சங்க இலக்கிய பரத்தையர் வாழ்வியற் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடு
பா.அருண் பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
மதுரை.
முகவுரை
சங்ககாலத் தமிழர்கள் மிக உயரிய ஒழுக்க நியதிகளுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்ற கருத்தோடும், சங்ககாலம் ஒரு பொற்காலம் என்ற கருத்தோடும் உடன்பட விரும்பாதோர் “பால் வேறுபாடு கருதாது கள்ளுண்டு கழித்த நிலையையும், பரத்தையர் பிரிவையும்” தேவையற்ற புனைந்துரைகளையும் முரண்படிகளாகச் சுட்டுவர்.
இங்ஙனம் உரைக்கப்பட்ட இம்முரண்களில் பரத்தையர் பிரிவே பெரிதும் விரித்துரைக்கப்பட்டு விவாதிக்கப்படுவது.
மருதத்திணையின் உரிப்பொருளுக்கு உரிய பொருளான பரத்தையரே, தலைவன், தலைவியின் வாழ்வியல் சிக்கலாவர்.
ஆனால், பரத்தையரின் வாழ்வியல் சிக்கலை ஆயுங்கால் அச்சிக்கலின் இருமுனையும் தலைவனும், தலைவியும் ஆகின்றார்.
சற்றேறக்குறைய ஒரு அகவாழ்க்கை சங்கிலி போல் அமையும் இம்மூவருள் பரத்தையரின் வாழ்வியல் சிக்கலிலுள்ள ஆளுமை நிலைப்பாட்டை அவர்களது உணர்வுகள், மனவெழுச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்க அகக்கிளைகளான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு மற்றும் அகப்புறக் கிளையான பரிபாடல் ஆகிய நூல்கள் வழி ஆய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
ஆய்வுச்சிக்கள்.
மருதத் திணையின் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதான உரிப்பொருளுக்கே மிகுதியும், கருவியாக பரத்தையின் வாழ்வியல் அமைகின்றது. பரத்தமை என்ற தொழிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வாளர்கள் பரத்தையைக் கொடும்;பரத்தை என்பதாகவும், தலைவன் தலைவியின் வாழ்வியல் சிக்கலாகவும் ஆய்ந்து வருகின்றனர். அதிலிருந்து வேறுபட்டு பரத்தையருக்கும், தலைவிக்கு ஒத்ததான அமைந்துள்ள சில குணங்கள் அமைகின்றதா? என்ற வினாவே இவ்வாய்வுக் கட்டுரையின் சிக்கலாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சங்ககால பரத்தையரின் வாழ்வியல் சிக்கல்
பழந்தமிழரின் வாழ்க்கைப் பின்னணியையும் அதை ஏற்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் ஆய்ந்து நோக்கின் பரத்தையர் பிரிவு என்பது அக்காலத்து சமூகத் தேவையாக இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில், பரத்தையர் பால் தலைவன் செல்வதைக்கூட சங்க இலக்கியம்“பரத்தையர் ஒழுக்கம்” என்பதாகவே பதிவு செய்கிறது.
இதைப் பற்றி தொல்காப்பியர், “பூப்பின் புறப்பா டீராறு நாளு
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான்”1
ஆயினும், இவ்வொழுக்கம் குறித்து தொல்காப்பியர் மிகுதியான குறிப்புகளை வழங்கவில்லை என்பது ஆச்சர்யம்.
இதேக் கருத்தை “அகத்திணையியலில் பிரிவு பற்றிப் பேசாது ஓதல், பகை, தூது, பொருள் காரணமான பிரிவுகள் பற்றிப் பேசிய தொல்காப்பியர் கற்பியலில் மட்டுமே பரத்தையர் பிரிவைப் பேசியுள்ளார் ”2 என்று பெ.மாதையன் உறுதி செய்கிறார்.
தொல்காப்பியத்தோடு காலத்தால் பிற்பட்ட நூலான ‘நம்பியகப்பொருள் விளக்கம்’ பரத்தையர் பிரிவு பற்றி,
“இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே”3
என்று பரத்தையர் ஒழுக்கத்தை உறுதிபடுத்திவிட்டு பின்,
“வாயில் வேண்டல், வாயில் மறுத்தல்,
வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல் என்று
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே”4
என்பதாக இவ்வொழுக்கம் பற்றிய நெடியதொரு விரி அளிக்கிறது.
ஆக பழந்தமிழர் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்புறத்தொழுக்கம்‘மருதம்’ என்ற ஒரு திணையின் உயிரோட்டமாகவும், உட்பொருளாகவும் காணக்கிடைக்கின்றது.
பரத்தையர் பற்றிய மிகுதியாக குறிப்பைத் தருகின்ற மருதத்திணை இவர்களை சேரிப்பரத்தையர், காமக்கணிகையர் என்பதாக குறிக்கிறது.
இவர்கள் தனியொரு தலைவனோடு தனித்த வாழ்க்கைப் புரிவதில்லை.
பரத்தையரில் மேலும் ஒரு வகை காதற்பரத்தையர்.
இவர்கள், தனியொரு தலைவனோடு மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவன், தலைவியின் வாழ்வியல்; சிக்கலாக சித்திரிக்கப்படும் பரத்தையரின் வாழ்க்கையிலும் தலைவனை பிரிந்ததன் அடையாளங்கள் இடம் பெறுகின்றன.
பரத்தமை என்ற தொழிலுக்கு அப்பாற்பட்டு இவர்கள் அடையும் மனவுணர்வில் சில ஆளுமைக் கூறுகள் வெளிப்படுகின்றன.
பரத்தையரின் உள்நோக்கு ஆளுமை
இத்தன்மையை ‘அகவயம்’ அல்லது ‘அகநோக்கு’ என்ற சொல்லால் குறிப்பிடலாம்.
“புற உலக நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் எப்போதும் தம்மைப் பற்றிய சிந்தனை, கற்பனை, நினைவுகள் கொண்டவர்கள். சிறு தோல்வியையும் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பார்கள்”5 என்று எஸ்.சந்தானம் கருத்துரைக்கிறார்.
இத்தன்மைக்கிணங்கவே சில பரத்தையரின் செயல்கள் பதிவு செய்யப்படுகின்றன.
“அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பயந்து, பனிமல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்” (ஐங்குறுநூறு பா.எ.37)
இந்த பாடல் அடிகள் என் கண்கள் அழுமாறு செய்து பிரிந்த பொய்யன் என்பதாக வெளிப்படும் பரத்தையின் கூற்றி; பிறர் நலம் பற்றிய குறிப்பாக தலைவியின் நலம் பற்றிய எண்ணவோட்டம் இல்லாமல் தன்னைப் பற்றி சிந்தனையுடன் கூடிய தன்னலம் வெளிப்படுதலால் இஃது உள்நோக்கு முறையாகக் கொள்ளப்படுகிறது.
பரத்தையின் இந்த உள்நோக்கு முறைக்கு காரணம் தலைவனின் பிரிவு பற்றிய வருத்தம் அன்றி வேறில்லை.
மற்றொரு தலைவனின் பிரிவாற்றாமையைத் தவிக்கும் இன்னொரு பரத்தை தன்நிலையை இங்ஙனம் விவரிக்கிறார்.
“தண்தளிர் வெளவும் மேனி,
ஒண்தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே” (ஐங்குறுநூறு பா.எ.38)
அஃதாவது பரத்தையின் உடல்மெலியும் படியாகவும், கைவளை கழலும் படியாகவும் பிரிந்த தலைவனை, உடைமைப் பொருளாக எண்ணுகின்ற அவளது கூற்று உள்நோக்கின்பார்படும்.
இவ்விரண்டு கூற்றிலும் முறையாக உள்நோக்கு உள்ள ஆளுமையும், தலைவனின் பிரிவாற்றாமையை உரைக்கும் உடல் உள்நோக்கு ஆளுமையும் ஈண்டு புலப்படா நிற்கிறது.
காதற்பரத்தையரின் வெளிநோக்கு ஆளுமை
வெளிநோக்கு ஆளுமையை புறவயத்தன்மை என்ற ஆளுமைக் கலைச் சொல்லால் குறிப்பர்.
உளவியல் அறிஞர்கள் இவர்கள் நட்புக் கொள்வதை அதிகம் விரும்புவராக இருக்கிறார்கள்.
பிறரிடம் காணும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமலும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருப்பார்கள்.
மேலும் இத்தன்மை பற்றி, “புறவயப்பட்டவனோ தன்னாய்வுத்திறன் ஒளிவு மறைவு இல்லாமை, பிறர்காணும் குற்றங்களைப் பொருட்படுத்தாமை போன்ற இயல்புகளைப் பெற்றிருப்பான்”6 என்பதாக சான்று பகர்கிறது வாழ்வியற்களஞ்சியம்.
பொய்பழகூட்டும் மாயப்பரத்தை என்பதாக மிகுதியும் கருத்துரைக்கப்படுகின்ற பரத்தையரின் பால் இந்த வெளிநோக்குத்தன்மை மிகுதியும் ஆழங்கால் பட்டுள்ளது என்பதை,
“அம்ம வாழி பாண! எவ்வைக்கு
எவன்பெரிது அறிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது உளதும் ஊரன்
பெண்டுஎன விரும்பின்று அவள்தன் பண்பே” (ஐங்குறுநூறு பா.எ.89)
என்ற இவ்வடிகள் உறுதிப்படுத்துகின்றன.
அஃதாவது தலைவனிடம் பேரன்பு கொண்ட காதற்பரத்தை ஒருத்தி தன் நலம் நயவாமல் தலைவியின் நலனின் பால் பேரன்பு கொண்டு அவளது பண்பைப் புகழ்வது ஈண்டு வெளிநோக்கு என்ற ஆளுமையின் பாற்படும்.
பின்முறை வதுபைக்கு உரிய ஒருத்தி காதற்பரத்தைத் தலைவன் பால் அன்பு கொண்ட தலைவியைப் புகழ்தல் என்பது பெரிதும் விரித்துரைக்கக் கூடிய சிறந்த ஆளுமைப் பண்பாகும்.
பரத்தையருள் இருநோக்காளர்
அகவயம், புறவயம் என்ற இரு தன்மையும் கலந்தோரை இவ்வாளுமையின் பாற்படுவர் இக்கருத்தை பெரும்பாலான உளவியலாளர்கள் மறுத்துரைத்தாலும் “பல்வேறு ஆளுமைப் பண்பின் கூறுகள் பல்வேறு விதத்தில் ஒவ்வொரு மனிதனிடத்திடனும் புதைந்துள்ளன என்ற காட்டர் கூற்றயே இன்றைய உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்”17 என்பதாக கருத்து பரிமாற்றம் செய்கிறார் எஸ்.சுந்தரசீனிவாசன்.
இலக்கியத்தின் பால் இவ்வணுகுமுறையை புகுத்தினால் அஃது ஒரு உடன்பாடு, மறுப்பு, இவ்விரண்டும் கலந்த குணங்கள் கொண்ட ஆளுமை என்று பொருள்படும்.
இக்கருத்து உட்பொதிந்த நிலையில் ஒரு பரத்தை சுட்டப்படுவதை,
“தண்துறை ஊரனை எவ்வகை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேன் டுதுமே” (ஐங்குறுநூறு பா.எ.67)
என்ற சங்க அடிகள் மொழிந்து நிற்கின்றன.
இப்பரத்தையின் கூற்றின் படி புறத்தொழுக்கத்து பிரிந்த தலைவனின் துணைவி பரத்தையின்பால் வர விரும்புகிறாள்.
இவ்வரவை வெளிப்படையாக மறுத்து உள்ளூர விரும்புகிறாள் பரத்தை இவ்வுட்கருத்தே பரத்தையின் இருநோக்கு ஆளுமைத் தன்மையை முன்மொழிந்து நிற்கிறது.
பரத்தமை என்ற தொழிலாள் இவள் கீழ்மகளாக கருதப்படினும் தலைவன்பால் கொண்ட அன்பாலும், தலைவியின்பால் கொண்ட உடன்பாட்டு எண்ணத்தாலும் தலைவியை விட மேலான இடத்தை பெறுகிறாள் பரத்தை.
கருத்து திரிபு ஆளுமை
சிறு சிறு ஐயங்களும் முரண்பட்ட மன உணர்வுகளும் கொண்டவரே கருத்து திரிபு ஆளுமையாளர்.
இந்த வகை ஆளுமையினரிடம் உளநோயாளிகளைப் போல் திரிபுணர்வுகளோ மனநோய் அறிகுறிகளோ காணப்படுவதில்லை.
ஆனால் இவர்களிடம் பரவலான ஒரு சந்தேக மனப்பான்மையும் மற்றவர்களிடம் நம்பிக்கையின்மையும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும், இது குறித்து கருத்து திரிபு ஆளுமையினர் சிறு செயல்களில் மிகுந்த கவனம் செலுத்துவர் மற்றவர்கள் தம்மீது குற்றம் கண்டுபிடிப்பதை வெறுப்பார்கள் மிகுந்த மன வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பர் என்று விளக்கம் அலிக்கின்றனர் உளவியலாளர்கள்.
இவ்வுட்பொருளின் ஆளுமைக் கூறு தொணிக்கும் படி நற்றிணையில்,
“எம்நயந்து உனறவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ்வயின்
சால்பின் அறித்தல் அறியாது? அவட்கு அவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி! (நற். பா.177)
என்ற தொகை அடிகள் இயம்புகின்றன.
நெடுநாள் பரத்தையரிடம் இருந்த தலைவனை தலைவியின்பால் அனுப்பிய பிறகு அப்பரத்தை தோழியிடம் தன் எண்ண ஒட்டங்களை இப்படி உரைக்கிறாள்.
தலைவியிடம் அன்பு கொண்டு தலைவனை விடுத்த யான் மிக்க அன்பு கொண்டவள் என்று தலைவி கருதுவாளோ அல்லது பழி தூற்றுவாளோ என்ற இக்கணிகையது கூற்றில் அவளது முரண்பட்ட மன ஓட்டங்களும் அன்பு மிகுதியும், ஐயமும் பொதிந்த கருத்து திரிபு ஆளுமை புலனாய்கிறது.
இவ்வாளுமையின் படி இப்பரத்தை தலைவன் தலைவியின் வாழ்வியல் சிக்கலையும் ஊடலையும் மிகுவிக்க விரும்பாத உயர்ந்த மனப்பான்மையும் வெளிப்படுகிறது.
பரத்தையின் சொன்மைத் திறன்
சொல்லால் மனிதன் செய்கின்ற ஆளுமை ஜாலங்கள் இப்பிரிவின்கண் அடங்கும்.
இச்சொன்மைத் திறன் குறித்து “எளிய சொற்கள், கருத்தாழம் மிக்கதாய் அமைதல் வேண்டும்.
பொருள்வரிசை முறையில் அமைந்தும் வழக்காறு வழி இருத்தல் வேண்டும்”8 என்பதாக கருத்துரைக்கிறார் இரா.சுப்புராயலு…
வைகையில் நீராட போன்த தலைவி ஒருத்தி தன் அணிகலனை ஒரு பரத்தையின் பால் கண்டு அவளைப் பலர் நாணப் பழித்துரைக்கிறாள்.
அதற்கு வெகுண்டு பரத்தை இங்ஙனம் கூறுகிறாள்.
“மாலை அணிய விலைதந்தான் மாதர்நன்
கால்சிலம்பும் கழற்றுவான் சால
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன்
கதுவாய் அவன்கள்வன் கள்விறான் அல்லேன்” (பரிபாடல் பா.எ.30)
என்ற அடிகளில் தன்னைப் பழித்த தலைவியை நோக்கி என்னிடம் பெற்ற இன்பத்திற்கு விலையாகத் தலைவன் இவ்வணியை தந்தான்
ஆக என்னைக் கள்வி என்று உரைப்பதை விடுத்து துன் கணவனை கள்வன் என்று உரை.
இக்கூற்றின் வழி பரத்தையின் சொல் ஆளுமைத் திறனும்
அவ்வாளுமையின் வழி அக்காலத்தைய அச்சமுதாயத்தால் புறத்தொழுக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையும்,
பலர் நாண வாழும் பரத்தையின் மனம் கூட பழி நாண விரும்பாமையும் இங்கு அறியலாகிறது.
பரத்தை மதி உடன்பாடு
ஆய்வு உலகத்தால் மிகுதியும் கொடும்பரத்தை என்பதாக அறியப்படும் இவர்பால் மதியுணரும் திறனும் நுன்மாண் நுலை புலமும் மிகுதியாகக் காணப்பட்டது.
ஒரு மனிதனின் செயல் அடிப்படையில் அவனது உள்ளக்கிடக்கைகளை கணக்கிடலாம் என்ற உளவியலாளரின் இன்றையக் கருத்தை அன்றைய சேரிப்பரத்தையரின் கூற்று நினைவுபடுத்துகிறது.
“மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்டன கொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண்டான் கொல்?”
தலைவி, பரத்தையாற் பால் பழகாலும் இன்பம் துய்க்கின்றான் தலைவன்.
அத்தலைவனின் குணத்தை வண்டு பெற்றதோ இல்லை வண்டின் குணம் தலைவனுக்கு அமையப் பெற்றானோ என்ற இப்பரத்தையின் கூற்று வழி அவளது நுன்மதியும் அதன் வழி இரு பாலரிடத்தும் இன்பம் துய்க்கும் தலைவனின் வண்டு குணத்திற்குக் காரணம் கற்பிக்க இயலாது தலைவியும், தானும் வருந்தும் நிலையும் இவ்விடத்து புலனாய்கிறது.
நிறைவுரை
சங்கத் தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் ஆராய்கின்ற நிலையில்
29 வகையிலான கூற்று வரிப்பாடலுக்கு உரியப் பொருள் பரத்தையர்.
அவர்கள் மேற்கொண்ட பரத்தமை சங்க சமுதாயத்தால் புறத்தொழுக்கம் என்ற நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஊடலுக்கு உரிப்பொருளான அத்தன்மையோர் பரத்தமை என்ற நிலையிலிருந்து நழுவி,
அக உணர்வால் பீடிக்கப்பட்டனர்.
ஆகையாலேதான் தலைவன் மேல் கொண்ட உடைமை உணர்வால் அத்தகையோருக்கு உள்நோக்கு ஆளுமை பெரும்பான்மையும் இருந்தது.
இவ்வாளுமையைத் தவிர வெளிநோக்கு, இருநோக்கு, கருத்து திரிபு ஆளுமைக் கொள்கை ஆகிய அளவுகோலின் வழி ஆய்ந்து
அளவிடின் கிழத்தியைப் போல் பரத்தைக்கும் தலைவன் பிரிவால் உடல் மெலிதல்,
கைவளை கழறல், பசலை பூத்தல் ஆகிய அக அடையாளச் சின்னங்கள் வெளிப்பட்டன என்பதையும்,
கிழத்தியைப் போல பரத்தையின் பழிக்கு நாணும் தன்மையுடையள் என்பதையும்,
தோழி போல பரத்தை மதி நுட்பத்திறன் கொண்டவள் என்பதையும்,
பலவகை உணர்வு வெளிப்பாட்டாலும் ஆளுமைத் திறனாலும் பரத்தை தலைவிக்கும் தோழிக்கும் இணையல் என்பதையும் இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. தொல்காப்பியம், நச்சினார்க்கினியர், நூ.எ.1131
2. மாதையன்.பெ, அகத்தினைக்கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், ப.81
3. நம்பி அகப்பொருள் விளக்கம், நூ.எ.201
4. மேலது., நூ.எ.204
5. சந்தானம்.எஸ்., கல்வியின் உளவியல் அடிப்படைகள், ப.163
6. வாழ்வியற்களஞ்சியம், தொகுதி-2, ப.681
7. ஆளுமைமேம்பாடு.எஸ்., சுந்தரசீனிவாசன், ப.14
8. தகவல் மேலாண்மை, இரா.சுப்பராயலு, ப.88