Abstract: This essay studies to find the comparative relationship between Tholkappiyam and Thirukkural, especially about “Kalavu” (the love – life of a human before entering the chastity of marriage) phase talked about by Tholkappiyar in Tholkappiyam. Thiruvalluvar has divided his work in concordance with a humans life namely “Virtye”, “Materialism”, “Pleasure” under the “Pleasure” in Thirukkural. We have ‘Thagai Anangu Uruthal’, ‘Kuripparithal’, ‘Punarchi Miguthal’, ‘Nalam Punainthuraithal’, ‘Katharchirappu Uraithal’, ‘Naanuthuravu Uraithal’, ‘Alar Arivuruthal’ – all taking about what Tholkappiyam called “Kalavu” in Tholkappiyam.
உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் திருக்குறளாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தது தொல்காப்பியம். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாடல்களின் வழி எடுத்துக்காட்டியவர்கள் சங்கச் சான்றோர்கள். இதனை அடியொற்றியே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் திருக்குறளில் அறத்துப்பால், பொருள்பால், காமத்துப்பால் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுத்து மனித வாழ்வியலுக்கு அறம் படைத்துள்ளார் வள்ளுவர். கற்பு வாழ்க்கைக்கு முன்னதாக நிகழ்கிற வாழ்நிலையைக் களவு எனக் குறிக்கிறது தமிழ் இலக்கணம். இக்களவுவாழ்ச் சூழல் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் எப்படிப் பயணிக்கிறது என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.
தொல்காப்பியப் பொருளதிகாரமும் – திருக்குறள் காமத்துப்பாலும்
தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்களில் அகவாழ்வு பற்றிக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் பொருள் என்பதைச் சொல்லுக்கான பொருள், பொருளீட்டுதல், அகவாழ்வு முதலிய பொருள்களில் குறித்திருக்கிறார். தொல்காப்பியர் குறித்த பொருள் என்ற சொல்லை ‘பொருட்பால்’ எனக் கூறியுள்ளார் திருவள்ளுவா். இவ்வியலில் பொருள் என்பதை மனிதன் தான் வாழ்வதற்குத் தேவையான பொருளை அறத்தோடு பெறவேண்டும் என்ற பொருளில் கூறியிருக்கிறார். எனவே, தொல்காப்பியர் பொருளதிகாரத்திற்குக் கூறிய அகவாழ்வு என்னும் பொருளை வள்ளுவர் கூறவில்லை என விளங்கிக்கொள்ள முடிகிறது.
தொல்காப்பியர் “காமஞ் சாலா இளமை யோள்வயின்” (தொல்.அகத்.50) என்ற நூற்பாவில் காமம்என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்பாடல் கைக்கிளைக் காதலை விளக்கும்பொருட்டுத் தலைவன் வருந்திக் கூறுகின்ற பாடலாகும். இதில் காமம் என்பது தலைவனின் காதலையும் காதலுறாத தலைவியின் அகத்தையும் விளக்குவதாக வருகிறது. அஃதாவது தலைவன், தலைவியின் அகத்தை(அகவாழ்வை) இச்சொல் விளக்குகிறது. இச்சொல்லின் தீவிரத்தை உணர்ந்த வள்ளுவா் (காலமாற்றத்தின் விளைவாகக்கூட இருக்கலாம்) தலைவன் தலைவியின் அகவாழ்வை விளக்கக் கருதி, திருக்குறளில் ஒரு அதிகாரமாக ‘காமத்துப்பால்’ என்ற சொல்லை இட்டு அதன்வாயிலாக மக்களின் வாழ்க்கை முறைகளைக் கூறியிருக்கிறார் எனலாம்.
திருக்குறள் களவியல் கட்டமைப்பு
வள்ளுவா் காமத்துப்பாலினைக் களவியல், கற்பியல் என்று இரு பிரிவாகப் பிரித்துள்ளார். இவற்றுள் களவியல் ஏழு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவை முறையே,
- தகை அணங்குறுத்தல் (அதிகாரம்.109)
- குறிப்பறிதல் (அதிகாரம்.110)
- புணர்ச்சி மகிழ்தல் (அதிகாரம்.111)
- நலம் புனைந்துரைத்தல் (அதிகாரம்.112)
- காதற் சிறப்புரைத்தல் (அதிகாரம்.113)
- நாணுத் துறவுரைத்தல் (அதிகாரம்.114)
- அலரறிவுறுத்தல் (அதிகாரம்.115)
ஆகியனவாம்.
‘தகை அணங்கு உறுத்தல்’ என்ற அதிகாரத்துள் பொழிலிடத்தே தலைவன், தலைவியை முதன்முதலாகச் சந்திக்கிற நிகழ்வு பற்றி விளக்குகிறது. தலைவன் தலைவியைப் பார்த்து ஐயம் கொள்கிறான். பின்பு அவள் மண்மகளோ, விண்மகளோ, அணங்கோ என்று ஐயப்பட்டுப் பின் தெளிகிறான் என்பதை இவ்வதிகாரத்துள் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இக்கருத்தைத் தொல்காப்பியர்,
‘சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இழிபே சுட்டலான’ (தொல்.களவு.3)
என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் முதல் ஐந்து குறட்பாக்களில் தலைவன், தலைவியைப் பார்த்துத் தெய்வப் பெண், அழகிய மயில், மானுடப்பெண் என்றும் தலைவியது கண்கள் எமனைப் போன்றும் அதனால் அவன் நடுக்கமுறுவதாகவும் எடுத்துரைக்கிறார். ஐயம் எத்தகையது என்பதைத் தொல்காப்பியர் கூறவில்லை. ஆனால் வள்ளுவர் உவமையால் கூறிச்செல்வதைக் காண முடிகின்றது.
- அடுத்த ஐந்து குறட்பாக்களில் தலைவன், தலைவியின் புருவம், ஆடை, அழகிய நெற்றி, மான் போன்ற மருண்ட பார்வை, நாணம் முதலியவற்றைக் கண்டு மண்மகள் என ஐயம் தீர்ந்து, தலைவியின் அழகினால் தனக்குக் காமம் மிகுவதை உரைக்கிறான். இதனைத் தொல்காப்பியர்,
“வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கு அவண் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப” (தொல்.களவு.4)
என்கிறார். தொல்காப்பியர் கூறியதைப் போல் திருவள்ளுவரும் கூறுவதைக் காணமுடிகின்றது.
‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரத்துள் தலைவியின் பார்வை பற்றியே முதல் ஐந்து குறட்பாக்கள் உள்ளன. அஃதாவது, தலைவியின் கண்கள் நோய் தரும் பார்வை என்றும் தலைவி தலைவனை நேருக்குநேராகப் பார்க்காமல் அவள் இமைகளைத் தாழ்த்திப் பார்க்கிறாள் என்றும் குறிப்பிடுகின்றன.
அடுத்த ஐந்து குறட்பாக்களில் தலைவியின் பேச்சுப் பற்றிக் கூறுகிறார். தலைவியின் பேச்சு அயலவர் போன்றுள்ளது. இருப்பினும் தலைவன் பார்க்கும்போது தலைவி சிரிக்கிறாள். எனவே தலைவியிடமிருந்து தலைவன் குறிப்பை அறிந்து கொண்டான். பின்,
“நகைநனி உறாஅது” (தொல்.களவு.10:2)
என்கிறார்.
“கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (குறள்.1100)
என்ற குறளில் தலைவன், தலைவி பார்த்துக் கொண்டதாகவும் அதனால் அவர்களுக்கு வாய்ப்பேச்சுப் பயனற்று விடுவதாக அன்பின் மிகுதியை விளக்குகிறார் வள்ளுவர். இதனைத் தொல்காப்பியர்,
“நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்” (தொல்.களவு.5)
“குறிப்பே குறித்தது கொள்ளுமாளின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்” (தொல்.களவு.6)
எனும் நூற்பாக்களின்வழி, நாட்டங்கள் தாம் குறித்துக் கொண்டால், களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழும் என்று குறிப்பிடுகிறார்.