நல்லவை:
முதலில் நல்லவை சில. கருணாநிதி ஊக்கத்தோடு செயல்பட்டிருந்தால் இப்படி நடக்கவிட்டிருப்பாரா என்று எண்ணிய சமீபத்திய தருணம் வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையின் போது. வைரமுத்து கிட்டத்தட்ட அநாதையாகியிருந்தார் அவரை மிக மிகக் கீழ்த்தரமாக எட்டுத் திக்கிலிருந்தும் பிராமணர்கள் தாக்கினார்கள். சிவாஜியை மரணத்துக்குத் தள்ளியது ஜெயலலிதா அவர் குடும்பத்தைப் படுத்திய பாடு. சிவாஜி இறந்த போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. இரங்கல் தெரிவிக்க வந்தவர் சிவாஜியை உடலைப் பார்த்து அழுது "போறதுன்னு முடிவாயிடுச்சுன்னா நான் ஆட்சியில் இருக்கும் போது போயிருக்கலாமே" என்றார். ஆம், அவர் ஆட்சியில் இருக்கும் போது சிவாஜி இறந்திருந்தால் அரசு மரியாதையே செய்திருப்பார். சிவாஜிக்கு கொடுத்து வைக்கவில்லை.
கருணாநிதியின் உழைப்பு அசாத்தியமானது. கடவுளோ இயற்கையோ எதுவோ அவருக்கு நீண்ட ஆயுளையும் கிட்டத்தட்ட இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரையிலாவது நல்ல செயல்பாட்டுடன் இருக்கும் அறிவுத் திறன் இருந்தது. அவரின் நினைவாற்றல், கூர்மையான சாதுர்யம், அரசியல் சதுரங்க ஆட்டம், நிர்வாகத் திறன், போராட்ட குணம், தோல்விக் கண்டு துவளாமை என்று எந்தச் சராசரி மனிதனும் வியக்கும் குண நலன்கள் உண்டு அவரிடம். எங்கோ ஒரு கிராமத்தில் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கானோர், அதுவும் பல தலைமுறைகள், கண்ணீர் சிந்த வாழ்க்கைப் பயணம் முடிவடைவது மாபெரும் சாதனை.
ஏன் இந்தப் பதிவு:
ஒரு மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் பயணத்தை நேர்மையோடு தொகுத்துப் பார்க்கத் தூண்டும் நேரம். தமிழ் நாட்டிலோ மரணம் என்பது புனிதர்களை உருவாக்கும் தருணங்களாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த போது "இரும்பு மனுஷி இறந்தார்" என்று அலறினப் பத்திரிக்கையெல்லாம். இன்று அதே பத்திரிக்கைகள் வேறு விதமாகக் கூவுகின்றன. ஜெயலலிதா பற்றி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன் அவரின் நல்லவை, அல்லவைகளைப் பட்டியலிட்டு. அது அவர் 2014-இல் கைதானப் போது எழுதியது. அவர் இறந்த போது இப்படிப் பிரத்தியேகமாக எழுதத் தோன்றவில்லை. அதற்கான காரணம் இணையத்தில் திமுகவுக்கு இருப்பது போல் அதிமுகவுக்குக் கம்பு சுத்த அவ்வளவாக யாருமில்லை, மேலும் ஜெயலலிதாவை யாரும் இன்று கருணாநிதியைப் புனிதராக்குவது போல் ஆக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது அவர் மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருந்தது எல்லோர் மனத்திலும் எழுத்திலும் தெரிந்தது. இன்று அப்படியல்ல. அதற்கு மேலாக ஜெயலலிதா இறந்த போது பார்க்காத சில அவலங்களை இப்போது பார்க்க நேர்கிறது ஆகவே எழுதுகிறேன்.
ஒரு விளக்கம்
மேலும் படிப்பதற்கு முன் ஒரு விளக்கம். சிலர் நினைப்பது போல் கருணாநிதி 'மருத்துவர் பிள்ளைகள் மருத்துவர் ஆகக் கூடாது' என்ற பிரகடனத்தோடு கொண்டு வந்த பட்டம் பெறாத பெற்றோறின் பிள்ளைகளுக்கு மொத்த மதிப்பெண்ணோடு 5 மதிப்பெண் இலவசம் என்ற மோசடித் திட்டத்தால் பாதிக்கப்பட்டதால் அவர் மீது வன்மமெல்லாம் இல்லை. இன்று நான் சுபிட்சமாகவே இருக்கிறேன். கனவுக் காணும் உரிமைகளற்ற முன்னேறிய வகுப்பினன் என்பதால் +2 படிக்கும் போதே மருத்துவமோ பொறியியலோ எது கிடைக்கிறதோ அதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தது. ஆகா "நீ சமூக நீதிக்கு எதிரானவன்" என்று யாரும் மூக்கை சிந்த வேண்டாம். சமூக நீதிப் போராளிகளில் எத்தனை பேர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை பயனாளர்கள், எத்தனை பேர் போலி சான்றிதழளாளர்கள் என்பது ஊரறியும். 1996-இல் கருணாநிதி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் இல்லை. நானும் ஒருவன். கல்லூரி மேடைகளில் அக்காலத்தில் ஜெயலலிதாவை விமர்சித்தே தான் பேசியிருக்கிறேன். 2001-லும் திமுகவே ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினேன் ஏனென்றால் தர்மபுரி பஸ் எரிப்பெல்லாம் பார்த்ததால். நம்ப முடியாதவர்கள் நம்பத் தேவையில்லை. சரி அந்த 5-மார்க் விவகாரம் தான் காரணம் என்றாலும் என் விமர்சனம் பொய்யாகிவிடுமா? நான் வைக்கும் தர்க்கங்களை முறிக்க என் உந்துதல் பற்றிய ஆராய்ச்சித் தேவையில்லாதது முடிந்தால் உங்கள் பக்கத்துத் தர்க்கங்களை முன் வையுங்கள், தர்க்க ரீதியாக.
தரம் தாழ்ந்த 'தி இந்து' பத்திரிக்கை:
'தி இந்து' பத்திரிக்கை குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் கூறுகிறார், "இந்தியர்கள் நடத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளி 'தி இந்து' அளவுக்குச் சிறப்பானது வேறில்லை. அப்பத்திரிக்கை வரம்பு மீறிய குறும்பான சொல் ஒன்றைக் கேட்டால் முகம் சுளிக்கும் கண்டிப்பான ஒழுக்கமுடைய மூதாட்டியைப் போன்று எனக்குத் தோன்றும். அது வாழ்வில் மேட்டுக்குடிகளுக்கானது. ஏற்றத் தாழ்வுகள் ஊடைய வாழ்வின் நிழற்பக்கங்கள் அதுக்கு ஒவ்வாதது. வேறு பத்திரிக்கைகளும் இந்த ஒழுக்கமான மூதாட்டி மனநிலையோடு செயல்படுகின்றன ஆனால் அவை 'தி இந்து' போல் சிறப்பாக இல்லை" (roughly translated).
கருணாநிதிக்கும் இந்துப் பத்திரிக்கைக்கும், இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களுக்கும், என்றும் ஓரு அன்பும்-கடிதலும் மாறி மாறி வரும் உறவுண்டு. அவருக்குப் பிடிக்காதது அல்லது அவரை விமர்சித்தால் இந்துப் பத்திரிக்கையை 'மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு' என்பார். அவரைப் பாராட்டி இந்துப் பத்திரிக்கை தலையங்கம் தீட்டினால் 'உடன் பிறப்பே இந்துப் பத்திரிக்கையே சொல்கிறது' என்று புளங்காகிதம் அடைவார். அவர் மகள் கனிமொழி ஒரு காலத்தில் இந்துவில் தான் பணியாற்றினார். என்.ராம் அடிக்கடி திமுக மேடைகளில் தோன்றுவார். 'இந்து' பத்திரிக்கை கருணாநிதியை விட ஜெயாவோடு தான் அதிகம் மோதியது.
கருணாநிதி இறந்தவுடன் முரசொலியோடு போட்டிப் போட்டது 'தி இந்து'. 'தமிழ் தி இந்து' சமஸ் புண்ணியத்தில் எப்போதோ முரசொலியை விஞ்சிவிட்டது. மொரார்ஜி, இந்திரா ஆகியோரை சமாளித்த கருணாநிதி என்றொரு கட்டுரை. கர்மம். மிகச் சாதாரணச் சொல்லாடல்களை என்னமோ சாக்ரடீஸ் ரேஞ்சுக்குக் கொண்டாடியிருந்தது. சரி அது தான் தொலயட்டும் என்றால் கருணாநிதி 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக' என்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த அந்தர் பல்டியை அது கேவலமான அரசியல் பிழைப்புவாதம் என்ற விமர்சனம் இல்லாமலே கடந்து சென்றது. ஆனால் அதையெல்லாம் விஞ்சியது ஒரு நிகழ்வைப் பற்றிய நினைவுக் கூறல்.
எமெர்ஜன்ஸி காலத்தின் போது சிறைப்பட்ட திமுகவினர் வீடுகளுக்கு ரூ.200 அனுப்பி வைத்தாராம் மாதா மாதம். பிற்காலத்தில் ஏதோ ஒரு விழாவில் ஆபாச நாராச பேச்சுகளுக்குப் பெயர் போன வெற்றிக் கொண்டான் "என் வீட்டுக்கு மட்டும் ரூ.100 தான் வந்தது என்று என் மனைவி சொன்னாள்" என்றாராம். அடுத்துப் பேசிய முத்தமிழ் அறிஞர் "அதற்குக் காரணம் உன் இரண்டாவது மனைவிக்கு அடுத்தப் பாதி ரூ.100 அனுப்பப்பட்டது. இரண்டு பெண்டாட்டி கஷ்டம் எனக்குத் தெரியும்" என்றாராம். இந்த அசிங்க கர்மத்தை 'தி இந்து' வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறது. இதுக்குப் பேசாமல் பத்திரிக்கையை மூடி விட்டு 'வண்ணத் திரை' நடத்தலாம்.
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி வாழ்நாள் போராளி என்றும் கடைசிக் காலத்தில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர் என்றும் ஒரு கட்டுரைச் சொன்னது. கருணாநிதியைப் பொறுத்தவரை பல விஷயங்கள் 'பொய்யாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போனதுவே தான்'. தமிழ் மொழி, இலங்கைப் பிரச்சினை எல்லாமே ஆரம்பத்தில் கொள்கை, சித்தாந்தம் என்று தான் ஆரம்பிக்கும் அப்புறம் பாதி வழிக்கு மேல் அது வெறும் பிழைப்புவாதமாகி இருக்கும். 1980-களில் இலங்கைப் பர்ச்சினை அவருக்கு அரசியல் சித்து விளையாட்டுக்குத் தான் பயன் பட்டது. அதற்கு மகுடம் வைத்தது அந்த 2009 உண்ணாவிரதம் என்கிற கூத்து. நடப்பதோ இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் போர். இவரோ மாநில அரசியல் தலைவர். இவர் உண்ணாவிரதம் இருந்தாராம், மத்திய அரசு இலங்கையோடு பேசியதாம், போர் நிறுத்தம் ஏற்பட்டதாம், இவர் உண்ணாவிரதத்தைக் கலைத்தாராம். இதை விட அத்தைக்கு மீசை முளைத்தது பார் என்று சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் உடன் பிறப்புகள் விடலைத்தனமாக நரம்பு புடைக்கச் சொல்லலாம் ஒரு பத்திரிக்கை அதைச் செய்யலாமா?
கருணாநிதியின் தமிழ் சினிமா வசனத்தின் வசீகரம் போல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் வேறொன்றுமில்லை. 'மனோகரா' தர்பார் வசனத்தைப் பேப்பரில் எழுதிப் படித்துப் பாருங்கள். வெறும் குப்பை. 'உன் குடலை உருவிடுவேன். உன் எலும்ப நொறுக்கிடுவேன், எங்க ஆத்தா மேல சத்தியம், அந்த அவுசாரிய என்ன பன்றேன் பாரு' இது தான் அந்த நெடிய வசனத்தின் சாரம். குப்பை. இவர் 'நான் தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பார். கண்ணதாசன், 'தென்றலை நாம் தீண்ட முடியாது அதுவாக நம்மைத் தீண்டினால் தான் உண்டு' என்று கிண்டலோடு திருத்துவார். சும்மாவாச்சும் 'விதவை என்று எழுதினால் கூடப் பொட்டு வைக்க முடிவதில்லையே' என்று யாரோ புலம்ப இவர் 'விதவை என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகக் கைம்பெண் என்ற தமிழ் சொல் பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்' என்று சொன்னதை இன்னமும் கண்ணீர் மல்க உடன் பிறப்புகள் குறிப்பிடுவார்கள். கர்மம். இது தான் நம்மவர்களுக்குத் தமிழ்ப் புலமை.
வெள்ளித் திரைக்குத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு சென்றாராம். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கண்ணாம்பா உருகிப் பேசும் வசனம் மடமையும் மூட நம்பிக்கையும் போட்டிப் போடும் வசனம். சிலப்பதிகாரத்தைக் கிட்டத்தட்ட மதமாகவே மாற்றினார் கருணாநிதி. அதுவோ அவர் பார்வையில் சொன்னால் மூட நம்பிக்கைகள் கொண்ட சமணக் காவியம். அதை எதிர்த்திருக்க வேண்டியவரே அவர் தான்.
இன்னொரு கட்டுரை கருணாநிதி நடத்திய 2010-ஆம் ஆண்டுச் செம்மொழி மாநாட்டை ஆகா ஓகோவென்று புகழ்கிறது. அது வெறும் தண்டம். மக்கள் வரிப்பணத்தைத் தற்பெருமைக்காக வாரியிறைத்தார் தன் வாழ் நாளெல்லாம் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தியவர். அதே நாட்களில் நான் தஞ்சையில் இருந்தேன். எம்ஜியார் கட்டினார் என்பதற்காகவே தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தைச் சீரழிய விட்டிருந்தார் இந்தத் தமிழ்ப் போராளி. பல்கலைக் கழகம் சிதிலமடைந்திருந்தது அப்போது. அதெல்லாம் மவுண்ட் ரோடில் உட்கார்ந்து கொண்டு காலாட்டிய படியே கட்டுரை எழுதும் ராமகிருஷ்ணன்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி தான் பயின்றனர் அதுவும் நகரின் விலையுயர்ந்தப் பள்ளிகளில்.
ஜெயகாந்தன் முன்பு அண்ணாதுரை பற்றிப் பேசியது:
"பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"
அது இன்றும் கருணாநிதிக்கும் பொருந்தும். கலைஞர் விருதை பின்னாளில் கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் மேற்சொன்ன எதையும் பின் வாங்கவில்லை. கருணாநிதி கொடுத்தார் ஜெயகாந்தன் வாங்கிக் கொண்டார். அவ்வளவு தான்.
'தி இந்து' பத்திரிக்கை ஆசிரியர் திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கருணாநிதியின் கவித் திறனும் ஆபாச மனமும்:
கருணாநிதிக்கு இல்லாதது கவித் திறன். அபாரமாக இருப்பதோ இரட்டை அர்த்தம், இல்லையில்லை அதெல்லாம் விடலைகள் செய்வது, நேரடியாக ஆபாசமாகப் பேசுவது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் அவர் படிக்கும் கவிதை ஒன்றை ஒரு தற்குறி இன்று ஒரு பேட்டியில் பெருமைப் பொங்க குறிப்பிட்டார். மேற்கொண்டு படிப்போருக்கு ஓர் எச்சரிக்கை இது சரோஜா தேவி வகை. கருணாநிதி விவகாரமாச்சே.
கவிதையை, அப்படித்தான் அதைச் சொல்கிறார்கள், கேட்டால் எம்ஜியார் காலத்தில் ஏதோவொரு இடைத் தேர்தலில் தோற்றப் பிறகு நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் படித்தது, தோற்றவர்கள் ஏன் விழா எடுக்கிறார்கள் என்று யாரோ கிண்டல் செய்திருக்கிறார்கள் அதற்குப் பதில் சொல்லும் விதமாகக் கவிதை என்ற பெயரில் ஒன்றை படிக்கிறார் முத்தமிழ் ஆசான்.
பின்னாளில் இவரும் இவர் மகனும் கட்டவிழ்த்துவிட்ட 'திருமங்கலம் பார்முலா' எம்ஜியார் காலத்து இடைத் தேர்தல் தில்லுமுல்லுவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டாக்கியது. அந்தக் கவிதையில் எம்ஜியார் என்னமோ தில்லாலங்கடிச் செய்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எம்ஜியாரின் பெயரான ராமச்சந்திரனை சிலேடையாக்கி ராமனின் வாலி வதத்தோடு முடிச்சுப் போட்டிருப்பார். என்ன செய்வது நம்மவர் தரத்துக்கு அது தான் சிலேடை. அதற்குப் பின் தான் கச்சேரி களைக் கட்டும். இப்படித் தோல்வியுற்றப் பின் ஏன் விழா எடுக்கும் மனோபாவம் என்பதற்கு விவரிக்கத் தொடங்குகிறார், "படுக்கையில் இருந்தேன், அப்போது பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டு, வெட்கமது சிறிதுமில்லாமல், என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவிக் கொண்டாள்". அப்போது திமுக விடலைகளின் சீட்டி சத்தமும் கரவொலியும் காதைப் பிளக்கிறது. மேலும், "அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும், தள்ளிவிட மனமில்லை, தழுவட்டும் என்றிருந்தேன், அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்". அரங்கம் அதிர்கிறது இப்போது. அநேகமாகப் பல உடன் பிறப்புகள் உச்சம் எய்தியிருப்பார்கள். "என்ன இது இரு மங்கை ஒரு படுக்கை எனக் கேட்பீர், பொறுத்திடுக". கூட்டம் கெக்கலிக்கிறது. "முதலில் வந்தவள் பெயர் தூக்கம், மற்றொருத்தி கனவு மங்கை". ஆஹா இதல்லவோ தமிழ்ப் புலமை. இவனல்லவோ நமக்கு வாய்த்திட்ட 20-ஆம் நூற்றாண்டு கவிச் சக்கரவர்த்தி என்கிறார்கள். அற்பர் கூட்டம். மூடர் கூடம்.
ஒரு வசன வரியை ஒரு முறைக்கு இரு முறை ஒவ்வொரு வரியையும் படித்தால் அதுவே அதைக் கவிதையாக்கிவிடும் என்று எந்தச் சண்டாளனோ அவரிடம் சொல்லிவிட்டான். ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை படிக்கிறார். ஒரு வேளை திமுகத் தற்குறிகளுக்குச் சரோஜா தேவி மேட்டர் என்றாலும் இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று நினைத்தாரோ அந்தப் புண்ணியவான்?
இன்னொரு காணொளி இருக்கிறது. சுந்தர்.சி படத்தைப் பார்த்துவிட்டுப் பேசுவது. 80-களில் இளமைத் துள்ள வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் ஒருவரின் வயோதிக-வாலிப பேச்சு. அப்போது அவர் முதல்வர். இவர் மட்டும் முழு நேர எழுத்தாளராகியிருந்தால் சரோஜா தேவி என்ற அந்தப் புனைப் பெயர் இவருடையதோ என்று எண்ணும் அளவுக்குக் காத்திரமான படைப்புகள் வந்திருக்கும்.