New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும் - பா.சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும் - பா.சிவக்குமார்
Permalink  
 


சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும்

E-mailPrintPDF

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -காவல்மரம் அல்லது கடிமரம் என்பது பண்டைய தமிழர்களின் குலமரபுச் சின்னம். கடி (காவல்) உடைய மரமாதலால் அதனைக் ‘கடிமரம்’ என்றழைத்துள்ளனர். முதன்முதலாகப் பூமியில் மரம் முப்பத்தியெட்டு (38) கோடி ஆண்டுகளுக்கு முன் டெவோனியன் காலக்கட்டத்தில் (Devonian Period) பாலியோஜிக் ஊழிக் காலத்தில் (Paleozicera) தோன்றியது என அறிவியல் விளம்புகிறது. ஆனால், குலமரபுச் சின்னமாகக் காவல்மரம் எப்பொழுது தோற்றம் பெற்றது ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியே காவல்மரம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என்பது குறித்து அறியமுடியாத அளவிற்குப் பழமைமிக்க ஒன்றாக இக்காவல்மரம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. காவல்மரமாகக் கடம்பு, வேம்பு, மா, வாகை, புன்னை போன்றவற்றைச் சங்கத் தமிழர் கொண்டிருந்தனர். தற்காலத்தில் மாநில, தேசிய மரங்கள் (தமிழ்நாடு - பனைமரம், இந்தியா - ஆலமரம்) என்பது சங்ககாலத்தின் எச்சமாகக் கொள்ளப்படுகிறது.

காவல்மரம் என்பது ஒரே ஒரு மரத்தை மட்டும் குறிப்பதாகப் பல பாடல்களில் பதிவுகள் இருக்கச் சோலைகளில் பல மரங்கள் காவல்மரங்களாகப் போற்றப்பட்டுள்ளமையை,

“…………………காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்”            (புறம்.36:8-9)

என்னும் புறப்பாடல் வெளிப்படுத்துகின்றது. எனவே, ஓரினத்தைச் சேர்ந்த பல மரங்களைச் சோலைகளில் காவல்மரங்களாகப் போற்றியிருக்க வேண்டும். அல்லது, பலஇனத்தைச் சேர்ந்த மரங்கள் காவல் மரங்களாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். சேர அரச மரபானது பல குடிகளைக் கொண்டிருந்தது. இதனைச் சேரர்கள், “உதியன், கடுங்கோ, குடக்கோ, குட்டுவன், கோதை, சேரலன், சேரல், சேரமான், பூழியர் முதலிய குடிப்பெயர்களைக் கொண்டிருந்தனர்” என்று               ஆ. தனஞ்செயன் குறிப்பிடுவார். எனவே, ஒவ்வொரு குடிக்கும் உரிய காவல்மரங்களையும் ஒரே சோலையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என அவதானிக்கலாம். சங்ககாலத்தில் காவல்மரம் குறித்த மக்களின் நம்பிக்கையும் அரசாதிக்கத்தின் பொருட்டு அக்காவல் மரம் அழிக்கப்பட்டமை குறித்தும் இக்கட்டுரை ஆய்கிறது.

காவல்மரமும் மக்களின் நம்பிக்கையும்
காவல்மரத்தினைச் சங்ககால மக்கள் அவர்களின் குலக்குறியாகப் போற்றியுள்ளனர். ஒரு இனக்குழு தம் மூதாதையருடன் உறவு வைத்துக் கொள்ளும் அஃறிணை யாவும் குலக்குறியாகக் கருதப்படும். “குலக்குறியியல் பற்றி விளக்கம் அளிப்போர், ‘தாவரங்கள்,விலங்குகள், சடப்பொருட்கள் ஆகியவற்றோடு தனிமனிதரோ ஒரு வர்க்கத்தினரோ கொண்டிருக்கும் குறியீட்டுத் தொடர்பினைக் குறிக்கும் சொல்தான் குலக்குறியியல்’ என்றும், ‘உறவுமுறையின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழும் மக்களுக்கும், தாவர வகைகள், விலங்கினங்கள், இயற்கை பொருட்கள் போன்றவற்றிற்கும் இடையில் ஒருவகைப் புதிரான தொடர்பு நிலவுகிறது என்பது பற்றிய நம்பிக்கையே குலக்குறியியல்’ என்றும் விளக்குவர் (ஆ. தனஞ்செயன்,1996:2)” இத்தகைய குலக்குறியாகக் காவல்மரம் விளங்கியுள்ளது. எனவேதான், அம்மரங்களை வீரர்கள் இரவு, பகல் என்று இருவேளைகளிலும் காவல் காத்துள்ளனர். காவல்மரம் ஒரு இனத்தின் குலக்குறியீடாகக் கருதப்பட்டிருந்த நிலையில், இனக்குழுத் தலைவன், அரசர் என்ற அதிகாரப் படிநிலை உருவாக்கம் பெற்ற போது, அக்காவல் மரத்தினைப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. பின்னாளில் அது வீரத்தின் அடையாளமாகவும், மானத்தின் குறியீடாகவும் மாற்றம் பெற்றது. ‘குறிநாசம் குலநாசம்’ என்னும் நம்பிக்கை சங்ககால மக்களிடம் இருந்துள்ளது. காவல்மரத்திற்குத் தீங்கு ஏற்பட்டால் தன் குலத்திற்குத் தீங்கு ஏற்படும் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காவல்மரத்தின் பூ, கனி என்ற அனைத்தும் புனிதமாக்கப்பட்டது.  காவல்மரத்தினை வெட்டிவீழ்த்துவது அம்மரத்துக்குரிய அரசன் தோல்வியைத் தழுவியதற்குச் சமம். அது பேரவமானத்துக்குரியதாகவும் கருதப்பட்டது. காவல்மரமானது ஒரு இனக்குழுவின் குலக்குறியாகவும், ஒருஅரசனின் வீரம், மற்றும் மானத்திற்கு அடையாளமாகவும், கடவுள் தன்மை பொருந்தியதாகவும் மக்கள் மற்றும் அரசரிடையே நம்பிக்கை இருந்துள்ளமையையும் அந்நம்பிக்கையினால் அதனைக் காவல் காத்து வந்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும்
அரசாதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டுப் பகை அரசர் மீது போர் தொடுக்கும் அரசர்கள், குலமரபுச் சின்னமாகப் போற்றப்படும் காவல்மரத்தில் யானையைக் கட்டிவைத்தல், அம்மரத்தினை வெட்டி யானைக்குக் கட்டுத்தறியாகப் பயன்படுத்துதல், வீரமுரசு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். 

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் படைகள் பகைமன்னரின் நாட்டைப் பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டிருந்த போது, பகைமன்னரின் காவல்மரங்களில் யானையைக் கட்டிவைத்து அம்மன்னனை அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் (ப.ப. 33:2-6). இதேபோன்று நன்னனின் காவல் மரத்தில் கோசர்கள் அகவன் மகளிர் துணையுடன் யானையைக் கட்டி வைத்துள்ளனர் (குறுந். 298:5-8). இங்கு பகைமன்னரின் யானைகள் காவல்மரத்தில் கட்டப்படுதல் என்பது ஒருவருக்கு உரிமையுடைய புனிதப் பொருளை மற்றவர் இழிவுபடுத்துதல் வகையைச் சார்ந்ததாகும். மேலும், இத்திட்டத்தின் வாயிலாகக் காவல்மரத்தை வேரோடு சாய்ப்பதையும் நோக்கமாகக் கொண்டும் செயல்படுவர் எனலாம். 

பகைவரது காவல் மரத்தினை வெட்டி அம்மரத்தினை யானைக்குக் கட்டுத்தறியாகப் பயன்படுத்தியுள்ளமையை,
“கடிமரத் தடித லோம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே”        (புறம்.57:10-11)

என்ற புறப்பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

திதியனின் குறுக்கை என்னும் ஊரில் ‘அன்னி’ என்பவனோடு நடைபெற்ற போரில் திதியனின் காவல்மரமாகிய புன்னை மரத்தை அன்னி வெட்டி வீழ்த்தியதை,

“அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப்
புன்னை குறைத்த ஞான்றை……………”        (அகம்.45:9-11)

என்னும் பாடல்வரிகளின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும், இதே செய்தியினை அகம். 126, 145, நற். 180ஆவது பாடல்களில் காணமுடிகின்றது. காவல்மரம் வெட்டப்பட்டவுடன் வேந்தர்களின் பகையும் முடிவு பெற்றுள்ளதைக் காணும் போது காவல்மரத்தை வீழ்த்துதல் மன்னனனை வீழ்த்தியதற்குச் சமம் என்பதனையும் உணரமுடிகின்றது.

பகைவர்கள் பலரால் இக்காவல் மரம் காக்கப்பட்டுள்ளமையையும் அக்காவலை எல்லாம் தகர்த்து அக்காவல்மரத்தை வெட்டி முரசு செய்யப்பட்டுள்ளமையையும் ப.ப. 11:12-16 பாடல் வெளிப்படுத்துகின்றது. நெடுஞ்சேரலாதன் கடம்பர்களின் காவல்மரத்தினை வெட்டி முரசு செய்துள்ளமையை ப.ப. 12:1-3, 17:4-5, 20:3-5, அகம். 127:3-4, 347:3-5 போன்ற பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது.

மோகூர் மன்னன் பழையனின் காவல்மரமாகிய வேம்பினைச் சேரன் செங்குட்டுவன் வெட்டி முரசு செய்வதற்காகச் சிறுசிறு துண்டுகளாகத் தறித்து யானைகள் பூட்டிய வண்டியில் ஏற்றியதை,

“………………… வேம்புமுத றடிந்து
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி”        (ப.ப.44:15-16)

என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் காவல்மரம் ஒரு மன்னனின் குலமரபுச் சின்னமாகவும், மானம், வீரத்தின் அடையாளமாகவும், கடவுள் தன்மை உள்ளதாகவும் சங்ககால மக்கள் நம்பினர். அவற்றினைச் சிதைக்கும் வகையில் பகைமன்னர்கள் காவல்மரத்தில் யானையினைக் கட்டுவதும், வெட்டி முறிப்பதும் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. ஒரு குலத்தின் குலக்குறியாக உள்ள காவல்மரத்தை அழிப்பதன் வழி அக்குலத்தையே கருவறுத்தல் என்ற நம்பிக்கையின் பேரில் காவல்மரம் அழித்தலில் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும், குலமரபுச் சின்னத்தைக் காக்கும் படை மறவர்களுக்கும் அதனை அழிக்க நினைக்கும் பகை மன்னரின் படைமறவர்களுக்குமிடையே மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்த பின்னரே காவல்மரம் வெட்டப்படுவதனையும் காணலாம்.

துனண நின்றவை
1.    சோமசுந்தரனார், பொ.வே.,  , (உ.ஆ.), குறுந்தொகை, கழக வெளியீடு, 2007
2.    நாராயணசாமி ஐயர், பின்னத்தூர் திரு.அ., (உ.ஆ.), நற்றிணை, கழக வெளியீடு, 2009
3.    தனஞ்செயன், ஆ., சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், 2010
4.    துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு. (உ.ஆ.), பதிற்றுப்பத்து, கழக வெளியீடு, 2010
5.    துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு. (உ.ஆ.), புறநானூறு, பகுதி 1&2,கழக வெளியீடு, 2007
6.    வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., (உ.ஆ.), அகநானூறு, களிற்றுயானை நிரை, கழக வெளியீடு, 2009

sivasivatamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard