தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.
காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.
தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.
எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-
பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)
நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.
சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.
48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.
இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.
ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?
தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?
பட்டியலிடத் தயாரா?
முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-
தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.
ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.
ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.
(நூல்:- தலித்துகள்)
டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.
தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!
தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.
(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)
இதிலிருந்து தெரிவதென்ன?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.
அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!
ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?
இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:
”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!
அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.
அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?
மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)
மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)
இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.
அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.
கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.
காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?
அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.
அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.
இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.