New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.    

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். திரிகடுகத்தில் கல்வி நெறிகள்
வெப்ஸ்டர் ஆங்கில அகராதி கல்வி என்பதற்கு பொருள் கூறும் போது அறிவுடைமைக்கு கிடைத்த பெரும் பேறு,திறமை,பழக்க வழக்கம்,நடத்தை எனும் பொருளைத் தருகிறது.மேலும் காரணத்தை விவாதிக்கிறது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைச் சொல்லுகிறது.ஒரு குழந்தையின் அடிப்படைப் பழக்கவழக்கத்தை மாற்றும் தன்மை உடையது.

மகாத்மா காந்தி அவர்கள் கல்வியைப் பற்றி குழந்தை மற்றும் மனிதரின் உடல்,மனம்,ஆன்மா இம்மூன்றின் சிறப்பானவைகளை ஒட்டுமொத்தமாக வெளிக் கொணருவது என்று குறிப்பிடுகிறார். 

திரிக்கடுகத்தில் கல்வி தொடர்புடைய பாடல்கள்     (3,7,8,10,12,14,15,17,20,21,25,26,28,31,32,35,40,44,46,52,53,56,65,68,75,78,84,86,87,90,92,94,99)

மூடரோடு சேராதே
செல்வத்தில் சிறந்த செல்வம் கல்வி செல்வம் ஆகும்.கல்வியறிவு இல்லாத மூடரோடு சேர்ந்து இருத்தல் கூடாது என்பதனை,

கல்லார்க்கு இன்னா ஒழுகலும்   (திரி.3:1)

என்ற பாடல்வரியின் மூலம் அறியமுடிகிறது.    

இல்லத்திற்கு அறிவில் சிறியாரை அழைத்து வரக் கூடாது

தம் இல்லத்திற்கு கல்வி அறிவில் சிறியாரை அழைத்து வருதல் கூடாது என்பதை,
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யான் வருங் கேடு   (திரி.3:2-4)

என்ற பாடல் அடியால் அறியமுடிகிறது.

சபை அச்சம் கூடாது
தாம் கற்ற நூலை சபையில் சொல்ல அச்சப்படுபவன் பயன்படாதவன் என்கிறார் நல்லாதனார் இதனை,

……………………………பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலூம் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா   (திரி.7:2-3)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.இதன் மூலம் சபை அச்சம் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.
கல்வியின் மூலம் தம்மை தாமே புகழ்ந்துரைக்க கூடாது

அறிஞர் சபையில் போற்றப்படும் கல்வியினை தம்மை தாமே புகழ்ந்துரைக்க கூடாது.இதனை,

…………………………….தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் ………….
……………………………இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்    (திரி.8:2-3)

என்ற பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது.இதன் மூலம் கல்வியின் மூலம் ஒருவர் புகழ்ந்துரைக்கும் செயல் உடையவராக இருக்க கூடாது என்ற கருத்தை சொல்லுகிறது.

கற்றவர் ஊரில் குடியிரு

கல்வி கற்பிக்கும் ஆசிரியரல்லாத ஊரில் குடியிருத்தல் ஒருவருக்கு கெடுதியினை உண்டாக்கும்.இதனை,
கணக்காயர் இல்லாத ஊரும் ……
……………………….இம்மூன்றும்
நன்மை பயத்த லில  (திரி.10:1)

என்ற பாடலடிகளின் மூலம் புலப்படுகிறது.

கல்வியுடையவனுடன் நட்பு கொள்
ஆசிரியர் கூறும் நூற்பொருளைக் கொள்ளும் மாணவனுடன் நட்பு கொள்ள வேண்டும்.இதனை,
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது (திரி.12:3-4)

என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.

கல்வி அறிவு உடையோர்

கல்வி அறிவு உடையோரால் விலக்கப்பட்ட சொற்களை கூறுவது பேதமை தன்மை ஆகும்.இதனை,

………………………………பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை…….   (திரி.14:1-2)

என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.

இளமையில் கல்
இளமையில் கல்வி கற்க வேண்டும்.முதுமையில் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று 17 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் ……….
………………………………………………
………………………………………………
கல்விப் புணைகைவிட் டார்    (திரி.17:1)

என்ற பாடலடி மூலம் உணரமுடிகிறது.    

கல்வியறிவை கைவிட்டவர்
பொய்,கடுஞ்சொல், தீயசொல்,பயனிலசொல் ஆகிய பயனற்ற சொற்களைப் பேசுபவர் கல்வியறிவு அற்றவர் என்பது புலப்படுகிறது.இதனை,

……………………..வாய்ப்பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்   (திரி.17:2-3)

என்ற பாடலடி மூலம் உணரமுடிகிறது.    

கல்வி அறிவில்லாதவர் விரைவில் கெடுவர்    

…………………………..மறம் தெரியாது
ஆடும்பாம்பு ஆட்டும் அறிவிலியும் -இம்மூவர்
நாடுங்கால் தூங்கு பவர்   (திரி.19:2-3)

என்ற பாடலடிகள் கல்வி அறிவில்லாதவர் விரைவில் கெடுவர் என்ற கருத்தை தெரிவிக்கின்றன.

கல்வி கற்காமல் இருக்கும் நிலை பிறரின் இகழ்ச்சிக்கு உள்ளாக்கும்.இதனை,

………………………………….கதிர்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன    (திரி.20:2-3)

என்ற பாடலடிகள் குறிப்பிடுகிறது.

கல்வியே அனைத்திலும் சிறந்தது
பல்வேறு நூல்களுள்ளும் நல்லவற்றைக் கற்றல் வேண்டும்.இந்நூல்கள் மனிதருக்கு வேண்டிய நல்லப்பண்புகளை வளர்க்கிறது என்பதை,
பல்லவையுள் நல்லவை கற்றலும் ………..
…………………………………………….
………………………இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை   (திரி.31:1)
என்ற பாடலின் மூலம் அறியமுடிகிறது.

நூல்களில் நல்லவற்றை படித்தல்

………………………………………எய்த
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்    (திரி.21:2:3)
என்ற பாடலடிகள்  ஆனது நல்லவற்றைப் படிக்க வேண்டும்  என்று  உணர்த்துகிறது.
கல்லாதவர்களை சான்றோர் விரும்ப மாட்டார்கள்
செருக்கினால் வாழும் சிறியவனும் …………..
……………………………………..இம்மூவர்
கைத்து உண்ணார் , கற்றறிந்தார்    (திரி.25)

செருக்குடன் பெரியோரை மதிக்காது இருக்கும் கல்லாதவர்களைச் சான்றோர்கள் மதிக்கமாட்டார்கள்.கற்கும் வழி பெரியோரை மதிக்கும் பண்பு, செருக்குடன் வாழப் பண்பு வளரும் என்பது புலப்படுகிறது.

பிறர் கற்ற கல்வியை ஆராய கூடாது    
பிறர் கற்ற கல்வியை ஆராயாமல் குற்றம் கூறக் கூடாது.என்பதை,

…………………………….கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூவர்
உமிக்குத்திக் கைவருந்து வார் (திரி.28:2-3)

என்ற பாடலடி உணர்த்துகிறது.ஆராய்ந்து குற்றம் காண வேண்டும் என்று நல்லாதனார் குறிப்பிடுவது இதன் வழி அறியமுடிகிறது.

கல்வியில் சிறந்தவர்களின் கடமைகள்
கல்வி தொடர்புடைய கருத்துக்களை 32 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் நுற்கேலா
வெண்மொழி வேண்டினும் சொல்லாமை நன்மொழியை
சிற்றன மல்லார்கட் சொல்லும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்   (திரி.32)    

என்ற பாடல் நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களை ஆராய வேண்டும் என்றும்,நூலுக்கு பொருந்ததாத பயனற்றச் சொற்களைப் பிறர் விரும்பினாலும் சொல்லக் கூடாது என்றும்,நல்லக் குணம் உடையவரிடம் நல்ல சொற்களை சொல்ல வேண்டும் என்று எடுத்துரைக்கின்றன.

வீடு பேறு உடையவர்
நுட்பமான மனத்தினையுடைய  அறிவினாலும்,மிகுதியான கேள்விச் செல்வத்தினாலும் நூல்வழி முடிவை ஐயமின்றிக் கண்டவனுக்கு முத்தி பேறு உடையவனாகிறான் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இதனை,

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங் கேள்வி நூற்கரை கண்டானும்
………………………………….இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற்பவர்   (திரி.35.1-2)

என்ற பாடல் வரிகளின் குறிப்பிடுகிறார்.சமண சமயம் வினைப் பயன் கொள்கை உடையதாகயால் கல்வியின் மூலம்  கருத்தை  நவில்கிறது.

நல்லுகம் சேராதவர்கள்
கற்றவரைக் கைவிட்டு வாழக் கூடாது என்ற கருத்தைப் பதிவுச்செய்துள்ளார்.இதனை,

கற்றவரைக் கைவிட்டு வாழ்தலும் ……………..
……………………………………………………
………………………….......................இம்மூவர்
நல்லூகம் சேராதவர்    (திரி.99:1)

என்ற பாடலடி தெளிவுப்படுத்துகிறது.

மனிதனாகப் பிறந்தும் பிறவாதவர்
கல்வியறிவினை பெறாதவர்கள் மக்களாகப் பிறந்திருந்தாலும் அவர்கள் பிறவாதற்கு சமம் என்று நல்லாதனார்.

எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் ………………
…………………………………….இம்மூவர்
பிறந்தும் பிறவா தவர்    (திரி.92:1-2) 

என்ற பாடலடியில் வலியுறுத்துகிறார்.இதன் மூலம் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்தை இயம்புகிறார்.

நரகத்தை அடையாமல் இருப்பதற்குரிய வழிகள்
அறத்தின் வழியில் செல்வதற்கு நல்ல நூல்களைக்  கற்காமல்  இருந்தால் ஒருவன் நரகத்தை அடைய மாட்டான் என்பதை,

“ ……………………………… அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை ………..
…………………………….இம்மூன்றும்
இருளுகம் சேராத ஆறு”  (திரி.90:1-2)

என்ற பாடலடியின் மூலம் உணரமுடிகிறது.இதன் கல்வி கற்காமல் இருக்க கூடாது என்ற செய்தியை தெரிவிக்கிறது.

மூடர்க்கு சமமானவர்
கல்வியைக் கற்காமல் இருக்கும் மனிதர்களுடன் சேர்பவன் மூடர்க்கு சமமானவன் என்கிறார் இதனை,

“……………………………………கல்வி
ககன்ற இனம் புகு  வானும் …………
………………………………இம்மூவர்
முழுமக்க ளாகற்பா லார்”     (திரி.87:1-2)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.

முடிவுரை 
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இக்கல்வியைப் பற்றிய செய்திகளை அறஇலக்கியங்களில் ஒன்றான திரிக்கடும் எடுத்துரைத்த பாங்கை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது. இக்கால சமுதாயத்தினரும்  கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவது சாலச் சிறந்தது.

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009.
3மணிக்கவாசகன், ஞா                சிறுபஞ்சமூலம் உமா பதிப்பகம் சென்னை -600017 முதற்பதிப்பு -2009
4.மாணிக்கம், அ                திருக்குறள் தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
5.நாராயண வேலுப்பிள்ளை,எம்            முதுமொழிக்காஞ்சி கலைஞன் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -1989
6.மாணிக்க    வாசகன,ஞா                  நாலடியார்  உமா பதிப்பகம்  சென்னை -600001 முதற்பதிப்பு -1993
7.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)          நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
8.முத்துராமன், ஆ                          வாழ்வியல் சிந்தனைகள் மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017  பதிப்பு -2006
9.அகராதிகள்                      கழக அகராதி  தமிழ் -தமிழ் அகர முதலி மதுரை தமிழ் அகராதி

jenifersundararajan@gmail.com

*கட்டுரையாளர்:    -  சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சி -24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard