New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை- - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை- - சு.ஜெனிபர்
Permalink  
 


அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை

E-mailPrintPDF

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் இன்னா செய்யாமை குறித்த செய்திகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்னா செய்யாமை
உலகில் வாழப்பிறந்த உயிர்கள் அனைத்தும் பிறர்க்குத் துன்பம் அடையச் செய்து விட்டு அதனால் ஒருவன் பயன்  பெற்று வாழ்வது அற நூல்களில் விலக்கப்பட்ட ஒன்றாகும்

 

இன்னா செய்யாமை என்பது தனக்கு ஒரு பயன் நோக்கியோசெற்றம் காரணமாகவோ சோர்விலோ ஓருயிர்க்குதுன்பத்தை ஏற்படுத்தாமை என்று பரிமேலழகர் விளக்குகின்றார்.(திருக்குறள் உரைக்கொத்து,அறத்துப்பால்,.248)

வள்ளுவர் பெருஞ்செல்வத்தைப் பெற்றாலும் பிறர்க்குத் துன்பம் செய்யக் கூடாது:அதுவே, மாச்சற்றவனின் பண்பு என்கிறார் (311) பிறர் நமக்கு தீமை செய்யினும் நாம் மீண்டும் அத்தீமைக்குயைப் பிறர்க்குச் செய்யாமையை இங்கு வலியுறுத்துகிறார் (312-313) இன்னா செய்தவரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் என்றும் கூறுகிறார் (314) ஒருவன் பிறருடைய நோயையும் தன் நோய் போல் கருத வேண்டும் என்பதை,

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை   (குறள்.315)

என்ற குறளின் வழி அறியலாம்.மனதாலும் பிறர்க்கு துன்பம் செய்ய நினைக்கக் கூடாது (317) ஏனெனில், ஒருவன் பிறர்க்கு முற்பகலிலே வந்து சேரும் என்பதை,

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்          (குறள்.319)

என்ற குறளில் அறியமுடிகிறது.இக்கருத்திற்கு அரண் சேர்க்கும் விதமாக

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (கொ.வே.74)

என்ற பாடல் வள்ளுவர் கருத்தையே வழிமொழிகிறது.ஆகையால், துன்பம் இல்லாமல் வாழ நினைப்பவன் பிறர்க்குத் துன்பம் செய்யக் கூடாது என்று கூறுகிறார் வள்ளுவர்.

இன்னாசெய்யாமைஎனும்அதிகாரம்நாலடியாரில்இடம்பெறவில்லை.ஆனால் தீவினை அச்சம்,சினமின்மை போன்ற அதிகாரங்கள் இன்னாசெய்யாமை கருத்துக்களை எடுத்துரைக்கின்றன.

அடுத்து அடுத்து அல்லன செய்வார்க்கு நல்லனவே செய்வர் நல்லோர் (69),மேலும் அஃறிணை உயிரினங்களைத் துன்பப்படுத்த கூடாது என்ற கருத்தை சமணமுனிவர்கள் முன்னிறுத்தியுள்ளனர்.இதனை,

இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் : சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார்    (122)

என்ற பாடலில் பறவைகளைக் கூண்டுகளில் அடைத்துப் போடுகிறவர்.தொடர்ப் பிறவிகளில் கால் விலங்குகள் பூட்டப் பெற்ற அடிமைகளாய்த் துன்புறுவர்.இக்கால சமுதாயத்திலும் கூண்டில் பறவைகளை அடைத்து துன்புறுத்தும் செயல் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.பொதுவாக கூண்டில் பறவைகளை அடைப்பது குற்றம். கால்களில் இரும்பு விலங்கு பூட்டப்பெற்று அடிமைகளாக நிலத்தில் மக்கள் வேலை செய்துள்ளனர்.வினைக் கொள்கையை முன்னுறுத்தி மக்களைத் தவறு செய்வதிலிருந்து தடுத்துள்ளனர் என்பது அறியமுடிகிறது.

பழமொழி நானூற்றில்  இன்னா செய்யாமை  என்னும்  பகுதியில் எளியவருக்கும், வறுமையார்க்கு ஒரு துணையும் இல்லார்க்கு இன்னா செய்யக் கூடாது.(43,44)

மற்றவர்க்கு மனத்தினால் கூட துன்பம் செய்யக் கூடாது. செய்தால் காலைப் பொழுதில் கேடு இழைத்தான் எனில் அதன் அடித்தடம் மாறும் முன்பே மாலையில் அவனைக் கேடு வந்து சூழ்ந்து கொள்ளுதல் உறுதி என்பதை,

நெடியது காண்கலாய், நீ அளியை நெஞ்சே
கொடிதே கூறினாய் மன்ற – அடியுளே
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்  (பழ.47)

என்ற பாடலில் அறியமுடிகிறது.மேலும் அறிவு,செல்வம் இரண்டும் உடையாரைத் துன்புறுத்துல் கூடாது (48).அறிவில்லாதவர்கள் கீழ்மக்கள் தீங்கு செய்யமாட்டார்கள் (49,50) எனும் கருத்துக்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

மேலும் உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது இனிது (20) ஒருவனை வைவதால் பழியே வரும் (சிறு.33,84),மற்றவர் தரும் துன்பத்திற்காக நாமும் அவர்க்கு துன்பம் தரக்கூடாது (நான்.11)பிறிதோர் உயிர்க்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை உயிர்நோய் செய்யாமை (சிறு.30),பிறர்க்குத் துன்பத்தை செய்யாதவன் என்பதை கூர்ந்த அலைபுரியான் (ஏலா.2),எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையை உடையவராக இருக்க வேண்டும் (68) போன்ற இதற்கொத்த கருத்துக்களைத் தந்துள்ளன.மேலும் திரிகடுகம் ஒரு பாடலில் ஊராரை வருத்தும் செயல்களைக் குறிப்பிடுகின்றன,இதனை,

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்,வீழக்
களியாதான் காவாது உரையும் தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும் - இம்முன்றும்
ஊர் எலாம் நோவது (திரி.11)

என்ற பாடலில் அழைப்பு இல்லாமலே கூத்தினைச் சென்று பார்த்தலும்,கள் குடித்தவன் போல அடக்கம் இல்லாது பேசுதலும்,மதியாதான் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் போதலும்,ஊரே பார்த்து துன்பப்படும் செயல்களாகும் என்று கூறி இன்னா செய்யாமையை செப்புகிறது.

மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கு அரண் சேர்க்கும் வகையில் பிற்கால நீதி இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன.
ஆத்திசூடி பிறருக்குத் தீமை செய்யும் வழக்கத்தை விட்டு விட வேண்டும் என்கிறது இதனை,
கெடுப்ப தொழி   (ஆத்தி.38)

என்ற பாடலால் அறியமுடிகிறது.தாமும் பிறரும் பின்னர் எண்ணி வருந்த தக்க செயல்களை மேற்கொள்ளாதே என்பதை,

நைவினை நணுகேல்  (ஆத்தி.74)

என்ற வரி குறிப்பிடுகிறது.மேலும் விவிலிய நீதிமொழிகள்

அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே
அவன் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கிறவன் அன்றோ ?  (3:29)
ஒருவன் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும் போது
அவனை வீண் வாதத்திற்கு இழுக்காதே                  (3:30)

முடிவுரை
வாழும் காலம் சில என்றாலும் அக்காலத்தில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது சிறந்தது. இதனையே அற இலக்கியங்கள் தெளிவுப்படுத்துகின்றன என்பதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது. இதனை இக்கால மக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

துணைநூற்பட்டியல்

1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)             நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5.  கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)                இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014 6.இராசாராம்.துரை            6. பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995
7 நாமக்கல் கவிஞர்                          திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
8 மாணிக்கம் .அ                             திருக்குறள் தெளிவுரை\ தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
9 நாராயணசாமி .இரா                  திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098   முதற்பதிப்பு -1997

jenifersundararajan@gmail.com

 

* கட்டுரையாளர் : -  சு.ஜெனிபர்  முனைவர் பட்ட ஆய்வாளர்  பாரதிதாசன் பல்கலைக்கழகம்  தமிழியல் துறை திருச்சி - 24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard