New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவரும் ஒழுக்கமும் - ப்ரவாஹன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வள்ளுவரும் ஒழுக்கமும் - ப்ரவாஹன்
Permalink  
 


 

வள்ளுவரும் ஒழுக்கமும்

pravaahan(வள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோரின் சிலைகள் திறப்பின்போது எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ் இதழ்கள் இக்கட்டுரையைப் பிரசுரிக்க முன்வராததால், தாமதமாகவேனும் இதனை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. – ஆசிரியர் குழு)

வரலாற்றில் இதுவரையிலும் நிகழ்ந்திராத கேவலம் ஒன்று நிகழ்ந்தேறியுள்ளது. ஞானிகளும் விஞ்ஞானிகளும் வரலாற்றில் பல நேரங்களில் இகழப்பட்டிருக்கிறார்கள், அவமானப்பட்டிருக்கிறார்கள், கொடுமைப்பட்டிருக்கிறார்கள். எனினும் அஃறிணை ஆக்கப்பட்டதில்லை. அதாவது பொருளாக ஆக்கப்பட்டதில்லை. அதிலும் பரிமாற்றத்துக்குரிய பண்டமாக ஆக்கப்பட்டதில்லை. பொதுவாக அறிஞர்களின் கருத்துகள் அவரவர் கால/இட நிலைகளைப் பொருத்து எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கூறப்பட்ட தீர்க தரிசனங்களாகவோ அல்லது அவரது காலத்திற்கு அவசியமான நீதிகளாகவோ இருக்கும். ஒரு அறிஞர் கூறாததை மற்றொருவர் கூறியிருப்பார். அவை ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்வதாக சமூகம் எடுத்துக் கொள்ளும். இத்தகைய கருத்துப் பரிமாற்றம் இயல்பானதே.

ஆனால் இப்போது நிகழ்ந்துள்ள அவலம், கருத்துப் பரிமாற்றங்களுக்கு அப்பால், கடைந்தெடுத்த வியாபாரியின் பண்ட பரிமாற்றம் போல் வள்ளுவரும் சர்வக்ஞரும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பல்லாண்டுகளாக திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்த வள்ளுவர் சிலையைத் திறக்க, சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. மானமும் அறிவும் உள்ளோர் ‘இத்தகைய’ பண்டமாக்கத்தையும் அதன் பரிமாற்றத்தையும் ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள். வள்ளுவரின் சிலையை இப்படித்தான் திறக்க முடியும் எனில் அது நிகழாமலேயே கூட இருந்திருக்கலாம். அவர் ஒரு பண்டமாக மாற்றப்படுவதைவிட சாக்குப் பைக்குள்ளேயே இருந்திருக்கலாம். ஒருவேளை பறவைகள் அவர் மீது எச்சமிடுவதாவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற தமிழனின் தனிக் குணம்தான் இப்படிச் செய்யவைத்ததோ! அல்லது ஒருவேளை, வள்ளுவரைக் ‘காப்பாற்றி’ காவிரி நீர் உரிமையை கர்நாடகத்திடம் விட்டுக் கொடுப்பதற்காக வாழும் வள்ளுவர் மேற்கொண்ட ரகசியத் திட்டமோ? காவிரியாவது, ஒக்கனேக்கல்லாவது, கர்நாடகத்தில் எங்களின் குடும்ப வியாபாரம் நடந்தால் சரி! சரி, வாழும் வள்ளுவரின் ஒழுக்கம் அப்படி! நாம் சாகா வரம் பெற்ற தெய்வப் புலவர் வள்ளுவரின் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு வருவோம்.

வள்ளுவரின் அறக்கோட்பாடுகளும் ஒழுக்கவியலும் எல்லோருக்கும் எக்காலத்திற்குமானவை அல்ல. ஒழுக்கத்தினை அவர், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று படிக்கட்டுப் போல ஒன்றில் ஏறி அடுத்ததற்குப் போகலாம் என்ற வகையில் பல நிலைகளாகப் பிரித்திடவில்லை. அவருடைய கால நிலைமைகளுக்குத் தக, சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரும் மேற்கொள்ள வேண்டியவற்றை, அந்தணர்க்கு, அரசர்க்கு என அவரவர்க்கான உயந்த ஒழுக்கத்தினையும் உய்வடையும் வழியினையும் சொல்லிச் சென்றார்.

ஆம் வள்ளுவர் அறிவில் தெளிவுடையவர்! அதனால் தான் “கொல்லாமை”யை அறத்துப்பாலில், அதுவும் துறவறவியலில் சொல்லியிருக்கிறார். துறவிகளுக்கான இலக்கணமாக! மாறாக, கொன்று ஒறுக்க வேண்டும் என்றார் அரசனுக்கு; அரசருக்கான இலக்கணமாகப் பொருட்பாலில் சொல்லியிருக்கிறார். ‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஓருயிர் மற்றோர் உயிரைக் கொன்று வாழ்தல் விலங்கு நிலை; இன்னமும் சமூகம் அதிலிருந்து மீண்டு ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ நிலைக்கு வரவில்லை என்பதை அறிந்துதான் அன்புக்கு இலக்கணம் சொல்கிறார். அறத்துப்பால், இல்லறவியலில் அனைவருக்கும் இலக்கணமாக, ‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை’. இதில் சொல்லப்படும் மற நிலைதான், அரசன் போரில் எதிரிகளைக் கொன்று தன் குடிகளைக் காப்பது. குடிகள் மீதான அன்பினால் தன் வீரத்தைக் கொண்டு தன் குடிகளைக் காக்கவேண்டும் என்று பொருள். இதனால் தான் பொருட்பால், இறை மாட்சியில் ‘படையையும் குடியையும்’ முதலில் வரிசைப்படுத்தி, அதைக் கொண்டிருப்பவனே ‘அரசருள் ஏறு’ என்று புகழ்கிறார். இதுதான் முறை செய்து காப்பாற்றி இறை நிலையடயும் வழி. எல்லோருக்கும் அல்ல; அரசனுக்கு!

இப்படி தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தைப் பிரித்து அவர்களுக்குரிய கடமைகளை வள்ளுவர் கூறவில்லை என்று சிலர் சொல்ல விரும்பலாம். அப்படிச் சொல்வோர் முதற்கண் அந்தணருக்கு, அரசனுக்கு, இல்லறத்தானுக்கு [அந்தணர், அரசர் என்று கூறியவர் வைசியர், வேளாளர் என்று அடுத்த இரு பிரிவுகளைக் கூறாமல் பொதுவாக இல்லறத்தான் என்றும் குடிகள் என்றும் கூறிச்சென்றது ஏன் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.] என ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகளையும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நியதிகளையும் கூறிச்சென்றார். அதனால் தான் ‘ஒழுக்கம் உடைமை குடிமை’ என்றும், அதில் ‘இழுக்கம் எனில் இழிந்த பிறப்பு’ என்றும் சொன்னார். அதாவது பிறப்பின் அடிப்படையில் அவரவரும் தத்தம் கடமைகளைச் செய்வதுதான் உய்வுக்கு வழி என்றார். இதை எப்படித் தெளிவுபடுத்துகிறார் பாருங்கள்: அடுத்த குறளிலேயே, ‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்றார். ஓத்து எனப்படும் வேதத்தினை விட பிறப்பொழுக்கம் முக்கியம்; அது கெடாமற் தூய்மையைப் பேணுவதே அந்தணருக்கு ஒழுக்கம் என்கிறார். தவிரவும் அந்தப் பிறப்பில் அவருக்கு உரிய ஒழுக்கம் வேதம் ஓதுவதே என்பதை வேறோரிடத்தில் ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவா னெனின்’ என்கிறார். அறுதொழிலோர் நூல் மறந்தால் என்ன? உலகம் தலைக் கீழாகிடுமா? ஆம்! வள்ளுவரைப் பொருத்தவரையிலும் அப்படித்தான். அதனால்தான் அறுதொழிலோரான அந்தணர்க்கு பிறப்பொழுக்கம் முக்கியமென்றும் வேதம் ஓதுவதே கடமை என்பதை வலியுறுத்துகிறார். அதுதான் ஒழுக்கமுடைமை; உயிரினும் ஓம்பப் படவேண்டியது.

இந்த ஒழுக்கம் பயிற்சியினால் வருவதன்று, பிறப்பினால் வருவது என்பதே வள்ளுவரின் கொள்கை. அதனால் தான் குடிமை பற்றிச் சொல்லும்போது ‘நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்’ என்றார். இதைத்தான் ‘சாதிக்கேத்த புத்தி’ என்ற கிராமத்து வழக்கும் சொல்கிறது. ‘அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை’ என்கிறார். ஆன்ற, அதாவது நற் குடியில் பிறப்பதே பண்புடைமை என்பதே வள்ளுவரின் கொள்கை. பிறப்புக்கு, உயர்குடிப்பிறப்புக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்தே அவரது மேட்டிமைத் தன்மையை நாம் புரிந்துகொள்ளவியலும். மேலும், நற்குடியிற் பிறந்த ஒருவரிடம் காணப்படும் இழுக்கத்தைக் கொண்டு அவரது குலத்தை ஐயப்படவேண்டும் என்கிறார். வள்ளுவர் கூறும் குடிப் பிறப்பென்பது உயர் குடிப்பிறப்பு. உயர் குடியில் பிறந்தவர்களைப் பற்றியே அதிகமும் பேசுகிறார். அதனால்தான் ‘குடிப்பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதிக் கண் மறுப்போல் உயர்ந்து’ தெரியும் என்றார்.

இப்படிப்பட்ட உயர் குடியிற் பிறப்பதற்குச் செய்ய வேண்டியதை, ‘நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு’ என்கிறார் குடிமை அதிகாரத்தில். உரியவர்களிடம் பணிந்து நடந்து கொண்டால் பிறப்பினால் வருகின்ற குலம் மாறிவிடுமா என்றொரு வினா எழும். இதனைப் புரிந்து கொள்ள, பிறப்பு மற்றும் மறுபிறப்பு பற்றிய அவரது கோட்பாட்டைக் கருத்திற் கொள்ள வேண்டும். பிறவிப் பெருங்கடல், எழுமை எழுபிறப்பும், எழு பிறப்பும் என பல பிறவிகள் உண்டென்பதைச் சொல்லியதன் மூலம் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்காதார், அடுத்த பிறவியில் நற்குலத்தில் பிறப்பதற்கு இப்பிறவியில் தனக்கு மேலுள்ளவர்களிடம் பணிந்து நடக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பணிவு மட்டுமல்ல, நலத்திற்குரிய நாணுடைமையும் கூட எவரிடம் இயற்கையிலேயே வாய்த்திருக்கும் என்பதை,

‘இற்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணமும் ஒருங்கு’

– என்றார்.

அந்தணர்க்கு மட்டுமின்றி அனைவருமே தத்தம் குடிக்குரியவற்றைச் செய்து குடிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதைத்தான் பொருட்பால், ஒழிபியலில், குடி செயல்வகை அதிகாரத்தின் வழியே,

‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடைய தில்’
‘ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையால் நீளும் குடி’
‘நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்’

– என்கிறார்.

தத்தம் பிறப்பினால் வருவது ஒழுக்கம் என்றும் பிறப்புக்கும் குலத்திற்குமுரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னவர், அதே ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லியது முரணில்லையா என்ற வினா எழும். இவ்வாறு முரணாகச் சொல்லக்கூடியவரல்ல வள்ளுவர். எப்படிப் பொருள் கொண்டால் முரணின்றி இருக்கும் என்பது சிந்தனைக்குரியது. இதற்குத் திறவுகோலாகத்தான் ‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர், கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்’ என்றார். இதன் பொருள் மேற்குலத்தில், அதாவது ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தவர் அவர்க்குரிய கடமைகளை முறையாகச் செய்வதுதான். இதனால்தான் நல்லாண்மை என்பதற்கு, தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் என்று அவரது பிறப்பு சார்ந்து இலக்கணம் வகுத்தார். அரசருக்கும் அப்படித்தான். மாறாக, அவர்கள் வேறு தொழிலைச் செய்வராயின் அவர்கள் கீழாகவே கருதப்படுவார். ஒரு அந்தணர் தனக்குரிய அறுதொழில்களல்லாது வேறு தொழில்களில் ஈடுபடுவராயின் அவர் கீழானவராகவே கருதப்படுவார். இதற்கு எடுத்துக்காட்டாக, ந.சி. கந்தையாப் பிள்ளை  இந்து சமய வரலாறு எனும் தன் நூலில் கூறுகின்ற “வேதாந்திகள் [அதாவது ஓத்து என்று வள்ளுவர் சொல்வதைப் பயின்றவர்கள் (க-ர்)] சைவ வைணவ ஆலயங்களில் பூசை செய்யும் பிராமணரை மற்றைய பிராமணரிலும் தாழ்ந்தவராகக் கருதுவர்” என்பதைக் கொள்ளலாம். கோயில்களில் பூசை செய்வது இழிதொழிலாக எக்காலத்திலும் மற்றவர்களால் கருதப்பட்டதில்லை என்ற போதிலும் இலக்கணப்படி வள்ளுவர் காலத்திலும் பிற்காலத்திலும் அது தாழ்ந்ததாகவே அறுதொழில் அந்தணர்களால் கருதப்பட்டது. இத்தகைய வழக்கை மனதிற்கொண்டே ‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர்’ என்கிறார் வள்ளுவர்.

thiruvalluvarஇதன் மூலம் வள்ளுவர் சொன்ன ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்பதன் மெய்ப் பொருளை நாம் காணவேண்டும். ‘செய்தொழில்’ என்று சொல்லியதன் மூலம் அனைத்து உயிரிகளுக்கும் என்றல்லாது மனிதர்கள் குறித்துக் கூறப்பட்டது என்பதை முதற்கண் நாம் அறிய வேண்டும். பின்னர் ‘பிறப்பொக்கும்’ மனிதர்களுக்கு என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற வினா எழுகிறது. மனிதர்களில் இத்தகைய வேறுபாடுகள் உண்டு, அதுவும் பிறப்பால் உண்டு, என்பதை நாம் முன்னரே சொன்ன பண்புடைமை குறித்த குறளும் பிறப்பொழுக்கம் குறித்து, அந்தணரின் பிறப்பொழுக்கம் குறித்த குறளும் தெளிவு படுத்தியுள்ளது. அப்படியானால் பிறப்பொக்கும் என்று சொன்னதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியுமெனில், ஒன்று, பரிமேலழகர் சொன்னதைப் போல, பிறப்பொக்கும் என்பதன் பொருள் முந்தைய பிறவிகளில் செய்த நன்மை தீமைகளையொட்டி இப்பிறப்பு அமையும் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒக்கும் என்பதே. அப்படியாயின், சிறப்பொவ்வா செய்தொழில் என்பது என்ன என்றும் அதனால் அவர்கள் எங்ஙனம் வேறுபடுவர் என்பதையும் புரிந்து கொள்வது முக்கியத்துவமுடையது. இதன் மூலம் தான் பிறப்பொக்கும் என்பதற்கு பரிமேலழகர் கூறியதை விடவும் பொருத்தமான விடை இருக்குமா என்று நாம் காணமுடியும்.‘கடிந்த கடந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும்’ என்ற பொருட்பால், அங்கவியல் குறளின்படி அவர் (இந்த இடத்தில் பொருட்பால், அங்கவியலில் கூறப்பட்டுள்ளதால் அரசர் என்று பொருள்.) ஒருவர் தம் குலத்துக்கல்லாத தொழிலைச் செய்வாராயின் அச்செயல் நிறைவேறினாலும் அவர்க்கு அதனால் துன்பமே விளையும் என்று வள்ளுவர் தெளிவுபடுத்துவதனால், அவரவரும் தத்தம் குடிக்குரிய தொழிலைச் செய்யவேண்டும் என்பது பெறப்படும். எனவே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்பதை, அந்தந்த குலத்தில் பிறந்தவர்கள் அவ்வக் குலத்துக்குரிய தொழிலைச் செய்யாது பிற தொழிலைச் செய்வராயின் அவர்கள் வேறுபடுவர் என்பதாகவே புரிந்து கொள்ள முடியும். அதாவது சர்வப் பொதுவான (universal) பொருளில் அல்லாது ஒவ்வொருவரும் தாம் பிறக்கின்ற குலத்தால் ஒத்தவர்களே; எனினும் அவர்கள் அக்குலத்துக்குரிய தொழிலைச் செய்கிறாரா என்பதைப் பொருத்து தொழில் சார்ந்து வேறுபடுவர் என்பதுதான் பரிமேலழகர் கூறியதைவிட பொருத்தமான விளக்கமாக இருக்கும். அல்லது ஒரு தொழில்நுட்பச் சொல் வழியே இதை எளிதாகச் சொல்லலாம். ஆங்கிலத்தில் compartmental equality என்பதாகச் சொல்லலாம். அதாவது அந்தணர், அரசர் என ஒவ்வொரு அடுக்கிலும் உள்ளவர்கள் பிறப்பினால் ஒத்தவர்கள்; எனினும் அவர்கள் அந்தக் குலத்திற்குரிய தொழிலைச் செய்கிறாரா அல்லது வேறு தொழில் செய்கிறாரா என்பதைப் பொருத்து அவர்கள் வேற்றுமை கொண்டவர்களாவர் என்பதே வள்ளுவர் சொல்லவருவது. இதைத் தெளிவுபடுத்தத்தான் பிறப்பொக்கும் என்று கூறி, அடுத்த குறளிலேயே, ‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர், கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்’ என்றார். இதில் கீழிருந்தும் கீழல்லார் என்பது என்ன எனில், கீழ்க் குலத்தில் பிறந்த ஒருவர் தன் குலத்துக்கென விதிக்கப்பட்டிருந்தவற்றை முறை பிசகாது செய்வாராயின் அவர் உயர்ந்தவராகக் கருதப்படுவார். இதை நியாயப் படுத்தும் வகையில்தான் இந்தப் பிறவியில் அவர் அவ்வாறு ஒழுகினால் அடுத்த பிறவியில் அவர் மேல் நிலையை எய்தலாம் என்பதாக வள்ளுவர், ‘நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும், குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு’ என்றார்.

அன்றைய சமூகத்தில் என்ன இருந்ததோ; மேல், கீழ், உயர்வு, தாழ்வு போன்ற வழக்குகளை வள்ளுவர் அப்படியே அங்கீகரித்திருந்தார். “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பிய மரபு. அவ்வழியில் எல்லோரும் ஒழுகவேண்டும் என்பதையே வள்ளுவர், ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்றார். இதோடு நில்லாது, பொருட்பால் அங்கவியலில், உலகத்தார் உண்டென்ப(து) இல்லென்பான் வையத்(து) அலகையா வைக்கப் படும்’ என்றார். இதன் பொருள்  உலக மக்கள் உண்டென்பதை இல்லையென்று சொல்பவர் உலகத்துள் திரியும் ஒரு பேயாகக் கருதி வைக்கப்படுவான் என்பதுதான். எனவே அக்காலத்தில் உலகில் வழக்காக இருந்ததையே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

மேலும் கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல் போன்ற ஒழுக்கங்களை அறத்துப்பால், துறவறவியலில் கூறிய வள்ளுவர், கல்லாமை, சிற்றினஞ்சேராமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஊக்கம் உடைமை, மடியின்மை, போன்ற நல்லொழுக்கங்களை அனைவருக்குமாகச் சொல்லாது, அரசருக்கு இலக்கணமாக பொருட்பாலில், அரசின் அங்கவியலில் கூறியுள்ளார். இவற்றைவிடவும் பொதுவாக, எல்லோருக்கும் எக்காலத்திலும் கூடாவொழுக்கமாகக் கருத வேண்டிய பரத்தையர் நட்பு (வரைவின் மகளிர்), கள்ளுண்ணாமை, சூது, மருந்து ஆகியவற்றை அறத்துப் பாலில் கூறாது பொருட்பாலில் கூறியது ஏன் என்பது கருதத்தக்கது.

திருவள்ளுவர் காலம் வரையிலும் சமூகத்தில் பெருவழக்காக, அரசியல் வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக பரத்தையர் தொழில், கள் வணிகம், சூதாடல், மருந்து போன்றவை இருந்து வந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இவற்றை ஊக்குவிப்பது, கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதென்பது அரச அதிகாரம் சார்ந்தது. எனவேதான், இவற்றை அறத்துப்பாலில் அன்றி பொருட்பாலில் வைத்து, இவற்றின் தீமைகளை எடுத்துக் கூறி அவற்றைத் தடுத்து நிறுத்துவது அரசனின் கடமை என்பதாக அரசருக்கு நீதி நெறி புகட்டினார்.

இப்படி குலம் வாரியாக அந்தணர், அரசருக்கு ஒழுக்கங்களைச் சொன்ன வள்ளுவர் வைசியர், வேளாளர் என தொல்காப்பியம் சொன்னதைப் போல பிரித்துச் சொல்லாததைக் கொண்டு அவர் வர்ணத்திற்கும் சாதிக்கும் எதிரானவர் என்பதாக நாம் முடிவுகட்டிவிட முடியாது என்பதற்குத்தான் மேலே சொன்ன குறள்களில் இருந்து வலுவான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். வைசியர் வேளாளர் என்று பிரித்துக் கூறாது, பொதுவாக குடிகள் அல்லது குடி மக்கள் என்று கூறியதற்கு காரணங்கள் இருக்குமா என்பதற்கு அக்கால அரசியல் வரலாற்றை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த காலம், சங்கம் மருவிய காலம் என்று சங்க மரபுகள் திரிந்த காலமாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் நீதி நூல் காலம் என்று கூறினாலும், அரசியல் வகையில் பெரும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலமாகும். இதுதான் களப்பிரர் காலம் என்று சொல்லப்படுகிறது. இக்காலத்தில் தான் புற்றீசல் போல் நீதி நூற்கள் இயற்றப்பட்டுள்ளன. களப்பிரர் கால சமூக மாற்றம் ஒரு புரட்சிகரமான மாறுதல் காலகட்டம் என்று சொல்வது மிகையன்று. வலுவான ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை நிறுவியிருந்த மூவேந்தர்களை வீழ்த்தி அக்கால வைசியர்களும் வேளாளர்களும் ஆட்சிக்கு வந்தது ஒரு புரட்சிகரமான மாறுதல்தான். இந்த வைசிய-வேளாளர்களில் பிந்தையவர் கீழ் மக்களாக, நான்காம் வர்ணத்தவராக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்நான்காம் வர்ணத்தினர், உழவு தவிர வேறு தொழில்கள் இல்லாதவர் என்பதை தொல்காப்பியம் அழுத்தமாகக் கூறியுள்ளது. இவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தது பற்றி அக்காலத்தில் தோன்றிய பதிணென் கீழ்க்கணக்கு நூற்களிலேயே பதிவுகள் உள்ளது.

“உறைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப -அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப” பழமொழி நானூறு

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி – கடைத்தலைக்
கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ்
மேலாய் நிற்கும் உலகு” நாலடியார்

‘வேளாண் வேதம்’ என்று போற்றப்படுகின்ற நாலடியார், வேளாண் மக்கள் குறித்து “புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி” என்று குறிப்பிடுவதை நோக்கும் போது சங்க காலத்தில் தொல்காப்பியம் குறிப்பிடும் வேளாண் மாந்தர்கள் நிலை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை நாம் அறிய முடிகிறது. இத்தகையவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அக்காலத்தில் புரட்சிகர மாற்றமே. “நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்” என்று பழமொழி நானூறு குறிப்பிடுவதில் இருந்து நிறையற்றவர்களும் கீழ்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததன் காரணமாகவே அக்காலத்தில் புற்றீசல் போல் நீதி நூற்கள் இயற்றப்பட்டன என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தச் சூழலில், நாலடியாரும், திருக்குறளும் வேளாண்மைக்கு அல்லாது (திருக்குறளிலும் கூட வேளாண்மை என்ற சொல் உபகாரம் என்ற பொருளில்தான் கூறப்பட்டுள்ளதே தவிர ‘விவசாயம்’ என்பதைக் குறிப்பிடுவதாக இல்லை என்பதும் நம் கவனத்திற்குரியது) உழவுத் தொழிலுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். தொல்காப்பியத்தில் கடைசி வர்ணத்தவராக, உழவை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களாகக் கூறப்பட்டுள்ளவர்களிடம் ஆட்சியதிகாரம் சென்றதை பிற்கால சான்றுகளும் காட்டுகின்றன. ‘காராண்மை’ என்பது இக்காலத்தில் இருந்துதான் வேளாளர்களுக்கு உரியதாக ஆகியுள்ளது. இதன் நிமித்தமாகவே பிற்காலத்தில் வேளாளர்கள் ‘காராளர்’ என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர் காலத்தில் தொடங்கி, பின்னாளில் அரச அதிகாரத்திற்கு வந்து விட்ட வேளாளர்களில் ஒரு பிரிவினர் தம்மை ‘கதிர்முனை தீண்டாத காராளர்’ என அழைத்துக் கொண்டனர்.

அரசியலிலும் சமூகத்திலும் இத்தகைய மாறுதல் ஏற்பட்டு, வைசியரும் வேளாளரும் கூட்டணியமைத்து ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளில் வைசியர், வேளாளர் என பிரித்து இலக்கணம் கூறாததன் காரணத்தை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு தம் காலத்தில் நிலவிய சமூகச் சூழல் கருதி வள்ளுவர் கூறியவற்றை உள்ளது உள்ளபடியே நாம் புரிந்துகொள்வதுதான் சரியானதும் நேர்மையானதுமாக இருக்கும். ஒரு நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்கச் சமூகத்தில் (பெண்கள் குறித்து வள்ளுவர் கூறியுள்ளவற்றிலிருந்து அது எத்தகைய ஆணாதிக்கப் பிரதி என்பதை எவரும் எளிதில் உணரலாம்) வர்ணங்களும் அது சார்ந்த ஒழுக்கங்களுமே இருந்திருக்குமேயன்றி சமத்துவம் நிலவியிராது. எனவே அந்நிலைக்கு, மாறாக நம் விருப்பங்களையெல்லாம் வள்ளுவர் மீது திணித்து, ‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்’ என்பது போல அவரது காலத்தில் இருந்தவற்றையெல்லாம் அவர் இல்லையென்று சொல்லிவிட்டதாகப் பொருள் சொல்வது அவரை ‘வையத்து அலகையா’ வைப்பதாகும். எனவே, வள்ளுவர் கூறியதற்கிணங்க, எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்டு, வள்ளுவரைப் பேய் ஆக்காது, அவர் கூறியதை உள்ளபடியே கூறுவதுதான் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard