New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும் - முனைவர் சு.தங்கமாரி


Guru

Status: Offline
Posts: 24791
Date:
விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும் - முனைவர் சு.தங்கமாரி
Permalink  
 


விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

E-mailPrintPDF

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம். 

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

அவ்வையின் அமுத மொழி:
உணவு என்பது ஒரு அற்புதமான மருந்து. “உணவே மருந்து” என்றும் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அப்படிப்பட்ட உணவினை ஏற்கும் வயிற்றின் தன்மை குறித்து அவ்வையார்,

“ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது!”


என்று மிக அழகாகப் பாடியுள்ளார்.யோசியுங்களேன். நம் வயிற்றினுடைய தன்மை எப்படிப்பட்டது? ஒரு விருந்திற்கு நாம் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அங்கே அறுசுவையும் கொண்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. ஆஹா! அற்புதம் அறுசுவை உணவு.ஆகவே இந்த உணவிற்காக மூன்று நாட்களுக்குச் சேர்த்து உண்டுவிடலாம் என்பதற்காக நம்மால் உண்ண முடியுமா? யோசித்துப் பாருங்கள்! முடியாது.அதேவேளை நமக்குச் சனி ஞாயிறு விடுமுறை விடுவது போல இரண்டு நாட்களுக்கு நம் வயிற்றிற்கு விடுமுறை கொடுப்போம் என்று இரண்டு நாட்கள் உண்ணாமல் இருப்போம் என்று முடிவு செய்வோமாயினும் நம் வயிறு நம்மைச் சும்மா விடாது.அத்தகு தன்மை கொண்ட வயிறே உன்னோடு வாழ்தல் மிக துன்பமானது என்று கூறுகின்றார்.உண்மை இது தான்! ஆனால் மனிதகுலம் இன்று பதுக்கல் வேலை செய்கின்றது.இப்பதுக்கல் செயலால் ஒரு கூட்டம் உணவினை விரயம் செய்கின்றனர்.ஒரு கூட்டம் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் துன்பப்படுகின்றனர்.

விருந்தோம்பல் - சொல் விளக்கம்:
உணவின் தேவை குறித்தும் அதன் தன்மை குறித்தும் நன்கு அறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.ஆகவே பசிப்பிணி போக்குவதற்கான நோக்கமே முதன்மை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம் ஆகும்.மேலும்,தமிழர்கள் பசிப்பிணியை போக்கும் சொல்லான “விருந்தோம்பல்” எனும் சொல்லே சிறப்பிற்குரிய சொல்லாகும். எந்தச் சொல்லிற்கும் செயலிற்கும் காரணம் கருதியே பெயர் வைத்தனர்.விருந்து+ஓம்பல்= விருந்தோம்பல் ஆகும். இங்கே ‘விருந்து’ என்ற சொல்லும் ‘ஓம்பல்’ என்ற சொல்லும் இணைந்துள்ளது. 

இலக்கியத்தில் விருந்தோம்பல்: 
விருந்து என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் ‘விருந்தே தானும் புகுவது புனைந்த யாப்பின் மேற்றே’{செய்-23}என்று விளக்கம் தருகின்றார். அதாவது ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள் தருகின்றனர்.’ஓம்பல்’ என்ற சொல்லுக்குப் ‘பாதுகாத்தல்’ என்று பொருள். அதாவது விருந்தோம்பல் என்ற சொல்லுக்குப் புதியவரைப் பசிப்பிணியில் இருந்து பாதுகாத்தல் என்று பொருள் பட சொல்லியுள்ளனர். இன்றைய காலத்தில் புதியவர் வெயிலின் கொடுமையிலிருந்து சற்று விலகி இளைப்பாற எண்ணும் பொழுது வீட்டின் முன்பு சிறு திண்ணையில் அமர்ந்து விடக்கூடாது என்ற உயரிய(!?) நோக்குடன் ஒரு சிலர் வீட்டின் முன்பு சிறு திண்ணை கூட வைக்க மறுக்கின்றனர். ஆனால் அன்றைய பழந்தமிழர் விருந்தோம்பல் என்பதே புதியவர்களுக்கு உணவு வழங்குவது என்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தனர். அதிலும் விருந்து எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”         என்றும்

 

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு” 


என்றும்  குறிப்பிடுகின்றார்.

அதாவது,நம் இல்லத்திற்கு வருகை தரும் விருந்தினரை இன்முகத்தோடு விரும்பி வரவேற்று அவர்களைப் பேணி அவர்களுக்கு விருப்பமான உணவினைப் பரிமாற வேண்டும். அப்படி இல்லாது பரிமாறுகின்ற நேரத்தில் முகந்திரிந்து நோக்குவோமாயின் அதைவிடக் கொடியது வேறு எதுவும் இல்லை. ‘அனிச்சம்’ என்னும் ஒரு மலர் இருந்ததாம். அம்மலரினை அதன் மணத்திணை முகர்ந்தவுடன்,அம்மலர் மீது நம் மூச்சுக் காற்றுப்பட்ட உடன் வாடி விடுமாம். மேலும் அப்படி இல்லாது இன்முகத்துடன் பரிமாறப்படும் விருந்து என்பதை நாம் நொடி பொழுதும் தவறாது பேண வேண்டும் என்பதையும் அவர் சுட்டுகின்றார். இன்றும் கூட நம் இல்லங்களுக்கு வந்து திரும்பும் விருந்தினரை நாம் வாசற்படி வரை வந்து வழியனுப்பும் வழக்கம் உள்ளது. இது விருந்தினர் புதியவர் வருவதை எதிர்கொள்ளும் பழக்கத்தின் எச்சமாகும்.

விருந்து என்பது நாம் அளிக்கும் பொருளில் இல்லை; விருந்து அளிக்கும் முறையில் உள்ளது.அதாவது முகம் மலர்ந்து அவர்களைக் கவனிக்கும் பொழுது, விருந்துப் பொருள் உப்பில்லாக் கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும் என்று விவேக சிந்தாமணி சுட்டுகின்றது.

“ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உன்மைபேசி
உப்பில்லாக் கூழிட்டாலும் உன்பதே அமுதமாகும்
முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின்,கப்பிய
பசியினோடு கடும்பசிஆகுமன்றோ”.


என்று சிறப்புறச் சுட்டுகின்றது. 

மேலும், விருந்தோம்பல் சிறப்பினையும், உணவு கொடுத்துப் பசிப்பிணியைப் போக்குவதையும் பெரிய அறமாகக் கருதியிருந்தனர் நம் முன்னோர்கள் என்பதை அன்றைய காலத்தைய இலக்கியங்கள் வாயிலாக நன்கு அறியலாம்.

“அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மணி உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்”   
{மணிமேகலை:25-288-291}

இந்த உலகிலேயே உயர்வான அறத்திற்கெல்லாம் அறமாகக் கருதப்படுவது எதுவென்று கேளுங்கள்? இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடமும் கிடைக்கப்பெறுவதே ஆகும் என்று மணிமேகலை மேற்கண்ட வரிகளின் வாயிலாக அறிய முடியும். மேலும் சிலப்பதிகாரம்,

“அறவோர்க் கலித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”    {சிலம்பு-71,73}

என்ற வரிகளின் மூலம் விருந்தின் சிறப்பினை மிக அழகாக வெளிப்படுத்துகின்றது. புறநானூறும் “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”[புறம்-18] என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றது. 

பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 81 இடங்களில் ‘விருந்து’ குறித்த குறிப்புகளைப் பெற்று விளக்கப்படுகின்றது. விருந்தோம்பலோடு இணைந்த ஈகை, தனிப் பண்பாட்டுக் கூறாகவே மாற்றம் பெறுவது சங்க காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்துள்ளது. பண்ட மாற்று முறை வழக்கத்திருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும்  இல்லாத சூழ்நிலை நிலவியது. இருப்பினும் புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு நம்மிடையே உருவாயிற்று. விருந்தினரை வரவேற்கக் காத்திருக்கும் அடைக்காத வாயில்கள் இருந்ததாக அக இலக்கியங்கள் பதிவு செய்து உள்ளன. திருவிழா நடைபெறும் நாட்களில் பெரிய பானைகளில் உணவு தயாரிக்கப்பட்டு, சுற்றத்தாருக்கும் புதிதாக விழா பார்க்க வரும் விருந்தினர்க்கும் உணவு அளிப்பதற்குப் பண்டை தமிழர் காத்திருந்தனர். இப்படி உயரிய சிந்தனையோடு மனித குலம் தழைத்தோங்கும் சிந்தனையை மையமாகக் கொண்டு வாழ்ந்த நம் பழந்தமிழர் போற்றுவதற்கு உரியவராவார். அவர்கள் வழி வாழ வேண்டிய புதுமை வாழ்வினை வாழ நாம் உறுதி ஏற்கவேண்டும்.

முடிவுரை:
மேலும், நம் இல்லங்களுக்கு வரும் விருந்தினருக்கு எப்படி அமுது படைக்க வேண்டும் என்பதை நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்லும் அழகினைப் பாருங்கள்!என்னே ஓர் விருப்பமுடைய விருந்து. இதனை நாம் விருந்தோம்பலின் இலக்கணமாகக் காணலாம். 

“வாழை இலையின் அடி உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக் கறிவகைகள் - சூழ வைத்துத்
தண்ணீர் வெந்நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன் மிக இனிக்கும் - பண்ணியமும்
முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின் - பால் சோறிட்டுத் தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல் வேண்டும் தாய்போல் ஒண்தொடியே!கேட்டுப்போ!”


என்கின்றார்.விருத்தோம்பலில் தாய் தன் பிள்ளைக்கு உணவிடுவது போல கவனிக்க வேண்டுவது சிறப்பு.

“எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மென்மேலும் அள்ளிவை - விக்குவதை
நீமுன் நினைத்து நினைப்பூட்டி நீர் அருந்து
ஈமுன் கால் சோற்றிலையில் இட்டாலும் - தீமையம்மா
பாய்ச்சும் பசும்பயிற்றுப் பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு தொன்னை பல வைத்திடுவாய்
ஆயுணவு திரிந்தே அவர் எழுமுன் - தாயே
அவ்வகைக்கு நீரேந்தி நெய்ப்பசை அகற்ற 
உவர்கட்டி தன்னை உதவு - துவைத்த துகில்
ஈரம் துடைக்க எனஈந்து,மலர்ச் சந்தனமும் 
ஓரிடத்தே நல்கியே ஒளி இலைகாய் சேரவைத்து
மேல் விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே!”


இப்படி ஒரு கவனிப்பினை நாம் நம் விருந்தினருக்கு அளிப்போமாயின் அவ்வுலகில் உள்ள தேவர் அருந்துவதாகக் கருதப்படும் அமிழ்தினை உண்ட பெருமயக்கம் உண்டாகும் என்பது திண்ணம்.இன்றைய நவீன உலகில் மனிதத்தைப் பேணூவதற்கான முதற்படியும் முழுமுதற்படியும் விருந்தோம்பல் தான்  என்பதை  உணர்வோம்   மக்களே!

துணைமை நூல்கள்:
1)    தொல்காப்பியம்
 -    இளம்பூரணர் உரை
2)    சிலம்பதிகாரம்            -    சாரதா பதிப்பகம்,திருச்சி
3)    மணிமேகலை            -    சாரதா பதிப்பகம்,திருச்சி
4)    குடும்ப விளக்கு        -    புரட்சிக் கவி பாரதிதாசன்.

thangamari@vhnsnc.edu.in

*கட்டுரையாளர்: - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard