New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்! - பா. சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்! - பா. சிவக்குமார்
Permalink  
 


சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்!

E-mailPrintPDF

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது. 

சங்ககாலப் போரில்  அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2.    வேந்தர் மற்றும் குறுநில மன்னர்  கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத்             தாக்குதல்
3.    வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4.    வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5.    இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்

என்பவையாகும். 1.குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்

குறுநில மன்னர்கள் தங்களின் ஆதிக்கத்தை அதிகரித்தல் வேண்டி தம்மோடு ஒத்த கருத்துடைய மன்னர்களை ஒன்றிணைத்து, பொது எதிரியினைத் தாக்குவதற்க்குக் கூட்டணி அமைத்துள்ளனர். பழையன் என்பவன் காவிரிக் கரையினைச் சார்ந்த தோட்டங்களையும் புனல் மலிந்த மதகுகளையும் உடைய பேஎர் என்னும் ஊருக்கு தலைவன். இவனிடம் வேற்படையைப் பெற்று சோழன் கொங்கர்களை அடக்கியுள்ளான். இத்தகைய சிறப்புப் பெற்ற பழையனை நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுரை ஆகிய ஆறுபேர்களும் கூட்டுச் சேர்ந்து போர்க்களத்தில் கொன்றழித்தனர். இதனை, அகம். 44:7-11 என்ற பாடல்வழி அறியலாம்.

மோகூர் மன்னன் பழையன், கோசர்களின் அரசாதிக்கத்திற்குப் பணிந்து போகாமையால் கோசர்கள் மோரியருடன் கூட்டுச் சேர்ந்து மோகூர் மன்னனைத் தாக்கியுள்ளதை,

“தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்”    (அகம்.251:10-12)


என்ற அகப்பாடல் வெளிப்படுத்துகின்றது. பழையன் என்னும் குறுநில மன்னர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல் வேண்டி புதிய மன்னர்களான மோரியர்களைக் கூட்டுச் சேர்த்து போர் நிகழ்த்தியுள்ளனர்.

வேளிர்கள் எனப்படும் சிற்றரசுகள் பதினான்கு பேர் ஒன்று சேர்ந்து ‘கழுவுள’ என்னும் சிற்றரசனுக்கு உரித்தான ‘காமூரைப்’ பெறுதல் வேண்டி அவன் மீது போர் தொடுத்துள்ளதை,

“…………………………………. அடுபோர்
வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை
ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று……………………………”      (அகம்.135:10-14)


என்ற பாடலடிகள் வெளிப்படுத்துகின்றன. வேளிர் குலத்தைச் சேர்ந்த பதினான்கு சிற்றரசர்கள் ஒன்று சேர்ந்து அக்குலம் அல்லாத ‘கழுவுள்’ (இடையர் தலைவன்) என்பவனைத் தாக்கி அவன் நகரைக் கைப்பற்ற எண்ணுதல் என்பது தற்காலத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட சாதியினர் ஒன்று கூடி குறைந்த எண்ணிக்கை கொண்ட சாதியினரை அடக்கி ஆளுவதற்கு ஒப்பானதாகும். தற்காலத்தில் ஒரு சாதியினர் மற்ற சாதியினரை அடித்து ஒதுக்கி வன்முறையில் ஈடுபடுவதைப் போன்றே வேளிர் குல மரபைச் சேர்ந்த பதினான்கு பேர் கூட்டுச் சேர்ந்து கழுவுள் என்னும் சிற்றரசனைத் தாக்கி அவன் நாட்டைக் கைப்பற்றுதல் நடந்துள்ளது. 

2. வேந்தன் மற்றும் குறுநில மன்னன் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
சோழ வேந்தன், கொங்கர்களை அடக்கித் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல் வேண்டி ‘பழையன்’ என்னும் குறுநில மன்னனிடம் வேற்படையைப் பெற்றிருந்தான். இப்பழையன் ‘பேஎர்’ என்னும் ஊரின் தலைவன், பிழையாத வீரமிக்கவன். இவனது சிறப்பினை “மாரி அம்பின் மழைத்தோல் பழையன், காவிரி வைப்பிற் போஓர் அன்னான்” (அகம். 186:15-16) என்ற அகநானூற்றுப் பாடலின் வழி அறிந்து கொள்ளலாம். சோழ வேந்தனும் குறுநில மன்னனுமாகிய பழையனும் சேர்ந்து கொங்கர்களை அடக்கியுள்ளமையை,

“கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்”     (நற்.10:6-8)


என்ற பாடல் அடிகள் எடுத்தியம்புகின்றன. வேந்தனும் குறுநில மன்னனும் கூட்டுச் சேர்ந்து குறுநில மன்னரான கொங்கர்களை அடக்கி தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.  

3. வேந்தர்கள், குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
மூவேந்தர்களில் ஒருவரை தாக்குதல் வேண்டி மற்ற இருவேந்தர்களும் கூட்டுச் சேர்ந்து குறுநில மன்னர்களையும் உடன் சேர்த்திக் கொண்டு  வேந்தன் மீது போர் செய்துள்ளனர். சேர, சோழ வேந்தர்கள் மற்றும் ஐந்து குறுநில மன்னர்கள் கூட்டுச் சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனைத் தாக்கியதும், சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தரும் பதினொரு வேளிர்களும் இணைந்து கரிகாற்சோழனைத் தாக்கியது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

பாண்டியன் நெடுஞ்செழியன் சிறுவனாக இருந்தபோதே அவன் தந்தை இறந்துபட, இளமையிலேயே அரியணை ஏறினான். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணிய சேரன், சோழன் ஆகிய இருபெருவேந்தர்களும் ஒன்றிணைந்து மேலும் ஐந்து குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மாள், பொருநன்) உடன் சேர்த்து நெடுஞ்செழியன் மீது போர் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் அப்போரில் பாண்டியன் பகைவர் எழுவரையும், தலையாலங்கானம் எனும் இடத்தில் கொன்று அவர்களின் வெண்கொற்றக் குடையினையும் முரசையும் கைப்பற்றிக் கொண்டான். இதனை

“புனைகழ லெழுவர் நல்வல மடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே”                    (புறம்.76:12-13)


என்ற பாடல் அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், மதுரைக். 55-56, அகம். 36:13-23 என்ற பாடல்களின் மூலமும் அறியலாம். எழுவர் கூட்டுச் சேர்ந்து ஒருவனைத் தாக்கிய செய்தியினையும் பாண்டியன் ஒருவனே எழுவரையும் கொன்று வெற்றி பெற்ற செய்தியினை புறம். 19ஆவது பாடலில் காணலாம். 

சோழன் கரிகால்வளவன் பெரும்புகழ் கொண்டவன். எரிகின்ற சினத்தையும் வலிமையினையும் உடையவன். இவனைச் சேர, பாண்டிய வேந்தர்களும், பதினொரு வேளிர்களும் ஒன்றாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். ‘வெண்ணிவாயில்’ என்னுமிடத்தில் நடைபெற்ற இப்போரில் கரிகால்வளவன் வெற்றியைத் தழுவினான். இச்செய்தியினை, அகநானூற்றுப் பாடலடிகள் 246:8-12 மூலம் அறியலாம். இப்போரில் புண்பட்டு வீழ்ந்த சேரலாதன் அப்போர்க்களத்தே வடக்கிருந்து உயிர்விட்டமையை அகம். 55ஆவது பாடல் வெளிப்படுத்துகின்றது. 

4. வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
வேந்தர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் வலிமைமிக்க குறுநில மன்னர்களை வீழ்த்துவதற்காக வேந்தர்கள் இணைந்து தாக்கியுள்ளனர். இவ்வாறு சிற்றரசுகளை வீழ்த்துவதற்குப் பேரரசுகள் தனித்தனியாகவும் படைவலிமை தேவை அதிகமுற்ற போது ஒன்று சேர்ந்தும் தாக்கி அழித்து அடிபணிய வைத்துள்ளனர்.

பல அரசர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அரசன் மீது தாக்குதல் நடத்தும் போது அவன் பெறும் துன்பத்தினை உவமை மூலம் புலவர் காட்சிப்படுத்தியுள்ளார். புலவர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், பொருளீட்டும் பொருட்டு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் இடைவழியில் தலைவியை நினைத்து ஏங்கிய தன் நெஞ்சை நோக்கி, தலைவி தன்னைப் பிரிந்து உறக்கமின்றி அவள்படும் துன்பமானது, பல அரசர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரே ஒரு மதிலை உடைய அரசனைத் தாக்கும் போது, அம்மன்னன் எப்படி உறக்கமின்றி இருப்பானோ அதைப் போன்றது என்று தலைவியின் துன்பத்தைக் கூட்டணிப் போரில் பாதிப்படையும் ஓர்எயில் மன்னனின் மனநிலையோடு ஒப்பிட்டுள்ளமையை,

“………………………..வென்வேல்
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஓரொயின் மன்னன் போலத்
துயிறுறந் தனள்கொல் அளியள் தானே”                         (அகம். 373:15-19)


என்ற பாடலடிகள் மூலம் அறியலாம். 

தமிழகமெங்கும் பாரியின் புகழ் பரவுவதைக் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்களும் கூட்டுச் சேர்ந்து பாரியின் பறம்புமலையைப் பெரும்படையுடன் முற்றுகையிட்டனர். இதனை,

“கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே”                 (புறம்.110:1-2)


என்ற கபிலரின் பாடல் வரிகள் வழி அறியலாம். மூவேந்தர்களும் சூழ்ச்சி செய்து வேள்பாரியைக் கொன்று அவன் நாட்டைக் கைப்பற்றியுள்ளமையை,

“அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே”              (புறம்.112)


என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது. சூழ்ச்சியால் தந்தையைக் கொன்றும் பறம்பு மலையைக் கைப்பற்றவும் செய்த மூவேந்தரினை இழிவுபடுத்தும் நோக்கில் ‘வென்றெறி முரசின் வேந்தர்’ என்று அழைத்ததாக உரைப்பார் ஒளவை துரைசாமிப் பிள்ளை.

5. இரு வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
பாண்டியன், சேரன் ஆகிய இருபெரு வேந்தரும் கூட்டுச் சேர்ந்து சோழன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வெண்மையான நெற்கள் விளைகின்ற பருவூர் என்னுமிடத்தில் பாண்டியனும் சேரனுமாகிய இருபெரு வேந்தரும் இணைந்து சோழனை எதிர்த்துப் போரில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் சோழன் போர்க்களத்தில் கொன்றழித்து அவர்களின் களிறுகளைக் கவர்ந்து கொண்டதனை, அகம்.96:12-17 என்ற பாடலடிகள் வெளிப்படுத்துகின்றன. சேரனும் சோழனும் ஒன்றிணைந்து பாண்டியனின் கூடல் நகர் மீது போர் தொடுத்துள்ளமையை, அகம்.116:12-15 என்ற பாடலடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. 

சங்ககால அரசர்களின் போர்க் கூட்டணி முறிவு 
அரசாதிக்கப் போரில் கூட்டணி அமைத்துக் கொண்டு போரிட்ட போதும் சில நேரங்களில் அக்கூட்டணியில் முறிவும் ஏற்பட்டுள்ளமையும் காணமுடிகின்றது. குறுநில மன்னர்கள் இணைந்து வேந்தனின் படையை எதிர்ப்பதற்காக உடன்படிக்கை செய்துள்ளனர். வேந்தனின் படையைக் கண்டு பயந்து அவ்வுடன்படிக்கைக்கு உடன்படாமல் வேந்தனைப் பகைத்துக் கொள்ளாமல் கூட்டணியை முறித்துக்கொண்டமையை,

“அஞ்ச லென்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னன் போல”                                 (நற்.43:8-11)


என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. வேந்தனின் படை வந்தால் நான் உதவி செய்கிறேன் என்று முன்பு கூறிய அரசன் வேந்தனின் யானைப் படையைக் கண்டு பயந்து அவனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதை உணர்ந்து, அஞ்சி உதவாமல் விடப்பட்டுள்ளதையும், வேந்தனின் அரசாதிக்க வன்முறையினைத் தடுப்பதற்கு யாரும் உதவ முன்வராத நிலையில் உடைந்து போன ஒரு மதிலை வைத்துக் கொண்டுள்ள அரசன் தான் வீழ்த்தப்படுவதை எண்ணி மனம் கலங்குவதையும் இப்பாடலில் காணலாம். 

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் சங்கச் சமூகத்தில் அரசாதிக்கப் போரில் வெற்றிபெற குறுநில மன்னர்களும் வேந்தர்களும் கூட்டணி அமைத்துப் போர் புரிந்துள்ளமையும் அக்கூட்டணியில் சில முறிவு ஏற்பட்டுள்ளமையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.

துணை நின்ற நூல்கள் 
1. ஒளவை துரைசாமிப்பிள்ளை , புறநானூறு, பகுதி I & II கழக வெளியீடு, சென்னை, 2007    
2. சோமசுந்தரனார், பொ.வே.,    பத்துப்பாட்டு பகுதி - II, கழக வெளியீடு, சென்னை, 2008
3. பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
4. வேங்கடசாமி நாட்டார், ந.மு.,    வேங்கடாசலம் பிள்ளை. ரா.,    அகநானூறு, மணிமிடை     பவளம்,    கழக வெளியீடு, 2007    
5. வேங்கடசாமி நாட்டார், ந.மு.,    வேங்கடாசலம் பிள்ளை. ரா.,    அகநானூறு, நித்திலக்கோவை, கழக வெளியீடு, 2008
6. வேங்கடசாமி நாட்டார், ந.மு.,    வேங்கடாசலம் பிள்ளை. ரா.,    அகநானூறு, களிற்றுயானை    நிரை,  கழக வெளியீடு, 2009    

sivasivatamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard