New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
Permalink  
 


37. வேதவாதம்

 

இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

 

மணிமேகலை எனும் மாபெரும் காப்யித்தில் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதைப் பகுதியில் பல்வேறு சமயக் கருத்துக்களைக் கேட்டுத் தன் ஆன்ம ஞானத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறாள் மணிமேகலை. சமயம் என்பதற்கு வழி, மார்க்கம் என்ற பொருள்களைக் காட்டலாம். அஃது அவரவர் பிறப்பின் தொடர்பால் ஏற்படுவது. ஆன்மீகம் என்பது வேறு. சமயம் என்பது வேறு. ஆன்மீகம் என்பது ஆன்மா தொடர்புடையது. ஆண்டவன் தொடர்புடையது. எனவே மணிமேகலை சமயவாதியாக இருந்தாள் என்று சொல்வதைவிட ஆன்மீகவாதியாக இருந்தாள் என்பதே சரி.

இவ்வேறுபாட்டினைப் பின்னால் வந்த கவிஞர்கள் வலுப்படுத்தியுள்ளனர். 

“விநாயத் தேவனாய்
வேலுடைக் குமரனாய்
நாராயணனாய்
நதிச் சடைமுடியனாய்
பிறநாட்டில் இருப்போர்
அல்லா யொஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவருந்தானாய்
திருமகள் தலைவனாய்
உமையவள் வாணி
உகந்தவான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்’’

என்பார் மகாகவி. பாரதியார் விநாயகர் நான்மணி மாலையில் உலகெலாம் காக்கும் இறை ஒன்றே என்பது இப்பாடல் உணர்த்தும் பொருளாகும்.



கம்பரின் கம்பராமாயண இறைவணக்கப் பாடலும் இதே பொதுநிலையை உடையது.

உலகம் யாவையும் தாம் உளஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்ற இவ்விறைவாழ்த்து, எல்லாச் சமயத்திற்கும், எல்லாக் கடவுளர்க்கும் பொருந்தும் பொது இறைவாழ்த்து ஆகும்.

யார் படைக்கிறாரோ, யார் காக்கிறாரோ, யார் அழிக்கிறாரோ அவரே தலைவர். அவரே இறைவன். அத்தகைய தலைவனாய் இருப்பவர் பாதங்களைச் சரணடைகிறேன் என்கிறார் கம்பர். இதுவே ஆன்மீக நோக்கு. சமயத்தில் இருந்து வேறுபட்டு எல்லை கடந்து, எல்லை கடந்த பரம்பொருள் விரிவைக் காட்டும் நோக்கு.

ஆறென்றும் நதியென்றும்
ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும்.
நிற்கும் பேர் மாறி ஊர் மாறி
உருமாறி கருமாறி ஒன்றே 
ஓம் சக்தியென உரைக்கும்

என்று கடவுள் பொதுமையைப் பாடுகிறார் கண்ணதாசன்.

மதங்களைக் கடந்து ஆன்மீக நெறியிலே உலகம் இணைய வேண்டும். இதன் காரணமாக பல்வேறு சமயங்களின் சங்கமமாக மணிமேகலை விளங்குகின்றது. பல்வேறு சமயங்களுக்கு இடம் தந்து பௌத்தத்தை நிலை நிறுத்தும் காப்பியம் மணிமேகலை.



எல்லா உயிர்களுக்கும் பசி என்பது ஒன்றே. நோய் என்பது ஒன்றே. தூக்கம் என்பதும் ஒன்றே. உணர்வுகளும் ஒன்றே. மனித குலத்தில் இவையெல்லாம் ஒன்றாய் இருக்கும்போது வழிபடும் கடவுளில் ஏன் பேதம், வேறுபாடு ஏற்படுத்த வேண்டும். ஒரு நாளில் ஓரிரண்டு மணிநேரக் கடவுள் வழிபாட்டு முறையில் உள்ள மாற்றத்தை மனிதகுலம் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு அலைகிறது என மணிமேகலை சிந்தித்ததன் விளைவே மணிமேகலை சர்வ சமயங்களின் கருத்தை கேட்க முனைகிறாள். இதே சிந்தனை சீத்தலைச்சாத்தனாருக்கும் இருந்ததால் அவரும் பல் சமயக் கருத்துகளுக்கு இடமளித்துத் தன் படைப்பினைப் படைத்துள்ளார்.

அடிப்படையில் வேதத்தை மறுத்து எழுந்த சமயநிலையே பௌத்தம் ஆகும். அவைதீக சமயம் என்ற பகுப்பில் பௌத்தம் அமைகிறது. வேதக்கருத்துகளின் முரண்பாடுகள் வேறொன்றைச் சிந்திக்க கௌதம புத்தருக்கு வாய்ப்பினை ஏற்படுத்தின. அதாவது புத்தர் காலத்தில் வேதக்கருத்துகள் சமுதாயத்தில் அழியா இடம்பெற்றிருந்தன. இக்கருத்துகளின் வழியாகப் பிரிவினைகள், ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருப்பதால் அதனைத் தாண்டி, கடந்து ஒரு சமய நிலையைத் தாபிக்க எண்ணுகிறார் கௌதம புத்தர். இதன் காரணமாக வேதவாதம் கௌதம புத்தரால் மறுக்கப்பட்டது என்பதை உணர முடிகின்றது. புத்தர் வழியில் செல்லும் மணிமேகலைக் காப்பியம் வேதவாதத்தை ஏற்கவில்லை என்பதும் இதன்வழியாகப் பெறப்படுகிறது. இருப்பினும் வேதவாதம் பற்றிய செய்திகைள அறிய வாய்ப்பினைத் தருகிறது மணிமேகலை. அவ்வழியில் இக்கட்டுரை வேதவாதம் பற்றிய சில செய்திகளைத் தொகுத்துத் தருகின்றது.

கெளாமார ஆசரேத் ப்ராஜ்வோ
த்ஹர்மாந் ப்ஹாகவநாத் இஹ
துர்லம்ஹம் மாஅஹம் ஜந்ம
ததப்ய க்ஹ்ருவம் அர்த்த ஹதம்

என்பது பாகவத வாக்கு. மானிடப் பிறவி மிகவம் அரிதானது. அப்படிப்பட்ட மானிடப் பிறவியிலும் இறைபக்தியைப் பெறுவது இன்னமும் அரிது. ஆகையால் அறிவு மிகுந்தோர் இளமை முதலே பாகவத தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது பாகவதம்.

ப்ஹக்திர் அஷ்டவிதஹா ஹ்யேஷா
யஸ்மிந் ம்லோச்ச் ஹோபி வர்த்ததே
ஸவிப்ரேந்த்ரோ முநி ஸ்ரீமாந்
ஸயதி ஸச பண்டித

என்பதும் வேதவாக்கு. எட்டுவிதமான பக்தியானது தாழ்ந்தவனிடத்தில் காணப்பட்டாலும் அவனே சிறந்த பிராமணனும், முனிவனும், துறவியும், ஞாநியும் ஆகின்றான் என்பது இதன் பொருளாகும். எனவே பக்தி அவசியம். அதைவிடப் பக்தியில் சமநிலை, பேதமற்ற நிலை ஆன்மீகமாகின்றது.



வேட்டையாடுதல், சூதாடுதல், பகலில் நித்திரை செய்தல், புறங்கூறுதல், பிறர்க்குக் கொடுக்க வேண்டிய பொருள்களைக் கொடுக்காது வஞ்சித்தல், தானமாகக் கொடுத்த பொருளை அபகரித்தல், கடுமையாகப் பேசுதல், குரூரத்தன்மை இவை எட்டும் மனத்தைக் கெடுப்பன என்கிறது வேதம்.

காம ஏஷ க்ரோத ஏஷ
ரஜோகுண ஸமுத்ப்ஹ்வ

என்பதே இதன் வேத வடிவம். இந்தக் காமம், க்ரோதம் இரஜோ குணத்தினின்று உருவாகிறது என்பது பகவத்கீதை.

எனவே மனிதன் சத்வ குணம் கொண்டே விளங்க வேண்டும். அதுவே அவனுக்குச் சமநிலை தரும் படிநிலையாகும்.

ஸ்வவிவேக க்ஹ்தாபஹ்யாஸவசாத்
ஆத்மோதயே நஸா
சுகப்ஹே சோப்ஹநா
புஷ்பலே தேவா பாஹி நவோத்கதா


என்ற வேதவாசகமும் இங்கு நோக்கத்தக்கது. தன் சுயவிவேகத்தைக் கொண்டு இடைவிடாத தியானப் பயிற்சியினின்று விளைந்த ஆத்தோதயத்தினால் புதிதாய் அரும்பிய புஷ்பங்களுடன் கூடிய இளங்கொடியை நிகர்த்து சௌந்தர்ய சோபை வாய்ந்து மூதாட்டி ஒருத்தி தவத்தினால் விளங்கினாள் என்பது நிர்வாணப் பிரகரணம் என்னும் வேதப்பகுதியாகும். வேதம் பெண்களுக்கும் தவம் உண்டு என்று கருதுவதாக இதன் வழி அறியலாம். 

க்வ நீரொக்ஹே விமூட் ஷ்ஸ்ய
யோ நர்ப் பந்த்ஹம் கரோதிவை
ஸ்வாரா மஸ்யைவத் ஹீரஸ்ய
ஸர்வதா லாவக்ரிதரிம

ஆணடவன் அருளைத் தேடாது பிடிவாதமாய்ப் புலன்களை நம்பியருப்பவனால் எவ்வாறு ஞானத்தின் வாசலைத் திறக்கமுடியும்?

ஆத்மஸ்வரூவத்தில் ஈடுபட்டிருக்கும் தீர புருஷனிடத்திலேயே புலனடக்கம் கைகூடும்.

காதவ காந்தோ கஸ்தே புத்தா
ஸ்ம்ஸாரோயம் அதீவ விசித்ர
கஸ்யத்வம்வா குத ஆயாத
தத்வம் சிந்தய ததி தம் ப்ராதஹ

யார் உன் காதலி. யார் உன் மைந்தன். இச்சம்சாரம் சாலவும் விசித்ரம். நீயும் எவருக்குரியவன், எங்கிருந்து வந்தாய், இதன் உண்மையைச் சிந்தனை செய்வாயோ என்கிறது மோஹமுத்கரம் என்னும் ஞானநூல்.

தெற்றென் நிருத்தம் செவிச்சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம்பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரணவேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
வேதியல் உரையின் விதியும் கேட்டு

என்பது மணிமேகலை.

வேதவழி அதுவே. ஞானவழி அதனையும் மணிமேகலை கேட்டறிந்து தெளிந்தாள். உயிர்க்குலம் அனைத்தும் ஒன்றேயெனும் வழியில் பசிப்பிணி போக்கியருளினாள் என்பது வேதத்திற்கும் பொருந்தும் தொண்டே.

இவ்வகையில் வேதங்கள் காட்டும் சமயத்திற்கும் இடம் தந்துள்ளது மணிமேகலை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard