New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்! - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்! - சு.ஜெனிபர்
Permalink  
 


ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்!

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கருதப்படும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இந்நூல்கள் எவை என்பதை பற்றி

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331) உண்ணும் முறை
நீரின்றியமையாது உலகெனின் உணவின்றி உயிர் இயக்கம் இல்லை.இத்தகைய உணவு பற்றி மணிமேகலையும் இயம்புகிறது.பாரதியாரும் தனி ஒருவனுக்கு உணவில்லை எனின் இந்த ஜெகத்தினை அழித்திட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

உண்ணும் முறை பற்றிய செய்திகளை 11 (20,21,22,23,24,25,26,27,28,39,40) பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும்
பிறிதியாது நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகர அமை நன்கு    (ஆசாரக்.20)


மேற்கூறப்பட்ட பாடல் ஒருவர் உணவு கொள்ளும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து ஆடாது அசையாது நன்கு பொருந்துமாறு இருந்து உணவைத் தொழுது வேறு திசைகளை நோக்காது வாய் பேசாதிருந்தும் சிந்தாமலும் உண்ண வேண்டும்.இதன் மூலம் சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் இப்படி தான் உண்ண வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைக்கிறது.மேலும் கிழக்கு திசை நோக்கி உண்ண முடியாதோர் பிறதிசைகள் நோக்கி உண்டாலும் தவறன்று என உண்ணும் திசைக்கோர் அமைதிகாட்டும் இதனை,

ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல (ஆசார.22)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

நின்று நடந்து பேசி உண்ணக் கூடாது
இன்றைய நகர்ப்புற நாகரிகமான நின்றும் நடந்தும் பேசியும் திறந்த வெளியிலும் உண்ணும் நெறி கூடாது என்பதனை அன்றே முள்ளியார் அழுத்தமாகக் கூறிச்சென்றார் எனலாம் இதனை,

கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று  (ஆசார.23)


என்ற பாடல் வலியுறுத்துகிறது.உணவில் முதலில் இனிப்பையும், கடைசியில் கசப்பையும், இடையில் பிற சுவைகளும் கலந்து உணவாகக் கொள்ளுதல் வேண்டும்.இதனையே இன்றைய மருத்துவ அறிஞர்கள் சத்துள்ள உணவு என்பர்.

பெரியவர்கள்  பசியுடன் காத்திருக்க நாம் உண்ணுவது குற்றம்.அவர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணுங்கால் அடக்கமும் சிறிது இடைவெளியும் தேவை.அவர்கள் உண்ணத் தொடங்கிய பின்னரே நாம் உண்டும் அவர்கள் எழுந்த பின்னரே நாம் எழுதலும் சிறப்பு.உணவைப் பழித்துரைத்தலோ பெரியவர்கள் உண்ட உணவை வினவுதலோ சிறப்பாகது.

ஈத்துண்க
உலகில் சிறந்த இன்பம் ஈத்துவக்கும் இன்பம்.அவ்வின்பத்திற்கு ஈடுவேறொன்றும் இல்லை.முள்ளியார் ஒழுக்கம் விரும்பிகள் எவர் எவர்க்கெல்லாம் கொடுத்துண்ண வேண்டுமெனப் பட்டியலிடுவர்.இதனை,

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க் கூண் கொடுத்தாலும் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்    (ஆசார.21)


என்ற பாடல் எடுத்துரைக்கிறது.ஒழுக்கம் பிழையாமைக்கு அறம், கொடுத்துண்பது தான் என்பது முள்ளியார் அறம்.இவ்வறம் இன்று தடம் தவறிச் செல்வதால் தான் முதியோர் இல்லங்களும்,குழந்தைகள் காப்பகங்களும்,பிற காப்பகங்களும், இன்று பல்கி பெருகி உள்ளன.

வாய் சுத்தம்
உண்டபின்னர் வாய்சுத்தம் செய்தல் ஒழுக்கத்தின் முதன்மை பண்பு.வாய் கழுவும் நீர் வயிற்றினில் செல்லாதவாறு நன்றாகக் கொப்பளித்து அதை உமிழ்தல் வேண்டும்.பின்னர் உழுந்து அமிழும் அளவு நீரினை எடுத்துக் கண்,மூக்கு,செவிகளாம் முப்பொறிகளை விரலால் தொட்டு மனத்தால் நினைத்து மும்முறை நீரருந்த வேண்டும்.(27) இதனையே ஆசிரியர் “விரலுறுத்தி வாய்பூசல்” என மொழிவார்.

இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்தவகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி   (ஆசார.27)


இக்கருத்தையே சீவகசிந்;தாமணியும்,

வாசநற் பொடியும் நீரும் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
புசுறுத் தங்கை நீரை மும்முறைகுடித்து முக்கால்
காசறத் துடைத்த பின்றைக் கைவிரலு றுப்புத் தீட்டித்
தூசினா லங்கை நீவி யிருந்தனன் தோற்ற மிக்கான்        (சீவக.பதுமையார்இலம்.137)

என்ற பாடலில் கூறுகிறது.ஆசாரம் அழுத்தமாகக் கடைபிடிப்பவரிடம் இந்நெறி இன்று காணப்படுகிறது. 

உடுத்தல் நெறி
இன்றைய நாகரிக வளர்ச்சியின் ஆடை நாகரிகத் தன்மையை முள்ளியார் அன்றே திறம்பட சொல்லியிருக்கிறார். நீராடுகையில்,அதனைப் புகுத்தும் போதும்,சபையில் ஆடை அணியும் பாங்கு முறையை பற்றி,

உடுத்தலால் நீராடார் ஒன்றுபடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை      (ஆசார.11)


என்ற பாடலால் அறியலாம்.

ஆடை காட்டும் பண்பு
ஒருவரின் பண்பு அவர் உடுத்திருக்கும் ஆடை பாங்கில் வெளிப்படும்.உடுத்தாடையின் காற்றுப் பிறர் மேல் படுதலோ,பல்லோர் சூழ் இடத்தில் ஆடையை அவிழ்த்தலோ,உதறுதலோ முறை தவறிய செயலாகும்.பிறருடைய அழுக்காடையைத் தம் உடலின் கீழ் உடையாகவும் மேல் ஆடையாகவும் கொள்ள கூடாது என்பதை,

இடரெனினும் மாசுணி கீழ்தம்மேல் கொள்ளார்
படைவரினும் ஆடைவளியுரைப்பப் போகார்
பலரிடை யாடை உதிராரே என்னும்
கடனறி காட்சி  யவர்     (ஆசார.36) 


என்ற பாடலால் அறியலாம்.

மாலைப் பொழுதில் செய்யத் தகாதவை

மக்கள் மாலைப் பொழுதில் படுத்து உறங்க கூடாது,வழிப் பயணம் செய்யக் கூடாது,உணவு கொள்ளக் கூடாது,சினம் கொள்ளக் கூடாது என்பதை,

“ அந்திப் பொழுது கிடவார்,நடவாரே
உண்ணார் வெகுளார்”    (ஆசார.29:1-2)


என்ற பாடலடியால் அறியலாம்.மேலும் செய்யத்தக்க கருத்தாக,

………………………..விளக்கிழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி  (ஆசார.29:2-3) 


என்ற பாடலடி சுட்டுகிறது.     

செய்யதகாதவை
செய்யதகாதசெயல்களைப்பற்றி33(5,15,19,29,30,32,33,34,35,36,37,38,41,43,44,45,49,53,65,73,82,85,86,87,88,90,91,93,94,97,98,90) பாடல்களில் இயம்பியுள்ளார்.உதாரணமாக 37 ஆம் பாடலில்

பிறர் மனைகள் களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ் ஐந்தும் நோக்கார் - திறனிலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த் திடுதலால்    (ஆசார.37)


பிறன் மனைவியை விரும்பக் கூடாது என்றும் கள்ளருந்தக் கூடாது என்றும்,களவு செய்ய கூடாது என்றும்,சூதாடக் கூடாது என்றும்,கொலைப் பாவம் செய்யக் கூடாது என்றும் கூறி இவற்றையெல்லாம் செய்தால் நகரத்திற்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

ஒழுக்கம்
ஒழுக்கம் என்பதற்கு நன்னடத்தை என்பது பொருள்.ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கை. ஆசாரக்கோவையில் ஒழுக்கம் பற்றிய செய்திகள் 7 இடங்களில் (1,2,4,63,64,81,100) சொல்லப்பட்டுள்ளன.சான்றாக,

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து       (ஆசார.1)


எனவரும் பாடலில் உதவியை மறக்க கூடாது என்றும்,பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும் என்றும்,இனிய சொற்களையே பேச வேண்டும் என்றும்,உயிர்களுக்கு தீங்கு செய்ய கூடாது என்றும்,கல்வி கற்க வேண்டும் என்றும்,உலக நடையை அறிந்து ஒழுக வேண்டும் என்றும், நல்லவர்களோடு நட்பு கொள்ள வேண்டும் என்று நவில்கிறது.

இறைவனை வணங்குவதற்கு உரிய ஒழுக்க நெறிகள்
இறைவனை வணங்குவதற்கு உரிய ஒழுக்க நெறிகளாக 9 ஆம் பாடலை முள்ளியார் எடுத்துரைக்கிறார்.விடியற் காலையில் எழ வேண்டும் என்றும்,பல் குச்சியைக் கொண்டு பல் துலக்கிவிட்டு கண் முகம் ஆகியவற்றை கழுவி இறைவனை தொழுது வணங்க வேண்டும் என்பதை,

நாளேந்தி கோள் நின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கத்தி
நின்று தொழுதல் பழி   (ஆசார.9)


என்ற பாடல் சுட்டுகிறது.

நீராட வேண்டிய காலங்கள்
ஒவ்வொரு மனிதனும் தினமும் குளித்து சுத்ததுடன் இருப்பது சிறந்தது.இது அவனுக்கும் நல்லது அவனை சுற்றிருக்கும் சமுதாயத்திற்கும் நல்லது ஆகும். நீராடும் முறைப் பற்றி 4 பாடல்கள் இந்நூலில் (10,13,14,18 ) சொல்லப்பட்டுள்ளன.

நீராட வேண்டியதிற்கு உரிய காலங்களைப் பற்றி எடுத்து இயம்புகிறது.இதனை,

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறுதல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்     (ஆசார.10)


என வரும் பாடலில் ஒருவர் பத்து நிலைகளில் நீராட வேண்டும் என்கிறது.தெய்வத்தை வழிப்படும் முன்னர்,தீய கனவைக் கண்ட போதும்,தூய்மையற்ற போதும்,உணவை வாந்தி எடுத்த போதும்,தலை மயிர் களைந்த போதும், உண்பதன் முன் நீராட வேண்டும் என்றும், நெடு நேரம் உறங்கிய காலத்திலும் நீராட வேண்டும் என்றும்,புணர்ச்சி கொண்ட இடத்தும்,கீழ் மக்கள் தேகத்தைத் தீண்டிய இடத்தும்,மலம் சலம் கழித்த இடத்தும் என கூறப்பட்டுள்ளன.

யாவரும் கண்ட நெறி

ஐவரைத் தேவர்களைப் போலக் கருதி போற்றித் தொழுதல் வேண்டும் என்பதை,

அரசன் உபாயத்தி;யாயன் தாய் தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே
யாவரும் கண்ட நெறி     (ஆசார.16)


என்ற பாடலின் மூலம் அரசன், ஆசிரியன்,ஈன்ற தாய்,தந்தை,தமையன்  போன்றோரை உலகோர் பொதுவாகத் தொழுதனர் என்ற செய்தி புலப்படுகிறது.

மலம் சலம் கழிக்க கூடாத இடங்கள்
சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.சில இடங்களில் அசுத்தம் செய்யக் கூடாது.இதற்கிணங்க ஒவ்வொரு மனிதரும் மலம் சலம் கழிக்க கூடாத இடங்களைப் பற்றி முள்ளியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.இதனை,இயற்கையுடன் பொருந்திய வாழ்வில் சில இடங்கள் நல்ல இடங்கள் என ஒதுக்கபட்டியிருந்தன இது சுகாதாரம் கருதியே ஆகும் என்பது நோக்க தக்கது ஆகும்.

புல் பைங்கூழ் ஆப்பி சுடலைவழி தீர்த்தம்
தேவகுலம் நிழல் ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்       (ஆசார.32)


என்ற பாடலில் புல்,விளைநிலம்,பசுவின் சாணம்,சுடுகாடு,நடை பாதை,புனித தீர்த்தம்,தேவாலயம்,நிழல் உள்ள இடம்,பசுக்கள் கட்டும் இடம்,சாம்பல் போன்ற இடங்களில் மலம் கழிக்க கூடாது என்பதை அறியமுடிகிறது.

மனையைப் பேணும் முறை
விடியற்காலையில் விழித்தெழுந்து மனையை தூய்மையாகும் வகையில் குப்பைகளைப் போக்கி சாணத்தை தெளித்து தூய்மை செய்தல் வேண்டும்.பின்பு அழுக்குள்ள பாத்திரங்களைக் கழுவி நீர்ச்சால் கமண்டலம் நிறையுமாறு மலர் அணிந்து அடுப்பினுள் தீமூட்ட வேண்டும்.இதனை,

காட்டுக் களைந்து கலம் கழீஇ இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல் வேண்டுவார்     (ஆசார.46)

என்ற பாடலால் அறியலாம்.இக்கால கட்டத்திலும் இதன் படி மனையை பேணும் முறை மேற்கொண்டால்  சிறந்ததாக இருக்கும்.

விருந்தோம்பல்

தமிழரின் தலைச்சிறந்ந பண்பாடு விருந்தோம்பல் ஆகும். இல்லத்திற்கு புதிதாக வருபவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கே விருந்தோம்பல் ஆகும். சென்னைப் பல்கலைக்கழகத் தமி;ழ்ப் பேரகராதி விருந்தோம்பல் என்பதற்கு புதிதாக வருபரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை என்று பொருள் கூறுகிறது.  விருந்தோம்பல் பற்றிய செய்தியை  முள்ளியார் கூறியிருக்கிறார்.விருந்தினர்க்கு விருந்து அளித்ததோடு மட்டும் அல்லாமல் புன்முறுவலோடு வரவேற்று  இன்சொல்பேசி  கால் கழுவ நீர் கொடுத்து ஆசனங்கள் கொடுத்து படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்பதை,

முறுவல் இனிதுரை கால்நீர் மணை பாய்
கிடக்கையோடு இவ்வைந்தும் என்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் இறப்பு     (ஆசார.54)

என்ற பாடல் உணர்த்துகிறது.

நற்குலப்;பெண்டிரின் இயல்பு
பெண் என்னும் தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.அதுப்போன்று பெண்ணை உணர்த்தும் மாதர் என்ற அழகு என்பது பொருள் என்று திரு.வி.க அவர்கள் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்ற நூலில் கூறியிருக்கிறார்.(ப.3)
நற்குலப் பெண்டிர் என்பவர் கணவரது மேனியைத் தவிர பிற ஆடவர் உடலை பார்க்க மாட்டார்கள்,தன்னுடைய மேனி அழகை பார்க்க கூடாது,தம் தலைமயிரைக் கோத மாட்டார்கள்,கை நொடித்தல் முதலியன செய்ய மாட்டார்கள் என்று 77 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

மன்னர் முன்னே செய்யத் தகாதவை
மன்னர் முன்னே செய்யத் தகாத செயல்களைப் பற்றி முள்ளியார் 78 ஆம் பாடலில் பதிவுசெய்துள்ளார்.  வெடிச்சிரிப்பு,கொட்டாவி,எச்சில் துப்புதல்,தும்முதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது என்பதை,

நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி    (ஆசார.78)

என்ற பாடலால் அறியலாம்.

சான்றோர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகள்
சினம் கொண்டாலும் தம் பெரியவரின் பெயரை வாயினால் கூறமாட்டார்கள்,மனைவியை சினம் கொண்டு பேசி நீண்ட நேரம் அங்கேயே இருக்க வைக்க மாட்டார்கள்,இழித்து பேச மாட்டார்கள்,கீழ் மக்களை முறைப் பெயர் இட்டுக் கூற மாட்டார்கள் என்று முள்ளியார் குறிப்பிடுகிறார்.இதனை,

தெறுவந்தும் தம்குரவர் பேர்உரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்றும்முறை கொண்டு கூறார் புலையரையும்
நன்கறி வார்கூறார் முறை    (ஆசார.80)


என்ற பாடலால் அறியமுடிகிறது.

ஆசானிடம் மாணவர் நடந்து கொள்ளும் முறை
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று போற்றுதலுக்கு உண்டான ஆசிரியரைப் பற்றிய செய்தி ஆசாரக்கோவையில் இடம்பெறுகிறது.இதனை

நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக் கால் ஒவாமை ஒகார் பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினா வற்க சொல்லொழிந்தக் கால்     (ஆசார.74)


மேற்கூறப்பட்ட பாடலின் வழி ஆசானிடம் அடங்கி இருக்க வேண்டும் என்றும்,எழுந்து நிற்க வேண்டும் என்றும் அவர் சொன்னவுடன் எழுந்து செல்ல வேண்டும் என்றும்,பாடங்களை செவிமடுத்து கேட்க வேண்டும் என்றும் அவர் எதுவும் சொல்லவில்லையென்றால் அவரை வினவாதிருக்க வேண்டும் என்று முள்ளியார் எடுத்துரைத்துள்ளார். 

முடிவுரை
சமுதாயம் என்பதன் பொருளை அறியமுடிகிறது. உண்ணும் முறை,ஈத்துண்க, வாய் சுத்தம், உடுத்தல் நெறி, ஆடை காட்டும் பண்பு, மாலைப் பொழுதில் செய்யத் தகாதவை, இறைவனை வணங்குவதற்கு உரிய ஒழுக்க நெறிகள், நீராட வேண்டிய காலங்கள், மலம் சலம் கழிக்க கூடாத இடங்கள,; விருந்தோம்பல், நற்குலப்;பெண்டிரின் இயல்பு, மன்னர் முன்னே செய்யத் தகாதவை, சான்றோர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகள், ஆசானிடம் மாணவர் நடந்து கொள்ளும் முறை ஆகியவைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற் பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)  நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5.அகராதி    கௌரா தமிழ் அகராதி
6.கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)  ஆசாரக்கோவை மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014
7.இராசாராம் .துரை பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard