முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் எத்துறை சார்ந்த அறிவும் விஞ்ஞானப்பூர்வமான அணுகு முறையினையும், அறிவியற் கருத்துக்களின் செழுமையினையும் கொண்டமைய வேண்டியது அவசியமாகின்றது. தொழில்நுட்பவியல்சார் உயர்கருவிகள் கண்டுபிடிக்கும் முன்னரே பௌதீகவியல் சார்ந்த உண்மைகளை இந்து ஞானிகள் தங்களுடைய அகஉணர்வினாலும், பரிசோதனைகளினாலும், இயற்கை நடைமுறைகளினாலும் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு கண்டறிந்த அறிவியலில் வானியல், இரசாயனவியல், மெய்யியல், மருத்துவம், சோதிடம், கணிதவியல், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை அடங்கும். அந்தவகையில் பண்டைத் தமிழரின் அறிவியலில் முக்கிய பங்கினைப் பெற்றிருக்கும் இரசவாதக் கலையே நவீன யுகத்தில் இரசாயனவியலாக மாற்றமடைந்து வளர்ச்சி பெற்றுள்ளமை பெரும்பாலானோர் அறியாத விடயமாக உள்ளது. பண்டைத் தமிழரின் இவ்வாறான இரசாயன அறிவியல் சிந்தனைகள், சித்த மருத்துவத்தில் இரசவாதத்தின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம், தாதுப்பொருட்களைச் சுத்திகரிக்கும் முறை போன்ற அறிவியல் சார்ந்த விடயங்கள், அதன் முக்கியத்துவம் போன்றன வெளிவராது அரும்பெரும் பொக்கிசங்களாக மறைந்து காணப்படுகின்றன. அவற்றை வெளிக்கொண்டுவரின் தமிழர்களின் தனித்துவம் மேலோங்குவதுடன் உலக அரங்கில் தமிழரை வியந்து பார்க்கும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இரசவாதக் கலையானது இந்தியாவிலிருந்தே பிற தேசங்களுக்குப் பரவலாக்கம் பெற்றது. குறிப்பாக அரபு, சீனம், பாரசீகம் என்பவற்றைக் கூறலாம். ஆனால் இரசவாதக் கலையானது அரேபியர்களிடமிருந்து திரிபடைந்து இந்தியாவிற்கு வந்ததாகத் தற்காலத்தில் கூறப்படுகின்றது. எனவே இக்கலையானது நமது முன்னோர்களுக்கே உரித்துடையது என்பதனை நாம் அறிந்து அதனைப் பேணுவது சிறப்பு. மக்கள் மத்தியில் இரசவாதக் கலையானது செல்வாக்கிழந்து காணப்படுவதோடு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. இக்கருத்தினை மாற்றியமைத்து அதன் உண்மை நிலையினை எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயம் ஆகின்றது.
தற்காலத்தில் இரசாயனவியல் விஞ்ஞானமாக வளர்ச்சியடைந்த இரசவாதக் கலையானது, உலோகவியல், சித்த மருத்துவத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ளது. ஆனால் தற்காலத்தில் இரசவாதக் கலையானது மக்கள் மத்தியில் கண்கட்டு வித்தை, மாயாஜால வித்தை, ஏமாற்று வேலை என்ற நிலையிலேயே பார்க்கப்படுகின்றது. மக்கள் சமூகத்தில் இது பற்றிய சரியான புரிந்துணர்வும், தெளிவின்மையுமே இதற்குக் காரணம் எனலாம். மேலும் இவை பற்றிய தகவல்கள் இன்றும் பெரியளவில் வெளிவராமையும் இதனை மேற்கொள்வோர் இரசவாத வித்தையினை இரகசியமாகப் பேணுவதும்; இது பற்றிக் கூறுகின்ற இலக்கியங்களில் இவ்விடையங்கள் குறியீட்டு மொழி, வேறு பெயர்கள் என்பவற்றை பயன்படுத்துவதுடன், இவை மேலோட்டமாக ஒரு கருத்தினையும் ஆழ்ந்த சிந்தனையில் இன்னுமோர் கருத்தினைப் புலப்படுத்தும் வகையிலும் அமைந்து காணப்படுகின்றமை இதற்குக் காரணமாகும்.
இரசவாதத்தில் பேசப்படுகின்ற உலோகவியல், சித்த மருத்துவம் ஆகியன பற்றிப் பல நூல்கள் பேசுகின்றபோதும் வடஇந்தியாவில் கி.பி.12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘இராசரெட்ண சமுக்சயம்’ எனும் இலக்கியமும் தென்னிந்தியாவில் ‘சித்தர்களின் இரசவாதக் கலை’ எனும் இலக்கியமும் சிறப்பிடம் பெறுகின்றன.
இரசவாதம்
உலகின்கண் இன்று வளர்ந்து வரும் மகத்தான விஞ்ஞானம், மருத்துவம், கணிதம், கலை, இலக்கியம் போன்றவை பாரதநாட்டின் வேதங்கள், அரிய நூல்களின் உதவியினாலேயே உயர் நிலையை அடைந்துவந்துள்ளன. அவ்வகையில் இரசவாதக் கலைக்குச் சித்த புருடர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தான ஒன்றாகக் காணப்படுகின்றது. சித்தர்கள் தங்கள் இறைஞானத்தால் கண்டறிந்த அரிய கலைகளில் இரசவாதமும் ஒன்றாகும். இது 64 கலைகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
இரசவாதம் என்பது ஓர் உலோகத்தை மற்றுமோர் உலோகமாக மாற்றும் கலையாகும். அதாவது இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற தாழ்ந்த கனிமங்களை உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் கலையாகும். இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் எனவும் பொருள் கொள்ளலாம். மேலும் இரசவாதம் என்பது இரசத்தின் மாறுதல்களை அறிவது எனப்படுகின்றது. இரசவாத சிந்தாமணி எனும் நூல் ‘இரசவாதம் என்பது பொருட்களின் சாரங்களை வாதிக்கும் வித்தை’ என வரையறை தருகின்றது. அதாவது (இரசம் – சாரம், வாதம் – வாதித்தல்) ஆகையால் பொருட்களின் சாரங்களை (தத்துவங்களை) ஒன்றை மற்றொன்றோடு கலந்தும், ஒன்றை மற்றொன்றாக மாறுபடுத்தியும், தாழ்ந்ததை உயர்ந்ததாகவும், சிற்சில குணங்கள் உள்ளவற்றைப் பற்பல குணங்கள் உள்ளவையாகவும் செய்யும் வகைகளைச் சொல்வதே இரசவாதம் என்கிறது இரசவாத சிந்தாமணி.
மருத்துவ முறையில் வரும் மிக முக்கியமான அம்சம் வாதமாகும். வாதம் என்பதற்கு மாறுபடுதல் என்பது பொருள். வேதித்தல் என்னும் சொல்லின் திரிவே வாதம். நம்மைச் சுற்றிலும் உள்ள இயற்கைப் பொருட்கள் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எப்படி உருவாகின்றன என ஆராய்வதே வாதம். இச்செயற்பாட்டினையே தற்கால இரசாயனவியலும் மேற்கொள்கின்றது. ஒவ்வொரு பொருளின் பண்புகளையும் ஆராய்வதே வாதம். நம் நாட்டுச் சித்தர்கள் கண்ட இரசவாதம் பண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி என்கிறார் சாமி சிதம்பரனார்.
மேலும் பொருட்கள் என்னென்ன பத குணங்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன? அவை மாறுபடக் காரணம் என்ன? மேற்கண்ட மாறுபாடுகளை எவ்விதத்தில் தவிர்க்க முடியும்? என்பன போன்றவற்றை ஆராய்ந்து நிச்சயிப்பதையே இரசவாதம் என்பர். இரசவாதத்தின் தொழிற்பாடானது இரண்டு விதமாகக் காணப்படுகின்றது. அவை வருமாறு,
- அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றுவது
- மனிதச் செயற்பாட்டை இளமையாகப் பேணுவது
இதற்காகப் பல உலோகங்களும், உலோக உப்புக்களும், பாசணங்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை தகுந்த சுத்திகரிப்பு முறை இன்றிப் பயன்படுத்தினாலோ அல்லது உட்கொண்டாலோ பல்வேறு கொடிய வியாதிகளையும், மரணத்தையும் ஏற்படுத்தவல்லவை. இதற்குப் பயன்படுத்தப்படும் தாதுப்பொருட்கள் குணவாடத்தின்படி பிரதானமாக நான்கு வகைப்படுகின்றன. அவை,
- உலோகங்கள் – தங்கம், வெள்ளி, ஈயம் முதலான 8 உலோகங்கள்.
- உப்புக்கள் – இயற்கை உப்பு 10, செயற்கை உப்பு 15
- பாசணங்கள் – இயற்கைப் பாசணங்கள் 32, செயற்கைப் பாசணங்கள் 32
- உபசாரங்கள் – நூற்றியிரண்டு
என்பனவாகும்.
இந்தியாவில் மட்டுமின்றி மேலைத்தேசத்தவர்களாலும் மதித்துப் போற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். டேவிட் கோர்டன் வைட் (David Gordon White’s) என்பவர் ‘இந்தியாவில் அறிவியல் சார்ந்த அதிகூடிய படிப்பு இரசவாதத்தை அடிப்படையாக் கொண்டது’ என்கிறார். இவர் எழுதிய ‘The Alchemical Body’ எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு 1996இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் சித்த கலாசாரமான ‘Medieval India’ என்பது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய இரசவாதக் கலை பற்றிய பெரும்பான்மையான கட்டுரைகள் Arioe Rosy என்பவரால் எழுதப்பட்டுள்ளன. அத்தோடு வரலாறு பற்றி G.Jaemeulee beebelds என்பவர் எழுதிய ‘A History of Indiae; Med,calliterature Vol-5 என்பது Groepng என்பவரால் 1999-2003 ஆண்டு காலப்பகுதியில் நெதர்லாந்தில் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய இரசவாதமானது மிகவும் திறமையான வரலாற்றுப் பாடமாக இந்தியாவில் உள்ளது என Satya Prakashs என்பவரால் ‘zPracbz Blaram Mez Rasayaz Kavblas’ எனும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் (All a labadIndia 1960) Siddhbnandam Misra|s Ayuravediya, Rasasasstra, Jaikrbshadas, Ayurveda தொடர் இல 35, Banaras, India 198 எனும் இலக்கியங்களிலும் இரசவாதம் பற்றிய விடையங்கள் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.