தனிமனிதனுக்கென்று சில கடமைகள் உள்ளன. அவன் கல்வி கற்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லறத்தாருக்கென்று சில கடமைகள் உள்ளன. அவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்றவேண்டும். ஈகைப் பண்புடையவராகவும் பிறரது துன்பத்தைப் போக்குபவராகவும் விளங்கவேண்டும். நல்லோருடன் நட்புப் பாராட்டவேண்டும்.

சமுதாயத்திற்கென்று சில கடமைகள் உள்ளன. சமுதாயத்தில் உள்ளோர் தங்களது கடமைகளை அறிந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமுதாயத்தோடு தொடர்புடையதே அரசு. சமுதாயத்தைக் கட்டுப்பாட்டிற்குள் முறையாக இயங்க வைப்பதோடு மக்களை நெறிப்படுத்தவும் உண்டான அமைப்பே அரசு.

நல்லரசு நடக்கக்கூடிய நாட்டில் மக்கள் இன்பமும் கொடுங்கோலாட்சி புரியும் நாட்டில் மக்கள் துன்பமும் அடைவர். ஆதலால் நாட்டை முன்னின்று வழிநடத்தக்கூடிய அரசர்கள் நற்குணங்களுடன் கல்வியறிவு உடையவராகவும் எதனையும் ஆராயும் திறன் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

அரசியல் – பொருள் விளக்கம்

சமுதாயம் கட்டுப்பாட்டிற்குள் முறையாக இயங்குவதற்கும் மக்களை நெறிப்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே அரசு. ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து குடும்பத்தை உருவாக்கிப் பின் சமூகத்தை அமைத்தனர். அச்சமூகத்தை வழிநடத்தும் அரசரைப் பற்றியும் அரசனது ஒழுக்கங்களையும் நாடு, மக்கள், அமைச்சர், படைவீரர், தூதுவர், ஒற்றர் போன்றவர்களின் செயல்பாடுகளையும் நீதி நூல்கள் உணர்த்துகின்றன. இவற்றின் தொகுப்பே அரசியலாகும். ‘மலர்க மாநில சுயாட்சி’ என்னும் நூலில்

“ஒரு சமுதாயத்தைச் சார்ந்து மக்கள் அவர்களது அரசியல் பொருளாதாரச் சமுதாயக் குறிக்கோளை அடைவதற்காகத் தங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பொது ஒழுக்கவிதிகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த விதிகளில் கட்டுப்பாட்டிற்குள், முறையாக இயங்கி வருதல் இன்றியமையாததாகும். அந்த விதிகளை அமல்படுத்துவதற்கும் அதற்குச் சமுதாய மக்களை அடிபணிந்து நடக்கச் செய்வதற்காகவும் ஏற்படுத்தக்கூடிய ஓர்  அமைப்பையே அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம்” (ப.11)

என்கிறார் ஆனந்தம்.

திருக்குறள் காட்டும் தமிழர் சமுதாயம் என்னும் நூலில்

“அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம், கொள்கை. அரசியல் என்பது வாழும்முறை அல்லது வாழ்க்கை முறை ஆகும். அஃதொரு சமுதாய வாழ்க்கை முறை” (ப.102)

என்கிறார் தாமரைச்செல்வி. ஒப்பீட்டரசியல் என்னும் நூலில்,

“மக்கள் அமைதியாக வாழ்ந்து, முன்னேற்றமடையவும், செழுமையை அடையவும் மக்களுக்கு ஓர் அரசாங்கம் அவசியம்” (ப.23)

என்கிறார் திலகவதி.

அரசியல் சமுதாய வாழ்க்கைக்கு ஒழுங்கமைதியைத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடி வாழவும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுத்துத் துணை செய்கிறது. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில்தான் ஒழுங்குகள் நிலவும்.

உலகச் சிந்தனையாளர்களின் பொன்மொழிகள் என்னும் நூலில்

“நாட்டு மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முதற் கடனாக இருக்கவேண்டும்” (ப.70)

என்கிறார் பழனிச்சாமி. சிறந்த கல்வியை மக்கள் அறிந்தாலே போதும் வேறு செல்வத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

“ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே

வேந்தமைவு இல்லாத நாடு” (740)

என்னும் குறளில் வள்ளுவர் ஒரு நாட்டிற்கு வேண்டிய அனைத்து வளமும் இருந்தபோதிலும் அரசு சரியாக அமையவில்லை எனில் வளமான நாட்டைப் பெற்றும் பயனில்லை என்கிறார்.

பலவகை வளங்கள் நிறைந்த நாட்டில்தான் அமைதியும் இன்பமும் குடி கொண்டிருக்கும். செல்வத்தில் சிறந்த நாடுதான் வளமுள்ள நாடாகும். அவ்வளமுள்ள நாட்டிலேதான் மக்கள் ஒற்றுமையுடனும் ஒழுக்கமுடனும் வாழ்வார்கள். இன்பத்தமிழ் என்னும் நூலில்,

“பசியும் பஞ்சமும் – வஞ்சகமும் துரோகமும் – இலஞ்சமும் எதிர்கொள்ளும் வரிக்கொடுமையும் – போரும் பூசலும் – போராட்டமும் பொல்லாங்குத்தனமும் – நயவஞ்சக நச்சரவமும் இல்லாத மக்கள் உறைந்திடும் நாடுகள் நிறைந்த நானிலம்” (ப.58)

என மகிழ்வான உலகின் கூறுகளைக் காட்டுகின்றார் தங்கராசு.

“நற்புடைய நாடு அமிர்து” (சிறுபஞ்ச.4) என்னும் பாடலில் காரியாசான் வளமுள்ள நாடே அமிர்தம் என்கிறார்.

“…பட்டினம் கொண்டு ஆளும்

நாட்டான் வீறு எய்துவர்”

என்னும் (நான்மணி.86) பாடலில் விளம்பி நாகனார், ஒரு நாட்டின் வளங்களாலேதான் அரசர் பெருமை எய்துவர் என்கிறார்.

“நாடென்ப நாடா வளத்தன”(739)

என்னும் குறளில் வள்ளுவர் தேடி வருந்தாமல் எளிதில் கிடைக்கத்தக்க செல்வத்தையுடைய நாடுகளே நாடுகள் என்கிறார். இக்கருத்தினைப் பற்றிச் சிந்திக்கும்போது அன்றைய தமிழகத்தில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருப்பர் என்பதை உணர முடிகிறது.

“…ஒருவழி

நாட்டுள்ளும் நல்ல பதிஉள”

என்னும் (நான்மணி.65) பாடலில் விளம்பிநாகனார் வளமற்ற நாட்டிலும் நல்ல ஊர்கள் உள்ளன என்கிறார். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” (நீதிக்களஞ்சியம்,49) என்னும் பாடலில் ஒளவையார், நாட்டில் உள்ளோர் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்தால் திருட்டு நிகழாது என்கிறார்.

வளமுள்ள நாடே அரசனுக்கு அமிர்தம். அவ்வளமான நாட்டினாலே அவனுக்குப் பெருமை. நாட்டில் உள்ளோர் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்தால்தான் திருட்டு நிகழாது. ஆதலால் ஒவ்வொரு நாட்டையும் வளமான நாடாக மாற்றவேண்டும். நல்லதொரு நாட்டிற்கும் அரசியலுக்கும் வளமே அடிப்படை என்பதை அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.

அரசியல் எனப் பொதுப்படக் கூறினும் அதனுள் பல்வேறு கூறுகளும் அடங்குவதை உணரமுடிகிறது. அதாவது நல்லதொரு அரசு அமைக்க, அரசியல் நிலவ, அடிப்படையாக அடித்தளமாக உள்ளவர்கள் மக்கள். அம்மக்களை ஆனந்தமாக வாழ வைக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அம்மக்களை நெறிப்படுத்தும் தலைமை சிறப்பாக இருக்க வேண்டும்.