New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு
Permalink  
 


பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு- முனைவர் க.லெனின்

முன்னுரை 
வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்டிருக்க வேண்டும். நெருப்பைக் கண்டறிந்த பின்னர் கிழங்குகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அதன் சுவையை அறிந்திருக்க வேண்டும். காட்டில் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி எரிந்தபோது, அங்கு வாழும் விலங்குகள் சில நெருப்பில் சிக்கி இறந்தன. அவற்றைப் பார்த்த மனிதன் கிழங்கு என்றெண்ணி இறைச்சியை உண்டிருக்கிறான். கிழங்கு இல்லை இறைச்சி தான் என்று அறிந்த பழங்கால மனிதர்கள் அவற்றின் சுவையின் காரணமாக அதனை விரும்பித் தின்றிருக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனிதன் சைவ உணவில் இருந்து அசைவ உணவுக்கு வந்திருக்கலாம். சைவ உணவை விட அசைவ உணவில் சக்தியும், வலிமையும் அதிகம் இருப்பதாக இன்றளவும் மக்களிடையே ஒருவித மனப்போக்கு காண முடிகிறது.

மீன் உணவு
நெய்தல் நில மக்களின் முக்கிய உணவு மீன் உணவாகும். மீனை உணவாகக் கொள்வதன் வாயிலாகப் பல்வேறு புரதங்கள் உடலில் சேர்கின்றன. நெய்தல் நிலத்தில் பெறப்பட்ட இவ்வுணவு அனைத்து நிலங்களுக்கும் கொண்டு செல்லப்பெற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றிலே நன்கு கட்டப்பட்ட தூண்டில் கோலினால் பாண்மகள் மீன் பிடிக்கும் காட்சியினைப் பின்வரும் பாடல் காட்டுகிறது.

“நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” (அகம்.216:1-3)

என்ற அடிகளில், வஞ்சி ஒருத்தி விறகினால் மீனைச் சுட்டு தன் தந்தைக்குக் கொடுப்பதை அறியலாம். உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து வாரல் மீனைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,

“கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” (நற்றி.60:4-6)

என்ற அடிகள் உரைக்கின்றன. இரவில் மீனை உண்ணுதல் (நற்:127), கொழுவிய மீன் உணவை உண்ணுதல் (நற்:159), பரதவர்கள் விடியற்காலையிலே உப்பங்கழியில் சென்று மீனைத் தேடிப் பிடித்தல் (நற்:372) போன்ற செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதன் மூலம் பழந்தமிழ் மக்களிடையே மீன் உணவு பெற்றிருந்த செல்வாக்கினை அறியலாம். கடலிலே சென்ற பரதவர்கள் வலைவீசிப் பிடித்து வந்த மீன்களைக் குவியலாக மணலில் குவித்து வைப்பர் அந்த மீன்களை விற்றலும், கருவாடு ஆக்குதலும், மீனில் இருந்து எடுக்கக் கூடிய நெய்யை விளக்கிற்குப் பயன்படுத்தியதையும்,

“நெடுங்கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழிமணல் குவைஇ,
மீன் நெய் சுட்டிக் கிளிஞ்சல் பொத்திய” (நற்றி.175:1-3)

என்னும் அடிகள் எடுத்துரைக்கக் காணலாம். மேலும் பரதவர்கள் கடலில் மீன் பிடிப்பதை தங்களின் முதன்மைத் தொழிலாகக் கொண்டனர் (ஐங்:180), மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்கு, மூரலாகிய வெண்சோற்றை ஆக்கி அதனோடு அயிலை மீனின் குழம்பு வைத்து கொழுமீன் கருவாட்டுடன் கொண்டு சென்றாள் பரதவப் பெண் என்பதை,

“உப்பு நொடைநெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சோறு
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.60:4-6)

என்ற பாடல் காட்டுகின்றது. கொழுப்புடைய மீன் (அகம்:80), கடல் மீன் (அகம்:10), வாளைமீன் (எம்:126), வாரல் மீனின் நீண்ட துண்டுகள் (அகம்:213), கொழுமீன்களை உண்ட சிறுகுடி சிறுவர்கள் (அகம்:290), தேக்கின் இலையில் மீன் குழம்பினை ஊற்றி சுடச்சுட உண்ணுதல் (அகம்:315) போன்றச் செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதைக் காணமுடிகிறது. மேலும், புல்லரிச் சோற்றினைக் கருவாட்டோடு சேர்த்துத் தம் சுற்றத்தாருடன் உண்டனர் என்பதை,

“முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடுஊன் புழுக்கல்” (பெரும்பாண்.99-100)

என்ற அடிகள் உரைக்கின்றன.  

பன்றி இறைச்சி

சங்க கால மக்களிடையே பன்றி இறைச்சியை உணவாகக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. குறிஞ்சி நிலத்தில் சிறிய கண்ணுடைய சீற்றம் கொண்ட ஆண் பன்றியானது சேற்றில் விழுந்து ஓடுவதை,

“சிறுகட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும்புறம் நீறொடு சிவண” (நற்றி.82:7-8)

அந்தப் பன்றியை காட்டு நாய்கள் எல்லாம் சேர்ந்து கொன்றன. ஆனால், நாய்கள் அந்த பன்றியை திங்காதவாறு கானவர் துரத்தி அடித்தனர். பன்றியை தம் இல்லத்திற்கு கொண்டு வந்து உண்டார்கள். கானவன் கொன்ற முள்ளம்பன்றியின் தசையோடு சேர்த்து கிழங்கினையும் உண்டனர் (நற்:85), (நற்:75) பன்றிக்கென குறிஞ்சி நிலக் கானவன் பொறி வைத்து அதனைப் பிடித்தான் (நற்:119) என்னும் செய்தியை நற்றிணைப் பாடல்கள் காட்டுகின்றன. உடல் முழுவதும் முள்ளினைக் கொண்ட முள்ளம் பன்றியினைச் சீண்டினால் தன் உடல் முழுவதும் முள்ளாய் துருத்தி நிற்கும் தன்மையை உடையது. அப்படிப்பட்ட பன்றியினை எயினர்கள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதனை,  

“முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றுக்கு நின் நிலை அறியச்” (ஐங்குறு.364:1-2)

என ஆசிரியர் கூறுகின்றார்.

பசுவை உண்ணல்
பசு புனிதமாகக் கருதப்படுவதற்கு முன்னர் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பசுவினைப் பலியிடுவதை அகநானூற்றில் காணமுடிகிறது. இவ்வாறு பசு உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதைப் பின்வரும் நற்றிணைப்பாடல் எடுத்துரைக்கிறது.

“ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்” (நற்றி.82:7-8)

என்ற அடிகளில், மலைப்பக்கத்தில் உள்ள செந்நாயானது பசுவைக் கொன்று தின்றது. தின்று போட்ட மீதி உணவை பாலை வழியில் செல்வோர் தீயினுள் மயில் இறகால் தொடுக்கப் பெற்ற மாலையை அணிந்த வீரர்கள் பூக்கள் நிறைந்த காட்டில் சென்று தங்கினர். அங்கு இருந்த இளம் பசுவைக் கொன்று தின்றார்களாம். (அகம்:249) பால்தரும் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்கள் கரந்தை வீரர்களைக் கொன்று பசுவை கொண்டுச் சென்றனர். போகும் வழியில் அவர்களுக்கு பசிக்கவே, கொண்டுச் சென்ற பசுக்களில் கொழுத்தது எது என பார்த்து அதை வெட்டி சமைத்து உண்டார்களாம் (அகம்:309) எருதினைக் கொன்று அதன் தொடையினை உண்ணல் (அகம்:265) போன்ற செய்திகள் இலக்கியங்களில் காணமுடிகிறது. மணிமேகலையில் உயிர்க்கொலை கூடாது. பசுவை கொல்லக் கூடாது போன்ற செய்திகள் இடம்பெறுகிறது. ஆனால், இன்றும் பசுவைக் கொன்று உண்ணும் பழக்கம் நம் தமிழர்களிடத்தில் இருந்துவருகிறது.

ஆட்டிறைச்சியும் மானிறைச்சியும்
ஆடு, மான், காடை, முயல், செம்மறி ஆடு, உடும்பு, கானங்கோழி போன்றவற்றையும் மனிதன் உண்டு களித்திருக்கின்றான். நற்றிணையில்,

“மை ஊன் தெறிந்த நெய் வெண் புழுக்கல்” (நற்றி.83:5)

ஆட்டினை வெட்டி அதன் இறைச்சியோடு பசும்நெய் கலந்து வெண்மையான சோற்றிலே இட்டு சுடச்சுட வழிப்போக்கர்களுக்கு விருப்பமொடு தருவார்களாம். அதைப்பொல,

“காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி” (பெரும்பாண்.105-106)

பொருநராற்றுப்படையில், அருகம்புல்லை அதிகம் சாப்பிட்டு வந்த செம்மறி ஆட்டுக்கிடாவை வெட்டி அதனுடைய கொழுத்த இறைச்சியினை ஒரு இரும்பு கம்பியில் மாட்டி அதை நெருப்பிலே காட்டி நன்றாக வெந்தவுடன் எங்கள் வாயிலேப் போட்டுக் கொண்டோம். சூடு பொறுக்க முடியாமல் வாயின் இடப்பக்க ஓரத்திலும், வலப்பக்க ஓரத்திலும் வைத்து எங்கள் சூட்டினை ஆற்றிக் கொண்டோம். இனி வேண்டாம் என சொல்லும் அளவுக்கு தெவிட்டி போகுமாறு தின்றோம் என்று எயினர்கள் உரைப்பதைக் காணலாம்.

அகநானூற்றில், சிறிய தலையினை உடைய செம்மறி ஆட்டின் கொழுப்பையும் பழுப்பு நிறத்தில் உள்ள தயிரோடு, வரகினது முற்றிய அரிசியை உலையில் போட்டு வடித்து சேர்த்துக் கொண்டார்கள். அதனோடு மழை பெய்தமையால் புற்றில் இருந்து வெளியே வந்த ஈயலை பசுவின் வெண்ணெய்யில் பொறித்து உண்டார்களாம் (அகம்:374) என்ற செய்தியையும், பெரிய புலியானது ஆண்மானை அடித்துக் கொன்று கருங்கற்களை உடைய பாறையில் கிடத்தி வயிர் நிரம்ப உண்டது. அப்படி உண்டு போட்ட மானின் இறைச்சியை பார்த்த வம்பலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

“ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு” (அகம்.107:7-9)

காட்டிலே உள்ள விளைந்த மூங்கில் அரிசியைக் குற்றி சோறாக்கினர். பின்பு அந்த மான் இறைச்சியை அடுப்பிலே இட்டு கறி ஆக்கினார்கள். அங்குள்ள தேக்கின் இலையைத் தண்ணீர் விட்டு கழுவி அவற்றில் சுடச்சுட இட்டு உண்டு மகிழ்ந்தனராம். வில்லை உடைய மறவர்கள் முல்லை நிலத் தோட்டத்தில் மானை அறுத்துத் தின்பர் (அகம்:284) என்பதன் வழி மான் உணவிற்குப் பயன்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

ஊன் நிறைந்த சோறு
பழங்கால மனிதர்கள் எப்போதும் சோற்றில் ஊன் கலந்து சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவனுக்கு காடைக்கறி ரொம்ப பிடிக்குமாம். அதனைத் தேனுடனும் கனியுடனும் சேர்த்து உண்பான் என்ற செய்தியைக் காணமுடிகிறது (குறுந்:389). புலியானது, கொன்றுப் போட்ட யானையை ஆறலைக் கள்வர்கள் தன் நீண்ட கோலினால் கொண்டுச் செல்வர். உமணர்கள் விட்டுச் சென்ற அடுப்பில் சிறு தீ மூட்டி அவற்றில் ஒன்றாகச் சோறாக்கி யானைக்கறியோடு சேர்த்து உண்பார்கள் என அகநானூறு கூறுகின்றது (அகம்:169). கொழுப்பு நிறைந்த இறைச்சியை உண்கலத்தில் இட்டு ஆற ஆற உண்ணும் பாணன் (புறம்:125) இதே போல் ஆமூர் நகருக்குச் சென்றால் உழவரின் தங்கை,

“அவைப்பு மாண்அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவிர்” (சிறுபாண்.194-195)

என்ற அடிகளில், வழிப் போவார்களை முறையாகத் தடுத்து அமலை வெண்சோற்றோடு நண்டினது உணவையும் சேர்த்து உண்ணத் தருவாள் என்பதும், வேலிகளில் தொடர் வலைக் கட்டி ஒத்த நெடிய காதுகளையுடைய முயல்களை புறம் போக விடாமல் தடுத்து வலையிலே மாட்ட வைப்பர். அவ்வாறு பிடித்த அந்த முயல்களை ஆறலைக்கள்வர்கள் கூட்டமாகச் சேர்ந்து சமைத்து உண்பர் (பெரும்:114-115). ஊன் கலந்த கறிச்சோற்றினைத் தவிர வேறெதுவும் அறியாத மக்கள் (புறம்:14:14-15) சந்தன விறகால் தீ மூட்டி செய்யப்பட்ட ஊனை மறவர்கள் விரும்பி உண்டார்கள் (அகம்:172) நிணச்சோற்றினை உணவாகக் கொள்ளும் வடுகரது கூட்டம் (அகம்:213) புறநானூற்றில் தங்கள் வீட்டு வாசலில் காட்டில் இருந்து பிடித்து வந்த உடும்பினை அறுத்து யாவருக்கும் பகுத்துத் தருவர்.

“உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்” (புறம்.325:7-8)

மீதமுள்ள ஊனை தீ மூட்டி அதில் கொழுப்பினை வாட்டுவர். அப்படிச் செய்யும் போது உடும்பின் நாற்றம் தெருவெங்கும் வீசுமாம். இந்த நிகழ்ச்சியினைப் பார்க்கும் போது அன்றைய சமூகத்தில் தனக்கு கிடைத்த ஒன்றை மற்றவர்க்கும் கொடுத்து உதவும் பண்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

நாங்கள் ஊனைச் சமைத்து தருகின்றோம் எங்கள் ஊரில் தங்கி விட்டுச் செல்லுங்கள் என்று (புறம்:320) உயர்வால் ஒருவனை ஒருவன் அடித்து கொல்லும் இக்காலத்தில் இப்படிப்பட்ட வாழ்க்கை குறைவானதாகவே இருக்கின்றது. நமக்குக் கீழுள்ள ஆடு, கோழி போன்றவைகளை நாம் அடித்து உண்ணுகிறோம். அது போல் நம்மை பணக்கார மேல்வர்க்கத்திகள் உணவு
சங்க காலத்னர் சில சுரண்டலுக்காக அடித்து கொல்கின்றனர்.

நீருணவு
உணவினை உற்பத்திச் செய்ய காரணமாக இருப்பதுடன் தானே உணவாகவும் அமைவது நீர் என்பார் வள்ளுவர். மேலும்

“நீர் இன்று அமையா உலகம்” (நற்றி.1:6)

என்கிறார் கபிலர். இவ்வுலகத்தில் முக்கால் பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதனின் தாகத்தை தீர்க்க தண்ணீரே முதல் உணவு. நாம் சமைக்கும் ஒவ்வொரு சமையலுக்கும் அடிப்படை இந்த நீரே. அப்படிப்பட்ட நீருணவு மனிதர்களுக்கு இன்றியமையாதது.

தில் கள் குடித்தல் தவறாகக் கருதப்படவில்லை. ஆண்களும் பெண்களும் சேர்ந்தே கள் குடித்தார்கள் என வரலாறு சொல்கிறது. விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கள் உணவு முதலிடம் வகிக்கிறது. மனிதன் தன் துன்ப காலங்களிலும், தன்னிலை மறந்து இருக்க கள் என்ற மதுபானம் வந்தது. இந்த கள்ளானது பனைமரம், தென்னைமரங்களில் இருந்து இறக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

கள் உருவாகின்ற முறை
பனை மரத்தின் அகன்ற வாயுடைய பாளையின் குருத்தை சீவி ஒரு பானையை கவிழ்த்து வைத்துவிட்டு செல்கின்றனர். இதனை,

“பருவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரிநிறக் கலுழி ஆர மாந்தி” (அகம்.157:2-3)

அடுத்த நாளில் பானையின் குருத்தில் இருந்து முனை சொரிந்த பன்னாடையால் அரிக்கப்பெற்ற கள் மறவர்களின் உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வீர மறவர்கள் ஒரு குடத்தில் கள்ளை ஊற்றி அதில் மா, பலா போன்ற கனிகளை இட்டு வெயிலில் மணலில் மூடி வைப்பர். அந்த தேறலை உண்பார்கள் (அகம்:37,348) இது பாம்பின் நஞ்சு போன்று மிகுந்த போதையைத் தரக்கூடியது ஆகும்.

கள் குடிக்கச் சென்ற சுற்றந்தார்கள் கள்ளைக் குடித்து விட்டு பனைமரத்தில் இருக்கும் நுங்கினை பெற்று வருவார்களாம் (குறுந்:293). இனிய கடுப்புடைய நஞ்சேறிய கள் (நற்:10). கள் மணம் மிகுந்த ஊரில் கள்ளைக் குடித்து மறவன் மகிழ்ச்சியாய் இருத்தல் (நற்:131). உண்ண உண்ண தெவிட்டாத கள்ளுணவு (அகம்:77). விடியற்காலத்தே கள்ளைப் பருகும் மறவர்கள் (அகம்:213). கள்ளை அதிகமாகக் குடித்து விட்டு சினம் கொள்ளுதல் (நற்:156). பனை மரத்தில் இருந்து இறக்கின கள்ளினை ஒரு சாடியில் ஊற்றி வைத்தனர். அதை சுற்றி எப்போதும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தனவாம் (நற்:227). வீட்டில் செய்யப்படும் தோப்பி எனும் கள் வகையை சங்க இலக்கியம் கூறுகிறது.

களிப்பு தரும் கள்
தேனினது சுவைப் போன்று இருக்கக் கூடிய, நீண்ட நாள் வைத்திருந்துப் புளிப்பேறிப் போன கள்ளை விண்மீன் போன்ற பொன்னாலாகிய வெள்ளத்தில் நிறைய நிறைய கொடுத்தான் என்பதை,

“தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ” (392:16-17)

என்று புறநானூற்று ஆசிரியர் கூறுகிறார். மேலும் பாம்பின் நஞ்சேறி மயக்கினாற் போல் மிகுந்த போதையைத் தரக்கூடிய கள்ளை மறவர்கள் குடித்து வந்தனர். (சிறுபாண்:235-236) பெரிய மலையில் விளைந்த மூங்கிலில் கள்ளை ஊற்றி தேக்கி வைத்து சில நாள் கழித்து உண்ணல் (நற்:276). அது புளிப்பேறிப் போனதால் மிகுந்த போதையை அளித்தது. அதனால் அப்படிப்பட்டக் கள்ளை மறவர்கள் பெரிதும் உண்டார்கள் எனலாம்.

கள் மிகுந்த பாக்கத்தில் நீண்ட கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பாணர்கள் விடியல் காலத்தே அங்கு வந்து சேர்ந்தனர். தான் கொண்டு வந்திருந்த வரால் மீன் துண்டுகளை விற்று, அப்பொருள்களில் கள்ளுண்டு களிப்பில் மிதந்தனர் என்பதை,

“நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
நாள்துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்” (அகம்.196:1-2)

இவ்வாறு மீண்டும் மீண்டும் கள் குடித்த பாணர்கள் தான் மீன் வேட்டைக்குச் செல்லும் தொழிலையே மறந்தனராம். மேலும், “கடைத்தெருக்களில் கள் விற்றற்குத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன, அவற்றின் இருப்பிடம் அங்குப் பறந்த கொடிகளால் அறிவிக்கப்பட்டது”1 என்று ந.சுப்ரமண்யன் குறிப்பிடுகிறார். பலகையினால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். நற்றிணையில் நெய்தல் தலைவன் தேன்மணம் கமழும் கள்ளை மிகுந்த ஆர்வத்தோடு குடித்தான் (நற்:388) எனக் கூறுகின்றது.

இனிய களிப்புத் தன்மையை மிகுதியாகக் கொண்ட கள் (குறுந்:298) தினையைக் காக்கும் குறிஞ்சி நிலத்தலைவன் காவல் பரணிடத்தில் இருந்துக் கொண்டே கள் குடித்தான் (அகம்:102) ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கள்ளைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது,

“கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று வறின்” (அகம்.116:3)

மழை அதிகம் பெய்தமையால் மருத நிலம் முழுவதும் சேறாக இருந்தது. கள்ளை ஏற்றிக்கொண்டு வந்த மாட்டு வண்டி சேற்றிலே மாட்டிக் கொண்டதாக அகநானூறு கூறுகின்றது. ஏற்றிச் சென்ற “கள்ளை மண்டை என்னும் பாத்திரத்தில் ஊற்றி வாடிக்கையாளர்கள் குடித்தனராம்”2 என்கிறார் ந.சுப்ரமண்யன்.

கடலில் பலவகை மீன்களைப் பிடிப்போர் பன்னாடையால் அரிக்கப்பெறும் கள்ளிற்கு விலையாகக் கொடுப்பார்களாம் (அகம்;:296), பூமணம் கமழ்கின்ற கள் (பொருந:157-158) புறநானூற்று மன்னன் ஒருவன் தன்னை நாடி வருபவர்களுக்கு குடம் குடமாக கள்ளைக் கொடுத்தான் (புறம்:239) எனக் கூறுகின்றது.

கள்ளுக்கடையில் “கோப்பையில் கள்ளை ஒரு முறை உறிஞ்சுவதும், அடுத்து இஞ்சித் துணுக்கைக் கடித்து தின்றலும் மாறி மாறி நிகழ்ந்தன. இதனால் உண்டோர் அடைந்த களிப்பு மட்டற்றது”3 என்கிறார். கள்ளின் நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க இப்படி இஞ்சியைச் சாப்பிட்டு வந்திருக்கலாம். இல்லையென்றால் கள்ளின் சுவைக்கு இஞ்சியின் சுவை பொருத்தமானதாக அமைந்திருக்கலாம். பண்டையத் தமிழர்கள் கள்ளுணவை உண்டும் மகிழ்ந்தும் வந்திருக்கிறார்கள்.

சங்க காலத்தின் இறுதியில் தமிழ் மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. “காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்திருந்த குடிமக்கள் இத்தீய பழக்கத்தில் மூழ்கிக் கிடந்தனர். வரையற்ற சிற்றின்பமும், கட்குடியும் ஒரு நாட்டின் மக்களை இழிந்த நிலைக்கு ஈர்த்துவிடும் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்”4 என்கிறார் கே.கே. பிள்ளை.

நாலடியார், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் அறவே வெறுக்கின்றன. மணிமேகலையும், சமணமும் பௌத்தமும் குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடானது என்கிறது. குடிப்பவர்கள் குடிக்காமல் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கள்ளை (மது) ஒழிக்க முடியும்.

பாலுணவும் கூழுணவும்

பசுவில் இருந்துப் பெறப்பட்ட பாலுணவு பெரிதும் உண்ணப்பட்டது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை இவ்வுணவை உண்டு வந்தனர். நெய்தல் நிலத்தில் இடையர்கள் பாலைப் பீச்சி கடைத் தெருக்களில் சென்று விற்று வருவார்களாம் என்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. மேலும் பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை எடுத்து பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறன. “வெண்ணெய் நீக்கப்பட்ட பாலில் கொழுப்புச் சத்தும் புசியும் இல்லாமை குறிக்கப்பட்டுள்ளது. பாலிலிருந்து வெண்ணெய்யைச் (கொழுப்பு) சில மருந்துகளைக் கொண்டு நீக்குதற்குச் சில தனிப்பட்ட முறைகள் இருந்தன என்றும் அவ்வாறு வெண்ணெய் நீக்கப்பட்ட பால் விற்பனையாயிற்று என்றும் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் கூறுவார். அத்தகைய பாலுக்குச் சத்துச் சிறிதும் இல்லை என்பதும் அவர் கூற்று”5 என்கிறார் ந.சுப்ரமண்யன்.

சுவையால் பாலில் இருந்து பல்வேறு உணவு வகைகளை எடுத்து உண்டிருப்பது அறிய முடிகிறது. கடுமையான பாலை நிலம் போவதற்கு மிகவும் கடுமை உடையது. அதனால் கோவலர்கள் அந்தப்பக்கம் செல்லும் போது கம்பினை இடித்து அதனை கூழாக ஆக்கி (கூழுணவு) உடன் எடுத்துச் சென்றார்களாம் என்பதை,

“வல்வாய்க் கணிச்சி கூழ்ஆர் கோவலர்” (அகம்.21:22)

என்பதால் அறியலாம். கூழ் உணவு தன் பசியை மட்டும் போக்குவது அல்லாமல் வெயிலின் கொடுமையில் இருந்து தன்னை காத்துக் கொள்ளவும் இவ்வுணவு பயன்படுத்தப்பட்டது. இவையும் அல்லாமல் பனைமரத்தில் இருந்துப் பெறக்கூடிய இளநீரும் உடம்பிற்கு சூட்டைத் தணிப்பதாக அமைந்தது. நுங்கையும் இளநீரும் தேடிப் போய் உண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பகர்கின்றது.  

உணவு பின்வரும் முறைகளில் உட்கொள்ளப்பட்டுள்ளன.

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதல்
2. உண்ணல்    - பசி தீர உட்கொள்ளல்
3. உறிஞ்சல்    - வாயைக் கவிழ்த்துக்கொண்டு நீருள்ள பண்டத்தை ஈர்த்து  உட்கொள்ளுதல்
4. குடித்தல்    - நீர் உள்ள உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க  உட்கொள்ளல்.
5. தின்றல்    - தின்பண்டங்களை உட்கொள்ளல்
6. துய்த்தல்    - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்
7. நக்கல்    - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்
8. நுங்கல்    - முழுவதையும் ஓர் வாயால் இழுத்து உறிஞ்சுதல்
9. பருகல்    - நீர் உள்ள பண்டத்தில் சிறுகக் குடிப்பது
10. மாந்தல்    - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்
11. மெல்லல்    - கடிய பண்டத்தை பல்லால் கடித்து, அதை மெதுவாக அரைத்து  உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்”6 உணவுகள் எவ்வாறு உட்கொள்ள வெண்டும் என்று விக்கிபீடியா எடுத்துரைக்கிறது.

முடிவுரை

அன்று மனிதன் இயற்கையில் கிடைத்த உணவினை உண்டான். முக்கியமாக தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகள் மனிதனின் உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருந்தது. கால மாற்றத்தாலும் அந்நிய படையெடுப்புக்களாலும் தமிழரின் உணவு முறைகள் மாறிக்கொண்டே போனது. இயற்கை உணவோடு இயைந்த உணவே மக்களின் உடலுக்கும் எண்ணங்களுக்கும் சிறந்த மூலப்பொருளாக அமைகின்றன.

சான்றெண் விளக்கம்
1. சுப்ரமண்யன்,ந., சங்ககால வாழ்வியல், NCBH, சென்னை-98, ப.40
2. மேலது.ப.401
3. கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -13, ப.144
4. சுப்ரமண்யன்,ந., சங்ககால வாழ்வியல், NCBH, சென்னை-98, ப.400
5. இணையம், விக்கிபீடியாவிலிருந்து…

lenintamil13@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard