New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழந்தமிழரின் வானியல் அறிவு - சு.தங்கமாரி


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பழந்தமிழரின் வானியல் அறிவு - சு.தங்கமாரி
Permalink  
 


பழந்தமிழரின் வானியல் அறிவு

E-mailPrintPDF

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுமுன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.

தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.

பழந்தமிழரின் வானியல் பார்வை:
பண்டைய காலத் தமிழர் விண்ணின் கோள்களையும் காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும் கால அளவுகளையும் அளவிட்டறியும் வானியல் அறிவியலை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நம் இலக்கியங்களே சான்றாகும்.அதிலும் குறிப்பாகக் கி.பி.1 & 2ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சங்க நூல்களும் சங்கம் மருவிய நூல்களும் வானியல் அறிவு சார்ந்த பார்வையினை அதிகம் பெற்றுள்ளவை என்றால் மிகையாகாது.பொதுவாகச் சூரியனும் சந்திரனும் வானில் மிகத் துல்லியமாகத் தெரியும் நட்சத்திரங்கள் ஆகும்.இவற்றின் இயக்கமானது இயற்கையை கட்டுப்படுத்துவதில் மிகத் தெளிவான பங்கு வகிப்பவை ஆகும்.ஆகவே இவற்றின் தன்மை பற்றிய அறிவும் குணநலன்களும் தமிழரிடையே இயல்பாகவே இருந்திருக்கும் என்பதில் கடுகளவும் ஐயம் இருக்காது.

இவை இரண்டு மட்டுமா? வானில் இருக்கின்றன.இவற்றைத் தவிர செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி போன்ற கோள்களும் இருகின்றனவே.இன்று இவற்றை மேனாட்டார் ஆய்ந்து பல கருத்துகளை உலகிற்கு வழங்கி வருகின்றனர்.அப்படியாயின் தமிழரிடையே இக்கோள்கள் பற்றிய சிந்தனை இல்லையா? கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன.அப்படித் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கும் விடை நம் பழந்தமிழரின் இலக்கியங்களிலேயே கொட்டிக் கிடக்கின்றன.

செவ்வாய்க் கோள்:
செவ்வாய்க்கோள் பற்றிய முழுமையான சிந்தனை இந்த நூற்றாண்டிலும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.செவ்வாய் என்றதும் இன்றைய கவிஞர்களும் இளைஞர்களும் பெண்களின் சிவந்த வாயையே எண்ணுகின்றனர்.ஆனால் செவ்வாய்க் கோள் பற்றிய சிந்தனையை அன்றே பழந்தமிழன் பெற்றுள்ளான் என்பதைப் புறநானூறும் பதிற்றுப்பத்தும் பதிவு செய்துள்ளது.உலகம் அறிவியலை அறியாக் காலத்தே பழந்தமிழன் செவ்வாய்க் கோள் பற்றிப் பேசிய விந்தையைப் பாருங்கள்.செவ்வாய்க் கோளினைச் செம்மீன் என்கின்றான்;அழல் என்கின்றான்.மேலும் பரிபாடல் செவ்வாயைப் ‘படிமகன்’ என்கிறது.புதன் கோளினைப் ‘புந்தி’ என்று பெயரிட்டு அழைக்கின்றது.
சூரிய மண்டலத்தில் பெரிய கோள் வியாழன் என்று இன்றைய அறிவியல் சொல்கின்றது.இதனை முன்பே அறிந்ததால் தான் ‘வியா’ழன் என்று பெயர் சூட்டியுள்ளான்.ஏனெனில் ‘வியா’ என்ற சொல்லுக்கான பொருள் பெரிய என்பதாகும்.அதுமட்டுமா?வெண்மை நிறமுடையதாய் இருப்பதால் ‘வெள்ளி’ என்றும், கருமை நிறமுடையதாய் இருப்பதால் ‘காரி’ என்றும் அன்றே காரணப் பெயரிட்ட பெருமை பழந்தமிழனையே சாரும்.

நாள்மீன் - கோள்மீன்:
வானில் நட்சத்திரக் கூட்டங்கள் வாய் விட்டு எண்ண முடியாதவை. இவற்றுள் தானே ஒளி தரக் கூடியவை என்று சில உள்ளன;அப்படி இல்லாது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பன என்றும் சில உள்ளன.இதனை மிகத் துல்லியமாக அன்றே பகுத்தறிந்த முன்னோர்கள் நாள்மீன்,கோள்மீன் எனப் பிரித்துள்ளனர். அதாவது தானே ஒளி தரக் கூடியவை ‘நாள்மீன்கள்’ என்றும், சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பவைகளைக் ‘கோள்மீன்கள்’ என்றும் பிரித்து அழைத்துள்ளனர். இதுமட்டுமின்றி ரோகிணி, அருந்ததி, ஓணம், ஆதிரை, கார்த்திகை, சப்தரிஷி மண்டலம் என்பன பற்றிய தகவல்கள் பலவற்றையும் தம் எழுத்துகள் வாயிலாகப் பகிர்ந்துள்ளனர். சப்தரிஷி மண்டலத்தை ‘எழுமீன்’ என்றும், அருந்ததி நட்சத்திரத்தை ‘வடமீன்’ என்றும், மகநட்சத்திரத்தை ‘மகவென்மீன்’ என்றும், பரணி நட்சத்திரத்தை ‘வேழம்’ என்றும் குறிப்பிடுவது அறியக் கிடைக்கும் அரிதினும் அரிதான செய்திகளாகும்.

“அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாநீர்ப்ப” (பதிற்றுப்பத்து 25 - 26)

இப்படிப் பழந்தமிழர் வானத்தையே தன் வீட்டின் மேற்கூரையாகக் கொண்டு வாழ்ந்த்துள்ளனர்.வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகிற்கு எடுத்தியம்பியுள்ளனர்.கணித்தல் தொழிலினையே கொண்டதால் பழந்தமிழர் சிலருக்குக் கணியன் பூங்குன்றன், கணிமேதாவி, பக்குடுக்கை நன்கணி என்று பெயர் வைத்து இருந்துள்ளனர்.

விடிவெள்ளி:
இன்றைய காலத்தில் ஒரு சில அரசியல் தொண்டர்கள் தம்முடைய தலைவர்களைப் புகழும் பொழுது விடிவெள்ளியே என்றும்,நம்பிக்கை நட்சத்திரமே என்றும் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.விடிவெள்ளி என்பது கிழக்குத் திசையிலே தோன்றுவது.மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக் கூடியது.இந்த விடிவெள்ளி குறித்த செய்தியும் பழமை இலக்கியமான நற்றிணையிலே குறிஞ்சித் திணைப் பாடலிலே குறிக்கப்பட்டிருக்கிறது.அதாவது வரைவு மறுக்கப்பட்ட  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாகப் பரணர் பாடிய பாடலிலே,

“காதலி உழையலாக
குணக்குத் தோன்று வெள்ளியின்,எமக்குமார் வருமே?” (நற்)

என்று குறிப்பிடுகின்றார்.கிழக்கே தோன்றுகின்ற விடிவெள்ளி போன்று என் வாழ்க்கையில் ஒளி தர,காதலி எனக்குக் கிடைக்கப் பெறுவாளா? என்று புலம்புகின்ற தலைவன் கூற்று வழியாக வானில் தோன்றும் விடிவெள்ளி பற்றிய செய்தியைப் பரணர் குறிப்பிடுகின்றார்.இதே போன்று அகநானூறு 17வது பாடலும் விடிவெள்ளி பற்றிய குறிப்பினை உணர்த்துகிறது.

“நெய்உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி
வைகுறு மீனின் தோன்றும்” (அகம் 17)

அதாவது ,எண்ணெய் ஊற்றிய விளக்கின் சுடர் போன்று வைகறை பொழுதில் விடிகின்ற விடிவெள்ளி என்று இப்பாடல் குறிப்புத் தருகின்றது.

எரிநட்சத்திரம்:
புரட்சியாளர்கள் வீழ்ந்தால் எரிநட்சத்திரமாக வீழ்வோம் என்பார்கள்.எரிநட்சத்திரம் என்பது சூரியனிடமிருந்து தெறித்து விழும் ஒரு ஒளீ ஆகும்.இது வானில் தோன்றும் சிறு ஒளியினைத் தந்து வீழும்.இதனை அன்றே நன்கு அறிந்த பழந்தமிழன் எரிநட்சத்திரம் பற்றிய செய்தியினைப் பகிர்ந்துள்ளது சிறப்பு.

“வேய் பயில் அடுக்கம் சுடரமின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்” 

விசும்பிலே நிலைபெறாது தோன்றி ஒரு சிறு ஒளியினை எழுப்பி வீழ்கின்ற எரிநட்சத்திரத்தைப் போன்று நம் அகக் கண்ணிலே தோன்றி மறைகின்ற நாட்டின் தலைவன் என்று கூறுவது இப்பாடலுடைய கருத்தாகும்.

நெடுநல்வாடை:
பழந்தமிழரின் நன்னிய வாழ்வியலைப் பறைசாற்றுகின்ற சங்க இலக்கியங்களாகப் போற்றப்படுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.இவற்றில் பத்துப்பாட்டு வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற ‘நெடுநல்வாடை’ என்ற இலக்கியத்தை நக்கீரர் என்ற பெரும்புலவர் இயற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததாகும்.இந்நூலில் வானியல் சார்ந்த குறிப்புகள் இடம் பெறுவது சிறப்பானதாகும்.இந்நூலின் 160வது அடி ‘மேச ராசி’ குறித்து விளக்குகிறது.அதாவது,

“திண்நிலை மறுப்பின் ஆடுதலை ஆக 
வினுறுபு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” (நெ.வாடை 160)

என்ற பாடல் வரி தின்னிய நிலையினையுடைய கொம்பினைப் பெற்ற ‘மேச’ராசி முதலாக ஏனைய ராசிகளில் சென்று திரியும் குறிப்புகளை விளக்குகிறது. அதுமட்டுமின்றி இன்றளவும் நம் தமிழர் மரபில் நின்றுநிலைபெற்ற ஒரு பழக்கவழக்கத்தினைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.ஒருவர் புதிய வீட்டினைக் கட்ட முற்படும் பொழுது,அதன் தொடக்கமாகப் பூமிப் பூசை செய்வதென்பது இன்றளவும் இருக்கின்ற மரபு.இதனைத் ‘தச்சு வைப்பது’  என்றும் குறிப்பிடுவர்.இந்தப் பூமிப்பூசை செய்வதை வானியல் அறிவோடு பொருத்திய பெருமையினை நோக்கும் பொழுது வியப்பினுள் நம்மை ஆழ்த்தும் செய்தியாகும்.

“விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏற்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து ” (நெ.வாடை)

என்ற பாடல் உணர்த்தும் செய்தி இது தான்.அதாவது சூரியன் தன் அகன்ற கதிர்களை உலகம் முழுவதும் செலுத்துவது இயல்பு.இதனை முற்பகல்,நண்பகல்,பிற்பகல் என்று மூன்றாகப் பிரிக்கலாம்.பூசை செய்து பணி தொடங்குகின்ற நேரம் குறித்து இவ்வரிகள் விளக்கம் தருகின்றன.

சூரியன் தன் கதிர்களைச் செங்குத்தாகப் பரப்புகின்ற நேரத்தினைக் கணக்கிடுவதற்குப் பழந்தமிழர் ஒரு செய்முறையினைக் கைக்கொண்டுள்ளனர்.ஒரு வட்ட வடிவமான கல்லினை இதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.அக்கல்லினைக் கட்டிடம் கட்டப்படுகின்ற இடத்தின் மையப் பகுதியில் வைத்து விடுவர்.அந்தக் கல்லின் இரு ஓரங்களிலும் துளை இருக்கும்.பிறகு அந்தத் துளைகளில் இரண்டு குச்சிகளைச் சொருகுவர்.காலையில் கிழக்கு முகமாக எழுகின்ற சூரியன் தன்னுடைய கதிர்களைப் பரப்பும் பொழுது குச்சியினுடைய நிழல் மேற்கு முகமாக விழும். இப்படி விழுகின்ற நிழல் நேரம் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வந்து ஒரு மைய வேளையில் நிழலினைத் தராது நிற்கும்.அவ்வேளையே நண்பகல் வேளை என்பதை அறுதியிட்டுப் பூசை செய்யத் தொடங்குவர்.இந்தச் மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது.இப்படிச் சூரியக் கதிர்களைக் கொண்டே நேரம் பகுத்த வல்லமை நம் பழந்தமிழரிடம் இருந்திருக்கிறது.

முடிவுரை:
பழந்தமிழன் வானியல் அறிவியலின் முன்னோடி ஆவான்.
செவ்வாய்க்கோளின் தன்மைகளை அன்றே நன்கு உணர்ந்துள்ள பழந்தமிழன் அது பற்றிய செய்திகளைத் தம் இலக்கியக் கூறுகளில் பதிவு செய்துள்ளான்.
தானாக ஒளி தருபவை;சூரியனிடமிருந்து ஒளி பெற்றுப் பிரதிபலிப்பவை என்று கண்டுணர்ந்த தமிழன் அதனை நாள்மீன்,கோள்மீன் எனப் பகுத்துள்ளான்.
துணைமை நூல்கள்:

 


1)சங்க இலக்கியத் தொகுதிகள் - நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,அம்பத்தூர்,சென்னை.


 

கட்டுரையாளர்: முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர்

thangamari@vhnsnc.edu.in



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard