New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியன்: ஆதி அறிவன் - வைரமுத்து


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தொல்காப்பியன்: ஆதி அறிவன் - வைரமுத்து
Permalink  
 


தொல்காப்பியன்: ஆதி அறிவன்  - வைரமுத்து, கவிஞர். Published :  03 May 2018

 

மொழி ஓர் உயிரி. அது தன்னைப் பேசும் மனிதர்களை இயக்குகிறது; அவர்களால் இயக்கவும் பெறுகிறது; இறந்த காலத்தைச் சுமந்துகொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக்கொண்டு, எதிர்காலத்தின் பெரு வெளியில் பயணிக்கிறது. ஓர் உயிரி சந்திக்கும் நல்வினைகளையும் அல்வினைகளையும் ஒரு மொழி எல்லாக் காலங்களிலும் எதிர்கொள்கிறது. காலத்திருப்பங்களில் சில மொழிகள் கவிழ்ந்துவிடுகின்றன. சில தடம் புரள்கின்றன. சில விபத்துக்குள்ளாகி விழுகின்றன. சில அந்நியக் கிருமிகள் புகுந்து நோயுற்று அழிகின்றன. வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாத சில மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன.

லத்தீன் - சம்ஸ்கிருதம் - ஹீப்ரு போன்ற மூத்த மொழி களெல்லாம் மேற்சொன்ன இவற்றுள் ஏதோ ஒன்றிலோ, கண்டறியப்படாத ஒரு காரணத்தினாலோ உலக வழக்கு ஒழிந்துபோயின. ஆனால், மேற்சொன்ன அத்தனை காரணங் களையும் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டு இன்னும் உயிரோடு விளங்கும், உயிர்ப்போடு துலங்கும் மிகச் சில பேருயிரிகளில் நமது தமிழ் தலையாயது. வாழ்வோடு படைப்பிலக்கியங்களையும், படைப்பிலக்கியங்களோடு வாழ்வையும் தமிழர்கள் இடையறாது பேணிவந்ததே அது உயிர்த்திருப்பதற்கு முதல் காரணம்; இலக்கணம் என்ற அறிவியல் மீது அது திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பது இரண்டாம் காரணம்.

ஆரிய வரவினால் தமிழுக்கு நேரவிருந்த பெரும் பின்னடைவிலிருந்து தமிழைக் கட்டிக்காத்த காப்பு நூல் என்றே தொல்காப்பியத்தைக் கருத வேண்டும். தொல் + காப்பு + இயம் - தொல்மரபுகளைக் காப்பதற்கே இயம்பப் பெற்ற இலக்கணம் என்று கொள்வது ஒருபோதும் உண்மைக்குப் புறம்பாகாது.

தொல்காப்பியத்தின் தொன்மை

தொல்காப்பியத்தின் தொன்மை குறித்து அறிவுலகத்தில் பல கருத்துகள் உண்டு. தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5320 என்பார் வெள்ளைவாரணார்; கி.மு. 2000 என்பார் புலவர் குழந்தை; கி.மு. 1200 என்பார் கா.சுப்பிரமணிய பிள்ளை; கி.மு. 1000 என்பார் மு.வ.; கி.மு. 700 என்பார் இலக்குவனார்; கி.மு. 200 என்பர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் - மு.ராகவ அய்யங்கார் இருவரும்; கி.பி. 400 என்பார் வழக்கம்போல் வையாபுரிப் பிள்ளை. தொல்காப்பியத்தின் காலம் குறித்து வேறுபாடுகள் இருப்பினும், அது தமிழுக்கு நல்ல காலம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை.

மூன்று தமிழ்ச் சங்கங்களை மூன்று கடற்கோள்கள் அழித்திருக்கின்றன என்பது ஆய்வுலக நம்பிக்கை. கி.மு. 2387-ல் முதல் கடற்கோள், கி.மு 504-ல் இரண்டாம் கடற்கோள், கி.மு. 306-ல் மூன்றாம் கடற்கோள் நேர்ந்தன என்பது அனுமானத் தால் பெற்ற ஆய்வாகும் அல்லது ஆய்வில் பெற்ற அனுமானமாகும். இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்று(த்) தொல்காப்பியம்என்பது இறையனார் களவியல் ஆசிரியர் கூற்றாதலின் முதல் கடற்கோளுக்குப் பிறகு பிறந்தது தொல்காப்பியம் என்று கொள்ளலாம்.

முதற்கடற்கோளில் தமிழரின் பெரிய நிலப்பரப்பும் அரிய நூல்களும் ஆழிவாய்ப்பட்டழிய, தமிழினம் ஊனப்பட்டு நின்ற ஒரு காலவெளியில், ஆரிய மொழியும் பண்பாடும் தமிழர் மீது தாக்குறவு நிகழ்த்தத் தலைப்பட்டதாகக் கருதப்பட்ட பண்பாட்டுச் சூழலில், தமிழின் இலக்கணத்தையும் தமிழரின் வாழ்வியலையும் பெருமிதத்தோடு தூக்கி நிறுத்திய பேரறிவாளன் தொல்காப்பியன்.

வடமொழி வழிநூலா நம் தொல்காப்பியம்?

தொல்காப்பியம் முதனூலா, வடமொழிச் சார்புற்ற வழிநூலா என்பது ஒரு நீண்ட வினா. தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் என்று கருதப்பெறும் பனம்பாரனார் பாடிக்கொடுத்த பாயிரத்தில் காணப்பெறும் ஒரு சொல்லாட்சியே இந்த வினாவை விதைத்திருப்பதாய் ஒரு சாரார் கருதுகிறார்கள். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் / தன்பெயர் தோற்றிஎன்ற தொடரில் துலங்கும் ஐந்திரம் என்ற சொல், ஐந்திர வியாகரணமாகிய வடநூலைக் குறிக்கிறதென்றும் தொல்காப்பியம் அதனடியாய் வந்த வழிநூல் என்றும் சிலர் கருதுவர். ஐந்திரம் என்பதை ஐந்திர வியாகரணம் என்று எழுதிச்சென்ற அடியார்க்கு நல்லாரை அவர்கள் சான்று காட்டுவதுமுண்டு.

இங்கிருந்துதான் நம் பொறுப்புமிக்க மறுப்புவாதம் உயிர்ப்புறுகிறது. முதலில் ஐந்திரம் என்பது ஓர் இலக்கண நூல் அன்று. அது ஐந்திரம் - ஆக்கினேயம் - கணாதிபத்தியம் - சைவம் - வைணவம் - சாக்கியம் என்ற அறுவகைச் சமயங்களுள் ஒன்று. ஒரு சமய நூல் எப்படி இலக்கணத்திற்கு முதனூலாகும்? இன்னொன்று: தொல்காப்பியம் நிலவிய காலத்தில் ஐந்திரம் உலவியதாகச் சான்றொன்றும் கிட்டிலது. அதே பனம்பாரனாரின் பாயிரம் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு / முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிஎன்று பாடியிருப்பதால் தமிழக எல்லைகளுக்கு உட்பட்ட முந்துநூல்களே தொல்காப்பியத்தின் மூலநூல்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே, தொல்காப்பியம் முதனூல்தான்; மூத்த தமிழ்க்குடியின் மூளைச்சாறுதான்; தமிழினத் தின் ஐயந்திரிபற்ற ஆதி ஆறிவுதான்.

எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்று அதிகாரங் களையும் ஓர் அதிகாரத்திற்கு ஒன்பது வீதம் 27 இயல்களை யும் இளம்பூரணர் கணக்குப்படி 1,595 நூற்பாக்களையும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் கணக்குப்படி 1,611 நூற்பாக் களையும் உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்.

தமிழை ஆளும் மூன்றதிகாரங்கள்

மூன்றதிகாரங்களுள் எழுத்தையே தொல்காப்பியம் முன்வைக்கிறது. ஒலிப்பதிவு கண்டறியாத காலம் வரைக்கும் பேச்சுமொழி என்பது தன்மை முன்னிலைக்கு மட்டுமே உரியது. ஆனால், எழுத்து என்பதோ தன்மை - முன்னிலை - படர்க்கை என முக்காலத்திற்குமானது. எழுத்து என்பது ஒலியை ஊற்றிவைக்கும் கொள்கலன். அது அறிவின் சேமிப்புக் கிடங்கு. தலைமுறைகளுக்கான ஞானத்தைக் கடத்தி ஏகும் கருவி. மொழியின் எழுத்துகளைப் பகுப்பதென்பதே ஒரு கணிதம் மற்றும் அஃதோர் ஒலி விஞ்ஞானம். தொல்காப்பியர் ஓர் ஒலி விஞ்ஞானி.

தமிழ் எழுத்திலக்கணத்தை நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல்என்று 9 இயல்களில் வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். எழுத்தெனப் படுவ / அகர முதல னகர இறுவாய் / முப்பஃது என்ப / சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையேஎன்று தமிழ் எழுத்துகள் மொத்தம் 33 என்று வரையறுக்கிறார். அகர முதல் கர ஈறாகவுள்ள முப்பதோடு, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் கூட்டித் தமிழ் எழுத்து கள் 33 என்று முடிவுசெய்கிறார்.

தனித்தியங்கவல்ல 12 எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்றார், தனித்தியங்கவல்லாத 18 எழுத்துகளை மெய் யெழுத்துகள் என்றார். உயிரைச் சார்ந்து இயங்குவதே மெய் என்ற பேரறிவை மொழியின் மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவைக் கருதும்போதெல்லாம் உள்ளம் களிகூர்கிறது. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் இம்மூன்றும் ஒரு சொல்லைச் சார்ந்தன்றி தனித்தியங்கும் இயல்பற்றன வாதலின் சார்பெழுத்துகள் எனப்பட்டன.

எழுத்ததிகாரத்தின் பெருமை பேசப் பிறப்பியல் ஒன்றே போதும். எழுத்துகள் பிறப்பதெங்ஙனம், அவற்றின் பிறப்பிடம் யாது என்று சிந்தித்த தொல்காப்பியர் உடல் - உயிர் - காற்று என்ற மூன்று மூலங்களோடு முடிச்சுப் போடுகிறார். உந்தி வழியா முந்துவளி தோன்றித் / தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் / பல்லும் இதழும் நாவும் மூக்கும் / அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்… / …பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல” - என்பது நுட்பமான நூற்பா.

உந்தி வழியே முந்தி எழுகின்ற காற்று தலை - மிடறு - நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து, பல் - உதடு - நாக்கு - மூக்கு - அண்ணம் ஆகிய ஐவகை உறுப்புகளோடு உறழ்ந்து, வெவ்வேறு உருவாய்த் தோற்றுவதே எழுத்துகளின் பிறப்பு முறையாகும் என்று அறிவியல் தளத்தில் நின்று அறுதியிட்டு அறிவிக்கிறார்.

மொழிக்கு முதலெழுத்தாக வரக்கூடியவை எவை? வாராதவை எவை என்று தொல்காப்பியர் இட்டுக்கொடுத்த சட்டம் 3000 ஆண்டுகளாய் நின்று நிலவுகிறது. உயிர் எழுத்து பன்னிரண்டும் மொழி முதலாகும். மெய்யெழுத்துகள் மொழி முதலாகா. வடநாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தால் கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் புகத் தலைப்பட்ட காலத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தொல்காப்பியர் செய்த ஒரு நூற்பாதான் இன்றுவரை தமிழின் தனித்தன்மையைக் காக்கிறது; அதுதான் அந்நிய மொழியை வெளியே நிறுத்தித் தூய்மையுறுத்தித் தமிழுக்குள் அனுப்புகிறது.

காலப்போக்கில் கிரந்த எழுத்துகளின் சொற்களைத் தவிர்க்க முடியாது; ஆனால், அந்த கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்தான் அந்த மொழியறிஞன். வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மேஎன்றான். அதாவது, வடசொற்களின் வடவெழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக்கித் தமிழோடு புழங்கலாம் என்று இலக்கணச் சட்டம் இயற்றினான். லஷ்மன் - இலக்குவன் ஆனதும், ஜானகி - சானகியானதும், மஹாராஷ்டிரம் - மராட்டியம் ஆனதும், ஹைகோர்ட் - ஐகோர்ட் என்று எழுதப்படுவதும் தொல்காப்பியன் வகுத்த மொழிமரபின் தொடர்ச்சியே ஆகும். இன்று வடசொற்களையும், திசைச் சொற்களையும் அந்தந்த ஒலிவடிவில் எழுதுவது ஊடகக் கலாச்சாரமாய் இருப்பினும், தொல்காப்பியரின் செல்வாக்கு தமிழ்ப்பரப்பில் முற்றிலும் அற்றுப்போகவில்லை என்பதே மொழியின் தனித்தன்மையாகும்.

காலப்பெருவெளியில் எத்தனையோ அரசர்களின் எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்துபோயின. ஆனால், தொல்காப்பியன் இயற்றிய மூன்று அதிகாரங்களும் இன்றுவரை ஒரு மொழியில் ஆட்சி செலுத்துகின்றன.

இரு திணைகளில் அடங்கும் உலகு

வைப்பு முறையில் எழுத்ததிகாரத்தைத் தொடர்கிறது சொல்லதிகாரம். எழுத்துக்கு முன்பே பிறந்தது சொல். சொல்லை முன்னிலைப்படுத்திப் பொருள் உண்டாவதில்லை. பொருளை முன்னிலைப்படுத்தியே சொல் உண்டாகிறது. பின்னர் அந்தப் பொருளைச் சுட்டும் சொல் தானும் ஒரு பொருளாகிறது. பொருளே சொல்லுக்கு மூலம் என்பதனால் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேஎன்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் எந்த ஒலி எழுத்துக்குள் அடங்குகிறதோ அதுவே சொல்லாகிறது.

கடலோசை - காற்றோசை - இடியோசை - மழையோசை - பறவையோசை - விலங்கோசை - ஆற்றோசை - அருவியோசை - இசைக் கருவிகளின் இன்னோசை - முத்தம் - சிரிப்பு - முனகல் - இருமல் இவையெல்லாம் எழுத்துகளில் அடங்குவதில்லை. அதனால், இவை யாவும் ஒலிக்குறிப்பு களாகுமே அன்றிச் சொற்களாகா. எழுத்துக்குள் அடங்கும் ஒலியே சொல்லாகிறது.

இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களை யும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை; மற்றொன்று அஃறிணை.

மனிதர் உயர்திணை; மனிதக் கூட்டம் அல்லாதவை எல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம். இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல உயிருள்ளன, உயிரல்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் - பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன.

சித்திய மொழிக் குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணை யாகவே கொண்டு ஒன்று - பல என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து, அதனையுடைய மக்களை உயர்திணை எனக் கூறியுள்ளதுஎன்று தமது தொல்காப்பிய ஆராய்ச்சியுள் அறிஞர் சி.இலக்குவனார் சுட்டுவது அறிவுலகத்தின் ஆழ்ந்த பார்வைக்கு உள்ளாகிறது.

அந்தச் சொற்களைப் பெயர் - வினை - இடை - உரி என்று நான்காகப் பகுத்தபோது மொழியின் மொத்தக் கட்டமைப் பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பொருளை உணர்த்துவது பெயர்ச்சொல். அப்பொருளின் தொழிலைச் சொல்வது வினைச்சொல். பெயருக்கும் வினைக்கும் இடையே மையமாய் இயங்குவது இடைச்சொல். பொருளின் பண்பு கூறுவது உரிச்சொல்என்ற சிவஞான முனிவரின் தெள்ளுரையும் உள்வாங்கி உணரத்தக்கது.

சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்ட கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும் சொல்லும், சொல் இயங்கும் அறிவியலும், மொழியின் இயக்கத்தால் பெறப்படும் விகாரங்களும், விகாரங்களால் பெறப்படும் புதுவடிவங்களும், தமிழ் மொழியின் ஒரு சொல் இப்படித்தான் இயங்கும் அல்லது இயங்க வேண்டும் என்ற ஒலிச் சட்டங்களும் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் சொல்லதிகாரத்தை இற்றைநாள் மொழியில் சொல்லறிவியல் என்றும் சொல்லலாம்.

பொருள் எனும் பேரதிகாரம்

மூன்றாம் அதிகாரத்திற்குப் பொருளதிகாரம் என்று தலைப்பிட்ட தொல்காப்பியரின் சொற்றேர்வு சுட்டுகிறது அவர் பெற்ற பேரறிவை. மனிதன் பொருள்களால் ஆக்கப்பட்டவன் மற்றும் பொருள்களை இயக்குகிறவன்; பொருள்களால் இயக்கப்படுகிறவன். பொருள்களைக் கண்டறிகிறவன்; பொருள்களை உண்டாக்குகிறவன். இறுதியில் தானும் ஒரு பொருளாகி, பின்னர் பொருளற்ற பொருளாகிக் காலப்பொருளுக்குள் மூலப்பொருளாய்க் கலக்கிறவன் அல்லது கரைகிறவன். இந்த உலகப் பொருள்கள் கட்படு பொருளென்றும் கருது பொருளென்றும் இருவகைப்படும். அவற்றை மூவகைப்படுத்தி முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்று பகுத்தறிவால் பகுத்துப் பகுத்து வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

முதற்பொருள் எதுவென்று முன்மொழிந்தது தொல்காப் பியரின் மூளைப்பழம் பிழிந்த சாறாகும். உயிர்த்தோற்றத் தின் மூலமாகிய இந்த நிலமென்ற உருவமும், இந்த நிலவியல் வாழ்வை இயக்குகின்ற காலம் என்ற அருவமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியரின் அசைக்க முடியாத அறிவின் ஆணையாகும். முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் / இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரேஎன்பது எங்கள் முன்னோன் எழுதிய முன்னறிவியல்.

ஐன்ஸ்டைன் முதலாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஈறாக விளங்கிய விஞ்ஞானிகளும் காலமும் வெளியும்’ (Time and Space) என்று தேடிக் கண்டறிந்த திரவியத்தை அன்றே சுட்டிய பேரறிவு பெருமைக்குரியது.

முதற்பொருள்களில் கருக்கொள்வனவெல்லாம் கருப்பொருள்கள். அந்தக் கருப்பொருள்களின் ஒழுகலாறுகள் உரிப்பொருள்கள் என்று வகைப்படுத்தியதில் மொத்த உலகத்தையும் இந்த மூன்று பகுப்புக்குள் அடக்கி முடிக்கிறார் அறிஞர் பெருமான்.

அகத்திணையியல் - புறத்திணையியல் - களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் - உவமவியல் - செய்யுளியல் - மரபியல் என்ற பொருளதிகாரத்தின் 9 இயல் களிலும் தமிழர்களின் காதலும் வீரமும், நிலமும் பொழுதும், வாழ்வும் தொழிலும், உணவும் உணர்வும், கலையும் கல்வியும், வழக்கமும் ஒழுக்கமும், உறவும் பிரிவும், அறமும் மறமும், மரபும் மாற்றமும், யாப்பும் அணியுமென எல்லாப் பொருளையும் இலக்கணப்படுத்தியிருக்கிறார் தொல்காப்பியப் பேராசான்.

விஞ்ஞானத்தோடு முன்னின்றவன்

உலகத் தோற்றம் குறித்து இதுவரை இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மதக் கருத்து; இன்னொன்று அறிவியல் கருத்து. இந்த அண்டமே கடவுளின் கைவினை என்ற கருத்தையே எல்லா மதங்களும் எழுதிப்போகின்றன. ஆனால், கரிமக்கொள்கை என்ற விஞ்ஞானம் இந்த பூமியின் தோற்றம் குறித்து அதுவரையில் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் எல்லைக்குள் அண்டத்தை அளந்தது தொல்காப்பியம்.

நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் - நீர் - தீ - வளி - வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது. இந்த பூமி எப்படிப் படைக்கப்பட்டது என்ற மதம்சார் கருத்தியலில் தோயாமல், எதனால் படைக்கப்பட்டது என்ற மெய்ம்மையோடு மட்டும் நின்றுகொண்டதால் தொல்காப்பியத்தை எந்த நூற்றாண்டு அறிவியலும் இடறித்தள்ளவியலாது.

தொல்காப்பியர் எந்த மதத்துக்குள்ளும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஐவகை நிலம் காக்கத் தங்க ளைக் களப்பலியிட்டுக்கொண்ட முன்னோர்களுக்கு நட்ட நடுகல்லையே தமிழர்கள் தெய்வமென்று போற்றி வழி பட்டார்கள் என்பதையே தொல்காப்பிய நூற்பா நுதலிப் போகிறது. காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” (பொருளதிகாரம் : புறத்திணையியல் 5) என்னும் தொல்காப்பியம் நடுகல் வழிபாடுதான் தமிழர்களின் ஆதிவழிபாடு என்று சான்றளிக்கிறது. அதுவே, குலதெய்வ வழிபாடாகி இன்றுவரை நாட்டார் சமயமாய் விளங்குகிறது.

தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது?

மொழி, இலக்கணக் கோட்டுக்குள் இயங்கவும், அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும், தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும், மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும், தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல்லாவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம். தொல்காப்பியத்தைக் கட்டிக்காப்பது அரசாங்கத்தின் - அறிவுலகத்தின் கடமை மட்டுமன்று; தமிழ் மொழி பேசும் - எழுதும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

- வைரமுத்து, கவிஞர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard