New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள்

E-mailPrintPDF

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.இந்நுல்களை அற நூல்கள், நீதி நூல்கள் எனவும் குறிப்பிடலாம்.இக்காலக் கட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்தனர் அதனால் இக்காலம் இருண்டக் காலம் என வழங்கப்படுகிறது.இதற்கு இருண்ட கால இலக்கியங்கள் என்ற பெயரும் உண்டு.இந்நூல்கள் அறம்,அகம்,புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அற நூல் பதினொன்று,புற நூல் ஒன்று,அக நூல் ஆறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இன்னா நாற்பது விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 41 பாடல்கள் இயற்றியுள்ளார்.சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இச்செயல்களை செய்தால் துன்பம் தரும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.இதில் 164 இன்னாச் செயல்கள் உள்ளன.இந்நூலில் இடம் பெறும் சமுதாய நெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
மதுரை தமிழ் அகராதி சமுதாயம் என்பதற்கு கூட்டம்,சங்கம்,பின்னணி,ஊர்ப் பொது,மக்களின்திரள்,பொருளின்திரள்,பொதுவானது,பொதுவாகவேனும்,அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து,சபை,அவைக்களம்  என்று பொருள் விளக்கம் அளிக்கிறது.மேலும் செந்தமிழ் அகராதி மக்களின் திரள்,பொதுவானது எனப் பொருள் உரைக்கிறது.பேராசிரியர் காளிமுத்து அவர்கள் வளர்தமிழில் அறிவியல் அறிவியலும் சமுதாயம் என்ற நூலில் சமுதாயம் என்பது உறவுடன் கூடிய மக்களின் வாழ்க்கைத்தளம் என்றும் உலகில் தோன்றிய இனங்களில் ஒன்று மனித இனம் இவ்வினம் ஆறாவது அறிவைப் பெற்று தனக்காக சிலவற்றைத் தேடி அவற்றுடன் சார்ந்து வாழும் நிலையே சமுதாயம் என்று குறிப்பிடுகிறார்.

கல்வி 
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’என்பதாகும்.கல்லுதல் என்றால் தோண்டுதல் மனத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்ப வல்லது கல்வி. இக்கல்வியின் பயனாக ஒருவன் இயைந்த முழுவளர்ச்சியினையும் பெறுகிறான் இன்னாநாற்பதில் கல்விப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

நற்குடியிற் பிறந்தவன் கல்லாமல் இருப்பது துன்பம் தரும் என்று கபிலர் குறிப்பிடுகிறார் இதனை,
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா  (இன்.நா.20:1)

என்ற பாடலடியின் மூலம் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அதாவது நற்குடியிற் பிறந்தவர்கள் கல்வியைக் கண்டிப்பாக கற்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.மற்றொரு பாடலில் கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் துன்பம் படுவான் என்பதை,

ஆன்றவிந்த சான்றோட் பேதை புகலின்னா  (இன்.நா.18:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் எண்ணூல் பயிலாமல் இருப்பவன்  கணக்கு இயற்றும் போது துன்பம் அடைவான் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார் இதனை

‘…………………………………வாங்கின்னா
எண்ணிலான் செய்யும் கணக்கு’       (இன்.17:3:4) என்ற பாடலடிகள்  குறிப்பிடுகிறது. 

கல்வியறிவுடையோர் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும்
ஒருவர் அடக்க உடையவராக இருப்பதே நல்ல குணம் ஆகும். வள்ளுவரும் அடக்கமுடைமை என்றொரு அதிகாரத்தை தனியே வைத்துள்ளார்.அடக்கம் ஒருவரை தேவர் உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது ஆகும்.இதனை வள்ளுவர்,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்           (குறள்.121)

என்ற குறளில் தெளிவுபடுத்தியுள்ளார்.இத்தகையே மேன்மையே உண்டாக்கும் அடக்கம் கல்வியுடையோரிடம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதை

‘ஆங்கின்னா
அடக்க அடக்காதார் சொல்’       (இன்.நா.41:3-4)

என்ற பாடலடியில்  இந்நூல் ஆசிரியர்  தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்லாதவர்
கல்வி செல்வமே சிறந்த செல்வம் ஆகும்.இ;க்காலக் கட்டத்திலும் இச்செல்வத்தைப் பெறாதவர்கள் துன்ப நிலையே அடைகிறார்கள் என்பதை சமுதாயத்தை நோக்கும் போது புலப்படுகிறது.இந்நூலும் கல்லாதவர் பற்றிய செய்தியை எடுத்துரைக்கிறது.கல்லாதவர் கூறும் செயலின் பயன் துன்பம் நிறைந்தாக அமையும் என்பதை,

‘ கல்லாருரைக்கும் கருமப் பொருளின்னா’(இன்.நா.16)

என்ற பாடலடியில் புலப்படுகிறது.

அறிவுடையோர் இல்லாத இடத்தில் செய்யுளை இயற்ற கூடாது
பாட்டின் பொருளை அறியும் அறிவுடையோர் இல்லாத இடத்தில் செய்யுளை இயற்றக்கூடாது என்றும் மீறி இயற்றினால் துன்பத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,

‘பொருளுணர்வார் இல் வழி பாட்டுரைத்தல் இன்னா’(இன்.நா.11:1) 

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

நூற்பொருளை அறிந்திருக்க வேண்டும்
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மக்களும்  நுனிப் புல் மேய்வது போல நூலைப் படிக்க கூடாது.நூலின் பொருளை அறிந்திருப்பதே சிறந்த நெறி ஆகும்.இந்நெறி அறியப்படாமல் இருத்தல்  துன்பத்தை விளைவிக்கும் என்பதை,

அறியான் வினாப் படுத லின்னா வாங்கின்னா    (இன்.நா.38:3)

என்ற பாடலடியால் அறியலாம்.

சொல்லின் பொருள்
கல்லாதவர் விலங்கிற்கு சமம்  என்று வள்ளுவர் இயம்பியுள்ளார் இக்கருத்து இங்கு நோக்க தக்கதாகும்.(410)அதாவது விலங்கிற்கு சமமானவர்களால் நல்ல சொல் பேசமுடியாது என்பதே கருத்து. கல்வி அறிவில்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பம் என்பதை, 

‘கல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா”(இன்.நா.29:1)

என்ற பாடலடியால் அறியலாம்.

கற்றவர் அவை
கற்றவர் சபையில் பேசாமல் இருப்பதே சிறந்தது.இதனை வள்ளுவர் 

கல்லாதவரும் நனிநல்லார் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்  (403) 

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார். இக்கருத்தையே இன்னா நாற்பதும் இயம்புகிறது இதனை

………………………….வாங்கின்னா
கல்லாதவன் கோட்டி கொளல்  (இன்.நா.29)

என்ற பாடலடியில் கற்றவரவையில் கல்லாதவன் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவதை அறியமுடிகிறது.

நூல்களை விரும்பி கற்க வேண்டும்
சீரிய நூல்களை விரும்பி கல்லாதவர்க்கு துன்பம் ஏற்படும் என்பதை,

விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா   (இன்.நா.35:1)

என்ற பாடலடியின் மூலம் சமுதாயத்தில் வாழும் மக்கள் நூல்களை விரும்பி கற்க வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது. ஓளவையாரும் நூல் பல கல் என்று குறிப்பிட்டுள்ள கருத்து இங்கு நோக்க தக்க ஒன்றாகும்.

வழி
மக்கள் எந்த நேர
த்தில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை இந்நூல் இயம்புகிறது.இதனை 3 (18,31,13)பாடல்களில் குறிப்பிடுகிறார்.
இருளாக இருக்கும் போது காட்டு வழியில் தனியாக செல்ல கூடாது என்பதை, இதனை,

மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா  (இன்.நா.18:2)

கடும் புலி வாழு மதர்                 (இன்.நா.31)

தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா      (இன்.நா.13:1)

என்ற பாடலடிகள் சுட்டுகிறது.

ஈகை
பிறருக்கு கொடுத்து உதவும் தன்மையே ஈகை எனப்படுகிறது பிறர்க்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டவுடன் மனம் இரங்கி ஈயும் தன்மையுடையவர்கள் உண்மையில் பெரிதும் போற்றுதலுக்கு உரியவராவர்கள். ஈகையை பற்றி வள்ளுவர் குறிப்பிட்டிருப்பதை,

வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து  (குறள்.221)

என்ற குறளின் வழி அறியலாம்.இன்னா நாற்பதிலும் ஈகை பற்றிய செய்திகள்(10,11,22,40) இடம்பெறுகின்றன.இதனை,

கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா      (இன்.நா.40:1)
ஈத்த வகையா லுவவா தார்க் கீப்பின்னா            (இன்.நா.22:1)
வண்மை யிலாளர் வனப்பின்னா ஆங்கின்னா          (இன்.நா.10:1)
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா         (இன்.நா.10:2)
………………………………..இன்னா
பொருளில்லா வண்மை புரிவு                    (இன்.நா.10:3-4)
அருளில்லார் தங்கண் செலவின்னா இன்னா          (இன்.நா.11:3)

என்ற பாடலடிகள் கைப் பொருள் இல்லாதவர்களால் செய்யும் ஈகை துன்பம் ,கொடுக்கும் அளவில் வாங்குபவர் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஒருவருக்கு ஈகை குணம் ஒருவருக்கு அழகைத் தரும், வள்ளல் குணம் ஒருவருக்கு இருக்க வேண்டும், வள்ளல்கள் இல்லாதிருந்தால் பரிசில் பெறும் பரிசிலர்க்குப் பெரிதும் துன்பம்,வறுமையுடைவர் மற்றவர்க்கு ஈகை செய்யும் நினைக்கும் வள்ளல் தன்மை பெரிதும் துன்பத்தை தரும்,பொருளில்லாதவர் ஈகை செய்ய விரும்பக் கூடாது,அருள் இல்லாதவரிடம் பொருளை வாங்க கூடாது, பிறருக்கு உதவி புரிதல் துன்பம் ஆகும்.

ஊன் உண்ணாமை
இந்நூலில் ஊன் குறித்த செய்திகள் 2  இடங்களில்(2,23,) 3கருத்துக்களாக இடம்பெறுகின்றன.துறவோர் வீட்டில் இருந்து கொண்டு ஊன் உண்ணக் கூடாது,பிறிதோர் உயிரின் ஊனை உண்டு தம்மை வளர்த்துக் கொள்ளுதல் துன்பம். இவ்வுணவை விரும்பி உண்ணுவது (மக்கள்) உயிர்க்கு துன்பமாகும் என்று இந்நூல் எடுத்துரைக்கின்றன.இதனை

அந்தண ரில்லிருந்து தூணின்னா வாங்கின்னா  (இன்.நா.2:3)
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா  (இன்.நா.23)
புலையுள்ளி வாழ்த லுயிர்க் கின்னா (இன்.நா.13:3)

என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது.

நடுநிலைமை
வள்ளுவர் நடுநிலைமை
 என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார்.இன்னா நாற்பதிலும் நடுநிலைமைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.ஞாயிறு போன்று நடுவு நிலைமைப் பண்பினைப் பெறாதவன் துன்பம் அடைவான் என்பதை,

பகல் போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா  (இன்.நா.9)

என்ற பாடலடி நடுநிலைமையை ஞாயிறுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.மேலும் மற்றொரு பாடல் நடுநிலைமையில்லாதவரின் வாய்ச்சொல்லும் துன்பத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,

………………………………….வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்   (இன்.நா.7.3:4)

என்ற பாடலடிகள் தெளிவுப்படுத்துகிறது.

பெண்
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.இத்தகைய பெண் நாணத்துடன் இருக்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர்  குறிப்பிடுகிறார்.இதனை

நலத்தகையார் நாணாமை யின்னா வாங்கின்னா  (இன்.நா.20:3)

என்ற பாடலடியின் வழி அறியமுடிகிறது.

வஞ்சித்து ஒழுகுதல் கூடாது
குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடைய மகளிர் வஞ்சித்து ஒழுகுதல் துன்பம் ஆகும்.இதனை,

வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா     (இன்.நா.15) 

என்ற பாடலடியின் வழி அறியமுடிகிறது.

இல்வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையே இல்வாழ்க்கை ஆகும்.இந்த இல்வாழ்க்கை ஆனது சுற்றத்துடன் தான் இருக்க வேண்டும் என்று இந்நூல் நவில்கிறது.இதனை

பந்தமில் லாத மனையின் வனப்பின்னா   (இன்.நா.2:1)

என்ற பாடலடியின் மூலம் அறியமுடிகிறது.மேலும் மற்றொரு பாடலில் இல்லறவாழ்க்கையில் கணவன் உளம் பொருந்துதல் இல்லாத மனைவின் தோளைக் கணவன் சேர்தல் துன்பத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறது.இதனை,

‘உடம்பாடு இல்லாத மனைவிதோ ளின்னா’(இன்.நா.12:1) 

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

தாயைக் காப்பற்ற வேண்டும்
தாய் என்ற சொல்லிற்கு செந்தமிழ் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி அருகு போல் தழைத்து ஆல் போல் வேரூன்றி,பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள முதல்நிதி (396)என்று பொருள் தருகிறது.தாய்மையின் சிறப்பை பற்றி அளவிட்டு கூறமுடியாது.தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்நூல் இயம்புகிறது.இதனை,

………………………..வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்   (இன்.நா.18:3-4)

என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது.

சினம் கொள்ளாமை
வள்ளுவர் வெகுளாமை என்ற அதிகாரத்தை வகுத்து சினம் கொள்ளாமைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.இதனைப் பற்றிய செய்திகள் இந்நூலிலும் இடம்பெறுகிறது.செல்வம் உடையவர் மேல் கோபம் கொள்ளக் கூடாது மீறி கோபம் கொண்டால் மிகுந்த துன்பத்தை ஏற்படும் என்பதை,

திருவுடை யாரைச் செறலின்னா      (இன்.நா.5:1)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.மேலும் மற்றொரு பாடலில் அஃறிணை விலங்கான யானை கோபத்துடன் இருக்கும் போது அதன் முன் நிற்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மை
உழவு என்ற அதிகாரத்தை வகுத்து வேளாண்மைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.உழவர்கள் எருதுகளை வைத்து தான் உழவுத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

எருதில் உழவர்க்கு போ(கு) ஈரம் இன்னா   (இன்.நா.5)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.மேலும் மற்றொரு பாடலில் நல்ல விதைகள் விதைத்தாலும் சில சமயம் முளைக்காமல் இருக்கும் நிலை உழவர்க்கு துன்பத்தை ஏற்படுத்தும்.இந்நிலை இக்கால நிலையிலும் ஏற்படுகிறது.இதனை

நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா   (இன்.நா.20) 

என்ற பாடலடியால் உணரலாம்.

கள் உண்ணாமை
வள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.கள் குடிப்பவன் செய்யும் செயல் துன்பம் நிறைந்தது ஆகும்.இதனை,

கள்ளுண்பான் கூறும் கருமப் பொருளின்னா     (இன்.நா34:1)

என்ற பாடலடியால் அறியலாம்.கள் உண்டு களிப்பவர் கள் இல்லாத ஊரில் குடியிருக்கும் போது துன்பத்தை விளைவிக்கும்.இதனை

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா  (இன்.நா.10)

என்ற பாடலடியால் கள் உண்ணுபவர் கள்ளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

உணவு
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு ஆகும்.இத்தகைய உணவு கொடுக்கும் விருந்தில்  பங்கு பெறும் ஒருவர்  ஒருவரின் வீட்டிற்கு அழையா விருந்தினராகப் போக கூடாது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.இதனை

வருமனை பார்த்திருந் தூணின்னா (இன்.நா.37:3) என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

பகுத்து உண்ண வேண்டும்
பகுத்து உண்ணும் குணமே சிறந்தது ஆகும். ஆனால் பகுத்து உண்ணுதல் இல்லாதவரித்தில் போய் உண்ணுதல் கூடாது அப்படி உண்டால் அவர்கள் துன்பத்தை அடைவார்கள் என்ற கருத்தை இந்நூல் பதிவு செய்துள்ளது.இதனை,

பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா     (இன்.நா.22)

என்ற பாடலடி சுட்டுகிறது.

அன்பு
வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனி ஓரு அதிகாரமாக வைத்துள்ளார்.தம் மீது அன்பில்லாதவர்களிடம் துன்பங்களைச் சொல்லக் கூடாது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.இதனை,

பரியார்க்கு தாமுற்ற கூற்றின்னா   (இன்.நா.27:3)

என்ற பாடலடியால் அறியலாம்.பிறரிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது.மேலும் மற்றொரு பாடலில் அன்பில்லாதவர் கூறும் சொல் துன்பம் தரும் என்பதை,

வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா  (இன்.நா.21:2)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்

அறிய வேண்டுவன வற்றை அறியும் திறன் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும்.இந்நூலும் இக்கருத்தை இயம்புகிறது இதனை,

…………………………வின்னா
உணர்வா ருணராக் கடை  (இன்.நா.15:3-4)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகிறது.

சோம்பல்இன்மை
வள்ளுவர்பெருந்தகை மடியின்மை என்ற அதிகாரத்தை தனி ஒர் அதிகாரமாக வைத்துள்ளார்.இக்கருத்து பற்றிய செய்திகள் அதில் இடம்பெறுகின்றன.இதனை,

உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா  (இன்.நா.19:1)

என்ற பாடலில் திண்ணிய அறிவுடையோன் மனம் சோம்பியிருத்தல் துன்பம் ஆகும் என்று புலப்படுத்தியுள்ளார்

விரதம் எடுக்க கூடாது
விரதம் எடுப்பது மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும்.இதனை

நான்ற விந்து வாழாதார் நோன்பின்னா       (இன்.நா.18)

என்ற பாடலடி எடுத்தோம்புகிறது.

சேமித்ததை உபயோகப்படுத்த வேண்டும்
உபயோகப் படுத்தாமல் சேமித்து வைக்கும் பெருஞ்செல்வம் துன்பம் தருவதாகும்.இதனை,

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா (இன்.நா.17:1)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

நீர் துறையில் ஆடையின் மாசுக்களைப் போக்க கூடாது

இக்காலத்தில் சுற்றுசூழலை பாதுகாப்பது போல அக்காலத்திலும் சுற்றுச்சூழல் நன்கு பேணப்படும் என்று கருதியுள்ளார்கள் போலும்.நீர் துறையில் ஆடையின் மாசுக்களைப் போக்க கூடாது மீறி போக்கினால் அது துன்பத்தை விளைவிக்கும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை,


துறையிருந் தாடை கழுவுத லின்னா  (இன்.நா.24:2)

என்ற பாடலடியால் உணரமுடிகிறது.

தவம் செய்
பொறிகளைத் தடுத்து நிறுத்துகின்ற தவம் செய்ய வேண்டும் இல்லையென்றால் அது துன்பத்தில் தான் முடியும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,

…………………………..வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்     (இன்.நா.24:3-4)

என்ற பாடலடியால் அறியலாம்.

தீயசெய்கை உடையாருடன் சேருதல் கூடாது
தீயச்செய்கை உடையவரது பக்கத்திலே இருத்தல் அல்லது வாழ்தல் துன்பம் ஆகும்.இதனை,

தீமை யுடையா ரயலிருந்த னன்கின்னா  (இன்.நா.25)
என்ற பாடலடியால் அறியலாம்.


சூதாட்டம்
சூதாட்டம் ஆடுவது துன்பம் ஆகும்.இதனை,
………………………வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது     (இன்.நா.26:3-4)

என்ற பாடலடிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றம்
சுற்றம் சூழ்ந்து இருக்கும் ஊரில் குடியிருக்க வேண்டும்.சுற்றம் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்று இந்நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
செருக்கு கொள்ளக் கூடாது

செருக்கு கொள்ளக் கூடாது என்ற கருத்தை 13 பாடலில் பதிவுசெய்துள்ளார்.இதனை,
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா    (இன்.நா.13:2) 

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

வீரமொழிகள் பேசாதே
பகையை வெல்லும் துணிவில்லாதார் கூறும் வீரமொழிகள் துன்பமாகும்.(எந்தவிதப் பயனும் தராது)இதனை,

துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா   (இன்.நா.14:2)

என்ற பாடலடி சுட்டுகிறது.

வெற்றுரை கூறக்கூடாது
செய்தற்கரிய அரிய செயல்களைச் செய்ய முடியாது ஆனால் செய்து முடிப்பேன் என்று வெற்றுரைக் கூற கூடாது மீறி கூறினால் அது துன்பத்தை தரும் என்பதை,

அரியவை செய்து மெனவுரைத்த லின்னா   (இன்.நா.27)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது.

பெருமையுடையவர்க்கு தீங்கு செய்தல் கூடாது

பெருமையுடையார்க்கு தீயனவற்றைச் செய்தல் கூடாது செய்தால் அது துன்பத்திற்கு வழிவகுக்கும் என்று இந்நூல் ஆசிரியர் இயம்பியுள்ளார்.இதனை,
………………………………வின்னா
பெரியார்க்குத் தீய செயல்    (இன்.நா.27);

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

சான்றோர்களைத் தூற்றக் கூடாது
பெருமை மிக்க சான்றோர்களின் பெருமை அழியத் தூற்றுதல் பெருந்துன்பமாகும் இதனை,

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா  (இன்.நா.28:1)

என்ற பாடலடி சுட்டுகிறது.

பெரியோரைத் துணைக்கொள்
பெரியோருடன் கொண்ட தொடர்ச்சியை விடுவது துன்பம் ஆகும்.இதனை,

பெரியாரோ டியாத்த தொடர்விடுத  லின்னா  (இன்.நா.27:1)

என்ற பாடலடி பெரியோரைத் துணைக் கொள் என்று எடுத்துரைக்கிறது.

உரிமையுடையவரை நீக்க கூடாது.
உரிமையுடையவரை நீக்கி விடுதல் துன்பம் ஆகும்.இத்தகைய செயலைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒருவன் தன்னை தானே காத்து கொள்ள வேண்டும்    

ஒருவன் தன்னைத் தானே காத்துக் கொள்ளாது நடத்தல் துன்பம் ஆகும்.இதனை,
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா   (இன்.நா.33.1)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

ஒதுக்கப்பட்ட நாட்டில் திரிதல் கூடாது

நல்லவரால் கழித்து ஒதுக்கப்பட்ட நாட்டில் திரிதல் துன்பம் ஆகும்.இதனை,

………………………………இன்னா
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு   (இன்.நா.35:3-4)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.

அடைக்கலப்பொருளைக் களவாடக் கூடாது

அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளைத் தானே கைக்கொள்ளுதல் துன்பம் ஆகும்.இப்பாடலில் அடைக்கலப் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல் கூடாது என நவிலப்பட்டது.இதனால் ஒருவர் பாதுகாப்பு வேண்டி அடைக்கலப் பொருளாகக் கொடுத்ததைப் பாதுகாக்க வேண்டும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுவதாயிற்று.இதனை

அடைக்கலம் வவ்வுதல் இன்னா ஆங்கின்னா   (இன்.41:3)

என்ற பாடலடியின் வழி புலப்படுகிறது.

தற்புகழ்ச்சி கொள்ளக் கூடாது
முயற்சியில்லாதவன் அதாவது சோம்பலை மேற்கொள்ளுபவன் தன்னை தானே மதித்துக் கொள்ளுதல் கூடாது என்ற கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
செய்யுள் இயற்றுபவருக்கு பரிசுகளைக் கொடுக்க வேண்டும்

கவிபுனைவோர்க்குப் பரிசுகளைக் கொடாதிருத்தல்  துன்பம் ஆகும்.

கொல்லாமை
வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கை கொல்லுதல் துன்பம் ஆகும் இதனை,

‘வெள்ளம் படுமாக் கொலையின்னா ஆங்கின்னா’(இன்.நா.33:3)    

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.
புறங்கூறுதல்
ஒருவரைப் பற்றி முன்னே கூறாமல் பின்னே பழித்துரைக்கும் பாங்கே புறுங்கூறுதல் ஆகும். இதனைப் பற்றி பின் வரும் பாடலடி எடுத்துரைக்கிறது.

முன்னே யுரையார் புறமொழிக் கூற்றின்னா    (இன்.நா.33.2)

நல்லொழுக்கம் உடையவரோடு சேர வேண்டும்
நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உண்டு என்று கூறுதல் துன்பம் ஆகும்.இதனை,
ஒழுக்கம் மிலாளர்க் குறவுரைத்த லின்னா   (இன்.நா.35:1)

என்ற பாடலடி சுட்டுகிறது.

சிறியவர் மீது சினம் கொள்ளக் கூடாது
தம்மில் வயதில் சிறியவருடன் சினம் கொள்ளுதல் துன்பம் ஆகும்.இதனை,
…………………………………..வாங்கின்னா
சிறியார் மேற் செற்றங் கொளல்    (இன்.நா.38)

என்ற பாடலடி மூலம் சிறியவர் மீது சினம் கொள்ளுதல் கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

அரசன்
நாட்டை ஆளுபவனே அரசன் ஆவான்.நீதியில்லாமல் ஆளுகின்ற அரசனது ஆட்சி துன்பம் ஆகும்.இதனை,

முறையின்றி ஆளும் அரசின்னா  (இன்.நா.6)

என்ற பாடலடி மூலம் புலப்படுகிறது.

போரில் சோம்பியிருத்தல் கூடாது
வீரத்தன்மை மிக்க நெஞ்சத்தினர் போரின் கண் சோம்பியிருத்தல் பெரிதும் துன்பம் ஆகும் இதனை,

மனமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னா  (இன்.நா.7)

என்ற பாடலடி சுட்டுகிறது.    

போரில் புறங்காட்டுதல் கூடாது.
படையின் தொகுதி தன்னுடைய நிலையிழந்திருக்கும் வேளையில் புறங்காட்டுதல் கூடாது.இதனை,

கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா  (இன்.நா.5)

என்ற பாடலடி மூலம் உணரலாம்.

அரசனுக்கு வீரம் இருக்க வேண்டும்
அரசனாக இருப்பவருக்கு வீரம் இன்றியமையாத ஓன்றாகும் வீரம் இல்லாத அரசனாக இருக்கும் போது அவன் போர்க்களத்தில் இறங்க கூடாது.இதனை,

மறமிலா மன்னர் செருப்புதல் லின்னா   (இன்.நா.39)

என்ற பாடலடி சுட்டுகிறது.

முடிவுரை
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்று எண்ணுநூல் பயில வேண்டும், கல்வியறிவுடையோர் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும், கல்லாதவர்கள் அறிவுடையோர் இல்லாத இடத்தில் செய்யுளை இயற்ற கூடாது,கல்வியின் மூலம் நூற்பொருளை அறிந்திருக்க வேண்டும், சொல்லின் பொருள் அறிந்து நூல்களை விரும்பி கற்க வேண்டும,; வழி முறைகளை அறிந்து இருக்க வேண்டும்,பெயரைக் கெடுத்து மயக்கத்தை விளைவிக்கும் கள் உண்ணக் கூடாது, ஈகை குணம் படைத்தவராக இருக்க வேண்டும், தற்புகழ்ச்சி கொள்ளக் கூடாது,சுற்றுப்புற சூழலைப் பாதுக்காக்கும் வகையில் மக்கள் நீர் துறையில் ஆடையின் மாசுக்களைப் போக்க கூடாது இந்நிலை கிராமப் புற சூழலில் இன்றளவும் இருக்கிறது, சான்றோர்களைத் தூற்றக் கூடாது, புறங்கூறுதல் இழுக்கான செயல் இச்செயலை செய்வது தவறானது ஆகும், அடைக்கலப்பொருளைக் களவாடக் கூடாது, அரசன் போரில் சோம்பியிருத்தல் கூடாது அரசனுக்கு வீரம் இருக்க வேண்டும், நல்லொழுக்கம் உடையவரோடு சேர வேண்டும்,  கொல்லாமை கூடாது, ஒதுக்கப்பட்ட நாட்டில் திரிதல் கூடாது, சுற்றம் சூழ்ந்து வாழ வேண்டும்,வெற்றுரை கூறக்கூடாது தவம் செய்ய வேண்டும், ஒருவன் தன்னை தானே காத்து கொள்ள வேண்டும், விரதம் எடுக்க கூடாது வேளாண்மை செய்ய வேண்டும், அன்பு செய்ய வேண்டும், இல்வாழ்க்கை கணவன் மனைவி உளம் பொருந்தி வாழ வேண்டும் போன்ற சமுதாய நெறிகளை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)           பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)           பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)    

4.பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3           செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
5..பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)             நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5. அகராதி                        தமிழ் - தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6. கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)                 இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014 7இராசாராம்.துரை            7. பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995
8 நாமக்கல் கவிஞர்                           திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
9 மாணிக்கம் .அ                             திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
10 நாராயணசாமி .இரா                  திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098   முதற்பதிப்பு -1997


*கட்டுரையாளர்:  சு.ஜெனிபர் ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard