சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முற்காலக் காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன. பாவகைகளில் ஆசிரியப்பா என்ற அமைப்பினில் இக்காப்பியங்கள் இரண்டும் உருவாகியுள்ளன. சங்க இலக்கியங்கள் யாவும் அகவற்பா என்னும் ஆசரியப்பாவில் எழுதப்பட்டுள்ளமையால் இவ்விரண்டு காப்பியங்களும் சங்க காலத்தை ஒட்டியே தோன்றியிருக்க வேண்டும்.
இதனைப் போலவே ஆசிரியப்பா யாப்பில் சங்க காலத்தை ஒட்டிய சில நூல்கள் முழுவதுமாக நம் கைக்குக் கிட்டாத காரணத்தால் அதன் வெளிப்பாட்டுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டும் அந்நூற்களை ஆராய்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள சான்றோர்களின் சிந்தனைகளை ஒரு முகப்படுத்தியும் மணிமேகலைக்கு முந்தைய காலத்தில் காப்பிய இலக்கியத்தின் தோற்றம், இருப்பு குறித்த சிந்தனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளன. அவ்வகையில் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை அமைகின்ற மிக நீண்டதொரு இலக்கியப் பரப்பில் பல்வேறு தரப்பட்ட காப்பிய நூல்கள் எழுந்துள்ளன.
ஒவ்வொரு நூலும் காப்பிய இலக்கணம் என்ற விதிகளுக்குட்பட்டு எழுதப்பட்டுள்ளனவா? என்று ஆராய்ந்தால் இரு மாறுபட்ட சிந்தனைகள் எழுகின்றன. எனவே ஓர் இலக்கியம் குறிப்பிடதொரு வகையைச் சார்ந்தது என்று கூறினால் தான் பெருமை உடையது எனக் கருத வேண்டிதில்லை. ஒவ்வொரு இலக்கியமும் அதனளவில் கொண்டிருக்கும் வகைத்தன்மையே சிறப்பானது.
வகைமை அடிப்படை - கதை உரைக்கும் போக்கு
மணிமேலைக்குப் பின் எழுந்த காப்பியங்களைப் பின்வரும் நிலையில் பகுத்துக் கொள்ள முடிகின்றது.
1. சமயக் கருத்தை நிலை நாட்டல்.
2. சிறுகதைகளைச் சற்று விரிவாகக் கூறல்.
3. பெருங்கதைகளைச் சிறுவடிவில் சுருக்கிக் கூறுதல்.
4. தொகுப்புகளாகக் கதை கூறுதல்.
5. பெருங்கதைகளாக முழுவரலாற்றையும் எடுத்துரைத்தல்.
நன்மைகள் - பயன்கள்
இவ்வாறு வகைப்படுத்திப் பார்த்தலால் கீழ்வரும் நன்மைகளும் பயன்களும் ஏற்படலாம்.
1. காப்பியப் பரிமாணங்களை மதிப்பிட வாய்ப்பு நேரும்.
2. காப்பிய வகை எத்தகையது என ஆராய வாய்ப்பு கிட்டும்.
3. கதை கூறினால் மட்டுமே அது காப்பியமாக உருப்பெற்று விடுமா? எனத் தீர்மானிக்கலாம்.
இனி இக் கூறுபாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சிந்தித்துப் பார்க்கப்பட்டால் கூடுதல் விபரம் பல கிடைக்கும்.
சமயக் கருத்துக்களை நிலைநாட்டுதல்
மணிமேகலை என்ற நூலில் பௌத்த சமயத் துறவியாகிய இளம்பெண் ஒருத்தி பிற சமய கருத்துடையவர்களிடம் நேரிடையாகச் சொற்போராட்டம் நிகழ்த்தி வெற்றிபெற்று தன் சமயக் கருத்தை (பௌத்தம்) நிலைநாட்டுகின்றாள். இதன் வருகைக்குப் பின்பு இதனைப் போலவே பல நூல்கள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீலகேசியும் குண்டலகேசியும் குறிப்பிடத்தக்கது. நீலகேசி முழுவதுமாகக் கிடைக்கவில்லை. குண்டலகேசியில் சில பாடல்கள மட்டுமே கிடைத்துள்ளன.
நீலகேசி
மணிமேகலை , குண்டலகேசி என்கின்ற பௌத்த சமய நூல்களுக்குப் பின்பு தோன்றிய சமண சமய நூல் நீலகேசி என்பதாகும். பௌத்த சமயக் கொள்கைகளை மறுக்கவும் பௌத்த சமயத்த தலைவர்களைக் கேலி, கிண்டல் செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சமண சமயக் கொள்கையைப் பரப்பும் நோக்கில் எழுதப்பட்ட கடுமையான பிரச்சார நூலாக இது அமைகின்றது. பிற காப்பியங்களைப் போலவோ அல்லது தனியாக ஒரு கவினுறு காப்பியமாகவோ இந்நூல் அமையவில்லை என்கின்றார் தா.வே. வீராசாமி (தமிழலக்கியக் கொள்கை- 5,ப.32)
குண்டலகேசி
இந்நூல் குண்டலகேசி விருத்தம் என்றும் அழைக்கப்படும். சமயவாதங்களைக் கூறுகின்ற நீலகேசி பிங்கல கேசி , அஞ்சன கேசி, காலகேசி போன்ற கேசி நூல்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது. காப்பியத் தலைவியின் பெயர் குண்டலகேசி. கி.பி.10 ஆம் நூற்றாண்டு கால அளவில் இதனை இயற்றியவர் நாதகுந்தனார் என்பவர் ஆவார். ஆனால் இவரது பெயரை நாகசேனர் என்று உரைப்பார் மயிலை சீனி. வேங்கடசாமி.
குண்டலகேசியில் சமண சமய கொள்கைகள் மறுக்கப்படுகின்றது. அம்மறுப்புக்கு விடையளிப்பதாகத் தோன்றியது நீலகேசி, குண்டலகேசி நூல் தற்பொழுது முழுவதுமாக இல்லை. வீரசோழிய உரை, யாப்பருங்கல விருத்தியுரையிலும் மேற்கோளாகவும் புறத்திரட்டில் 10 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. நீலகேசி நூலின் மூலமாகவும்10 பாடல்கள் கிடைத்துள்ளன.
சிறுதைகளைச் சற்று விரிவாகக் கூறுதல்
இராமாயணம், மகாபாரதம், சீவகசிந்தாமணி, சிலம்பு போன்றவற்றின் கதைகள் போல அகன்று விரிந்த பல்வேறு உட்கதைகள் கொண்ட பெருங்கதைகளாக அல்லது மாக்கதைகளாக அமையாமல் இவற்றினுள் இருக்கும் சிறுகதைகளினைச் சற்று விரிவாகக் கூறுதல் என்ற முறையில் அமைவனவற்றை இப்பிரிவினுள் அடைக்கலாம் இவற்றுள் குறிபிடத்தக்கன.
1. புரூவரன் கதை
2. அரிச்சந்திர புராணம்
3. நளவெண்பா
4. குசேலோபாக்கியானம்
5. யசோதர காவியம்
சிறிய அளவில் கதை கூறுதல் எனற இப்பகுப்பு கதை அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதன்று. சமுகம், பண்பாடு, அரசு, தத்துவம், என்ற விரிந்த தேசியத் தன்மையை உட்கொள்ளாமல் சுவையாகக் கதை சொல்லுதல் என்ற நிலைகளில் இக்கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு கதையை வெறுமனே சொல்லுதல் என்ற நிலையில் இந்நூல்கள் யாவும் எழுந்துள்ளன. செய்யுள் வடிவில் அமைவதால் காப்பியக் கட்டமைப்புக் கூறுகளை உள்ளடக்கி கதையோட்டம் நிகழ்கின்றது. காப்பியக் கட்டமைப்புக் கூறுகளும் ஒரு மாதிரியாக அமைந்திருக்கவில்லை. இந்நூல்கள் ஒவ்வொன்றின் கதையும் அறிமுகமும் விரவஞ்சி விடப்பட்டுள்ளன.
பெருங்கதைகளைச் சிறுவடிவில் சுருக்கிக் கூறுதல்
இராமாயணம், மகாபாரதம், உதயணன் கதை போன்ற பழைய பெரிய கதைகளைச் சுருக்கமாகக் கூறுதல் இவ்வகையைச் சாரும். இவற்றில் இன்றியமையாதன.
1. வில்லிபாரதம்
2. பாரத வெண்பா
3. மாவிந்தம்
4. உதயண குமார காவியம்
5. இராமோ தந்தம்
வில்லிபாரதம்
வடமொழியல் எழுதப்பட்ட வியாச பாரதத்தினைத் தமிழில் வில்லிப்புத்தூர் ஆழ்வார் என்பவர் பாடினார். அதனால் இது வில்லி பாரதம் என்று சுருக்கம் பெற்றுள்ளது. வடமொழியில் சொல்லப்பட்டுள்ள பதினெட்டுப் பருவங்களையும் பாடாமல் முதல் ஒன்பது மட்டும் இந்நூலில் கதையாக்கம் பெற்றுள்ளன.
வியாச பாரதத்தைச் சுருக்கிக் கூறுதல் பாண்டவர் கௌரவர் தொடர்புடைய கதைகளை மட்டுமே சொல்லல், நேரடியாகக் கிளைக் கதைகளின்றிக் கதை சொல்லல், இயற்கை, இறந்த நிகழ்ச்சிகள், வருணனைகள் போன்ற காப்பியக்கட்டமைப்பு இடம்பெறல், வருணனைகள் தமிழ்க்காப்பிய மரவிற்கு ஏற்றபடி அமைதல், கிருஷ்ண பக்திக்கு முதன்மையளித்தல் போன்றவற்றை நோக்கமாக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
பாரத வெண்பா, மாவிந்தம்
இந்நூல்கள் உரைநடையும் செய்யுளுமாக விரவி அமைக்கப்பட்டுள்ளன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இந்நூற்கள் அமைகின்றன. செய்யுளில் மட்டும் கதை சொல்லல், உரைநடையில் மட்டும் கதை சொல்லல், இரண்டும் கலந்த நிலையில் கதை சொல்லல் என்ற நிலையில் பாரத வெண்பாவானது, வெண்பா யாப்பில் பாரதக்கதை முழுவதினையும் பாடுகின்றது. பாரதப்போர் முடிந்தபின் பாண்டவர் மோட்சமெய்திய செய்தியினைச் சொல்கிறது மாவிந்தம் என்ற சொல்.
உதயணகுமார காவியம்
பெருங்கதையில் சொல்லப்பட்ட உதயணன் கதையினை இந்நூல் சுருக்கிக் கூறுகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டுக் கால அளவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகினறன. இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. முந்நூற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்டு ஆறு காண்டங்களாக அமைந்திருந்த போதிலும் இந்நூலில் காப்பியக் கட்டமைப்பு தெளிவாக அமையவில்லை.
இராமோதந்தம்
நூற்றுப் பதினெட்டுப் பாடல்களில் இந்நூல் இராமயணத்தைச் சுருக்கிக் கூறிவிடுகின்றது. குருகுல மாணவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அறிமுகப்படுத்தும் நோக்கில் இராமயணத்தை இராமோதந்தம் என்ற நூலாக இது படைக்கப்பெற்றுள்ளது. சமயச் சார்புடைமை, சமயக்கருத்துக்களைப் பரப்புதல், புராணப் பாங்கு ஆகியன இந்நூலின் பொதுப்பண்பாக அமைகின்றன.
தொகுப்புகளாகத் திரட்டிக் கதை கூறுதல்
ஒரு கதையினையே சொல்லிக் கொண்டு செல்லுதல் என்றில்லாமல், பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறிச் செல்லுதல் இதன் பொதுஅமைதியாகும். பெரும்பாலும் இம்முறையானது சமயத் தலைவர்கள் புகழ் கூறும்படி அமைகின்றது. சைவ சமயப் புராணமாகிய பெரிய புராணம், இசுலாமியக் காப்பியமான இராசநாயகம் போன்ற நூல்களை இவ்வகைகக்குச் சான்றாகக் கொள்ளலாம். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் ஆகியன சைவக் காப்பியமாகவே தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்றுள்ளன. அதேபோல் இஸ்லாமியக் கதையினை உரைக்கின்ற இராசநாயகமும், இசுலாமியக் காப்பியம் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
பெருங்கதையாக முழுவரலாற்றையும் கூறுதல்
பழைய பாரதம், இராமாயணம், பெருங்கதை போல ஒரு பெரிய முழுமையான கதையினைப் பல்வேறு பாத்திரங்களுடனும் பல்வேறு நிகழ்ச்சிகளுடனும் உட்கதைகளுடனும் சொல்லிச் செல்வது இதன் பண்பாகும். இத்தகைய வகைதான் இன்று காப்பியத்தன்மை உடையனவற்றிற்குச் சான்றுகளாக அமைகின்றன.
இம்முறையில் முழுமையாக உள்ள நூல் கம்பனின் இராமாவதாரம் மட்டுமே உரியது என்கிறார் துரை. சீனிச்சாமி (ப.38) பிற்காலத்தில் தோன்றிய தேம்பாவணி, சீறாப்புராணம் போன்றவற்றையும் இவற்றில் அடக்கலாமா என்பது ஆராய்ச்சிக்குரியது என்கிறார் துரை. சீனிச்சாமி.
ஏதேனும் ஒரு குறிக்கோள் முதன்மைபெறுதல், அக்குறிக்கோள் கதை நிகழ்ச்சிகளிலும் கதை மாந்தர்களிடமும் ஊடோடியிருத்தல், கவித்துவ ஆற்றலுடன் படைத்தல் ஆகியன இந்நூல்களின் பண்புகளில் சிலவாகும்.
இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்
நவீன இலக்கியங்கள் பல்கிப் பெருகியுள்ள இருபதாம் நூற்றாண்டு கால அளவிலும் புதிய புதிய யாப்பிலும் காப்பிய இலக்கிய வகைகள் உருவாகியுள்ளன. பெயரளவிலும், கதை சொல்லும் அளவிலும், இந்நூற்கள் காப்பியம் என்றே பெயரிடப்பெற்றுள்ளன. பாரதி பாடிய பாஞ்சாலி சபதம், கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய பாரத சக்தி மகாகாவியம், பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, கவிமணிதேசிய விநாயகம் பிள்ளை பாடிய ஆசியசோதி, போன்ற நூல்களையெல்லாம் காவியம், காப்பியம் என்றே கொள்ளத்தக்கன. மேலும் அரங்க சீனிவாசன் எழுதிய மனித் தெய்வம் காந்திகாதை, கவிவாணன் எழுதியுள்ள உதயம் காவியம் போன்றன இக்காலத்தில் தோன்றியனவே. கவிஞர் வாலி எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, போன்றன இராமாயண பாரதக் கதையினை புதுக்கவிதை யாப்பில் உணர்த்துகின்றன. இவர் படைத்த இராமானுச காவியமும் இவ்வகையினதே. கவிஞர் வைரமுத்து எழுதிய கவிராசன் கதை போன்றதும் இவ்வகைத்தே.
இவ்வகையில் மணிமேகலைக்குப் பின்னான காப்பிய வளர்ச்சி அமைந்துள்ளது. இவற்றிற்கு மிகச் சிறந்த முன்னோடி இலக்கியமாக மணிமேகலை விளங்குகிறது.