New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா? - பா.பிரபு


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா? - பா.பிரபு
Permalink  
 


சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா?

E-mailPrintPDF

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -தாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர்.  அத்தகு பெண்கள் பல்வேறு வியப்பிற்குரிய செயல்களை இன்று வரையும் செய்து கொண்டே வருவது நாமறிந்ததே.  எனில் அவ்வியப்பான அவர்களின் வாழ்வு மிகுந்த வேதனைக்குரியதாகவும் இருந்ததை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  சங்க கால சமூகம் வீரயுக சமூகம். சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும் தன்மானம், ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததையும் மறுக்கவியலாது.  எனில் அன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறு வகை சமூகச் சிக்கலுக்குள்ளும் ஆளாகியதையும் மறுக்க முடியாது.

வியப்பு நிலை
சங்க காலத்தில் பெண்கள் வாழ்வில் காதல் செய்து கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையும், உரிமையும் இருந்தது.  சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இலக்கிய பாடலைப் பாடும் அளவிற்கு பெண்கள் வாழ்வு இருந்துள்ளது.  ஒளவை போன்ற பெண்பாற் புலவர் அதியமானின் அவைக்கள புலவராகவும், முதன்மை அமைச்சராகவும், அறிவுரை சொல்வோராகவும், ‘தூது’ செல்லுதற்குரிய உரிமை பெற்றவராகவும் வாழ்ந்துள்ளதை வழி அறியலாம். ‘கற்பு ஒழுக்கம்’   என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் ஓர் ஆடவனையே எண்ணி ஒழுக்கமாகவும், குடும்பத்தை பேணி பாதுகாத்தும் இல்லறத்தை நடத்திய பெண்ணின் எண்ணமும், சிந்தனையும் மிகுந்த சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

பெண்களின் வீரம்
சங்க காலத்து மறக்குடிப் பெண்கள் நிலை மிகவும் வியப்பிற்குரியதாக இருந்ததற்கு சான்றுகள் சில காணப்படுகின்றன.  புறநானூற்று பாடலொன்றில், “தன்னுடைய மகனை போருக்கு அனுப்புகிறாள் தாய்.  போர்க்களத்தில் தன் மகன் இறந்து விடுகிறான்.  அப்போது அவ்வூரில் உள்ள சிலர், உனது மகன் புறப்புண்பட்டு இறந்து போனான் என்று கூறுகின்றனர்.  அப்போது கோபம் கொண்ட தாய், ‘என் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடந்தாள் அவனுக்கு பால் தந்த என் மார்பை அறுத்துக் கொள்கிறேன்’ என கையில் வாளினை எடுத்துக் கொண்டு, போர்க்களம் நோக்கிச் செல்கிறாள்.  போர்க்களத்தில் பல உடல்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கிறது.  அங்கே தன் மகனின் உடலும் வெட்டப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.  அவன் உடலை ஒன்று சேர்த்து பார்க்கிறாள்.  அவள் மகனோ மார்பில் புண்பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகிழ்கின்றாள். இக்காட்சியை, சங்கப் புலவர் சிறப்புற விவரிக்கின்றார்.  அத்தகு சிறப்பு மிகுந்த வீரம் கொண்ட பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தனர்.

மேலும், போரிடும் காலத்தில் பெண்களுள் சிலர் வாளினை ஏந்தி, புண்பட்டு கிடக்கும் மறவர்களின் புண்களுக்கு மருந்திட்ட செய்தியையும் காண முடிகிறது.  போர்க்களத்தில் வெற்றி பெற்ற பின்னர் வெற்றி களிப்பில் கூத்தாடி (வள்ளிக்கூத்து போன்றவை) மகிழ்ந்ததையும் காண முடிகிறது.

பெண்களின் தகுதி
“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் 
நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும்
சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்” 
(தொல்காப்பியம் நூ. 150)

என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர்.  “ஈன்று புறந்தருதல் என்தலை கடனே” என்ற புறநானூற்றுப் பாடலின் வழி குழந்தையை பெற்று தருதலும் பெண்ணின் கடமையென கொண்டனர்.
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான” 
(தொல்காப்பியம் நூ. 1155)

என்று செறிவு, நிறைவு, செம்மை, ஒழுங்குற செப்புதல், அறிவு, அருமை ஆகிய தகுதிகளும் பெண்ணிற்குரிய தகுதியாக அமைந்திருந்தது.  மேலும் கணவனை எண்ணியிருத்தல், தலைவன் வரும் வரை அவனுக்காக காத்திருத்தல், வந்ததும் மகிழ்தல், இருவருக்குமான இல்லற வாழ்வை எண்ணி மகிழ்தல் என சங்க இலக்கியத்துள் பல பாடல்களும், தொல்காப்பியத்துள் அகம் சார்ந்த பாடல்களும் பெண்ணின் வியக்கத்தக்க செயலை தெளிவுற விளக்குகின்றது.

வேதனை
வியக்கத்தக்க வகையில் அமைந்த பெண்களின் வாழ்வு ஒருபுறமிருக்க, தந்தை வழி ஆணாதிக்கச் சமூகமாகவும் இருந்த பண்டைய சமூகம் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை மரபுகள் எனும் பெயரில் புகுத்தியிருந்தது என்பது பெரும் வேதனையே!

காதல் நிகழ்வினில் கூட, தலைவனுக்கே தகுதிகள் அதிகமாக இருக்க வேண்டுமென்றும், பெண்ணிற்கு தகுதிகள் குறைந்தே இருக்க வேண்டுமெனவும்
“ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே” (தொல்காப்பியம் நூ.90)

என்ற பாடலின் வழி மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்துகிறது.  ஆணுக்குரிய தகுதிகளாக, “பெருமையும் உரனும் ஆடுஉ மேன” (தொல் பொருள் ஐஐ கழகம், நூ. 95) என்று பெருமை, வீரம் என்று கூறிய சூழலில், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாக,

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய” (தொல்காப்பியம் நூ. 96)

என்று பெருமையையும், வீரத்தையும் பெண்மகளுக்குக் கூறப்படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.  தூய்மையோடு பெண்கள் வாழ்ந்த நிலையில், திருமணமான ஆண்கள் பரத்தை வைத்து கொள்வதை, “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே”    (தொல்காப்பியம் நூ. 220) என்று அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் பரத்தை வைத்து கொள்ளும் உரிமையை உடையோராக சமூகத்தில் ஏற்றக் கொள்ளப்பட்டிருக்கிறது.  (அந்தணர் பரத்தை வைத்துக் கொள்வதில்லை என்பது ஆராய்ச்சிக்குரியதே.)

“கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடல் உண்டென மொழிப” 
(தொல்காப்பியம் நூ. 229)

கற்புடைய நங்கை பரத்தையை நாடிய ஆண் மீது கோபம் கொள்வாள்.  எனினும் எதிர் மறுத்து உரைத்தல் கற்புடைய நங்கைக்கு கூடாது என்றும், தவறு செய்த கணவனை ஏற்க வேண்டும் என்று கூறுவது கொடுமையிலும் பெருங்கொடுமையாகும்.

“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் 
பரத்தையிற் பிரிந்த காலையான” (தொல்காப்பியம் நூ. 1133)

என்ற பாடலுள், பூப்பெய்திய நாளிலிருந்து ஈராறு நாளும் (2 ஒ 6 ஸ்ரீ 12) ஆண்கள் வேறு எங்கும் சென்றும் தங்குவதில்லை.  குறிப்பாக, பரத்தையை விட்டு பிரிந்த காலமெனவும் உரைக்கிறது.  பரத்தை பிரிவு பற்றி மருதத் திணைப் பாடல்கள் பலவும் குறிப்பிடுகிறது.  பரத்தையை நாடுதற்காக உயர்ந்தோராக இருந்தோர் பாணர் போன்றோரை தூதுவர்களாக வைத்திருந்ததையும், அவர்கள் சென்று தலைவன் வருகிறான் என்று பரத்தையிடம் கூறியதையும், கற்பு ஒழுக்கமுடைய மனைவி பாணரை இகழ்ந்த செய்திகளும் பெண்ணினத்திற்கான வேதனையின் உச்சமே யெனலாம்.

தேரேற்றிக் கொண்டு வந்த பரத்தையரை முற்பட நுகர்ந்து பின்னர் சேரி பரத்தையரை நுகர்ந்து விடியலில் மனைவயிற் செல்கின்ற ஊரன் ” (கலி. பா. 74) என்று காமக்கிழத்தியே புலம்புவதாகவும், பாணனுக்கும் பித்து ஏறியது என்று கூறுவதையும் பாடலுள் காணமுடிகிறது.  எட்டுத்தொகை அகநூல்கள் பலவற்றிலும், மருதத்திணைப் பாடலுள்ளும்; இக்கருத்துக்களை காண முடிகிறது.  பெண்ணானவள் வருந்தி நிற்கும் செய்யுள் ஏராளமாக உள்ளது.
“கடிஇலம் புகூஉம் கள்வன் போல” (அகநானூறு பா. 276)

என்று காவல் உள்ள வீட்டில் புகும் கள்வனைப் போல தலைவன் புகுந்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை யாவும் இல்லற வாழ்வில் இல்லத்தை பேணி நின்ற பெண்ணிற்கு இழைக்கப்பட்ட வேதனையே யன்றி வியப்பல்ல.  அடிப்படையில் பெண்கள் வியப்பானவர்களாக இருந்திடினும், அவர்கள் ஆணாதிக்கத்தால் குரல்வளை நெரிக்கப்பட்டே கிடந்தனர்.

காதல் செய்யும் உரிமை பெற்றவளாயினும், அவள் தன்னை காதல் செய்யும் ஆடவனை மறுத்தால், ‘அவன் மடலேறிச் சென்று தான் எந்த பெண்ணை விரும்பினானோ அந்த பெண்ணை விரும்பினேன் என தாம் துன்பப்பட்டேன் ஆயினும், பெண்ணை இழிவுபடுத்துவேன் என மிரட்டுவதற்கு ஆடவனுக்கு உரிமை உண்டு.  அனால் பெண்ணோ தன்னை ஏமாற்றிய, அல்லது தான் விரும்பிய ஆடவனை ஊராருக்கு கூறும் மடலேறுகிற உரிமை கிடையாது.  இதனை, 

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல்காப்பியம்; நூ.38)
“மடல்மா கூறும் இடனு மாருண்டே” (தொல்காப்பியம்; நூ. 99)

என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.  இது பெண்ணினத்தை ஆண்கள் எப்படி யெல்லாம் பயமுறுத்தி அடைய முற்பட்டனர் என்பதற்கு சான்றாகிறது.
அதே போல ஆண்கள் கடல் தாண்டி செல்லலாம்.  ஆனால் பெண்களோடு கடல் தாண்டி செல்லுதல் கூடாது என்பதை,

“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” 
(தொல்காப்பியம்; நூ.37)

என்ற நூற்பா விளக்குவதன் மூலம் பெண்கள் கடல்தாண்டி செல்லும் முறை மறுக்கப்பட்டதை அறிகிறோம். மேலும், காப்பிய காலத்தில் (கி.பி. 2-ம் நூற்றாண்டு) 

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ” என்பதை மையமாகக் கொண்டு சிலப்பதிகார காப்பியமே படைக்கப்பட்டிருக்கிறது.  அதில் தன் கணவனுக்காக மதுரையையே எரித்தாள்.  அதனால் பாண்டிய மன்னனே இறந்தான் என்பதும், கணவன் மீது கண்ணகி எத்தகைய அன்பு கொண்டிருந்தாள்; என்பது வியப்பாயினும் கோவலன் வேறு பெண்ணான ‘மாதவி’ யோடு உறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்ள அவள் எத்தகைய துன்பத்தில் வாழ்ந்திருப்பாள் என்பதே வேதனைக்குரிய விசயமாகும்.  மாதவியோடு வாழ்ந்த கோவலன், வேறு பெண்ணை எண்ணி யாழிசைக்க, மாதவியோ பொய்யாக வேறு ஒரு ஆடவனை எண்ணி யாழிசைக்கிறாள்.  அதனால் கோபம் கொண்டு கோவலன் செல்கின்றான் என்றால் ஆண்களின் ஆதிக்கம் எத்தகையதாக இருந்திருக்கும்.

சேரன் செங்குட்டுவன் “முலை யறுத்த திருமா வுண்ணி” யான கண்ணகிக்கு சிலை எடுக்கும் அளவிற்கு தன் கணவனைக் கொன்ற மன்னனையே எதிர் வினா தொடுத்து மதுரையை அழித்தாள் என்று கூறும் செய்தி வியப்பிற்குரியது என்றால், தூய்மையான அப்பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சென்ற நிலை கொடுமையுடையதா?  இல்லையா?

அக்கால மன்னர் சமுதாயத்தில், வள்ளல், குறுநில மன்னர்;, வேந்தர் என சுமார் 322 - பேர் இருந்துள்ளனர்.  அவர்களுள் ஒருவரேனும் பெண்ணுண்டோ?  இலக்கிய பாடல் பாடியவர்களில் 30 பேர் பெண் என்றால் அப்பாடல்கள் கூட, துன்ப நிலையைத் தான் எடுத்துரைக்கின்றன.  ஆண்களுக்குள்ளான போட்டிகளுள் பெண்கள் பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.  “மகட்பாற் காஞ்சி” என்பதன் வழி பெண்ணை தர மறுத்தவனோடு போரிட்டு பெண்ணை பெற்றால் அப்பெண் எப்படி நிம்மதியான வாழ்வு நடத்தியிருக்க முடியும்.

சேர மன்னன் ஒருவன் வெற்றி பெறுகிறான்.  அவன் எதிர் நாட்டிலுள்ள பெண்களின் கூந்தலை யெல்லாம் அறுத்து கயிறாகத் திரித்து தம் யானைகளை இழுத்து வந்தான் என பதிற்று பத்து பாடல் குறிப்பிடுகிறது.  மன்னர்கள் போரிட பெண்கள் என்ன  பாவம் செய்தார்கள்.  இதனை புலவன் சேரனின் வலிமையை காட்டுவதற்காக பாடினான் எனில், இது போன்ற பாடலை அவனால் எப்படி பாட முடிந்தது?  அதனை ஏற்று மன்னன் எப்படி பரிசில் தர முடிந்தது என்பதெல்லாம் சங்க காலத்தைப் பற்றி முன் வைக்கும் கேள்விகளாகும்.

பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய பெண்கள், தம் கணவன் இறந்து போனால் தானும் இறந்து போவதும், மொட்டையடித்து தம் அழகைச் சிதைத்து, ஒழுங்கான உணவை உட்கொள்ளாமலும் சாகும் காலம் வரை கணவனையே எண்ணி கொண்டு வாழ்ந்த வரலாறு வியப்பானதா?  வேதனையானதா?

“மன்னுறு மழித்தலை யானும் தென்நீர் வார
கழி கல மகளிர் போல” (புறநானூறு 280 : 11-14) பாடலில்,

“முடியினை களைந்த தலையினை கழுவுகின்ற போது, மொட்டையடித்த தலையில் தெளிந்த நீரானது வடிய, பெண்ணானவள் தம் இளமைக் காலத்தில் தழைமாலையாக விளங்கிய ஆம்பல் பூவில் உள்ள அல்லி அரிசியை உண்ணும் அணிகலன்கள் களைந்த கைம்பெண்ணைப் போல” கணவன் இறந்து பின்னர் வாழும் பெண் போல என ஒரு புலவன் மேற்கூறிய செய்தியை தருகின்றார்.  மேலும்,

“கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவி” (புறநானூறு பா.250)

என்ற பாடல்களின் வழி கணவன் இறந்து போக, பெண்ணை மொட்டையடித்தலும், அலங்கோலப்படுத்தலும் ஒழுங்கான உணவின்றி வாழ செய்தலும் எத்தனை கொடுமையுடைய செயல் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. பண்டைய காலம் போர்களே மிகுதியும் நிகழ்ந்த காலமானதால்  எத்தனை பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாகியிருப்பர் என்று எண்ண வேண்டாமா? இவை வியப்பிற்குரியதா? இ;ல்லை வேதனைக்குரியதா? ஆராய வேண்டாமா?

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனும் மன்னனின் மனைவி,         “தௌ;ளழற் பற்றி பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனர் மடந்தை
இன்னும் வாழ்வ லென்னிதன் மார்பே” (புறநானூறு 245: 5-8)

என்று கணவன் இறந்தால் தீயினில் எறிந்து தன் உயிர் மாய்க்கிறாள். பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந் தேவியும், உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள் என்ற செய்திகள் காணப்படுகின்றது. கணவன்  இறந்தாலும் மனைவி இறந்து போவது மரபு என ஒரு புறமிருக்க, இறந்த ஆண்மகனை எறிக்க அதில் தீயில் புகுந்து எறிவதும், அல்லது தீமூட்டப்பட்ட இடத்தில் பெண்ணானவள் தானே எறிந்து சாம்பலாகுவதும் எத்தகைய கொடுமை.  இக்கொடுமையையே மரபென  எப்படி அரங்கேற்றினர். பண்டையோரால் இந்நிகழ்வு எப்படி ஏற்க முடிந்தது.  இத்தகைய  வேதனையை விடவும் பெண்ணினத்திற்கு வேறு வேதனைதான் உண்டா?  பெண்கள் வியப்பிற்குரியோராக  இருந்திடினும், ஆணாதிக்கச் சமூகம் அவர்களை பல்வேறு  வகையான வேதனைக்கே ஆளாக்கியது என்பது மட்டுமே நாம் கண்ட உண்மை. பெண்கள் வியப்பிற்குரியவர்கள் தான்! ஆனால்  சமூக கட்டமைப்பும், ஆணாதிக்கமும் அவர்களை, மரபு எனும் பெயரில் எல்லையில்லாத வேதனையையே அனுபவிக்க வைத்திருக்கிறது. 

துணை நூல்கள் :    
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மு.ப. 1947.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை (அடிகளாசிரியர் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவ10ர். மு.ப. 2008.
3. புறநானூறு, உ.வே. சாமிநாதர் உரை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை. ஏ.ப: 1971.
4. அகநானூறு, ந.மு. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18, இ.ப. 1957.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ரூ பிற இலக்கிய சமூகவியல் நூல்கள்.


*கட்டுரையாளர்: - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -

baluprabhu777@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard