மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக் கணிக்கிறார். சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் வெளிப்படுத்தும் மனிதப்பண்புகளை இனங்கண்டு வெளிப்படுத்துகின்றது இக்கட்டுரை.
மனிதம் – சொல் விளக்கம்
“மனம் என்ற சொல்லின் அடியிலிருந்தே மனிதம் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனிதன் என்றிருந்தது பின்பு மனிதம் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடம் என்று ஆகியிருத்தல் வேண்டும்” என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்’ நூலில் கூறியதை சி. இராசவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் மனிதம் ஆக மாறிய மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பார். (சி.இராசவேந்திரன், பெரியபுராணத்தில் மனிதநேயச் சிந்தனை, ப.58)
சங்ககாலப் பெண்கள்
மனமொத்த தலைவனும் தலைவியும் கருத்தொருமித்த ஆதரவான இனிமையைப் பழந்தமிழர்கள் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக நின்ற தோழியானவள் அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி விரைவில் காதலரின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைக்கும் காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்குச் செயலை எதிர்க்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது சங்க இலக்கியம்.
தலைவனே துணையென்று தலைவி வீட்டைத் துறந்து செல்கிறாள். தலைவியைத் தேடி வருகிறாள் செவிலித்தாய். அந்தணரிடம் என் மகள் ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்பதை,
“என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும” (கலி.9:6-8)
என்கிறாள் செவிலி. அவ்வாறு கேட்கும் செவிலிக்கு அந்தணர் விடை சொல்கிறார். இதனை,
“ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீச் சென்றனள்
அறந்தலை பிரியா வாறுமற்று அதுவே” (கலி.11:18-23)
பல்வேறு நறுஞ்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசையும் இசையைக் கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ்ஆன்றோர்.
கைம்பெண் காண்துயர்
புறநானூறு காட்டும் கைம்பெண் வாழ்க்கைநிலை கண்ணீர் வரவழைக்கும் துன்பநிலைக் காட்சியாக விரிகிறது. மன்னன் பூதப்பாண்டியன் மாண்டுவிட்டான். அவனுடனே தானும் தீப்பாய்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளத் துணியும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டை அவ்வூர் ஆன்றோர் தடுத்து நிறுத்தினர். கைம்பெண் படுதுயரங்களைச் சொல்லி, அவர் உயிர்வாழ்தலினும் இறத்தல் நன்றே என்கிறார் ஒரு புலவர். இதனை,
“அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
…
நளிஇரும் பொய்கையும் தீயும் ஓரற்றே” (புறம்.246:4-15)
கைபிழிந்த நீர்ச்சோற்றை, வெள்ளை எள் அரைத்துப் புளிச்சாறு கலந்த வேளைக் கீரையுடன் உண்டு, பருக்கைக் கற்களின்மேல் பாய் விரிக்காமல் படுத்துறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் பெண்ணைக் கொல்லாமல் கொல்வன அன்றே! கைம்பெண்கள் “பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்’ (புறம்.62) என்றும் அறிகிறோம். கணவனை இழந்த பெண்டிரின் உணர்வையெலாம் கொன்று சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையைக் காண்கிறோம்.
உயவற் பெண்டிர் (புறம்.246), ஆணில் பெண்டிர் (புறம்.353), பருத்திப் பெண்டிர் (353), கழிகல் மகடூஉ (புறம்.261) என்றெல்லாம் கணவனையிழந்தோர் பெயர்கள் புலவர்களால் குறிப்பிடப்பெற்றுள்ளன. கொய்மழித் தலையும் பல்லணி யிழந்த தோற்றமும் பெண்மைக்கு அந்நாளில் சமூகம் தந்த நிலை.
கணவன் இறந்த பின்கு வாழ்ந்து துயர் அடைவதைக் காட்டிலும் அவனுடன் மாய்வதையே தலைக்கற்பாக நினைத்தனர். அந்நாள் மணிமேகலைக் காப்பியம் கூறுவதை,
“காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயார் ஆயின்
நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்”
(மணி. ஊரலர் உரைத்த காதை, 42-47)
என உரைக்கிறது. போரில் கணவன் உயிர் நீத்தான் எனின், அவனைக் கொன்ற வேலினால் தன்னையும் மாய்த்துக்கொள்வாள் பெண் என்பதை,
“நீத்த கணவன் நீர்த்த வேலின்
பேஎத்த மனைவி ஆஞ்சி யானும்” (தொல்.புறத்.19:12-13)
எனத் தொல்காப்பியம் குறிக்கிறது.