New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்பும் சிறப்பும் இறப்பும் – எஸ்.ராமன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
பிறப்பும் சிறப்பும் இறப்பும் – எஸ்.ராமன்
Permalink  
 


பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1

September 25, 2010
எஸ்.ராமன் rss_icon16.jpg

 

thiruvalluvar2அண்மைக் காலமாக பட்டிதொட்டிகளிலெல்லாம் பறக்க விடப்பட்ட, ஒலிபரப்பப்பட்ட “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்……” என்ற குறள் வாசகம் எல்லோரதும் போல என் கவனத்தையும் கவர்ந்தது. மற்றவர்க்கு என்ன தோன்றிற்றோ, எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனது கையடக்கக் குறள் பதிப்பு ஒன்றில் அதன் சரியான பொருளைத் தேடினேன். அதில் “பிறப்பால் (மனிதர்கள் மட்டுமல்ல) எல்லா உயிர்களும் ஒன்றே. செய்கின்ற தொழிலால் மட்டுமே வேறுபாடு உண்டு. இதில் உயர்வு தாழ்வு இல்லை” என்று இருந்தது. பிறக்கும் போது ‘பிறக்கிறோம்’ என்பதில் எல்லோரும் ஒன்றே. அது சரி, ஆனால் எங்கு பிறக்கிறோம், எப்படிப் பிறக்கிறோம் என்பதில் மனிதர்கள் என்ன, எந்த சல, அசல உயிர்கள் நடுவேயும் வேற்றுமை வெகுவாக உள்ளதே. இதன் காரணம் என்ன? வேறு ஏதேனும் பொருள் பொதிந்திருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், www.tamilonline.com -மின் மே மாதத் தென்றல் இதழில் அதன் ஆசிரியரான மதுரபாரதி என்பவர் எழுதிய கட்டுரை எனது எண்ணங்களுக்கு மேலும் நீரூற்றியது.

அது வழக்கறிஞர், கவிஞர், இலக்கியவாதி, சிறந்த சொற்பொழிவாளர், பாரதி கலைக்கழகத்தின் தலைவர் என்ற பன்முகம் கொண்ட கே. ரவி என்பவரின் சொற்பொழிப்புத் தொகுப்பான “சொற்களுக்குள் ஏறிக்கொள்” என்னும் நூலை விமர்சிக்கும் கட்டுரை. அந்த விமர்சனக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதை அப்படியே கீழே தருகிறேன்:

“…. ‘வள்ளுவன் எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துக்களைச் சொன்னவன்’, ‘வள்ளுவன் ஓர் ஆணாதிக்கவாதி’, ‘வள்ளுவன் விதியின் உயர்வைப் பேசுகிறவன்’, ‘சமநீதி சொன்னவன்’, மக்களுக்குள்ளே உயர்வு தாழ்வு பேசியவன்’ என்று தத்தம் புலப்பாட்டுக்கு ஏற்பப் பலர் பலவிதமாகப் பேசியுள்ளனர். சொல்பவர்கள் எல்லோரும் அறிஞர்கள்தாம். எல்லோருமே வாதத் திறனோடு வலுவாகக் கூறியவர்கள்தாம். இதில் உண்மை எது?

2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்கள் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வர வேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல. விவாதிக்க நூலாசிரியர் எடுத்துக் கொண்ட குறள்:

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

ரவி கூறுகிறார், ‘எப்படிப் பார்த்தாலும் பிறக்கும் போது எல்லோரும் சமமானவர்களாகவே பிறக்கின்றார்கள் என்ற கூற்று நடைமுறை மெய்மைக்கு முரணானது என்பதுடன் திருக்குறளில் உள்ள வேறு பல குறட்கருத்துக்களுக்கும் முரணானதாகவே தோன்றுகிறது’.

sorkalukkul-erikkolசரி. அப்படியானால் குறளை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்வது? இந்த முயற்சிக்கு வரும்போது நூலாசிரியரின் குறிப்பு ஒன்று மிகப் பொருளுள்ளதாகத் தெரிகிறது. அவர் சொல்கிறார்: ‘படிப்பவரின் அறிவு, மனப்பக்குவத்துக்கு ஏற்ப மென்மேலும் நுட்பமான, உயர்வான, சிறப்பான கருத்தை ஒவ்வொரு குறளும் தருவதாலேயே அந்த நூலை மறைநூல் என்று கொண்டாடுகிறோம். நிலைக்கு ஏற்பப் பொருளேற்றம் கொள்வது சரி. ஆனால் தம் கருத்துக்கு ஏற்ப ஓர் உரையாசிரியர் வலிந்து பொருள் திரிபு செய்வது சரியில்லை. பொருளேற்றம் சரி; பொருள் திரிபு சரியில்லை.’ எப்படி பொருள் காணலாம் என்று வரையறுத்தபின் மேலே சொல்கிறார்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரை, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்ற முற்றுப் பெற்ற வாக்கியமாகக் கொள்வதால்தான் மேற்சொன்ன சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. அந்தத் தொடரைக் குறட்பாவில் உள்ளவாறே படித்துப் பார்க்கலாமே: பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா. அதாவது, பிறப்பிலே சமமாக இருப்போர்க்குக் கூட சமச் சிறப்பு கிடைப்பதில்லை. இது நடைமுறையில் சரிதானே?’

‘பிறப்பிலே சமமாகப் பிறப்போர்க்குக் கூடச் சிறப்பு வேறுபட என்ன காரணம்? செய்தொழில் வேற்றுமை என்று குறள் விடை தருகிறது.’…”.

இப்படியாக மதுபாரதி அவர்கள் நூலில் உள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதைப் படிக்கும்போது எனக்கு என் மனதில் தோன்றியதற்கு ரவி அவர்கள் மூலம் விடை கிடைத்தது போலவும் இருந்தது; மேலும் என் சிந்தனையை தூண்டி விடுவது போலவும் இருந்தது.

பிறப்பதெல்லாம் ஒரு நாள் இறக்கவேண்டும் என்னும் நியதியைக் குறிப்பிடும் முகமாகவே, பிறப்பு எனும் சொல்லிலேயே இறப்பு எனும் சொல்லும் உள்ளடங்கியே வருகிறது என்றே கொள்ளலாம். பிறந்ததெல்லாம் சிறந்து விளங்குவதில்லை, அதன் காரணம் பிறந்த ஒன்று செய்யும் செயலில் உள்ளது என்பதோடு இக்குறள் முடிகிறது. குறளின் தொடக்கமோ பிறப்பு என்பதை மட்டுமே கொண்டிருக்கிறது. இது வரை எல்லாம் சரியே. ஆனால் செய்யப்பட்ட வினையின் பயன் என்ன ஆகிறது? இதற்கு “செய் தொழில்” என்ற குறளின் இரண்டாம் அடியில் வரும் தொடரை ஆராய்ந்தால் மேலும் விளக்கம் கிடைக்கும் என்று எனக்குப் படுகிறது. தமிழ் இலக்கணப்படி இத்தொடர் வினைத் தொகை என்ற வகையைச் சாரும் எனக் கொண்டால், அதற்கு மூன்று காலங்களையும் குறிப்பிடும் தகுதி உண்டு. “செய்த தொழில்” என்று கடந்த காலத்தையும், “செய்யப்படுகின்ற தொழில்” என்று நிகழ் காலத்தையும், “செய்யப்போகிற தொழில்” என்று வரும் காலத்தையும் குறிப்பிடும். “செய்தொழில் வேற்றுமை யான் பிறப்பு….. “ எனக் கொண்டால் பிறப்பு என்பதையே முன்பு செய்த செயலின் பயன் என்றுமாகி, பிறக்கும்போதே சீவராசிகளுக்குள்ள பேதங்களையும் இக்குறளே நன்கு விளக்குகிறது.

பேதங்கள் என்பது நாம் ஏதோ கற்பித்துப் புகுத்துவது என்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அனைத்துப் பரிணாம வளர்ச்சியிலும் தானாகவே உருவாவது. நம் உடலில் உள்ள எல்லாமே “செல்கள்”தான் என்றாலும், ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தனித் தத்துவம் உண்டு. இல்லையென்றால் இதயம், கை, கால் என்ற விதவிதமான உறுப்புகள் ஒரு உடலில் இருக்க முடியாது. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதுதான். மரத்தை எடுத்துக் கொண்டால் வேர், தண்டு, இலை, பூ, காய் என்று இருப்பது போலத்தான்; பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய பங்கு உண்டு. அவை ஒன்றையொன்று சார்ந்து வளரும். ஒன்றை ஒன்று உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பது சரியில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றின் தனித்தன்மையை உணராது இருப்பது அறிவுக்கு ஒவ்வாதது. ஜீவராசிக்குள்ள பேதங்களோ தம்தம் செயல்களால் உருவானவை. இதையும் இயற்கை நியதியையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முன்பு செய்த செயலின் தொடராய் இப்போது பிறக்கிறோம் என்றால், தற்சமயம் செய்யும் செயலால் நமது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் ஆகிறது; நல் விளைவுகள் என்றால் நாம் சிறப்பு அடையலாம் என்றும் ஆகிறது. அதாவது நாம் செய்யும் கர்மத்துக்கு உண்டான பலன் வருகிறது, அதன் தொடர்ச்சியாக இப்பிறவியில் இல்லையென்றால் வரும் பிறவியிலாவது உண்டு என்றாகிறது. சிலர் இத்தொடர் நிகழ்வை நம் மன ஆறுதலுக்காக நமக்கு நாமே கற்பித்துக் கொண்டது என்று கூறுகின்றனர். அப்படி இல்லை என்கிறது சிலரின் சொந்த அனுபவங்கள். நம்புவோர் இதை மேலும் படிக்கலாம், நம்பாதோரைப் பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது?

என்னைப் பொருத்தவரை இதை நான் ஒரு நடுநிலையாளராகத்தான் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருந்தேன், டாக்டர் ப்ரான் வைஸ் என்பவரின் நூல்களை படிக்கும்வரை. அவர் மறுபிறவி தவிர வரப்போகும் பிறவிகளின் சாத்தியக் கூறுகளைப் பற்றியும் வெவ்வேறு நூல்களில் மருத்துவ ரீதியில் தான் எதிர்கொண்ட, ஆராய்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளதை நான் படிக்க நேர்ந்தது.

நேர்ந்தது என ஏன் சொல்கிறேன் என்பதற்கு முதலில் விளக்கம் கொடுக்கிறேன். ஒரு முறை தொலைக்காட்சி ஒன்றில் ஒருவரது அனுபவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மேலும் அவரது பேட்டியும் அதில் இருந்தது. அதைப் பார்த்த ஒரு மாதம் கழித்து, பேட்டி கொடுத்த அந்த அனுபவசாலியையே தெருவில் எதேச்சையாகப் பார்த்தேன். எனது மனைவிக்கு ஆர்வம் வந்து அவர்தானா என அவரையே விசாரிக்க அவரும் ஆமாம் எனச் சொல்ல, அவரிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தமிழ்நாட்டில் ஒருவருக்கு வளர்ப்பு மகளாக வந்ததாகவும், அந்தத் தந்தை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பக்தர் என்றும், அதனால் அக்கடவுளர் ஞாபகமாகத் தனக்குப் பெயர் இட்டிருப்பதாகவும் கூறியது எனக்கு ஓர் உபரிச் செய்தி.

அவரிடம் பேசும்போது அவர் தனது முந்தைய பிறவி ஞாபகம் வரும்போது சில வருத்தங்கள் வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு நான், நினைவுகள் வந்தாலும் அவைகளை மிகவும் பொருட்படுத்தாது, சாட்சிபோல் பார்த்துக்கொண்டிருக்கும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போது எல்லாம் சரியாகிவிடும்; இதனால்தானோ என்னவோ நம்மில் சிலரைத்தவிர எவருக்குமே இத்தகைய நினைவுகள் வராது இருப்பது ஒரு மறைமுக ஆசியே என்று சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்படியும் மீறி சிலருக்கு அந்நினைவுகள் வந்தால் அதற்கும் காரணம் ஏதாவது இருக்கும். அதை அவரவர்களே கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். தங்களுக்கும் அப்படி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு, அன்று இரவே நாங்கள் லண்டனுக்குப் பயணம் செய்யவேண்டி இருந்தததால், அவரிடம் அப்புறம் பேசலாம் என்று சொல்லி, அன்றைய பேச்சை அவசரமாக முடித்துக்கொண்டு வீடு திரும்பி விட்டோம். அதுவரை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கேட்டதும், பத்திரிகைகள், புத்தகங்கள் வாயிலாகப் படித்தறிந்ததோடு சரி, அனுபவம் பெற்ற எவரையும் சந்தித்ததில்லை என்பதால், அவரைப் பார்த்துப் பேசியது ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது. நான் அவரிடம் பொதுவாகச் சொன்ன சமாதான வார்த்தைகளுக்கு லண்டனில் எனக்கு மேலும் விளக்கம் கிடைத்தது என்றால், நான் அதைப் பற்றி என்ன சொல்ல? எங்கள் திட்டப்படி லண்டனும் போய்ச் சேர்ந்தோம்.

clock-in-motion-hypnotismஅங்கு சென்ற ஓரிரு நாட்கள் கழிந்தபின், எங்களது இந்த எதிர்பாராத அனுபவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த எங்களது உறவுக்காரப் பெண் ஒருவர் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு எப்படி அது தெரிந்தது என்று கேட்கும்போது அவர் பெங்களூரில் தனக்கு அமெரிக்க ஆசிரியர் ஒருவரின் புத்தகம் கிடைத்ததாகச் சொல்லி, டாக்டர் ப்ரான் வைஸ்என்பவரின் புத்தகம் ஒன்றையும் கொடுத்தார். ஆர்வத்தோடு அதைப் படித்தால் பல விளக்கங்கள் கிடைத்தன. அந்த மருத்துவரோ மத சம்பந்தங்களில் மிகவும் பற்று இல்லாத கிறித்தவர், அவரது மன நோயாளியோ ஆன்மிக நாட்டம் மிகவும் இல்லாத, ஞாயிற்றுக் கிழமைகளில் மாதா கோவில் போகும் ஒரு சாதாரண கிறித்தவர். அவர்கள் இருவருக்குமே கிறித்துவ தத்துவப்படி பிறவி என்பது ஒன்றே என்பதுதான் எண்ணம்; மறுபிறவி உண்டு என நாம் சொல்லும் தத்துவங்கள் ஏதும் அவர்கள் அறியாதவர்கள். அந்த நோயாளிக்கு அடிக்கடி ஒரு மன உபாதை வரும். அதனாலேயே அவர் இந்த மருத்துவரின் உதவியை நாடியுள்ளார். மனோரீதியான சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, அந்நோயாளி திடீரென மருத்துவரின் இளம் வயதிலேயே இறந்துபோன மகன் இறந்து போன காரணத்தையும், அவன் தற்போது இருக்கும் நிலையில் சுகமாக இருப்பதாவும் சொல்ல, மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.

அவரது பிரமிப்புக்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் மகனுக்கு வந்த வியாதி மிக மிக அபூர்வமானது; அது நூற்றுக்கோடியில் ஒருவருக்கு வரலாம். இரண்டு, அந்தத் துயர சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆயிருந்தன. மூன்று, அதுவும் அவர் வேறு மாநிலத்தில் இருந்தபோது நடந்தது. நான்கு, அதைத் தனது சொந்தத் துயரமாக எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிப் பேசினால், தனது மனைவி மிகவும் துயறுருவாள் என்ற காரணத்திற்காக, மருத்துவ ரீதியில் மிக அபூர்வமானதான அந்த நிகழ்வு பற்றி அவர் எங்கும் அநாவசியமாகப் பேசியதும் இல்லை. அப்படியும் இந்த மன நோயாளிக்கு அந்த விவரம் சிகிச்சை அளிக்க ஏதுவாயிருந்த ஆழ்நிலை மயக்கத்தில் தெரிந்துள்ளது என்றபோது, அவர் அது பற்றி அறிய மேலும் நோயாளியை அம்மயக்க நிலையிலேயே கேள்விகள் கேட்கக் கேட்க, ஒருவர் எடுக்கும் பல பிறவிகள் பற்றி மருத்துவர் அறிகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2

October 2, 2010
எஸ்.ராமன் rss_icon16.jpg

 

 பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1 

(தொடர்ச்சி…)

blw_web1டாக்டர் ப்ரான் வைஸ் என்ற அந்த மன நல மருத்துவர் எழுதியுள்ளதைப் பார்த்தால் அந்த நோயாளிக்கு நேர்ந்த சுமார் எண்பத்திரண்டு பிறவிகளில், மருத்துவரிடம் வந்த நோயின் மூலத்தை அறிவதற்காக நடந்த சிகிச்சை முடியும் வரை, நோயாளி தனது பதினைந்து பிறவிகளைப் பற்றி ஓரளவு விவரிக்கிறார். ஆணாகப் பிறக்கிறார், பெண்ணாகப் பிறக்கிறார். வெவ்வேறு நாடுகளிலும், ஆதி காலத்திலிருந்து இன்று வரையிலும் பிறந்து வளர்கிறார். போர்க்களங்கள் பல காண்கிறார். இயற்கை மரணம், செயற்கை மரணம் எல்லாம் அடைகிறார். ஒரு பிறவியில் தான் பிறக்கும் சில நிமிடங்கள் முன்பாக அந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கீழ்க்கண்டபடி கூறுகிறார். தனது தாயின் முகத்தைப் பற்றியும் அவள் தனது வரவால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதையும் சொல்கிறார். அது தவிர தன் தாயைச் சுற்றிக் கூடியிருப்போர் மன நிலையையும் விவரிக்கிறார்.

பல சமயம் நிகழ்வுகள் நடந்த ஆண்டுகளையும், சரித்திர நிகழ்ச்சிகளையும் கூறுகிறார். திடீரென அவரே அறியாத மொழிகளிலும் பேசுகிறார். பெரும்பாலும் ஏழைக் குடும்பச் சூழ்நிலையில் பிறக்கிறார். அதுதான் அவருக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்ததோ என ஆசிரியரும் நினைக்கிறார். முற்பிறவியில் சந்தித்த சில நபர்களை இப்பிறவியில் எந்த நண்பர்களாக, உறவினர்களாக உள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். அதாவது, ஆழ்நிலையிலும் அவருக்கு தனது இப்பிறவி உணர்வு போய்விடவில்லை என்று மருத்துவர் கூறுகிறார்.

சிகிச்சை நடக்கும் போது ஆழ்நிலையில் அவர் கூறுவது பற்றி அவரது விழிப்பு நிலையில் மருத்துவர் அவரிடமே விளக்கும்போது பல விவரங்கள் அவருக்கே ஒத்துப் போகாதவாறு இருக்குமாம். கடைசி வரை அவருக்கு மறு பிறவிகளில் அவ்வளவாக நம்பிக்கையும் வரவில்லையாம். ஒரு வேளை அப்படியும் இருக்கலாம் என்ற மனோநிலையில்தான் இருந்தார் என மருத்துவர் குறிப்பிடுகிறார். அதாவது, ஆழ்நிலை அனுபவங்களை அந்நோயாளி தனது சிகிச்சைக்காக எடுத்துக் கொண்டாரே தவிர, அவைகளால் அவர் தனது விழிப்பு நிலை உணர்வுகளை மாற்றிக்கொள்ள இயலாதவாறு அவரது நம்பிக்கை அமைந்தன என்றும் கூறலாம். ஆனாலும் அவரது மன உளைச்சலின் காரணத்தை தனது முற்பிறவிகளில் செய்த வினைப்பயன் என்பதை அவர் உணர்ந்தார்.

அப்படி உணர்ந்த அவருக்கு தான் வெறும் உடல் மட்டும் அல்ல, மனத்தளவில் தானே இயற்றிய, மற்றும் தனக்கு நடந்த கடந்த காலச் செயல்கள் தன்னை வெகுவாகப் பாதித்திருந்தன என்ற உண்மையை உணர்கிறார். அவை மனத்தளவில் மட்டும்தான், அது தெரிந்து திருந்திவிட்டால் அதற்கும் தனது தற்போதைய நிலைக்கும் வேறு சம்பந்தம் ஏதுமில்லை என்றும் உணர்ந்து, அவற்றின் பாதிப்பிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டார்.

இவையெல்லாம் படித்த எனக்கு, இந்தியப் பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.

walter-semkiwநான் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய சில வாரங்களிலேயே, சென்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரி ஒன்றில் (29-6-2009) வந்த செய்தி என்னைக் கவர்ந்து இழுத்தது. சென்னைக்கு வந்த வால்டர் செம்கிவ் (Walter Semkiw) என்ற ஒரு அமெரிக்கர், தான் முற்பிறவி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததாகத் தெரிந்து கொண்டதாகவும், மேலும் செய்த ஆராய்ச்சியின் பயனாய் எழுதப்பட்ட நூல் ஒன்றில் அமெரிக்கா அல்லாது இந்தியாவில் உள்ள சில நபர்களைப் பற்றியும் எழுதியிருப்பதாக வந்த செய்திதான் அது.

தான் அந்த நூலை எழுதியதன் காரணமாக அவர் கூறுவது:

“இம்சை, பயங்கரவாதம் எல்லாம் அறவே ஒழியவேண்டும்; நாம் அனைவரும் ஒன்றே என்பதை உணரக்கூடிய கலாசாரத்தை உருவாக்க வேண்டும்; நாம் அனைவரும் நம்மை வளர்த்து உருவாக்கியுள்ள இந்த பூமிக்குத்தான் இனம், மொழி, நிறம், ஜாதி, வகுப்பு, நாடு என்ற பாகுபாடுகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிரிவுகளில் பிறந்து வருகிறோம் என்பதை உணரவேண்டும். ஆதலால் நம்மிடையே எந்தச் சச்சரவும் இருக்கலாகாது.”

இவை அனைத்துமே உயரிய நோக்கங்கள்தான். அவைகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் அல்லது தடுக்கும் மனிதர்களையும், இயக்கங்களையும் நாம் விழிப்புடன் நோக்க வேண்டும்.

born-again-by-walter-semkiw-paperback-coverஅந்த ஆய்வு நூலில் அவர் எழுதியுள்ளதாகச் சொல்வதைப் பார்த்தால், ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனிடம் போர்த்துறைச் செயலாளராக இருந்த எட்வின் ஸ்டேன்டன் என்பவர்தான் பிற்காலத்தில் இந்திரா காந்தியாகப் பிறந்ததாகவும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற ஜான் பூத் என்பவனின் சகோதரரான எட்வின் பூத் என்பவர் அந்தக் காலத்தைய பிரபலமான ஷேக்ஸ்பியர் நடிகர், அவரே இப்பிறவியில் அமிதாப் பச்சனாகவும், எட்வினின் மனைவியான மேரி மெக் விக்கெர்ஸ் என்பவர்தான் தற்சமயம் நடிகை ஜெயா பச்சனாகப் பிறந்துள்ளதாகவும், அந்த ஜான் பூத்தைக் கல்யாணம் செய்வதாக நிச்சயித்திருந்த லூசி ஹேல் என்பவர்தான் இப்பிறவியில் சோனியா காந்தியாக உள்ளதாகவும், அந்த லூசியின் தந்தையான ஜான் ஹேல் என்பவர்தான் இப்பிறவியில் ராகுல் காந்தியாக இருப்பதாகவும், நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முற்பிறவியில் திப்பு சுல்தானாகவும் இருந்ததாக அவர் சொல்வதைப் படித்தபோது ஏதோ நம் காதில் பூ சுற்றுவதுபோல்தான் ஒரு சமயம் தோன்றியது. ஆனாலும் யோசித்துப் பார்த்தால் ராஜீவ் காந்தி அத்தகைய துர்மரணத்தைத் தழுவுவதற்கு நாம் அறிந்தவரை ஒரு வேளை சீக்கியர் சம்பந்தப்பட்ட கலகம் என்பது தவிர வேறு வலுவான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. “ஒரு வேளை அவரே முற்பிறவியில் லிங்கனின் கொலையுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தால்….?” என்றுதான் எனக்குத் தோன்றிற்று. முற்பிறவிகள் பற்றி மேலும் விவரங்கள் தெரிய வரும்போது பார்க்கலாம் என்று அப்போதைக்கு என் எண்ண அலைகளைத் தொடரவில்லை..

அதைத் தொடர்ந்து, ஒரு மாதம் கழிந்தபின் அமெரிக்கா சென்ற எனக்கு டாக்டர் ப்ரான் வைஸ் அவர்களது மற்றைய நூல்களையும் பற்றித் தெரிய வந்தது. ஒரு நூல் நிலையத்திற்குச் சென்ற நான் வரிசையாக அடுக்கி வைத்திருந்த அவரது நூல்களைப் பார்த்து, அனைத்தையும் வாங்கி வந்து படித்து முடித்தேன். முதல் நூலில் ஒருவரின் அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்த அவர், அடுத்த நூலில் பலரது அனுபவங்களை விவரித்திருந்தார். மூன்றாவது நூலில் வரப் போகும் பிறவியின் சாத்தியக் கூறுகளை தனது நோயாளிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து, அவர்களையே சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்த சம்பவங்களை விவரிக்கிறார். நான்காவது நூலில் நோயாளிகளின் ஆழ்நிலையில் அவர்களின் கூற்றை வைத்துக்கொண்டு, அவர்களையே கேள்வி கேட்டு இதுவரை அவரே அறிந்திராத, புதியதான சிலவற்றை மருத்துவர் அறிகிறார். அதாவது, நோயாளிகள் தானே சில செய்திகள் சொல்வதும் அல்லாது, அவர்களை மேலும் சில சொல்ல வைக்க அந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் முகமாக முன்அறிமுகம் ஏதுமில்லாத குருமார்கள் அவ்வப்போது தோன்றுவார்கள் என்பதே அவர் புதியதாக அறிந்தது. அவ்வப்போது நோயாளிகள் அவர்களைக் கேட்டுச் சொல்வதில் வைத்துக்கொண்டும், நினைவிலே முற்றும் அறியாத மொழியை நோயாளிகள் தங்கள் ஆழ்நிலை மயக்கத்தில் மட்டும் பேசுவதை வைத்துக்கொண்டும், மருத்துவர் இதனை அறிந்தார். அவர்கள் அப்படி வருவதும், குருமார்கள் இஷ்டப்படியே நடக்கும், இவர்களாக அவர்களை வரவழைக்க முடியவில்லை என்பதையும் அவர் அறிந்துகொண்டார்.

நமக்கு உதவியாக இருக்கும் என்றால், குருமார்கள் தானாகவே வந்து நாம் அறிய வேண்டிய செய்திகளைச் சொல்வார்கள் என்பதுதான் நாம் இதில் காணவேண்டிய பொருள் என்று நான் நினைக்கிறேன். இவை அனைத்தையும் நூல்கள் மூலமாக நான் அறிந்தபோது, எனக்கு எனது பல அனுபவங்களின் பொருளும் ஓரளவுக்கு நன்கு விளங்கின.

எழுதியவர் மருத்துவர் என்பதாலும், அவரிடம் ஏதோ ஒரு மன உளைச்சல் பிரச்சினையினால் வந்தவர்கள் என்பதால் அவர்களை நோயாளிகள் என்றும் குறிப்பிட்டேன். நோயாளிகள்தான், ஆனால் அவர்கள் என்னிடம் பெற்றதைவிட நான் அவர்களது அனுபவங்கள் மூலமாக அவர்களிடம் நிறைய அறிந்துகொண்டேன் என்கிறார் அந்த மருத்துவர்-ஆசிரியர். அவர்கள் அனைவருக்கும் அவர் psycho therapy மூலம் சிகிச்சை அளிக்கத்தான் முன்வந்தார். ஆனால் அவரோ தான் அதுவரை கேட்டறியாத, கண்டறியாத பொக்கிஷங்களை அடைந்ததாகச் சொல்கிறார். அந்த அனுபவங்களை எல்லாம் வெளி உலகிற்குத் தெரிவிப்பதற்கு அவர் பல வருடங்கள் எடுத்துக்கொண்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, சொல்வார்களோ, இதனால் தான் தொழில் ரீதியாக, மருத்துவராகப் பணிபுரிவதில் ஏதேனும் பங்கம் வருமோ என்றெல்லாம் அவர் மனதில் ஏற்பட்ட கலக்கத்தால் வந்த தயக்கம் ஒரு காரணம். வந்து தங்களைச் சரி செய்துகொண்டு திரும்பிய நோயாளிகளுக்கு ஏதேனும் ஊறு நேரலாமோ என்னும் தயக்கமும் ஒரு காரணம். ஒருவர், ஒரு வேளை, ஓர் அனுபவம் என்றில்லாமல் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் இந்த மாதிரி நேர்கிறதா என்று சோதித்துப் பார்க்கும் ஓர் அறிவியல் மனநிலையே, வெளி உலகத்திற்கு தெரிவிக்கும் அவரது தயக்கத்திற்கு எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் என அவர் தனது நூல்களில் சொல்கிறார்.

அமெரிக்காவில் பிளாரிடா மாநிலத்தில் தனிப்பட்ட அளவிலும், பொதுவாகவும் அளித்துக் கொண்டிருந்த மருத்துவ சேவையை அவர் நிறுத்திக் கொண்டு விட்டார். தற்சமயம் பல கருத்தரங்கங்களில் பங்கு கொண்டு தனது சேவையை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

rk_narayan_20070820நம்மிடையே அண்மைக் காலம்வரை வாழ்ந்திருந்த ஆங்கில எழுத்தாளர் R.K. நாராயண் அவர்களுக்கே இறந்த தன் மனைவியுடன் பேசும் அனுபவம் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டியே அவர் தனது “English Teacher” ஆங்கில நவீனத்தை எழுதியதாகவும் சொல்வர். அது போல பல நம்பகத்தன்மை உள்ளவர்களுக்கும் அனுபவங்கள் இருந்தும், வேறு பல ஏமாற்றுக்காரர்களின் கூத்தால் பிறவித் தொடர்வு பற்றி பலருக்கும் மிக்க சந்தேகங்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஒருவர் எப்படிப் பிறந்தாலும், தனது அப்போதைய பிறப்பில் தனது கர்மங்களை எல்லாம் கழிக்கும் முகமாகப் பணியாற்றவேண்டும். செய்யும் செயல்கள் மேலும் கர்மத்தைக் கூட்டாதவாறு அமையவும் வேண்டும். அப்படியும் இப்பிறவியில் கர்மங்கள் எல்லாம் கழியாது போனாலோ, நம்மையும் அறியாது கூட்டப்பட்டாலோ என்ன செய்வது என்பது எல்லோருக்கும் வரும் ஐயங்களே. அதற்கு நமது இந்து மத வழியில் சொல்லப்பட்ட பல கருத்துக்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒன்றைச் சொல்கிறேன். மற்றவற்றை மறுமொழியில் காண்பீர்கள் என நினைக்கிறேன்.

ஸ்ரீ ரமண மகரிஷி உள்ளது நாற்பது அனுபந்த வெண்பாவில் கூறுவார்:

சஞ்சித ஆகாமியங்கள் சாராவாம் ஞானிக்கு ஊழ்
விஞ்சுமெனல் வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்லாம்
பர்த்தா போய் கைம்மையுறாப் பத்தினி எஞ்சாதது போல்
கர்த்தா போம் மூவினையும் காண்

sri-ramanarஇச்செய்யுளின் பொருளைப் பார்ப்பதற்கு முன் நாம் சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம். ஒருவன் பிறப்பது அவன் சில கர்ம விளைவுகளை அனுபவித்துத் தீர்க்கவே என்றால், இப்பிறவியில் தொலைக்க முடியாத பழைய கர்ம மூட்டை ஒன்று, வரும்பிறவிகளுக்காக என்று இருக்கலாம். அது தவிர இப்பிறவியில் புதிதாகச் சேரும் கர்ம வினைகளும் நம்மை அடுத்த பிறவியில் துரத்தலாம் என்றும் கொள்ள முடியும். இவைகளை முறையே ஊழ் அல்லது பிராப்தம் என்றும், சஞ்சிதம் என்றும், ஆகாமியம் என்றும் மூன்று வகையாகக் கூறுவர். ஞானியும் மற்றவர்களைப் போலவே பிறந்திருப்பதால், சிலர் ஞானிக்கும் சஞ்சிதம், ஆகாமியம் இரண்டும் இல்லாவிட்டாலும், இப்பிறவியில் அனுபவித்துத் தொலைக்க ஊழ் உண்டு என்பார்கள். அவர்கள் பிறந்திருக்கும் உடலையே பிரதானமாகக் காண்பதால், அப்படிக் கருதுகின்றார்கள். ஞானிக்கோ தான் உடல் இல்லை என்று நன்கு உணர்வதால், அவர்கள் கூற்று எவ்வாறு சரியாகும்? தான் கர்மம் செய்கிறேன் என்று நினைப்பவர்களுக்கு அது பொருந்தலாம், ஞானிக்கு எப்படிப் பொருந்தும் என்று ரமணர் கேட்கிறார். அதற்கு அவர் கீழே காணும் உதாரணத்தைக் கொடுக்கிறார். பர்த்தா எனப்படும் கணவன் ஒருவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தால் அவன் இறக்கும் போது மூன்று மனைவிகளுமே கைம்மை அடையவில்லை, ஓரிருவர்தான் கைம்மை அடைகின்றனர் என்று கூற முடியுமோ? அதே போல “தான் கர்த்தா” என்று இல்லாதிருப்போனுக்கு கர்மம் மூன்றும் ஒட்டாது என்கின்றார் ரமணர்.

ஆக நமக்கு வேண்டியதெல்லாம் பிறவிகள் எத்தனை வந்தன, போயின என்பதும் இல்லை; கர்மம் எஞ்சியுள்ளதா அல்லது தீர்ந்து விட்டதா என்பதுவும் இல்லை. செய்பவன் அவன், ஆட்டுபவன் அவன் என்று சதா சர்வகாலமும் அவனையே சிந்தித்து, அவனன்றி வேறு எதுவும் இல்லை, நான் கர்த்தா இல்லை என்பதை உணர்வதே நாம் செய்ய வேண்டியது. ஆக செய்யும் தொழில் எதுவும் தெய்வம் என்று இருப்போரை அவனே தேடி வருவான். அதாவது நமக்கு வேண்டியதெல்லாம், மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே. அப்படி இருந்தால் நமக்கு நெருங்கிய பொருள் கைப்படும். நமக்கு இறைவனை விட நெருங்கியவன் வேறு யார்?



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

October 12, 2010
எஸ்.ராமன் rss_icon16.jpg

 

முந்தைய பகுதிகள்:

ஆம், நமக்கு இறைவனை விட மிக நெருங்கியவன் யார்? நாம் என்றும் நாமாக இருந்தால் இறைவன் நம்முடன் உள்ளதை நாம் எப்போதும் உணர்வோம். ஆனால் அதற்குள்தான் நமது மனம் வந்து நம்மைப் பல விஷயங்களில் அலைபாய வைக்கிறதே. சரி, நாம் எப்போதும் உள்ள நிலையை எப்படித்தான் உணர்வது? நம்முடன் வாழ்ந்த, மற்றும் நாம் அறியாத பல சான்றோர்கள் சொல்வதைக்கொண்டு பார்த்தால், நாம் நமது பிறப்பையோ, இறப்பையோ மிகவும் பொருட்படுத்தாது, நாம் வாழும் இயல்பு நிலையை ஆராய்ந்து பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது எதற்கோ நாம் நேரம், காலம் என்று செலவழிக்கிறோம், ஆனால் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு மிகவும் யோசிப்போம். ரமணர் என்ன மேலும் சொல்கிறார் என்று பார்க்கலாமா?

மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் – சரணமே
சார்வார் தம் சார்வோடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்
சார்வரோ சாவாதவர்

சாதாரணமாக ஒரு மங்கலச் செய்யுள் இருக்க வேண்டிய “உள்ளது நாற்பது” என்ற அவர் நூலில் வரும் இந்த இரண்டாம் மங்கலச் செய்யுள் இயற்றப்பட்டதே ஒரு தனிக் கதை. “உள்ளது அலது…………” என்று தொடங்கும் அந்த முதல் மங்கலச் செய்யுளை நாம் வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?என்ற கட்டுரையில் முன்பே பார்த்திருக்கிறோம். அது உட்பட எல்லாச் செய்யுட்களையும் சரி பார்த்து, வரிசைப் படுத்திய அவரது முதல் நிலை சீடரான கணபதி முனி என்பவர் “இது என்ன, எல்லாம் நிர்குண உபாசனை சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே, ஏதேனும் ஒன்றாவது சகுண வாசனையுடன் இருக்கட்டுமே” என்று சொல்ல, ரமணரும் மேலே உள்ள செய்யுளை இயற்றி, அதை இரண்டாம் மங்கலச் செய்யுளாகச் சேர்த்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இது ரமணர்,

“நான் இறந்து விட்டேன், இந்த உடலை இப்போது எடுத்துக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவார்கள்; ஆனால் நான் இன்னும் இதோ இருக்கிறேனே? ஆக நான் இந்த உடல் இல்லை”

என்ற தன் சத்து-சித்து-ஆனந்த நிலையை சிறு வயதிலேயே உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது என்றே நாம் கொள்ளலாம். இச்செய்யுள் நமக்கு என்ன சொல்கிறது?

பொருள்: மரண பயம் மிகத் தீவிரமாக உள்ள நல்ல குணமுடைய மனிதர்கள், பிறப்பு இறப்பு என்ற இரண்டும் இல்லாத ஒரு பாதுகாப்புள்ள கோட்டையாக விளங்கும் மகேஸ்வரன் சரணத்தை நாடி அடைக்கலம் அடைவார்கள். தனது பந்த பாசங்கள், பற்றுக்கள் இவைகளோடு அடைக்கலம் அடைந்தவர்கள் தம்முடைய ஜீவ பாவமும் அறவே ஒழிந்தவர் ஆவார்கள். அப்படிச் சாவாத தன்மையடைந்த ஜீவன் முக்தர்கள் மறுபடியும் மரணத்தைப் பற்றிய எண்ணத்தை அடைவார்களோ?

smashan-cremationசாதாரணமாக ஒருவனின் வைராக்கியத்தைச் சொல்லும்போது பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று பிறப்பையும், மற்றது இறப்பையும் பற்றியது. இது இரண்டுக்கும் இடையில் தானே வாழ்க்கை அமைகிறது. அதனால் இவ்விரண்டையும் சொல்லி விட்டால் எல்லாம் சொன்னது போல என்று பெரியோர்கள் நினைத்திருக்க வேண்டும்.

ஒருவன் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் போது படும் கஷ்டத்தை நினைத்துக்கொண்டோ, அல்லது ஒரு பெண்ணே தனது நிலையை நினைத்து அவதிப்படும்போதோ, இன்னுமொரு குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுதான் பிரசவ வைராக்கியம். குழந்தையின் மழலையில் அது காலப் போக்கில் கரைந்து போகலாம்.

அதுபோலவே ஒருவன் தனது உற்றாரோ, சுற்றமோ இறந்து போகும்போது, மயானத்தில் இட்டு விட்டு வரும் போது நமக்கும் ஒருநாள் இப்படித்தானே நடக்கும், இனி அனைவருடனும் மிக அன்பாகவும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம். இதுவும் பின்னாளில் ஓரளவாவது கரையக் கூடும்.

ஆனாலும் ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான். ரமணருக்கு ஞானம் அப்படித்தான் வந்தது. மற்றவர்கள் நல்ல வழியில் செல்வதற்காவது அதை உபயோகப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையே.

அப்படி வரும் மரண பயத்தைப் பற்றி சிறிதேனும் யோசித்தவர்கள் நன்கு தெளிவு அடைவார்கள். ஏனெனில், மரணம் என்பதை யாரும் தவிர்க்க முடியாது. ஒன்று சொல்வார்களே? வாழ்க்கையில் நிச்சயமானது என்று ஒன்று உண்டென்றால் அது மரணம்தான் என்று. இதை விட உண்மையான வாக்கியம் வேறு ஒன்று உண்டோ? தவிர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு மேலும் அதை அலசினால், அப்படிப்பட்ட மனிதர்களில் பலர் முதலில் செய்வதென்ன?

இறைவனைத் துதிப்பார்கள். ஏன்? மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினைக் குறிக்கிறது. அதனால் முடிவே இல்லாத இறைவனைத் துதித்து முடிவுள்ள தமக்கு ஒரு பாதுகாப்பினைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுபவர்கள், முடிவில்லாத இறைவனிடம் அடைக்கலம் அடைகிறார்கள் என்றுதான் பொருள். அந்தச் சரணாகதி ஒரு முழுச் சரணாகதி என்றால் இறைவனை நாடுபவர்களும் இறைவனைப் போலவே முடிவற்றவர்களாக ஆவதால், அவர்களுக்குச் சாவு என்று ஏதும் உண்டோ என்று கேட்கிறார் ரமணர். அதற்குப் பின்னும் அவர்களுக்கு சாவு பயம் வருமென்றால், அவர்களது சரணாகதி பூரண சரணாகதி இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

அப்படியென்றால் அவர்கள் தங்கள் சரணாகதியை பரிபூரணமாக்கும் முயற்சியில்தான் ஈடுபட வேண்டும். எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன், முடியவில்லையே என்று பலர் சொல்வார்கள். சிலர் இப்படித்தான் எனக்கு இருக்கும் போலிருக்கிறது, என்று தம் வினையை நொந்து கொள்வார்கள். அதற்கு ரமணர் என்ன சொல்வார் என்று பார்க்கலாம்.

வினை முதல் நாம் ஆயின் வினைப் பயன் துய்ப்போம்
வினை முதல் ஆரென்று வினவித் – தனை அறிய
கர்த்தத்துவம் போய்க் கருமம் மூன்றும் கழலும்
நித்தமாம் முக்தி நிலை

ramanars-mother-died-in-skandasramamபொருள்: செய்யப்படும் கர்மங்களின் கர்த்தா நாமே என்று எண்ணினால், அந்தக் கர்மங்களினால் விளையக்கூடிய பயனையும் நாமே அனுபவிப்போம். இந்தக் கர்மங்களைச் செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து தனது பரமார்த்த உண்மையை அறிந்தால், கர்மங்களைச் செய்யும் கர்த்தா நான் அன்னும் அபிமானம் நீங்கும். அத்துடன் சஞ்சிதம், ஆகாமியம், பிராப்தம் என்ற மூன்று கர்மங்களும் அழிந்துவிடும். இந்த நிலையே நித்தியமாகிய முக்தி நிலை.

இது “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது என்று முன்பே ரமணர் சொன்ன கருத்துதான். ஆனாலும் இதில் ஒரு சிறப்பு என்ன என்றால், அப்படி அவர் முன்பு சொன்னது ஞானிகள் விஷயத்தில். இப்போது அவர் சொல்வதோ எவர் விஷயத்திற்கும் பொருந்தும். இதுதான் ரமணர் போன்ற ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் கண்ணில் ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. “நான்” எனும் அபிமானத்தை அழித்துவிட்டு ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் அதை அழிக்க முடியாது இருக்கிறான். அதைத் தவிர வேறு வித்தியாசம் ஏதும் இல்லை.

ஆக நம்மைப் பொறுத்தவரை நாம் ஞானி ஆவதற்கு ஒரு எளிதான வழி சொல்லியிருக்கிறார். அதாவது, நாம் செய்யும் செயல் எதுவானாலும் “அது அவன் செயல்” என்று உளமார நினைத்து அவனுக்காகவே செய்ய வேண்டும். அது போதும். இதுவேதான் பூரண சரணாகதி என்று சொல்லப்படுவது அல்லவா? அதில் சிறிது தவறி நாம் செய்கிறோம் என்றோ, அவனா செய்கிறான் என்றோ சிறிதாவது சந்தேகம் அடைந்தாலோ, நாம் நமது வினையைக் கூட்டிக் கொள்கிறோம் என்றே ஆகும். அப்போது அதன் பலனையும் நாமே எதிர்கொள்ள வேண்டும் – இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ. அப்படி என்றால் பிறந்தவன் எவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

பிறந்தது எவன் தன் பிரம்ம மூலத்தே
பிறந்தது எவண் நான் என்று பேணிப் – பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் நிதம் முனீசன்
அவன் நவன் நவன் தினமும் நாடு

ganga_rishikeshபொருள்: எவனொருவன் தான் பிறந்தது எங்கே என்று விசாரித்து, தனது இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் பிறந்தானோ (மூலத்தை அடைந்தானோ) அவனே பிறந்தவன் ஆவான். அப்படிப் பிறந்த அவன் நித்தியமான முனீசன் ஆவான். அவன் எப்போதும் புதுமையோடு விளங்குவான் என்று அறிவாய்.

நான் உடல், இல்லை மனம், இல்லை புத்தி, …. என்றிவ்வாறான நிலைகள் எல்லாவற்றையும் கடந்து எவன் தனது “என்றும் உள்ள” சொரூபத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நின்று, சகல சீவ ராசிகளையும் அவ்வாறே காண்கிறானோ, அவனே பிறப்பு – இறப்பு எனும் நிலைகளைக் கடந்த சிறப்பை அடைந்தவன். அதுவரை அவன் மீண்டும் மீண்டும் வந்து இறுதியில் இந்த நிலையையே அடைகிறான். “அடைகிறான்” என்பதைவிட “என்றும் இப்படியே உள்ளோம்; ஆனாலும் அதை உணராது இருந்தோம்” என்பதைத் தெரிந்து கொள்கிறான். இதுவே பேரறிவு எனப்படுகிறது. எதைத் தெரிந்து கொண்டால் மேலும் தெரிவதற்கு ஏதுமில்லையோ அதைவிட சிறப்பு ஏதும் உண்டோ?

அந்தச் சிறப்பை அடைபவர்கள் எந்த வழி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறதோ அதன் மூலம் அடையலாம், வேறு வழிகள் வாயிலாய் வந்து சேர்ந்தாலும் மற்ற வழிகளின் தாக்கங்களையும் அவர்கள் அப்போது உணரலாம். ரமணர் உறுதியாகக் கூறுகிறார்:

ஆதலினால் அறிவு மயமாம் சுத்த
இதயத்தே அகத்தைச் சேர்க்கும்
சாதனையால் வாதனைகளொடு வாயு
ஒடுக்கமுமே சாருந் தானே

பொருள்: ஆகையினாலே அறிவு சொரூபமான தூய சச்சிதானந்த இதயத்தில் மனதை அதனிடம் சேர்க்கும் பயிற்சியினால் வாசனைகளின் அழிவும், பிராண வாயுவின் ஒடுக்கமும் தானாகவே அடையக்கூடும்.

ஒருவன் தனது இயல்பான வழிகளில் செல்லும் மனத்தைக் கட்டுப் படுத்தியோ, பிராண வாயுவை அடக்கிச் செய்யும் பயிற்சிகள் மூலமோ, இறைவனிடம் பக்தி செலுத்தியோ, தம் தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றியோ, வேறு எந்த வழிகளிலோ சென்று தனது ஆன்ம நிலையை எய்தலாம். ஆன்ம நிலையை எய்தியவன் மேலே சொன்ன அனைத்தும் தமக்குப் பொருந்துகிறது என்றும் பின்னர் உணரலாம். காரணத்தினால் காரியத்தையும், காரியத்தினால் காரணத்தையும் முன்னும் பின்னுமாக இருவரும் உணர்வார்கள்.

நான் இதைச் செய்து அதை அடைந்தேன் என்று இங்கு கூற வாய்ப்பில்லை. நான் என்னை விசாரித்துத் தன்னை உணர்ந்தேன், ஆனாலும் அன்றும் இன்றும் எப்போதும் அப்படியே உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பதே இங்கு உள்ள சிறப்பு.

(முற்றும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 

பகுத்தறிவும் ஆன்மீகமும்

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நடந்த சுயமரியாதை மகாநாட்டுக்குப் போயிருந்தேன். நமது சமயத்தில் உள்ள மூடக் கருத்துகளை நையாண்டி செய்து பல அறிஞர்கள் சுவையாகப் பேசினார்கள். அவர்களது பேச்சுத் திறமையும் துணிச்சலும் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. இந்த மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் தினந்தோறும் கோயிலுக்குப்போய் இறைவனை வணங்கி வந்தேன். மாநாட்டுப் பேச்சுகளைக் கேட்ட பிறகு “சாமியாவது, சாத்தானாவது! மந்திரமாவது, மண்ணாங்கட்டியாவது!” என்று சொல்லி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துப் பழிக்கத் தொடங்கினேன். இப்படியாகப் பல ஆண்டுகள் திரிகரண சுத்தியாக “கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்ற உறுதியில் நின்றேன். இந்த உறுதிக்கு ஊட்டம் கொடுப்பதற்காக “வால்டேர்’ “இங்கர்சால்’ “பெட்ரன்ட் ரஸ்ஸல்’ போன்ற சிறந்த நாத்திகவாதிகளுடைய நூல்களை கவனத்தோடும் ஆர்வத்தோடும் படித்து வந்தேன்.

maharaj

ஆனால் என்னுடைய உறுதிப்பாட்டுக்கு உலை வைக்கக்கூடிய நிகழ்ச்சிகள் பின்னால் நடக்கத் தொடங்கின. பாளையங்கோட்டையில் நான் வழக்குரைஞராக இருந்தபோது கல்கத்தா தீர்ப்பு ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் மேற்கோளாகக் காட்ட எண்ணி நூலகத்திலிருந்து “41 கல்கத்தா” என்ற தீர்ப்புத் தொகுதியை எடுக்கப் போனேன். புத்தகத்தைப் புரட்டியபோது அதிலிருந்த ஒரு கருந்தேள் என் விரலில் கொட்டிவிட்டது. தேள்கடி அனுபவம் எனக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருந்ததில்லை. கொஞ்ச நேரம் விரலில் கடுகடுப்பு இருந்தது. சிரித்துச் சமாளிக்கப் பார்த்தேன். ஆனால் நேரம் ஆக ஆக விஷம் ஏறிக்கொண்டே போயிற்று. வலி பொறுக்க முடியாமல் நீதிபதியிடம் “வாய்தா” வாங்கிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.

அதற்குள் கை முழுவதும் வலி பரவி நெறி கட்டிக் கொண்டது. என் துன்பத்தைச் சகிக்க முடியாத என் அத்தை பக்கத்து வீட்டுப் பையன் மணியை அவசரமாக அழைத்தார். அவனுக்கு வயது 10 இருக்கும். என்னைக் கண்டாலே அவன் அஞ்சுவான். அவனைக் கண்டாலே எனக்கு ஏளனம். கையில் ஒரு வேப்பங்குலையை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு பயமில்லாமல் அவன் என்னை அணுகி, வேப்பங்குலையால் என் கையில் மூன்று முறை அடித்தான். உடனே என் வலியெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது! நடந்த நிகழ்ச்சியை என்னால் நம்பவே முடியவில்லை!

மணியை அரைமணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததில், சந்திரகிரகண காலத்தில் நட்டாற்றில் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு லட்சக்கணக்காக ஒரு மந்திரத்தை ஜபித்ததால் தனக்கு இந்த விஷம் இறக்கும் சக்தி கை வந்தது என்று சொன்னான். பகுத்தறிவுக்கு ஒவ்வாத மந்திரத்துக்கு இவ்வளவு சக்தி இருக்குமா என்று திகைத்தேன். பெட்ரன்ட் ரஸ்ஸலைப் படித்து உருவேற்றிய என் பகுத்தறிவுக்கு இந்த நிகழ்ச்சி அவமானத்தையே தந்தது. நாளடைவில் இன்னும் பலஅதிர்ச்சி தரத்தக்க நிகழ்ச்சிகள் எனக்கு நடக்கவே, வாழ்க்கையைப் பார்க்கும் என் பார்வை மாறியது. என் மனமும் மாறியது. என் வாழ்வின் அடிப்படையே மாறிவிட்டது

– நீதிபதி எஸ் மகராஜன் எழுதிய “ஆடத் தெரியாத கடவுள்” நூலிலிருந்து



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard