திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை
உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.
இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.
முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது பண்புகள், வழிபாடு, அதனால் பெறும் பயன்களை எடுத்துக்காட்டி மனிதர்கள் அனைவரும் வணங்கத்தக்க கடவுளை வழிபடுவதையே சிறந்த கடவுள் கொள்கையாகக் காட்டுகின்றார்கள்.
‘தெய்வம்’ என்கிற சொல்லினைத் திருவள்ளுவர் ‘கடவுள் வாழ்த்து’ என்ற முதலாவது அதிகாரத்தில் சொல்லவே இல்லை என்பது பெரிதும் சிந்திக்க வேண்டியதாகும். இக்காலத்தில் ‘தெய்வம்’ என்ற சொல் இறைவனைக் குறிக்கும் சொல்லாகவே நடைமுறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அப்படி அல்ல!
கடவுள் வேறு – தெய்வம் வேறு.
கடவுள் ஒருவர் – தெய்வங்கள் பல.
கடவுள் எல்லாம் வல்லவர், எப்போதும் உள்ளவர், பிறப்பு – இறப்பு இல்லாதவர். ஆனால், தெய்வங்கள் அப்படி இல்லை. தெய்வப் பிறவி, தெய்வப் பிறப்பு என்று சொல்வார்களே, அப்படித் தெய்வங்கள் ஊழ்வினைப் பயனால் பிறக்கின்றன. பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும். எனவே, தெய்வங்கள் நிலையானவை அல்ல என்பது பெறப்படும். ஆகவே, உயர் பிறப்புடைய மனிதன் எல்லாம் வல்ல, எப்பொதும் உள்ள, பிறப்பு இறப்புகள் இல்லாத, நிலையான, உண்மையான கடவுளையே எண்ணி, நோக்கி வழிபட வேண்டும்; வணங்க வேண்டும் என்பது நம் தமிழ் மகான்களின் கூற்றாயிற்று.
அந்த ஒரே கடவுள் கொள்கையில் இறைவனை உறுதியுடன் வழிபடுபவர்கள் அடையும் பெரும்பயன்களை,
நிலமிசை நீடு வாழ்வார்
யாண்டும் இடும்பை இல
நெறிநின்றார் நீடு வாழ்வார்
மனக்கவலை தீர்தல் – என்ற வரிகளினால் திருக்குறள் அறிவிக்கின்றது.
அடுத்தபடியாக, முதற்பாலாகிய அறத்துப்பால் மனிதனுக்குச் செய்யத்தக்கன, செய்யத்தகாதன கூறி வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய நல்வாழ்வை விளக்குகின்றது.
உலக வளர்ச்சியும் அன்பு வளர்ச்சியும் இல்வாழ்க்கையில் அமைந்திருப்பதை இல்லறவியலில் (இருபது) அதிகார வரிசையால் நன்முறையில் திருக்குறள் அறிவிக்கின்றது. இல்லறம் நடத்துவோர் யாரோடும் பேசினாலும் இனிமையாகப் பேச வேண்டும்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (அ.10; கு.96).
பிறர்க்கு நன்மை தரும் சொற்களை இனிமையானவற்றைச் சொல்பவனுக்குத் தீங்குகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும். அடுத்து,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (அ.10; கு.100)
இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்கள் பேசுவது பழங்களை விட்டுவிட்டுக் காய்களைப் பறித்துக் கொள்வது போலத்தான்.
இல்லறத்தார்க்கு செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை – அதாவது, யாரிடத்திலும் சமமாக நடந்து கொள்ளும் குணம் – வேண்டும்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின். (அ.12; கு.116)
ஒருவன் நடுநிலைமை நீங்கி மாறான செயலைச் செய்யத் துணியும்போது மனச்சாட்சி ‘நான் கெட்டுப் போவேன்’ என்று அறிய வேண்டும்.
அடுத்து, இல்லறம் நடத்துவோர்களுக்கு ‘அடக்கம் உடைமை’ மிக முதன்மையான நெறிமுறையாகும். குணம், மொழி, மெய் ஆகியவற்றைத் தீ நெறியில் செல்ல ஒட்டாமல் அது தடுத்து அடக்கத்துடன் இருக்கச் செய்கிறது.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (அ.13; கு.127)
எதை அடக்கி ஆளாவிட்டாலும் நாக்கை அடக்கி ஆள வேண்டும். நாக்குப் பதற்றமில்லாத அடக்கமே மிகவும் தலையாயது என்று திருக்குறள் அந்த அடக்கத்தை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.
மேலும், மக்களுக்குரிய ஒழுக்கத்தில் நின்று வாழவும் ஒழுக்கம்தான் மனிதனுக்கு விழுப்பமான உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரை விடப் பேணிக் காத்து வாழவும் வழிகாட்டுகின்றது. இதை –
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (அ.14; கு.133)
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (அ.14; கு.134)
என்கிற குறள்களால் அறியலாம். ஒழுக்கமுடைமையினால்தான் ஒருவன் உயர்ந்த பிறப்புடையவனாகக் கருதப்படுகிறான். ஒழுக்கம் கெட்டவன் தாழ்ந்த பிறப்புடையவனாகவே கருதப்படுவான் என்று விளக்கி சாதியில் ஒன்றும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது திருக்குறள்.
மேலும், ஒழுக்கங்கெட்டு, பிறனுடைய இல்லாளை விரும்பாதிருக்க வேண்டும் என்றும் பிறனுடைய இல்லாளை விரும்பித் தீமை புரிந்து ஒழுகுவார்களானால்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (அ.15; கு.146)
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார். (அ.15; கு.143)
என்று பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் அவனை விட்டு ஒருக்காலும் நீங்காது என்றும் அவர்கள் இறந்தவர்களே ஆவார்கள் என்றும் மிகவும் கண்டிக்கிறது திருக்குறள்.
பொறுமை என்னும் நற்பண்பைப் பெற்றிருத்தலும் பொறாமை என்னும் தீயகுணம் இல்லாதிருத்தலும் இல்லறத்தானுக்கு மிகவும் கட்டாயமாகும்.
அடுத்து, இல்லறத்தார்களை ஒப்புரவு அறிதல், ஈகை, புகழ் ஆகிய நல்லறங்களைச் செய்து மனிதன் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்து நிலைத்து நிற்கும் புகழினைப் பெற்றுப் பயனுள்ள வாழ்க்கையாக இருந்திட திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை சிறப்பாக அமைந்திருக்கிறது.
அடுத்ததாகத் துறவறவியல் வருகின்றது. இந்தத் துறவறவியல் திருக்குறளின் உயிர் நாடி என்றே கூற வேண்டும். திருக்குறளின் ‘இதயப் பகுதி’ என்றும் கூறுவார்கள்.
இவ்வியலில் மனிதனுக்கு விருதப் பகுதி, ஞானப் பகுதி என்று இரண்டு பகுதிகளை எடுத்துக்காட்டி மனிதப் பிறப்பு, அதன் நோக்கம், அடைய வேண்டிய இலக்கு, செல்லும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வழிகாட்டுகின்றன வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறைகள்.
குறிப்பாக, மனிதன் அருள் நெறியைக் கடைப்பிடித்து எல்லா மனிதர்களிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்தும் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (அ.27; கு.264)
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (அ.27; கு.267)
ஆகிய குறள்கள் தவம் செய்வதனால் மனிதனுக்கு ஆற்றல்கள் உண்டாகின்றன, தவ வலிமை கூடும், தவத்தின் வலிமையால் தக்க பேரறிவு (ஞான) ஒளி உண்டாகும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.