New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நல்வழி உணர்த்தும் அறநெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
நல்வழி உணர்த்தும் அறநெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


நல்வழி உணர்த்தும் அறநெறிகள்

E-mailPrintPDF

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான நல்வழியில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33)

அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10)என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

‘அறம்’ என்ற சொல்லிற்கு ‘EHTIS’என்ற ஆங்கிலச் சொல்லின் இணைப் பதிலிச்சொல்லாக அறம் திகழ்கிறது இச்சொல் ‘அறு’என்னும் வினைச் சொல்லையும் “அம்”என்னும் தொழிற்பெயர் தொகுதியையும் கொண்டு தோன்றியதாகும்.(அறு - அம் ஸ்ரீ அறம்)அறம் என்னும் அடிச்சொல்லிற்கு அறுத்து செல்வழியை உண்டாக்கு ‘துண்டி’ வேறுபடுத்து என்ற பல்வகைப் பொருள் வழங்கி வருகின்றன.இத்தகைய சொல்லமைப்பின் அடிப்படையில் மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம் என்று கூறுவர்.

அறம் என்னும் சொல்லிற்கு நல்வினை,பிச்சை (ஐயம்),ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பது,நோயாளிக்கு இலவசமாகமருந்தீகை,நலமானது,இன்பம் (சுகம்),தகுதியானது,கற்பு,நோன்பு,அறப்பயன்(புண்ணியம்);,சமயம்,ஓதி(ஞானம்),அறச் சாலை,அறத்தெய்வம்,நடுநிலையறம், பேணும் கூற்றுவன் போன்ற பதினைந்து வகையான பொருள்களைப் பேரகர முதலி தருகின்றது.(வே. முத்துலக்மி, பண்டைத்தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள் ,ப.21)

நல்வழி உணர்த்தும் அறநெறிகள்

கடவுள் பற்றும்,தமிழ்ப்பற்றும்
நல்வழி என்ற நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 நேரிசை வெண்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன.கடவுள் வாழ்த்து விநாயகர் கடவுள் வாழ்த்து பாடலில் கல்வியில் முத்தமிழும் வேண்டும் விதமாக அமைந்துள்ளது இதனை,

பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா (நல்.கடவுள் வாழ்த்து)

என்ற பாடலில் ஆனை முகத்தையுடைய விநாயகப் பெருமானே உனக்கு பசுவின் பாலும்,இனிய தேனும்,வெல்லப் பாகும் ,பருப்பும் கலந்து உனக்கு தருவேன் .நீ எனக்கு இயல்,இசை,கூத்து எனும் முத்தமிழையும் தா என்று வேண்டும் விதமாக அமைந்துள்ளது.

நன்மையை செய்
நல்ல செயல்கள் நன்மையைத் தரும், தீய செயல்கள் அழிவைத் தரும் என்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் கூறுகின்றன.எனவே தீமையை ஒதுக்கி ,நன்மையையே செய்க என்கிறார் இதனை,

புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதுஒழிய வேறுஇல்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீPதுஒழிய நன்மை செயல் (நல்.1)

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

உதவி செய்தல் வேண்டும்
மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.நல்வழியில் இடம்பெறும் 2 ஆவது பாடலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இயம்புகிறது.இதனை,

சாதிஇரண்டுஒழிய வேறுஇல்லை சாற்றங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி (நல்.2)

என்ற பாடலானது இல்லாதவர்களுக்கு உதவி செய்பவர் உயர்ந்த சாதியினர்,எவருக்கும் எந்த உதவியும் செய்யாதவர் தாழ்ந்த சாதியினர் இந்த இரண்டு சாதிகள் தவிர இவ்வுலகத்தில் வேறு சாதிகள் இல்லை என்றுரைக்கிறது.

அறம் செய்ய வேண்டும்
துன்பத்திற்கு இடமாக உள்ள இவ்வுடம்பு நிலையானது என்று எண்ணாமல்,நிலையாக உள்ள அறத்தைச் செய்யவதே சிறந்தது இதனை,

இடும்பைக்கு இடும்பை இயல்உடம்பு இதுஅன்றே
இடும் பொய்யை மெய்என்று இராதே - இடும்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு (நல்.3)

என்ற பாடல் குறிப்பிடுகிறது.மற்றொரு பாடலில் பெரிய பூமியிலுள்ள மனிதர்களே வருடா வருடந்தோறும் இறந்தவர் திரும்பி வருவாரோ (வரமாட்டார்) (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை,நமக்கும் அம் மரணமே வழியாகும். நாம் இறந்துபோமளவும் எமக்கு யாது சம்பந்தமென்று பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.இதன் மூலம் இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனினில்லாமையால் கவலையற்று அறம் செய்து வாழ்க என்று ஒளவையார் எடுத்தோம்பியுள்ளார்

உடல் பற்றை பேசாதே

உடம்பின் அழகைப் பற்றி பெருமையாகப் பேசாமலும், பற்று இல்லாமலும் இருக்க வேண்டும் இதனை,
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை –நல்லார்
அறிந்து இருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிரிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு (நல் -7)

என்ற பாடல் இயம்புகிறது.

புகழும் படி வாழ வேண்டும்
பெருமுயற்சி எடுத்துக் கொண்டாலும் நல்வினைப் பயன் இருந்தால் மட்டுமே தேட எண்ணும் பொருள் கைகூடி வரும்.கிடைக்கும் பொருளும் நிலைத்து நிற்காது.ஆகவே நிலைத்து நிற்காது.ஆகவே நிலைத்திருக்கக்கூடிய பெருமையையே தேடிக் கொள்ள வேண்டும்.

ஈட்டும் பொருள்முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம் (நல்.8)

என்ற பாடல் நவில்கிறது.

உழவுத்தொழில் செய்க
வள்ளுவர் உழவுக்கென தனி அதிகாரம் (104) வகுத்துள்ளார்.உழுத்தொழில் செய்யும் வலிமை இல்லாது பிறத் தொழில் செய்கின்றவரையும் தாங்குவதால் உழவுத் தொழில் செய்யும் உழவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் இதனை,

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032) என்ற குறளில் குறிப்பிடுகிறார்.இந்நூலும் அழிதல் இல்லாத உழவுத் தொழில் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கிறது.இதனை,
ஆற்றுங் கரையின் மரமும் அரசுஅறிய
வீற்றுஇருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது (நல்.12)

என வரும் பாடலானது ஓர் ஆற்றின் கரையோரமாக நீண்டு வளர்ந்துள்ள பெரிய மரமும்,அரசனும் அறியும்படியாகச் செல்வாக்குடன் வாழ்கிறவனுடைய பெருவாழ்வும்,ஒரு நாளைக்கு அழிந்து விடும்.ஆகவே உயர்வு நிலை பெற,வாழ வேண்டுமானால் மற்ற தொழில்களில் உள்ளதைப் போல் குற்றம் ஒன்றுமே இல்லாத உழவுத்தொழிலைச் செய்து வாழ வேண்டும் என்று உரைக்கிறது.

பிச்சை எடுக்ககூடாது
பிச்சை எடுத்து வாழ்வது இழுpவானது.பலராலும் இகழப்பட்டு வாழ்வதைவிட மானம் அழியாமல் இறந்து போவதே மேலானது இதனை,

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும் (நல்.14)

என்ற பாடலின் மூலம் மானத்தை நிறுத்துத்துதலே உயர்வுடையது என்ற கருத்து புலப்படுகிறது.

சிவபெருமானை இடைவிடாது நினைத்தல் வேண்டும்
சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை நினைத்து கொண்டிருப்பவர்க்கு விதியால் வரும் துன்பம் இல்லை என்ற கருத்தை 15 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்

இதன் மூலம் கடவுள் பற்றை வளர்க்கிறார்.

வியத்தகு விழுப்பொருளில் ஈகை
மற்றவருக்கு கொடுக்கும் தன்மையே, சிறந்த பண்பு ஆகும .இல்லையென இரப்பவர்க்கு வேண்டுவன கொடுத்தல் வேண்டும்.வள்ளுவரும் 23 ஆவது அதிகாரமாக ஈகையை வைத்துள்ளார்.

இப்படி கொடுக்கும் தன்மையால் மற்றவர்கள் பெருமை அடைவார்கள் என்பதை 16 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை

“………………………… தக்கோர் குணங்கொடையால்

அற்புதமாம் என்றே அறி (நல்.16)” என்ற பாடலடிகள் கூறுகிறது.

அருளுடைமை
வள்ளுவரும் அருளுடைமை என்ற அதிகாரத்தை 25 ஆவது அதிகாரமாக அமைத்துள்ளார். எல்லா உடைமைகளிலும் அருளுடைமையே சிறந்த உடைமை ஆகும்.இதனை,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள (குறள்.241)

என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

மற்றவர்களிடம் கருணை உடையவர்களாக இருக்க வேண்டும்.கருணை உடைய பண்பே கண்களுக்கு பெருமை சேர்க்கிறது இதனை,

கண்ணீர்மை மாறாக் கருணையால் - ………..
………………………………………………….
அற்புதமாம் என்றே அறி (நல்.16)”

என்ற பாடலடிகளால் உணரமுடிகிறது.

கற்பு

ஒரு பெண் கற்புடன் இருப்பதே சிறந்தது ஆகும். பெண் என்ற சொல்லிற்கு அழகு, மாதர் என்று பல்வேறு பொருள் உண்டு.தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் ஒர் இயலாக கற்பியலை அமைத்துள்ளார்.கற்பு என்பது வதுவைச் சடங்களுடன் பொருந்திக் கொள்ளுவதற்குரிய மரபினையுடைய தலைவன்,தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பக் கொள்ளுவது ஆகும்.இதனை,

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.பொருள்.கற்பு.நூற்.1)
நல்வழியும் இக்கருத்தையே குறிப்பிடுகிறது.இதனை,

பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி (நல்.16)”

என்ற பாடலடிகள் தெளிவுப்படுத்துகின்றன.

விலைமகளிரை நாடாமை

விலைமகளிரான பரத்தைக்கு இளம்பூரணர் கீழ்க்கண்டவாறு விளக்கம் தந்துள்ளார்.

பரத்தையராவர் யாவரெனின் அவர் ஆடலும்
பாடலும் வல்லராக அழகும் இளமையும் காட்டி
இன்பமும் பொருளும் வெஃகிஇ ஒருவர் மாட்டு தங்காதார் (தொல்.பொருளியல்.ப.295)

விலைமாதரைப் போற்றி மகிழ்பவன் அம்மிக் கல்லைத் தெப்பமாக கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயலும் அறிவற்றவனைப் போல் அவதியுறுவான் அவன் செயல் அவன் செல்வத்தை அழித்து வறுமைக்கு விதையிட்டுவிடும் இப்பிறவிக்கு அடுத்த பிறவிக்கும் தீமையைச் சேர்த்து விடும் என்பதை,

அம்மி துணையாக ஆறுஇழிந்த ஆறுஒக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியும் போக்கி
வெம்மைக்கு வித்தாய் விடும்

என்ற பாடலால் விலைமகளிரை நாடக் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.

வஞ்சனையில்லா நெஞ்சம் உடையவராக இருக்க வேண்டும்
வஞ்சகம் இல்லா நெஞ்சையுடையவர்களுக்கு நீர் வளம்,நல்ல வீடு,வயல் விளைச்சல்,புகழ்,சிறப்பான வாழ்க்கை,வாழ்வதற்கு நல்ல ஊர்,நாளும் வளர்கின்ற செல்வம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை திருமகள் கொடுப்பாள் என்பதை,

நீரும் நீழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்

வரும்திருவும் வாழ் நாளும் வஞ்சகம்இல்லார்க்கு என்றும்

தரும் சிவந்த தாமரையாள் தாள் (நல்.21)

என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

பாவிகளாக இருக்க கூடாது
அரும்பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் பயனைத் தாமும் அடையாமல்,மற்றவர்களுக்கு உதவாமல் ,மண்ணிலே புதைந்து வைத்து மறைந்து போகும் பாவிகளே உங்கள் மறைவுக்குப் பின் அந்த பணத்தை அனுபவிப்பவர் யார்?(யாரும் அனுபவிக்க முடியாமல் மண்ணுக்குள் அழிந்து போகும் இத்தகைய பாவிகளைப் பற்றி,

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்த வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயின பின்பு யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் (நல்.22)

என்ற பாடல் புலப்படுத்துகிறது.

பொய்சாட்சி சொல்லக் கூடாது
பொய்ச் சொல்பவன் வீட்டில் பேய்கள் குடியிருக்கும்,வெள்ளெருக்குச் செடிகள் வளர்ந்து பூக்கும் பாதாள மூலி படரும் மூலி படரும் மூதேவி நிலையாகத் தங்கி வாழ்வாள் பாம்புகள் குடிபுகும் .(அவன் வீடு மனிதர் வாழும் வீடாக இராமல் பாழடைந்து போகும் )

வேதாளம் சேருமே வெள்எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்று ஒரம் சொன்னார் மனை (நல்.23)

என்ற பாடல் பொய்சாட்சி சொல்லக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.

குடும்பத்தில் மனைவி இருக்க வேண்டும்
மனைவி இல்லாமல் வாழ்பவன், மனைவியை வீட்டை விட்டு துரத்தி அடிப்பவன்,ஆகியோர்களின் குடும்பம் பாழாகும் என்பதை,
………………………………….பாழே
மடக்கொடி இல்லா மனை (நல்.24:3-4)

 

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

பழிபாவத்திற்கு அஞ்ச வேண்டும் மனைவி
மனைக்கு விளக்கு போன்ற மனைவியானவள் பழி பாவத்திற்கு அஞ்ச வேண்டும்.அப்படி அஞ்சாமல் இருக்கும் மனைவியை விட்டு பிரிந்து வாழ்வது சிறந்தது ஆகும் இதனை,

………………………………….பழிக்கு அஞ்சாத
தாரத்தின் நன்று தனி (நல்.31:3-4)

என்ற பாடலடிகள் தெளிவுப்படுத்துகிறது.

ஏழைக்களுக்கு சோறும் நீரும் கொடு
ஆற்று வெள்ளத்தினால் மேடு பள்ளங்கள் ஏற்படுவதைப் போலச் செல்வம் வளர்வதும் குறைவதுமாக இருக்கும் .ஆகவே ,செல்வம் உள்ள போதே இல்லாத ஏழைகளுக்குச் சோறும் நீரும் தந்து உதவ வேண்டும்.இதனால் உள்ளத்தின் பண்பு சிறந்து ஓங்கும் இதனை,

ஆறுஇடும் மேடும் மடுவும் போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறு இடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்நீர்மை நன்று தனி (நல்.32)

என்ற பாடல் சுட்டுகிறது.

வரவறிந்து செலவு செய்ய வேண்டும்

வரவுக்கு மிகுதியாக செலவு செய்பவன் பழி பாவங்களை அடைவான். ஆதலின் வரவுக்கு தக்க செலவுகளை செய்ய வேண்டும் என்பதை,

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிக்கெட்டுப் போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு (நல்.25)

என்ற பாடல் குறிப்பிடுகிறது.

தம்மிடம் உள்ள செல்வத்தை மறைக்காமல் கொடுக்க வேண்டும்
மரத்தின் கனிகள் பழுத்திருந்தால் வெளவாலை அழைக்க வேண்டியது இல்லை.அது தானே வந்து சேரும் .கன்றுக்குத் தாய்ப் பசுவானது பாலைத் தானே சுரந்து அளிக்கும்.அதுபோலத் தம்மிடம் உள்ள செல்வத்தை மறைக்காமல் கொடுப்பார்களானால் அவர்களைத் தேடி உலகத்தவர் உறவினர்களாகத் தாமே சென்று சேர்வர் என்பதை,

மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை – சுரந்து அமுதம்
கன்றுஆ தரல்போலச் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் (நல்.29)

என்ற பாடலால் அறியலாம்.

ஒழுக்கம்

ஒருவன் ஒழுக்கமுடையவனாக இருப்பதே சிறந்தது ஆகும்.குடிப்பிறப்பைக் காட்டிலும் ஒழுக்கமுடைமை சிறந்தது இதனை,
………………………….சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று (நல்.31)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

பொருளை அறிந்து கொள்க

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
கலைஅளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு (நல்.40)

வள்ளுவரின் திருக்குறளும் ,நான்கு (ரிக், யசூர்,சாமம், அதர்வனம்) வேதங்களும் ,அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் எனும் மூவர் பாடிய தேவாரமும்,மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரும்,திருவாசகமும்,திருமூலர் எழுதிய திருமந்திரமும் ஒரு பொருளையே கூறுகின்றன என்பதை அறிந்து கொள்க என்று குறிப்பிடுகிறார்.தமிழில் உள்ள நீதி நூல்களையும் பக்தி நூல்களையும் படித்து பொருள் அறிய வேண்டும் என்று கூறுகிறது மேற்கூறப்பட்ட பாடல்.

முடிவுரை
அறம் என்பதன் பொருள், கடவுள் பற்றும்,தமிழ்ப்பற்றும் இருக்க வேண்டும், நன்மையை செய், உடல் பற்றை பேசாதே, புகழும் படி வாழ வேண்டும், உழவுத்தொழில் செய்க, பிச்சை எடுக்ககூடாது, விலைமகளிரை நாடக் கூடாது, வஞ்சனையில்லா நெஞ்சம் உடையவராக இருக்க வேண்டும், பாவிகளாக இருக்க கூடாது, வரவறிந்து செலவு செய்ய வேண்டும், தம்மிடம் உள்ள செல்வத்தை மறைக்காமல் கொடுக்க வேண்டும், பொருளை அறிந்து கொள்க,ஒழுக்கம் உடையவராக இருக்க வேண்டும் என்ற அறநெறி கருத்துக்களை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1). தண்டபாணி .துரை (உ.ஆ) நீதிநூல்கள்(மூலம்பதவுரைகருத்துரை), உமா பதிப்பகம், சென்னை -600001, 16 –ஆம் பதிப்பு 2013
2). திருநாவுக்கரசு .க.த, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, மறுபதிப்பு - 1977
3. பூவை அமுதன், நீதி நூற்களஞ்சியம், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600017, முதற்பதிப்பு -1996 ,இரண்டாம்பதிப்பு - 2000
4 .மெய்யப்பன் .ச ப.ஆ), நீதி நூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600108, முதற்பதிப்ப-2006
5) சுப்பிரமணியன் ச.வே தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600018, முதற்பதிப்பு - 1998
6) பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ), நீதி நூல் களஞ்சியம்ம, கொற்றவை வெளியீடு, சென்னை -600017, முதற்பதிப்பு -2014
7). பாலசுந்தரம் ,ச, திருக்குறள் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600017, பதிப்பு -2000

jenifersundararajan@gmail.com

*கட்டுரையாளர்:      -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard