Abstract: The present article discusses the thought of Tamilian beliefs.
நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.
நிமித்தம்
நிமித்தம் என்ற சொல்லிற்குக் காரணம், பொருட்டு, அடையாளம் என்ற பொருள்கள் உண்டு. இதனை விரிச்சி என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.
“வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு
ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று” (புறப். கொளு-2)
நம்பிக்கை அடிப்படையில் நிமித்தத்தினை நோக்கும்போது சகுனம் பார்த்தல் என்ற பொருளைத் தந்து சிறப்பிக்கின்றது.
சகுனம் அறிவிப்போரையும் சகுனத்தின் பயன்களைக் கூறுவோரையும் நிமித்திகர்கள் என்று கூறுவர். அறிஞர்கள் கருத்துக்கேற்ப நிமித்தம் என்பது நல்ல, தீய சகுனங்களைப் பார்த்தல் என்பது புலனாகின்றது.
தெய்வ நம்பிக்கை
சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,
“சேவல்அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறுந்.1)
என்று குறுந்தொகையின் முதற்பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.
தலைவன் களவுக் காலத்தில் சூளுரைத்தல், தலைவிக்கு வரும் காதல் நோய்க்குக் கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,
“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்” (குறுந்.87)
என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் கூறப்படுகிறது.
விண்ணியல்
பண்டைய நாளில் தூரத்தில் இயங்கும் கோளையும், விண்மீன்களையும் கண்டு உணர்ந்து அவற்றின் இயக்கத்திற்கும் மண்ணில் வாழும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
நற்றிணையில் விண்மீனைக் கைதொழுது வணங்கி வந்தனர் என்பதை,
“மையற விளங்கிய மணிநிற விசும்பின்
கைதொழுது மரபின் எழுமீன் போல” (நற்.231)
என்ற அடிகள்வழி, விண்மீனையும் தெய்வமாகத் தொழும் பழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நட்சத்திரத்தைக் கூட்டம் கூட்டமாக வகுத்து அவை இன்ன இன்ன உருவம் என்று பிரித்தனர். வெள்ளிமீன் தெற்குத்திசை தோன்றினால் மழை பொய்த்துவிடும் என்ற செய்தியை,
“அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (புறம்.35)
என்ற புறநானூற்று அடிகள் உணர்த்துகின்றன.
பட்டினப்பாலையில் மகம் என்னும் வெண்ணிற விண்மீன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
“மழை நீங்கிய மாவிசும்பில்
மதி சேர்ந்த மகவெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து” (பட்டினப்.34-36)
என்ற அடிகள் நிலவுடன் சேர்ந்து விளங்கும் விண்மீன்களை மக்கள் தொழுது வணங்கினர் என்ற செய்தியை உணர்த்தி நிற்கின்றன.