New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு - இரா.தேவேந்திரன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு - இரா.தேவேந்திரன்
Permalink  
 


 சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு

E-mailPrintPDF

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்புகதைசொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும் அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்கிறான். கதை இலக்கியங்களில் சொல்லும் முறை காலநிலைக்கு ஏற்ப பல வடிவங்களில் நிகழ்ந்துள்ளன. சங்ககாலத்தில் செய்யுட்களின் மூலமாகச் சிறு, சிறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை அடிப்படையிலும் கற்பனைகள் கலந்தும் புனைந்துரைக்கப்பட்டன. ஓர் கதைப்பாடலுக்கு கரு, கருவைச் சுமந்துசெல்லும் மாந்தர்கள், பயணிக்கும் சூழல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது. அவை குறுங்கதைகளைப் போலவும் நெடுங்கதைகளைப் போலவும் காணப்படுகின்றன. இத்தகைய மரபின் அடிப்படையில் காணப்படுகின்ற சங்க இலக்கியத்தினை  கதைப் பொதிக்கவிதைகள் என்பதை பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை விளங்குகிறது.

சங்க இலக்கியம் கதைக்கூற்றுக் கவிதைகளாக காணப்படுகின்றன என்று விளக்கும் கதிர் மகாதேவன், “எல்லா புறநாற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் கதைக்கூற்றுக் கவிதையாய் இன்று நமக்குப் புலப்படவில்லை. ஆனால், திணை துறை அமைப்பு நாடக முன்னிலைக்கு உரியது. ஆயின், சிறுகதைக்கு உரிய பாங்கு அனைத்தும் பெற்றவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் பாடிய புலவர்கள் பலரும் அகப்பாடல்கள் பாடியுள்ளனர். முதல், கரு, உரிப்பொருள்களின் அமைப்பில் இரண்டும் ஒரு தன்மையான இலக்கியக் கொள்கைகள் பெற்றவையே.  மன்னனை அன்று மக்கள்  தம் உயிராக மதித்தனர். அவனைப் பற்றிய எண்ணங்களே சுவைக்கு உரிய கற்பனையாக அக்கால(வீரநிலைக்கால) மக்களுக்கு இருந்திருக்க  வேண்டும். களநிகழ்ச்சிகள் என்றுமே கதைநிகழ்ச்சிகள். நிகழ்ச்சிகள் நடந்த காலத்து, அவை ஓவியம் போல் வீரநிலைக் காலத்து மக்கள் உள்ளத்துப் பற்பல கற்பனைளைத் தோற்றுவித்திருக்கக் கூடும், எடுத்துக்காட்டாக,

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் 
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்  திங்கள்  இவ்வெண்  நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டர் யாம் எந்தையும் இலமே”(புறம்-112)

பாரி மகளிரின்   இப்பாடல்  வீரநிலைக்  காலத்து எழுந்த  கையறுநிலைப் பாடல்தான். இப்பாடல் தோன்றிய சூழலைக் கண்டால் ஒரு வீரக்காப்பியக் கரு அல்லவா உருவாகும் என்கிறார்.(கதிர் மகாதேவன், பழந்தமிழ் வீரப்பண்பாடு,ப.32-33) 

கதைகூறும் பாங்கு
சங்க இலக்கியத்தில் உரைப்பாடல்கள் நிறைந்து காணப்படுவதை அறியமுடிகின்றது. இவற்றில்  கதைத்தன்மையும்  பொதிந்தனவாக உள்ளன. நீண்ட அடிகளைக் கொண்ட பாடல்களில்  மிகுதியாக கதைப்போக்கு அமைந்துள்ளன. கதைமாந்தர்கள் கதை சொல்லிகளைப் போல கதையோட்டத்தை நகர்த்திச் செல்வதையும்  காணமுடிகிறது. குறிஞ்சிகலியில்  65 ஆம் பாடல், ஒரு முதுபார்ப்பான் பற்றிய கதை நிகழ்வை   நாட்டுப்புற பாங்கில்     எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது.
“திருந்திழாய் கேளாய் நம் ஊருக்கு எல்லாம் சாலும், பெருநகை அல்கல்  நிகழ்ந்தது” கதை கூறும்வகையில் தொடங்குகிறது.  உலகமே இறந்துவிட்டது போன்று ஆழ்ந்து உறங்கிகொண்டிருந்த  இரவில் அழகிய துகிலாகிய போர்வையை அழகுபெற போர்த்தி, இனிய மென்மையான மார்பையுடைய நம் தலைவனுக்காக நான் நின்றிருந்தேன்.  அப்போது மயிரை நிக்கிய தட்டையான வழுக்கைத்தலையும்  அத்தலைமேல்  முக்காடாகப் போர்த்திய போர்வையும்  கருங்குட்டத்தால் குறைந்து போன கை, கால்களும் உடைய ஒழுக்கத்தில் குறைந்து வந்தவன் நம் குடியிருப்பை விட்டுப் போகாது ஒளிந்து திரியும் முடவனான முதிந்த பார்ப்பான்.  தோழி நீ அவனைக் கண்டால் போற்றுவாயாக என்று பல முறை நீ கூறினாய். அந்த இரவில் அங்குவந்து குனிந்து பார்த்துப் பணிந்து நின்று மகளிர் நிற்பதற்கு உரியதல்லாத இந்த நேரத்தில்  இந்த இடத்தில் நிற்கும் நீ யார் என்றான். மெதுவாக, வைக்கோலைக்கண்ட வயது முதிர்ந்த எருதைப் போல் என்னை விட்டுப் போகாமல் நின்றான். அவ்வாறு நின்று பெண்ணே  தாம்பூலம் தின்கின்றாயா  என்று கூறி பாக்கிட்ட தன் பையைத் திறந்து காட்டி எடுத்துக்கொள் என்று நீட்டினான். நான் ஒரு வார்த்தையும்  கூறாமல் நின்றேன். அவன் விரைவாக அங்கிருந்து அகன்று போனான். தாம்பூலம் தருவதை நிறுத்தினான். பின்னர், சிறுமியே நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய். யான் ஆன் பிசாசு. எனவே, நீ என்னை ஏற்று அருள வேண்டும்.  அவ்வாறு அருள் செய்யாது வருத்துவாய் என்றால் இவ்வூரில் பலி கொள்ளவிடாமல் எல்லாவற்றையும்  நானே எடுத்துக்கொள்வேன் என்று பலவும் கூறிநின்றான்.  அவன்  அஞ்சி நிற்கிறான் என்பதை அறிந்து கை நிறைய மணல் எடுத்து அவன் மீது தூவினேன். அப்போது அவன் அலறிக் கத்தத் தொடங்கினான்.  புலி பிடிக்க விரித்த வலையில் குள்ளநரி வந்து அகப்பட்டதைப் போல இருந்தது. தனித்து நிற்கும் மகளிரைக் கண்டால் தம் காமத்தால் மற்றவர்க்குத் துன்பந்தரும் வாழ்வைக்கொண்ட பார்ப்பானின் இந்தச் செயல் ஒரு கேலிக்கூத்து  என்பது இப்பாடலில் இடம்பெறும் கதைநிகழ்வு. `சுடர்த்தொடி கேளாய்’ எனத்தொடங்கும் 51 ஆம் பாடலும் கதைக்கூறும் பாங்கில் அமைந்துள்ளது.       கதையமைப்பைக் கொண்ட பாடல்கள் பல சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. தலைவன் இடைச்சுரத்தில் கண்ட நிகழ்வைவெளிப்படுத்தும் பொழுதும், தலைவி களவுக் காலத்தில் குறிப்பாக இரவுக்குறியில் படுகின்ற துன்பத்தைச் சுட்டும் பாடல்களிலும் கதைக்கூறுகள் காணப்படுவதை அறியலாம். இவை தொகை நூல்களைவிட பத்துப்பாட்டில் வளர்ச்சிப்பெற்றதாக காணமுடிகின்றது. தமிழ்க் கவிதைப்பிரிவில் ஏற்பட்ட இவ்வளர்ச்சியை குறிப்பிட்ட கா.சிவத்தம்பி “சங்க இலக்கியங்களினுள்ளே கதைப்பாடல்கள் இல்லாத இன்றைய நிலையில் முல்லைப்பாட்டு, நெடுநல்வாடையில் குறிப்பாக நெடுநல்வாடையில் ஏற்படும் இந்நெகிழ்வு  சங்கத் தமிழ்க் கவிதையியலில் காணப்படும் வளர்ச்சியாகவே  கொள்ளப்பட வேண்டும்(சிவத்தம்பி,கா.பத்துப்பாட்டு கவிதையியல்)

கதைக்கரு கட்டமைப்பு
கதையமைப்பைத் தீர்மானிக்கிற ஒரு  சக்தியாக  விளங்குவது  கதைப்பின்னல்(plot) ஆகும். கதை வடிவத்தில் சாரம்சமாக மையங்கொண்டிருக்கிற பருப்பொருளாகிய கருவை விளக்குவதற்கு இது பயன்படுகிறது. “கலை வடிவங்கொண்டு வாசகனைச் சென்றடைகின்ற `திறன்’ பெற்றதாக விளங்குவதற்குக் கதைப்பின்னலே வாயிலாக அமைகிறது என்பார் தி.சு. நாடராசன். (திறனாய்வுக் கலை, பக். 138 - 139) கதைக் கட்டமைப்பு சிறப்பாக அமைகின்ற போது எளிதில் படிப்போனைக் கவர்ந்து நிற்கிறது. அமைப்பியல் ஆய்வும் இவ்வாறு இலக்கியத்தின் அல்லது அழகியப் படைப்பின் பண்புநிலைகளை அதற்கு வெளியே போகாமல் உள்ளேயே நின்று அவற்றின் கட்டுமானங்களை மையப்படுத்திப் பேசுகின்றது. இப்பேச்சு அதன் வாயிலாக நடைபெறும் செயல், பயன் போன்றவற்றை ஆறு உறுப்புகளாகப் பகுப்பார்.( Roman  Jacobson, Closing Statement, Structurlism and semiootics, P.83)

சூழல் செய்தி
பேசுவோர் கேட்போர்
தொடர்பு கருவி

பேசுவோரிடம் இருந்து தொடங்கும் கருத்து எவ்வாறு கேட்போரைச் சென்றடைகிறது, இடையே என்னென செயற்பாடுகளை நிகழ்த்துகிறது என்பதும் கட்டமைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. சங்கப் பனுவலின் கதைக்கருவினை கட்டமைப்பு ஆய்வில் உட்படுத்தும் போது அதன் உள்ளமைப்பை அறிந்துகொள்ள முடிகின்றது. இது,

வினை நிகழ்வு வரிசைமுறை
வினை நிகழ்வு இருநிலை எதிர்வுகள்
வினை நிகழ்வுக் காரணம் – விளைவு
என்ற செயல் முறையில் விளக்கம் பெறுகின்றது.  சங்கப் பாடல்கள்  பலவற்றை இதற்கு சான்றாக காணலாம்.  உதாரணமாக, 

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுனர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அறிய
வெறுத்த ஏஎலீஇ வேய்புரை பணைத்தோள்        
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும் இணையள் ஆயின், தந்தை
அருங்கடிக்  காவலர் சோர்பதன் ஒற்றி 
கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
வேங்கையும் ஒள் இனர் விரிந்தன
நெடுவெண் திங்களும் ஊர்கொண்டன்றே” (அகம்:2)

என்ற அகநானூற்று பாடல் களவொழுக்கத்தில் நாட்டம் கொண்ட தலைவனை வரைவு வேண்டுவதாக காணப்படுகின்றது. இப்பாடலை மேற்கூறப்பட்ட செயல்முறையின்  அடிப்படையில் பகுக்கலாம்.

வினைநிகழ்வு                               களவொழுக்கம்
வினைநிகழ்வு வரிசைமுறை          பகல் இரவு சந்திப்பு,                               மறுப்பு,தினைமுற்றல், காவலர் துஞ்சாமை,திங்கள் வளருதல்                                                                                                                                                            
வினைநிகழ்வு எதிர்நிலை:
குரங்கு மரம் ஏறல்                      x      மயக்கத்தில் மரம் ஏறாமை(மீறல்) [மரபு )
தலைவன் களவில் திளைத்தில்         x    தலைவி கற்புவாழ்வுக்கு ஏங்குதல்
தினைமுற்றல்                          x    காவல் புரியாமை
களவொழுக்கத்தை மறுத்தல்            x     கற்பொழுக்கத்தை நினைவூட்டல்
வினைநிகழ்வு காரணம்                           வரைவு வேண்டல்
விளைவு                                    இன்பமடைதல்(திருமணம்)

மேற்கண்ட வகையில் இப்பாடலின் கட்டமைப்பை ஆய்வு செய்யலாம். புறப்பாடல்களிலும் இவ்வமைப்பு முறையினைக் காணலாம். உதாரணமாக,

“ஆரம் தாழ்ந்த அணிகிலர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமான் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்
திங்கள் அனைய எம்ம னோர்க்கே”    (புறம்: 59)

என்ற உள்ள அமைப்பை கீழ்க்காணுமாறு பகுக்கலாம். 

வினை                                                 வாழ்த்து
வினைத்திறல்                                      ஆரம் அணிந்த மார்பு, 
நீண்ட தடக்கை, உவப்புடன் வழங்கும் பரிசு.
வினைத்திறல் எதிர்வு:
ஞாயிறு                                          X    திங்கள்    
பாண்டியன் நன்மாறனை                         பாண்டியன் நன்மாறனை
எதிர்க்கும் பகைவர்களுக்கு                நாடும் இரவலர், புலவர்களுக்கு 
விளைவு                                பரிசில்பெறல்
என்ற வகையில் அதன் அமைப்பை பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்தலாம் 

கதை நிகழ்வுகள்:
இலக்கியம் என்பது படைப்போன், படைப்பு என்ற இருநிலைக் கூறுகளை மட்டும் கொண்டு இளங்குவதல்ல. அது படைப்பு நிகழும் சூழலையும் காலத்தையும் சுட்டுவது. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என காலங்கடந்து நிற்பதற்கும், காலங்கடந்த கருத்துகளை பதிவு செய்வதற்கும் இடமுண்டு. சங்க இலக்கிய மாந்தர்கள் நிகழ் காலத்தில் உரையாடுவதும் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதும் எதிர் காலத்திற்கு திட்டமிடுதலும் கொண்டு வாழ்தலை அறிந்து கொள்ளமுடிகிறது. சூழலியல் மாந்தர்களின் வாழ்வை மையப்படுத்தி அமைந்துள்ளது. அத்தகைய சூழல் சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் முக்கிய காரணியாக அமைகிறது. 
பேசுவோர் கூறும் கருத்தினைக் கேட்போர் அறிந்து கொள்ள நேரடியன  குறிப்புகளும், அவற்றோடு தொடர்பானவற்றை அறியும் குறிப்புகளுக்கும் சூழல் பயன்படுகின்றது. சூழல் படைப்பின் பின் படைப்பின் பின்புலமாக அமைந்து படைப்பின் நோக்கம் பற்றிபடிப்போர்க்கு புரிதலை ஏற்படுத்துகிறது.  இலக்கியத்தில் பின்புலம் மிக இன்றியமையாதது என விளக்கும் நீதிவாணன் “கருத்து,பின்புலம், கட்டுக்கோப்பு, கதைமாந்தர் போன்றவையே அப்பகுதினுள் இடம் பெறுவனவாகும் என்பார்” (பின்புலமும் மொழிநடையும், ப.415) எனவே, பாடல் கருத்தினை விளக்க பின்புலமும், கதைமாந்தர் பற்றிய விளக்கமும் இன்றியமையாததாகின்றன.

 

சங்க இலக்கியத்தில் இயற்கையைப் பாடுவதாக தோன்றினாலும்  மனிதனின் காதலைப் பாடுவதே அகப்பாடல்களில் முதன்மையன நோக்கமாக காணப்படுகின்றன. வினைவயிற் சென்ற தலைமகன் தான் மிக விரைந்து வருவதற்கான காரணத்தைக் காதலிக்கு அறிவிக்கும் வகையில் மயில் அசைவில் நின் சாயலை அறிந்தேன்; முல்லை மலரில் நின் கூந்தல் மணத்தை நுகர்ந்தேன்; மான் பர்வையில் நின் மருட்சியைக் கண்டேன் என வழியிடை இயற்கையினை,

“நின்னை  போலும் மஞ்ஞை ஆலநின்.......”(ஐங்-492)என்ற பாடலில் காணலாம்.

ரோமன் யாக்கோப்சன் செய்தியை விளக்குவதற்கு உதவும் கூறுகளாக குறிப்பிடும் ஆறனுள் ஒன்றாகிய சூழல் பற்றி ராபர்ட் ஸ்கால்ஸ் “அது நமக்குத் தேவையான கருத்துக்களை அறிந்து கொள்ள உதவும் பகுதி: கூறவரும் கருத்து எதைப்பற்றியது என்பதை விளக்கும் (Rober Scholes, S-tructuralism in Literature – An Introduction, P.27) தன்னுணர்ச்சிப் பாடல்களின் கட்டமைப்பை விளக்குச் சொல்லும் பவுல் குட்மேன், “கூற்று நிகழ்த்துவோர் ஏதோ சிலவற்றை மரபுபடி குறியீடாக அல்லது மறைமுகமாக நகறும்படியாகச் சொல்கிறார்”.(Paul Goodman, “ The Struture of Literature,” Myth a Symposium, P.191) எனவே இவர்களின் கூற்றுவழி `சூழல்’ என்பது கவிஞர் கூறவரும் கருத்துக்களை அறிந்துகொள்ள கவிஞனால் சுட்டப்பட்ட குறிப்புகளாகும். இக்குறிப்புகள் கதை வெளிப்பாட்டுக்கும் கதையை நகர்த்திச் செல்லும் தன்மைக்கும் துணைப்புரிகின்றது.

சங்கஇலக்கியத்தை அறிந்துகொள்ள கூறுவோர் கேட்போர் பற்றிய புரிதல்களே முக்கியமானதாகும் கூவோரையும், கேட்போரையும் புரிந்து கொள்ளாவிட்டால் பாடக்கருத்தினை முழுமையாகப் பெறமுடியாது. “ஒருவர், பாடலில் பேசுவோர் பலர் யாரிடம் அச்சொற்றொடர்கள் பேசப்படுகின்றன, என்ன சூழ்நிலையில் அவை பேசப்படுகின்றன: கூறவரும் கருத்து ஒரு கனவைக் குறிப்பதா அல்லது கடந்த, நிகழ், எதிர்காலத்தைக் குறிப்பதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இயற்கையாகவே இவ்வெவ்வேறு கருத்துக்களுடன் மரபும் சேர்ந்ததாகிறது  என்பது தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் கருத்தாகும்”.( MeenakshiSundaram, T.P., A History of Tamil Literature P.22) சங்கப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இலக்கியமாகவும் இருக்கின்றன. பாத்திரக் கூற்றுக்களாக அமையும் பாடல்களின் துறைக்குறிப்புகள் கூற்றுச் செயல் சூழலை விளக்குவனவாக உள்ளன. கூறுவோர், கேட்போர் பாடல் பின்புலம் இதனை மையப்படுத்தி சூழல் அமைகின்றது.

சங்க அக இலக்கியத்தில் கூறுவோராக தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பரத்தை முதலியோரும் மேற்கூறப்பட்டவர்களன்றி நெஞ்சு, அறிவர், இணையோர், பாகன், விறலி, கூத்தர், காண்போர் மற்றும் சில அஃறிணைகளும் காணப்படுகின்றன. புறப்பாடல்களில் மன்னன், புலவர், இரவலர், பொருநன், பாணன், இசை கலைஞர்கள், சான்றோர், வீரன், கண்டோர், தாய், மனைவி போன்றோர் கூறுவோராகவும், இவர்களில் மன்னன், பகைவேந்தர்கள், இரவலர், வீரனது தாய், புலையன், இழிசினன், சான்றோர் போன்றோர் கேட்போராகவும் காணப்படுகின்றனர். 

அகப்பாடல்களில் கூறுவோர் கேட்போர் பற்றிய தொடர்பினை கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

தலைவன்      தோழி, தலைவி, பாங்கன், பாணன், பாகன்,  நெஞ்சு முதலியன. 
தலைவி  தலைவன், தோழி, செவிலி, பாணன், வாயில்கள், பொழுது,தன்னுள், பறவை, ஆறு, மலை முதலியன.
தோழி           தலைவன், தலைவி, செவிலி, நற்றாய், பாணன், பரத்தை, தமர், தும்பி, நிலா, தன்னுள் போன்றன.
செவிலி      தோழி, தலைவி, நற்றாய், கண்டோர், சான்றோர்.
பரத்தை      தலைவன், தலைவி, தோழி, பாங்காயினர், பாங்கன், விறலி போன்றோர்.
நற்றாய்      செவிலி, தோழி, தலைவி, நெஞ்சம்.

என்றவாறு கூறுவோர் கேட்போர் பற்றிய தொடர்பினை  குறுந்தொகையின் வாயிலாகக் காணலாம். இத்தொகை நூலில் காணப்படும் கூறுவோர் கேட்போர் பற்றிய தொடர்பினை நேரடிக் கூற்று, மறைவானக் கூற்று வாயிலாக வெளிப்படுத்தலாம்.

நேரடிக்கூற்று: கூறுவோர்      -     கேட்போர் எனவும்
மறைமுகக் கூற்று: 
கூறுவோர் நேரடிக்கேட்போர் + மறைமுக கேட்போர் எனவும் பகுக்கப்பட்டுள்ளன. இதில் கூறுவோர் மறைமுக கேட்போர்க்கு தன் கருத்தை வெளிப்படுத்துவதே நோக்கமாக அமைகின்றது.
கூறுவோர்      ---        கேட்போர்          ---           பாடல் எண்    
தலைவன் தலைவி:    1, 40, 137, 209, 256, 270, 300:             [07]    
தலைவன் நெஞ்சு:     62, 63, 70, 71, 100, 116, 120, 128, 131, 147, 151, 165, 168,                     182, 199, 222, 267, 274, 312, 347, 376         [21]    
தலைவன் தோழி:    14, 17, 32, 56, 99, 142, 173, 276, 337         [09]    
தலைவன்பாங்கன்:   58, 72, 95, 100, 119, 129, 132, 136, 156, 184, 206, 272,           .                                          280, 286, 291 [15]    
தலைவன் தேர்ப்பாகன்:    189, 233, 235, 237. 250, 323, 400         [07]    
தலைவன் முல்லை:          162     [1]    
தலைவன் தலைவி:             49, 107     [02]    
தலைவி  தோழி:    4, 5, 6, 12, 13, 20, 21, 24, 25, 27, 28, 30, 31, 35, 36, 38, 39,       41, 43, 46, 54, 57, 60, 64, 65, 67, 68, 76, 77, 79, 82, 86, 93, 94, 96, 97, 98, 102, 103, 104, 105, 106, 108, 110, 112, 118, 121, 125, 126, 133, 134, 140, 141, 145, 148, 149, 150, 152, 153, 154, 160, 170, 171, 172, 174, 175, 181, 183, 185, 186, 187, 188, 190, 191, 192, 193, 194, 195, 197, 200, 201, 202,203, 205, 207, 208, 216, 218, 220, 221, 223, 224, 226, 228, 231, 234, 240, 241, 243, 245, 249, 252, 254, 257, 259, 264, 266, 269, 271, 278, 279, 281, 283, 285, 288, 289, 290, 293, 299, 301, 302, 307, 310, 313, 314, 315, 316, 318,     319, 322, 325, 329, 330, 334, 340, 341, 344, 352, 360, 361, 368, 371, 377, 385, 386, 387, 391, 395, 398:    [149] 
தலைவி நெஞ்சம்:       19, 29, 91, 122, 155, 157, 305, 306, 401. [09]     
தலைவி  பாங்கன்:    50         [1] 
தலைவி  பொழுது :     92          [1]
தலைவி கடல்:         163        [1]
தலைவி தெய்வம்:    87          [1]
தலைவி  பாணன்:    75          [1]    
தோழி   தலைவன்:    1, 9, 10, 18, 42, 53, 55, 61, 69, 81, 113, 114, 115, 124, 127, 138, 139, 169, 178, 179, 196, 198, 210, 225, 236, 238, 244, 258, 294, 295, 303, 309, 324, 335, 336, 342, 345, 353, 354, 355, 363, 365, 379, 384, 388, 393, 397.    [47]
தோழி   தலைவி: 16, 22, 34, 37, 48, 51, 52, 59, 66, 73, 74, 88, 109, 117, 123, 
130, 135, 143, 146, 166, 176, 177, 180, 211, 212, 213, 215,217,                                       230, 232, 247, 248, 251, 253, 255, 260, 262, 263, 265, 268, 273, 275, 282, 284, 287, 297, 298, 308, 317, 321, 328, 331, 333, 338, 339, 343, 346, 348, 350, 351, 358, 367, 369, 373, 374, 375, 380, 381, 382, 383, 389, 394, 399: [73]    
தோழி   செவிலி:      83, 214, 366  [3]
தோழி  பாணன்:        85, 359 [2]
தோழி பாங்கன்:         45 [1]
தோழி தும்பி:         392 [1]
தோழி கட்டுவிச்சி:     23 [1]
தோழி  அறிவர்:    277[1]
தோழி வேலன்:         362 [1]    
பாங்கன் தலைவன்:     78, 204 [2]      
பரத்தை  பாங்காயினர்: 364, 370 [2]
பரத்தை தலைவி:           80 [1]
கண்டோர்  தலைமக்கள்: 390 [1] 
கண்டோர் செவிலி:     07 [1]
செவிலி நற்றாய்:    167, 242 [2]
செவிலி  தெய்வம்:      378[1]
செவிலி தன்னுள்:     44, 84, 144, 356,[4] 
கண்டோர் தம்முள்:    229 [1]
தாய் தம்முள்:                  396 [1]    

மேற்கொண்ட கூற்றுக்கள் மூலம் பேசுவோர்க்கும் கேட்போருக்குமான தொடர்பு நேரடியாக உள்ளதை காணமுடிகிறது. இவை மட்டுமன்றி மேலும் பல பாடல்களில் நேரடித் தொடர்பன்றி மறைமுகமாக வெளிப்படுத்துவதும் உண்டு. இவை போன்ற பாடல்களில் கூறுவோர் நேரடிக்கேட்போர் + மறைமுக கேட்போர் என மூன்று மாந்தர்களின் தொடர்பைக் காணலாம். குறுந்தொகையில் இத்தகைய பாடல்களும் உள்ளன.

தலைவி தோழி+தலைவன்: 3,161, 219, 239, 246, 261, 296,311, 320, 326, 349 (11)
தோழி தலைவி  + தலைவன்:      90, 111, 159, 227, 292, 332, 357, 372         (8)
தலைவன் பாங்கன் + தலைவி:  101  (1)
தலைவி தோழி + பாணன்:         33  (1)
தோழி  பாங்காயினர் + தலைவன்:     89  (1)
தலைவி ஆறு + தலைவன்:    327 (1)
தலைவி மழை + தலைவன்:    158  (1)
தோழி  தன்னுள் + தலைவன் :    89   (1)
தலைவி  நெஞ்சு + தோழி:              11     (1)
தலைவி பரத்தை + பாங்காயினர்:    8       (1)
தோழி  செவிலி + நற்றாய்:                26     (1)
பரத்தை  தலைவி + பாங்காயினார்:  164   (1)
தோழி   செவிலி + நற்றாய்:            15     (1)
தோழி  நிலா + தலைவன்:                47     (1)

என்றவாறு கூறுவோர் கேட்போர் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் மறைமுக கேட்போருக்கே கருத்தினைப் புலப்படுத்துவது கூறுவோரின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.

தொகுப்புரை:
சங்க இலக்கியம் தன்னுணர்ச்சிப் பாடல்களாகவும், வாய்மொழி கவிதைகளாகவும்  மட்டுமல்லாது கதைக்கூற்றுக் கவிதைகளாகவும் காணப்படுகின்றன என்பது இக்கட்டுரை விளக்குகிறது. சங்க படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் தம் சிந்தனைகளை கதையம்சம் கொண்டதாக அல்லது கதைக்கூறுகளை தாங்கியப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளனர். சங்கஇலக்கியம் கதைப் பாடல்களின் கட்டமைப்புகளைப் போன்று வினை, வினைநிகழ்வு  வரிசைமுறைகள், காரணம், விளைவு போன்றனவும்; கூறுவோர், கேட்போர் பற்றிய பதிவுகளையும் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தை கதைப்பாடல் சார்ந்த விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் போது வழிவழியாக கதை சொல்லும் மரபு இயங்கி வந்தமையை அறிந்துகொள்ளலா

tamildevagsm@gmail.com

*  கட்டுரையாளர் - முனைவர் இரா.தேவேந்திரன், உதவிப்பேராசிரியர்-தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி(தன்னாட்சி), மன்னன்பந்தல், மயிலாடுதுறை. -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard