New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்- சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்- சு.ஜெனிபர்
Permalink  
 


முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சியில் இடம் பெறும் சமுதாயநெறிகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் முதுமொழிக்காஞ்சி
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.முதுமொழி,முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.”காஞ்சி தானே பெருந்திணைப் புறனே” (தொல்.பொருள் புறம்.22) என்பது தொல்காப்பியம்;.இவ்விரு சொற்களால் குறிப்பிடப்படும் இந்நூல் நிலையாமை குறித்தோ,பழமொழியைப் பெற்றோ அமையவில்லை.மாறாக உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச் சுட்டும் ஆசிரியர்,

“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று”

என்று விளக்குகிறார்.அதாவது உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமமக்கள் எடுத்துயம்புவது என்பது இந்நூற்பாவிற்குரிய விளக்கமாகும்.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக்கோவை ஆகும்.பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இந்நூலின் குறள் வெண்செந்துறைகள் அமைகின்றன.அதாவது முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.நூற்சேர் முதுமொழிக்காஞ்சி என்ற பிரபந்த தீபிகைக் குறிப்பினால்,இந்நூல் நூறு எண்ணிக்கையுடையது என்பது பெறப்படுகிறது.இந்நூலில் பத்துப்பத்து முதுமொழிகளாக அமைந்துள்ளன.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் எனத் தொடங்கி பத்துக் கருத்துக்கள் கொண்ட குறள் எல்லாம் எனத் தொடங்கி பத்துக் கருத்துக்கள் கொண்ட குறள் வெண்செந்துறைகளால் இந்நூல் அமைந்துள்ளது.அவைவருமாறு:-சிறந்த பத்து,அறிவுப் பத்து, பழியாப் பத்து,துவ்வாப்பத்து,அல்லபத்து,இல்லைப்பத்து,பொய்ப்பத்து,எளியபத்து,
நல்கூர்ந்த பத்து,தண்டாப் பத்து முதலியனவாகும். 

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

“தனிமனிதனையும் (iனெiஎனைரயடள) பல்வேறு அமைப்புக்களையும், நிறுவனங்களையும், குழுக்களையும் துணைக்குழுக்களையும் தன்னகத்தே கொண்ட ஓர் அமைப்பாகச் சமுதாயம் விளங்குகிறது” என்றும், “ஒரு சமுதாயமானது தனிப்பட்டவர்களின் கட்டமைப்பு, உரிமை மற்றும் ஒற்றுமைஉணர்வு, ஏகதேசம், நிரந்தர இயல்பு முதலான சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளதெனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்” என்று சமுதாயத்திற்கு பி.சி. டெப் விளக்கமளிப்பதாக தா. ஈசுவரப்;பிள்ளை குறிப்பிடுகிறார்;. (பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை.ப-10)

ஒழுக்கம்
ஓழுக்கமுடையவனாக வாழ்வதே சிறந்த பண்பு ஆகும்.கற்றலைக் காட்டிலும் ஒழுக்கமுடைமையே சிறந்தது ஆகும் என்று மதுரைக் கூடலூர் கிழார் எடுத்துரைக்கிறார்.இதனை,

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஓழுக்கம் உடைமை  (சிற.பத்.1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.இதன் மூலம் ஒருவருக்கு கல்வியைக் காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது என்பது புலப்படுகிறது.

மதிக்கும் படி நட
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பிறர் மதிக்கும் படி வாழ வேண்டும்.முதுமொழிக் காஞ்சியிலும் இக்கருத்து இடம்பெறுகிறது.இதனை,
காதலின் சிறந்தன்று கண் அஞ்சப் படுதல்  (சிற.பத்.2)
என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

வாய்மை
வாய்மை என்பதற்கு கௌரா தமிழ் அகராதி மெய்,சொல்,வலி,உண்மை என்று 
வாய்மை பற்றிய கருத்துக்களை மூன்று (4,24,36) பாடல்களில் பதிவுச்செய்துள்ளார்.வளமைமிக்க செல்வ வாழ்கையை விடப் பொய்யில்லாத உண்மை வாழ்க்கையே சிறந்ததாகும் என்று மதுரைக்கூடலூர் கிழார் குறிப்பிடுகிறார்.இதனை,
வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை  (சிற.பத்.4)
என்ற பாடலடி சுட்டுகிறது.

நாணம்
நாணம் என்பதற்கு அச்சம்,அடக்கம்,மதிப்பு,வெட்கம்,பயப்பக்தி,மானம்,தணிகை என்று பல்வேறு விளக்கமளிக்கிறது.(ப.459)
நாணம் தொடர்புடைய கருத்துக்கள் முதுமொழிக்காஞ்சியில் 2 பாடல்கள் (6,43) இடம்பெறுகின்றன.
அழகுடன் இருப்பதைக் காட்டிலும் நாணத்துடன் இருப்பது சிறந்தது.இதனை,

நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று    (சிற.பத்.6)

என்ற பாடலடி மூலம் மதுரைக்கூடலூர் கிழார் எடுத்துரைத்துள்ளார்.வள்ளுவரும் நலன் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960) என்று குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.

கல்வி
தமிழ் - தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு  அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு,“எஜிகேஸன்”  என்று பொருள் கூறுகிறது.(ப.266)
குலத்தைக் காட்டிலும் ஒருவர்க்கு கல்வியுடைமையே சிறந்தது என்கிறார்.இதனை,

குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று   (சிற.பத்.7)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக திருவள்ளுவரும் ஒரு குறளில் எடுத்துரைத்துள்ளார்.இதனை,

மேற்பிறந் தாராயினும் கல்லாதார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலார் பாடு  (409)

என்ற குறளில் சுட்டுகிறார்.

கற்றவரை வழிப்படுதல் வேண்டும்
கல்வி கற்பதை விட கற்றாரை வழிப்படுதல் சிறந்தது ஆகும்.இதனை

கற்றலின் கற்றாரை வழிப்படுதல் சிறந்தன்று  (சிறந்.பத்.8)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் ஒன்றனைக் கற்பதற்கு விரும்புகின்றவன் ஆசிரியர்களுக்கு செய்யும் வழிபாடுகளைத் தவிரக் கூடாது என்பதை,
கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்    (தண்டாப்.ப.3)
என்ற பாடலடி உணர்த்துகிறது.

நட்பு
நட்பு என்பதற்கு கௌரா தமிழ் அகராதி நண்பு,சுற்றம்,கேள்,தொடர்பு,யாழின் நான்காம் நரம்பு,கேண்மை,காதல் என்று பல்வேறு விளக்கம் அளிக்கிறது. ( ப.453)
நட்பு பற்றியச் செய்திகள் 6 பாடல்களில்(13,37,44,45,55,83) இடம்பெறுகின்றன.

நெகிழாத உயர்ந்த நட்புடைமையே உதவியினால் அறியலாம்.இதனை,
சோராநல் நட்பு உதவியின் அறிப  (அறி.3)

என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் ஒருவனிடம் நட்பு கொள்ளும் போது அவரிடம் இரக்கக் குணம் இருக்க வேண்டும்.மேலும் நட்பு கொண்டு பின்பு அவன் மேல் கண்ணோட்டம் இல்லாமலிருப்பது கொடுமை செய்யும் செயலாகும்.இதனை,

கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது  (துவ்.பத்.7)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் நட்பில்லாதவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாது. என்கிறார் இதனை,

நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று    (நல்கூர்ந்த.பத்.10)

என்ற பாடலடியில் குறிப்பிடுகிறார்.

ஈகை செய்
இல்லாத ஒருவர்க்கு இருப்பவர் கொடுத்துதவும் பாங்கே ஈகை எனப்படும்.ஈகை பற்றிய செய்திகள் 6 பாடல்கள் முதுமொழிக்காஞ்சியில் எடுத்துரைக்கின்றன.அறவழியில் மட்டுமே ஈகை செய்ய வேண்டும் என்கிறது இந்நூல்.இதனை,

அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று  (அல்ல.பத்து.8)    

என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் விருப்பத்துடன் தான் ஈகை செய்ய வேண்டும் விருப்பம் இல்லாமல் ஈகை செய்யக்கூடாது என்று எடுத்துரைக்கிறார் இதனை,

பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது  (துவ்.பத்.4)

என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் வறியவர்க்கு ஒன்று ஈவதை விடச் சிறப்பு இல்லை என்கிறார் இதனை,

இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை   (இல்லை.பத்.10)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

தன்னை மேம்படுத்திக் கொள்
பகைவரை உறுத்தலைப் பார்க்கிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல் சிறந்தாகும்.
செற்றாரைச் செறுத்திலின்  தற்செய்கை சிறந்தன்று  (சிற.பத்.9)
என்ற பாடலடி சுட்டுகிறது.

உதவி செய்யும் உறவினரைப் பழித்துரைக்க கூடாது
தமக்கு  உதவி செய்யும் உறவினர் உதவி செய்யவில்லை என்று பழித்துரைக்க கூடாது.இதனை,
செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார் (பழி.பத்.7)
என்ற பாடலடி புலப்படுகிறது.

வஞ்சனை உடையவராக இருக்க கூடாது
ஒருவர் வஞ்சனை உடையவராக இருக்க கூடாது.அப்படி இருந்தால் அவன் கள்வனாவதற்கு வழிவகுக்கும்.இதனை,
சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப  (அறி.பத்.7)
என்ற பாடலடி சுட்டுகிறது.

சொல்லில் தளர்ச்சி இருக்கக் கூடாது
ஒருவனது சொல்லில் ஏற்படும் தளர்ச்சியைக் கொண்டு அவனது எல்லாச் சோர்வையும் அறியலாம்.இதனை,
சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப  (அறி.பத்.8)
என்ற பாடலடி உணர்த்துகிறது.இதன் மூலம் ஒருவனுக்கு சொல்லில் தளர்ச்சி இருக்கக் கூடாது என்பதை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

புகழ்
உலகத்தில் ஒருவன் சேர்த்து வைக்கக்கூடியது புகழ் ஆகும்.இதனை,
இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை (இல்.பத்.8)
என்ற பாடலடி விளக்குகிறது.மேலும் மற்றொரு பாடலில் நற்செயல்களை செய்பவன் புகழ் பெறுவான் என்ற கருத்தை ஆசிரியர் பதிவுச்செய்துள்ளார்.இதனை,
வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான் (தண்.பத்.2)
என்ற பாடலடி உணர்த்துகிறது.

அன்பு
தொடர்புடையார் மாட்டு கொள்ளும் பற்று அன்பு ஆகும்.அன்பின் மூலம் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.இதனை,
பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது  (துவ்.6)
என்ற பாடலடி புலப்படுகிறது.

வறியவனைப் பழிக்கக் கூடாது
வறியவனை வள்ளல் தன்மை உடையவன் என்று பழித்துரைக்க மாட்டார்கள் கற்றவர்கள்.அது போல் பிறரும் அவர்களை பழிக்கக் கூடாது என்ற கருத்தை பதிவுச் செய்துள்ளது.
வறியோன் வள்ளியின் அன்மை பழியார்   (பழி.பத்.9)
என்ற பாடலடி உணர்த்துகிறது.

அரசு
செங்கோல் இல்லாத அரசரது நாட்டில் இருந்து கொண்டு அவ்வரசனது கொடுங்கோன்மையை  பழித்துச் சொல்லக் கூடாது.இதனை,
முறைஇல் அரசர் நாட்டு இருந்து பழியார்        (பழியா.ப.6)
என்ற பாடலடி குறிப்பிடுகிறது.இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வள்ளுவரும்,

கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து            (குறள்.551)
என்ற குறளின் வழி அறியமுடிகிறது.

கோபம் கொள்ளக் கூடாது
மதிப்பில்லாதவரிடத்து கொள்ளும் கோபம் பயன்தராது என்கிறார் மதுரைக் கூடலூர் கிழார்.இதனை,
உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று      (நல்கூர்ந்த.பத்.9)
என்ற பாடலடி உணர்த்துகிறது.இதன் மூலம் மதிப்பில்லாதவர்களிடம் கோபம் கொள்ளும் போது பயன்தராது என்பது புலப்படுகிறது.

முடிவுரை
இக்கட்டுரையின் வாயிலாக சங்க மருவிய காலத்தில் வாழ்ந்த மக்களின் நெறிகளை அறியமுடிகிறது. துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009.
3.மணிக்கவாசகன், ஞா                சிறுபஞ்சமூலம் உமா பதிப்பகம் சென்னை -600017 முதற்பதிப்பு -2009 திருக்குறள் தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
5.நாராயண வேலுப்பிள்ளை,எம்        முதுமொழிக்காஞ்சி கலைஞன் பதிப்பகம் சென்னை -600017பதிப்பு -1989
6.மாணிக்க வாசகன, ஞா  நாலடியார்  உமா பதிப்பகம் சென்னை -600001 முதற்பதிப்பு -1993
7.    பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)       நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு  சென்னை -600017 முதற்பதிப்பு -2014
8.    முத்துராமன், ஆ                    வாழ்வியல் சிந்தனைகள்  மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2006
9.    அகராதிகள்                      கழக அகராதி  தமிழ் -தமிழ் அகர முதலி  மதுரை தமிழ் அகராதி         

jenifersundararajan@gmail.com

 

* கட்டுரையாளர் -     சு.ஜெனிபர்,  தமிழியல் துறை  முனைவர் பட்ட ஆய்வாளர்   பாரதிதாசன் பல்கலைக்கழகம்   திருச்சி -24



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard