வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்
என்னுடைய இந்தக் கட்டுரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், இதுவரையில் வெளிவந்துள்ள கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கைணத்தின் பதிப்புகளில் நீக்கப்பட்டு, இந்த திருத்தி யமைக்கப்பட்ட பதிப்பில் இடம்பெற்றுள்ள பகுதிகளைப் பற்றிச் சில கருத்துகளைக் கூறவிருக்கிறேன். அந்தப் பகுதிகளை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம், குறிப்பாக, அப் பகுதிகள் விடப்பைட்டதற்கான காரணங்களை நாம் எவ்வாறு அறியலாம் என்பதைப் பற்றிய எனது உரத்த சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாம் பகுதியில், புதிய பதிப்பில் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளை வைத்துக்கொண்டு கால்டு வெல்லின் சாதி, சமயம், இனம் பற்றிய பார்வையை மதிப்பிடுவ தன் தேவையை நான் வாதிட விரும்புகிறேன். மூன்றாவதாக, இன்றைய சமூகப்பண்பாட்டுச் சூழலில், கால்டுவெல்லின் கருத்துப் பொருத்தப்பாட்டை ஆராய்வேன்.
நீக்கப்பட்ட பகுதிகள் - ஒரு ஆய்வு
இதற்கு முன்னால் வெளிவந்துள்ள பல்கலைக்கழகப் பதிப்புகளில் விடப்பட்ட செய்திகளைத் தொகுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. புதிய பதிப்பையும் பழைய பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு உடனடியாகத் தெரிய வருவது இதுதான். பழைய பதிப்பில், ‘திராவிடர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவைர்களுக்கும் ‘சூத்திரர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள உறவு, அச்சொற்கள் குறிக்கும் பொருளில் உள்ள வேறுபாடுகள் குறித்து கால்டுவெல் மொழிந்துள்ள கருத்துகளில் கணிசமான பகுதி நீக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எதை எதையெல்லாம் பதிப்பாளர்கள் நீக்கியுள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன.
திராவிடர்கள் சூத்திரர்களா இல்லையா என்ற கேள்வியை எழுப்பும் கால்டுவெல், தனது கேள்விக்கு உரம் சேர்க்கும் வகையில் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். சூத்திரர்கள் என்போர் யார்? அவர்கள் ஆரியர்களின் வருகைக்கு முன்னாலேயே தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்தவர்களா? ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களால் ஆளப்பட்டவர்களா? அல்லது ஆரிய சமுதாயத்தின் ஒரு பிரிவினராக இருந்து, அவர்களில் வல்லமை பொருந்தியவர்களாக விளங்கியவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு வர்க்கத்தினரா?
இக் கேள்விகளை எழுப்பி தொடர்ந்து சில பதில்களையும் வழங்குகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, சூத்திரர் என்ற சொல் இழிச் சொல்லாகப் பாவிக்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்னும் சொல்லப் போனால், தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த மன்னர்களைப் பற்றிப் பேசும் போது, அதாவது, சேர சோழ பாண்டியர்களைப் பற்றிப் பேசும்போது வடஇந்திய நூல்கள் அவர்களைச் சத்திரியர்கள் என்றே குறிப்பிடுகின்றன. எனவே சூத்திரர் என்ற சொல் இழிச்சொல்லா இல்லையா என்பது பிரச்சனையல்ல. அது எதைக் குறிக்கிறது என்பதை ஆராய்வது முக்கியம். ஆதாரங்களைக் கொண்டு பார்க்கையில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள், மேலாண்மை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அவர்களுடைய ஆணவம், அதிகாரம் காரணமாக இந்தச் சொல்லைக் கையாண் டிருப்பது தெளிவு. தாம் அடக்கி ஆள நினைத்தவர்களை, தமக்குக் கீழ்ப்பட்டவர்களாகக் கருதியவர்களைச் சிறுமைப் படுத்தவே இதை அவர்கள் செய்தனர். எனவே சூத்திரர் என்ற சொல், அதிகாரத்தின்பாற்பட்டுப் பயன்படுத்தப்பட்ட சொல்லே அல்லாமல், இழிவைக் குறிக்கும் சொல் அல்ல.
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் கூறும் செய்திகள் தான் பழைய பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளன. அவையாவன - தென்னிந்தியாவில் சூத்திரர்கள் என்று சொல்லப்படக்கூடியவர் கள், குறிப்பாக உயர் சாதிநிலையில் இருக்கக்கூடியவர்கள், பொதுவாக ‘திராவிடர்கள்’ என்று அடையாளப் படுத்தப்படு பவர்கள், திராவிட அடையாளத்தைத் தங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு அடையாளமாக வரித்துக்கொண்டு, அந்த அடையாளத்தை திராவிடர்கள் அல்லாதவர்கள் என அவர்கள் கருதிய ‘ஈன’ சாதியினருக்கு மறுத்தனர். ஆரியர்கள் அவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிட்டது போல, இவர்கள், தமக்குக் கீழ்நிலையிலுள்ளவர்களை இழிவானவராகக் கருதி இதைச் செய்தனர். திராவிடர், திராவிடம் ஆகிய சொற்களுக்குரிய பொருள் குறித்து கால்டுவெல்லின் இந்த மதிப்பீடு தணிக்கை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து விடப்பட்டுள்ள பகுதியாவது Antiquity of Tamil என்ற தலைப்பிட்ட ஒரு பெரும் பகுதி. திராவிட இலக்கியங்களின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழி இலக்கியங்களின் தொன்மை, வரலாறு, பழம்பெருமை முதலியவற்றைப் பற்றிப் பேசும் பகுதியாக இது அமைந்துள்ளது. இது முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ் மொழியிலக்கியம் பற்றிக் கால்டுவெல் முன்வைத்த சர்ச்சைக் குரிய கருத்துகளும் அடங்கும்.
அக்கருத்துகளாவன
- தமிழுக்கு ஓசை நயம் உண்டு. தமிழ்க் கவிதைகள் அற்புத மானவை. தமிழ் இலக்கியங்களில் துலங்கும் அழகியல் ருசிகர மானது. என்றாலும், தமிழ் இலக்கிய வெளிப்பாடுகள் மனத்தை மயக்கவல்லவையாகவே உள்ளன. உண்மையை அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆற்றலோ, வலிமையோ, திண்மையோ தமிழ்மொழிக்கு இல்லை என்றுகூடச் சொல்லலாம்.
- தமிழ் மொழி, ஏன் எல்லா திராவிட மொழிகளுமே பெண்மைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இவற்றை ரசிக்கலாம், படிக்கலாம்; ஆனால் இவை வீரியம் குறைந்த மொழிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
- ஆனால் இந்நிலைமை மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் இன்று உருவாகியுள்ளன. மேற்கத்தியக் கல்வியின் விரிவாக்கம், கிறிஸ்தவத்தின் பரவலாக்கம் ஆகியவற்றின் விளைவாகச் சமுதாயத்தளத்தில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பார்ப்பனரல்லாத வகுப்பர் பலர் ஆங்கிலக் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இலக்கியம் படைக்க வரும் போது, தாம் பெற்றுள்ள புதிய கல்வி, அக்கல்வியும் கிறிஸ்தவ சமயமும் தந்துள்ள அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கியம் இதுநாள் வரைக்கும் கண்டிராத உண்மைத்தன்மையுடன், வலிமையுடன், வீரியத்துடன் இலக்கியம் படைக்க வருவார்கள். தமிழ் மொழியில் உறைந்துகிடக்கும் பலங்களை அவர்களின் எழுத்து உலகுக்கு அறிவிக்கும்.
- கோவர் என்பவரோடு கால்டுவெல் நடத்திய விவாதமும் பழைய பதிப்புகளில் விடப்பட்டுள்ளது. திராவிட மொழி வகை என்று எதுவும் கிடையாது. அத்திணைக்குள் அடக்கப்படும் மொழிகளெல்லாம் கூட ஏதோ ஒரு வகையில் இந்தோ-ஆரிய மொழிக் குழுமத்தைச் சேர்ந்தவைதான் என்பது கோவரின் கருத் தாக இருந்தது. கோவரை மறுத்து கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளைப் பழைய பதிப்புகளில் நீக்கியுள்ளனர்.
அடுத்து, நூலில் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்ட- ‘பறையர்கள் திராவிடர்களா?’ ‘நீலகிரித் தோடர்கள் திராவிடர் களா?’ என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகளும் - நீக்கப் பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாத மேல்சாதியினர் மட்டும்தான் திராவிடர்கள், பறையர்களை அவ்வாறு கருதமுடியாது என்ற கருத்து அன்று பரவலாகப் பேசப்பட்ட சூழலில் முதல் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். ஆனால் இக்கருத்து யாரால், எக்காரணங்களை முன்னிட்டு வாதிடப்பட்டது என்பது குறித்து கால்டுவெல் எதையும் சொல்வதில்லை. அறிவு வட்டாரங்களில் வெகுவாகப் பேசப்பட்ட ஒரு கருத்தாகக் கொண்டு அதைப் பற்றி அவர் அதிகம் சொல்லாமல் இருந்திருக் கலாம். இக்கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் உள்ள போதிலும் அவற்றைப் போதுமான ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்ற ரீதியில் அவர் வாதிடுகிறார். பழைய பதிப்புகளில் விடப் பட்ட வேறு பகுதிகளாவன - திராவிட மக்களின் உடலமைப்புப் பற்றிய ஒரு கட்டுரையும், ‘திராவிட மக்களின் சமயம்’ என்ற கட்டுரையும் பல்கலைக்கழகப் பதிப்பில் இல்லை.
பல்கலைக்கழகப் பதிப்பில் நீக்கப்பட்ட பகுதிகளைத் தொகுத்துப் பார்க்கையில், சில விஷயங்கள் தொழிற்படுகின்றன. ஒப்பிலக்கணத்தைப் பதிப்பித்தோர் ‘திராவிட’ அடையாளம் என்பதைக் குறிப்பிட்ட வகையில் விளக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அதாவது 1900ங்களிலிருந்து 1930வரையிலான காலக்கட்டத்தில் அவர்கள் இதைச் செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்ததற் கானக் கருத்தியல் அல்லது அரசியல்ரீதியான காரணங்களை நம்மால் அடையாளங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. நீக்கப்பட்டப் பகுதிகளைக் கொண்டு பார்க்கையில் ‘திராவிட’ அடையாளத்தைக் ‘களங்கப்படுத்து’வதாக அமைந்துள்ள வாதங்களை, கருத்துகளை அவர்கள் ஒதுக்கியுள்ளனர் என்று சொல்லலாம். (ஒப்பிலக்கணத்துக்குத் தொடர்பில்லாத விஷயங் களை மட்டுமே தாம் தவிர்த்துள்ளதாகப் பதிப்பாசிரியர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களது வாதங்களை நாம் வேறு கோணத்திலிருந்தும் அலசி ஆராய வேண்டியுள்ளது.)
திராவிடர்கள் சூத்திரர்களா? என்ற பிரச்சனைக்குரிய ஒரு கேள்வியைக் கால்டுவெல் எழுப்பினாலும், திராவிடர்கள் சத்திரியர்கள்தான், பழம்பெரும் சமுதாயம்தான் என்றே பதில் வழங்குகிறார். என்றாலும் இந்த வாதத்தையட்டி அவர் முன்வைக்கும் சில கருத்துகள், திராவிட அடையாளத்தைப் பத்திரப்படுத்தி வைக்க விரும்பியவர்களுக்கு உவப்பளித்திருக் காது என்றே தோன்றுகிறது. இதனால்தானோ என்னவோ, திராவிடப் பெருமை வாய்த்திருந்த ‘உயர்’ வகுப்பினர், அவர்கள் ‘ஈன’ சாதியினராகக் கருதியவர்களுக்கு இவ்வடையாளத்தை மறுத்தனர் என்ற கால்டுவெல்லின் கருத்தின் சாராம்சத்தை வாதிட விரும்பாமல், அதனைத் தணிக்கை செய்துள்ளனர். அது போலவே, திராவிட சமயம், பண்பாடு குறித்த செய்திகளையும் அவர்கள் தணிக்கை செய்துள்ளனர்.
குறிப்பாக, திராவிடப் பண்பாடு என்பது பொருண்மையுலகை சார்ந்ததே அல்லாமல், கருத்துலகைச் சார்ந்து இயங்கும் ஒன்றல்ல. குறிப்பிட்ட நெறிமை களை வகுக்கவோ, அறிவார்ந்த வகையில் சிந்திக்கவோ இயலாத பண்பாடு அது என்பன போன்ற கருத்துகள் பதிப்பாசிரியர்கள் பாவித்த திராவிட அடையாளத்தைச் சலனப்படுத்தியிருக்கக் கூடும். மேலும் ஆரிய மரபுகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே அறிவார்ந்த, கருத்துருவாக்க செயல்பாடுகளைத் திராவிடர்கள் மேற்கொண்டனர் என்ற கருத்தை அவர்கள் கண்டிப்பாக ஏற்றிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் ஆரியம் மூலம் பெற்ற வரவுகளைக் காட்டிலும் அது புகுத்திய கெடுதிகள் தான் அதிகம் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். ஆனாலுங் கூட ஆரியம்-திராவிடம் குறித்தான இந்த சர்ச்சைக்கு முகங் கொடுக்கப் பதிப்பாசிரியர்கள் விரும்பவில்லை! தமிழ்மொழி குறித்துக் கால்டுவெல் கூறியுள்ளவற்றை, குறிப்பாக அம் மொழியைப் பெண்தன்மை வாய்ந்ததாக அவர் மதிப்பிட்டதை ஆராயவும், கால்டுவெல்லுக்குத் தக்க பதிலளிக்கவும் அவர்கள் முனைய வில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
திராவிடர்களின் உடல்கூறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைக்கும் விளக்கங்கள், திராவிடச் சமயங்களை அவர் விவரிக்கும் விதம் ஆகியன, திராவிடப் பெருமையைச் சுற்றி கட்டியமைக்கப்பட்டிருந்த ஒளிவட்டத்தை மங்கச் செய்து விடுமோ என்ற அச்சமும் பதிப்பாசிரியர்களுக்கு இருந்திருக்கக் கூடும்.
அடுத்து பறையர் அடையாளம் தொடர்பாகக் கால்டுவெல் கூறும் கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய் வோம். பறையர்கள் குறித்துக் கால்டுவெல்லின் கருத்துகளாவன:
- பறையர்களின் தற்கால அடிமைநிலையைக் கொண்டுப் பார்க்கையில், அதுவும் திராவிடர்களால் அவர்கள் அடிமைப் படுத்தப்படுவதை ஆராய்கையில், அவர்கள்தான் இம்மண்ணின் பூர்வகுடிகள், வேறு எங்கிருந்தோ வந்து குடியேறிய திராவிடர்கள் அவர்களை அடக்கியாள வந்தனர் என்று எண்ணத் தோன்றும்.
- மேலும் பறையர்களிடம் வழங்கும் கதைகள், அவர்களது கூட்டு நினைவில் எஞ்சியிருக்கும் மனப்பதிவுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டுப் பார்த்தால், அவர்களுமே ஆண்ட பரம்பரை யினராக இருந்துள்ளனர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டி யிருக்கும். இவ்வகையில் பறையர்கள் பூர்வகுடிகள் தாம் என்றும் எண்ணத் தோன்றும்.
- என்றாலும் இக்காரணங்களைக் கொண்டு மட்டும் பறையர் களின் பூர்வ அடையாளத்தைப் பற்றி ஒரு முடிந்த முடிவுக்கு நாம் வரமுடியும் என்று தோன்றவில்லை. காரணம், பறையர் களின் கூட்டுநினைவு சுட்டும் பழைய வாழ்க்கையானது அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த சுதந்திரத்தைக் குறிப்பதாகக் கொள் ளலாமே அல்லாமல், அவர்கள் தனி இனத்தவர் என்பதைக் கொள்ள முடியாது. ஆரியர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரிவினை கள் இனம் தொடர்பாக ஏற்படவில்லை, மாறாக, உரிமை, உழைப்பு முதலியனவையே அவற்றுக்கு ஆதாரமாக அமைந்து வருணப் பிரிவினைகளைச் சாத்தியப்படுத்தின. காலப்போக்கில், இவை இனப்பிரிவினைகளாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஆதியில் அவை அவ்வாறு இருக்கவில்லை என்பது திண்ணம். அது போலதான், பறையர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட தும், பறையர்கள் திராவிடர்களில் ஒரு பகுதியனராக இருந்தவர் கள்தான். அவர்களுடைய உழைப்பு அன்று ஆள்வோருக்குத் தேவைப்பட்டது. அவ்வுழைப்பை அபகரித்து, அவர்களை அடிமைப்படுத்தி, ஒதுக்கியும் வைத்தனர்.
-
பறையர்களும் திராவிடர்கள்தான் என்ற கருத்தும், அவர்கள் திராவிடர்களின் ஒரு பகுதியினரால் ஒடுக்கப்பட்டனர் என்ற விளக்கமும் திராவிடப் பெருமையை நிலைநிறுத்த விரும்பியவர் களுக்குக் கசப்பான செய்திகளாக இருந்திருக்கக்கூடும். சாதிப் பெருமையும் இனப்பெருமையும் ஒன்றுக்கு மற்றொன்று துணை நின்று, பறையர்கள் பற்றிய குறிப்புகள் தணிக்கை செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.