழும்பு.
6.தாமஸ் டிரவுட்மன் (தமிழில்:இராம.சுந்தரம்), 2007, திராவிடச் சான்று, எல்லிஸிம் 
திராவிட மொழிகளும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்.
7.ஆசெர்,ஆர்.இ., (தமிழில்:பெரியசாமி, ஆர்.), 2009, ஐரோப்பிய மொழிகளில் தமிழ் 
இலக்கண நூல்கள் (1500-1950), புதிய புத்தகம் பேசுது, தமிழ் புத்தக உலகம் (1800-
2009), பக். 139-151, பாரதி புத்தகசாலை, 421, அண்ணாசாலை, சென்னை.

jaayapal@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard