New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பிய அதிசயங்கள் - London Santhanam Swaminathan


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தொல்காப்பிய அதிசயங்கள் - London Santhanam Swaminathan
Permalink  
 


தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard