பூதவாதி என்ற சமயத்தைச் சார்ந்த ஓர் ஆன்மிகவாதியிடம் மணிமேகலை பூதவாதி சமயத்தைப் பற்றி கேட்கிறாள்.
பூதங்கள் என்பது இந்த உலகத்தை ஆள்கின்ற ஐம்பெரும் பூதங்களைக் குறிப்பிடுகிறது.
அத்திப்பூவும் கருப்புக்கட்டியும் இட்டு மேலும் பல பொருட்களையும் ஒன்றாக்கக் களிப்பு தரும் ஒன்று பிறந்ததைப் போல ஐம்பெரும் பூதங்களால் உணர்வு பிறக்கும்.
‘‘சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு’’
என்பார் வள்ளுவர்.
‘‘கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஓண்டொடி கண்ணே உள’’
என்று ஐம்புலனாகிய பூதங்களை வள்ளுவர் கூறுகிறார்.
அப்படி ஐம்பெரும் பூதங்களால் தோன்றிய உணர்வு பின் கலைந்து அழிந்து போகுமிடத்து ஒவ்வொன்றாகப் பிரிந்து போய்விடும்.
மனித உயிர்களை உணர்வுகள் ஆள்கிறது. அந்த உணர்வுகளைப் பூதங்கள் வழங்குகிறது. அந்த உணர்வுகள் தோன்றி மறைவதாகும். அது தோன்றி மறைதல் என்பது ஒருவன் பறை அடிக்கின்ற போது, அந்த பறையிலிந்து ஓசை எழுந்து சென்று, தேய்ந்து கெடுவது போல, அது மறைவது போல மனித உணர்வுகள் என்பதைப் பூதங்கள் தோற்றுவிக்க அவைகள் மறைந்த வண்ணம் உள்ளது எனலாம்.
அந்த பூதங்களின் வழியாகவே உணர்வுகள் பிறக்கின்றன.
நாப்பிளக்க பொய்யுரைத்து நவநதியம் தேடி நலன்ஒன்றும் அறியாத நாரியரை கூடி பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல புலபுலவென கலகலவென புதல்வர்களை பெறுவீர் காப்பதற்கு வகையறீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் வால் நுழைத்து கொண்டே ஆப்புதனை அசைத்து விட்ட குரங்குதனை போல அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
என்று பட்டினத்தார் மனித உணர்வுகள் அதன்வழி உயிர்களின் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிறார்.
இம்மையும் இம்மை பயனும் ஆகிய எல்லாம் இப்பிறப்புடனே கழிவனவாகும்.
மறுபிறப்பு என்ற ஒன்று அமைந்து வினைப்பயனை அனுபவித்தல் என்று சொல்லுதலும் பொய்யே ஆகும். இவ்வாறு பூதவாதி தன் கொள்கையை சொன்னான்
இது தெய்வத்தைப் பற்றிப் பேசப்படும் பொருள் என்பதால் இதை மெய்ப்பொருள் காண்பது என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். மனித உணர்வுகள் என்பது ஒருவகை போதையால் உருவாகின்றது. அந்தப் போதை என்பது கள்ளினால் உண்டான களிப்பு போல உள்ளத்தை இன்பப்படுத்துகிறது.
இந்த கருத்தை மையப்படுத்திக் கதையைப் பார்த்தால் கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்வார்.
முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே -மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாவை தானே
இது ஒருகளிப்பை உள்ளத்தில் ஊட்டும் காதல் என்கின்ற உணர்வு.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு
என்று திருவள்ளுவர் சொல்வார், மனித உயிர்கள் ஐம்பெரும் பூதங்களால் வழிநடத்தப்படுகிறது. மதுவை உட்கொள்ள மனம் மயங்குகிறது இது ஐம்பெரும் பூதங்களால் நடைபெறுகிறது. ஐம்பெரும் பூதமாகிய நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு என்பவை மனித உயிர்களை ஆள்கிறது. உணர்வுகளை வழங்குகிறது என்று சொல்கிறது பூதவாதி சமயம்.
பூதங்களின் செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கின்றார்கள் ஒன்று உயிரோடு கூடி கூட்டிக் கட்டப்பட்டது.
மற்றொன்று உடம்பின் ஆக்கத்துக்கேதுவாக உடம்பின் வெளிப்பாடு அகிய உணர்வின் ஆக்கத்துக்கு ஏதுவாக கூட்டிக் கட்டப்பட்ட பூதங்கள் ஆகும். இந்த பூதங்கள் உயிர்க்கும் உடலுக்கும் செயலாக்கத்தை தந்து மனிதனுக்கு வாழ்க்கை என்ற ஒரு மேடையை தந்துள்ளது. உயிரையும் உடலையும் தந்த இயற்கை ஐம்பெரும் பூதங்களின் வழியாக, இந்த உலக இயக்கத்தை எடுத்துச் செல்கிறது. இதுவே மெய்நெறியாகும் என்று பூதவாதி குறிப்பிடுகிறார்.
இப்பிறப்பில் செய்கின்ற இன்ப துன்பங்களை எல்லா உயிர்களும் இந்தப் பிறவியிலேயே அடைந்து விடுகின்றன. உயிர்கள் இந்தப் பிறவியில் செய்கின்ற நல்வினை, தீவினை பயன்களை மறுமையில் நுகர்தல் என்பது பொய்யென்று பூதவாதி கூறினான். ஐம்பெரும் பூதமும் கூடித்தான் மனித உயிர்களுக்கு அறிவையும் இன்பத்தையும் தோற்றுவிக்கின்றன என்று பூதவாதி கூறினான். பூதவாதி சொன்ன எல்லாவற்றையும் கேட்ட மணிமேகலை பூதவாதி கூறியவைகள் அறமல்லாதது என்று தோன்றினாலும் பூதவாதி கூறியவற்றை அவன் மறுத்துக் கூறவில்லை.
தமிழக மக்கள் பண்பாளர்கள் என்பது இதில் புரிகிறது. அதிலும் பெண்கள் பிறர்மனம் புண்படாதபடி நடப்பதை நாகரீகமாக கருதுபவர்கள் என்பதை புலப்படுத்துகிறது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்
என்று வள்ளுவர் கூறுவது போல மணிமேகலை நடந்து கொண்டாள்.
மணிமேகலை துறவு பூண்டவள் அவள் மணிமேகலா தெய்வத்தின் அருளால் தன் முற்பிறப்பை அறிந்தவள் அதனால் பூதவாதி சமயம் முற்பிறப்பு என்பது எதுவும் கிடையாது என்று கூறுகிறது. இது மணிமேகலை மனதில் ஓர் நகைப்பை இது உருவாக்குகிறது. அவ்வாறு நகைத்த மணிமேகலை தன் வரலாற்றை ஆங்கே கூறுகின்றாள். தெய்வ அருள் என்பது மனித பிறப்பின் பிறப்புகளை அறியச் செய்கிறது. முத்தித் தருகிறது என்பதை மையப்படுத்தி மணிமேகலை தன் கருத்தை முன்வைத்தாள்.
பூதவாதி மணிமேகலையின் நகைப்பிற்கான காரணத்தை வினவினான். அதற்கு மணிமேகலை தன் பதில்களை பலவாக கூறுகிறாள். இவைகளை உரையாடும் போது மணிமேகலை ஆண்வேடத்தில் இருந்தாள்.
தெய்வத்தின் அருளாலும், கனவுகாணும் நிலையாலும் மயங்குகின்றவர்களின் மனது வேறு விதமாக மாறிப்போகும் என்று மணிமேகலைக் கூறினாள்.
மனம் திரிந்து கெட்டு மெய்மை அறியாமல் உரைப்பது உன் உரை என்று மணிமேகலை பூதவாதியின் உரையை மறுத்தும் வெறுத்தும் நீ கூறுவது ஐயத்திற்கு இடமாகக் கூடிய ஒரு கருத்து சர்ச்சைக்கு உரியது.
அனைவராலும் ஏற்க முடியாத கருத்து என்னும் பூதவாதியின் கருத்தை மறுத்து மணிமேகலை தன் மனதை வெளிப்படுத்தி, தன் கருத்தை முன் வைத்தாள்.
உனக்கு தந்தையும் தாயுமாகிய பெற்றோரை நீ அனுமானத்தால் தான் அறிகிறாய். இவர் என் தந்தை, இவர் என் தாய் என்பது முழுமையாக மற்றவர்களும் பெற்றோரும் சொல்ல அதனை ஏற்கிறாய், அப்படிதான் முற்பிறப்பு என்பது ஆகும்.
அதை ஏற்க முடியாத பூதவாதியே உன் கருத்து முற்றிலும் முரண்பட்டது. அதை ஏற்க இயலாதது என்றும் மணிமேகலை கூறினாள்.
உண்மை உணர்வுக்கு ஏவான அனுமானம் என்பது மெய்ப்பொருளாகும். அதனை ஏற்பதே இயல்பாகும். அதன் மெய்ப்பொருளை அறிவது என்பது அறிதற்கு அரிதாகும்.
காட்சிப் பொருளாக அல்லாத ஒன்றை ஐயத்திற்கு இடமல்லாது ஏற்பது என்பது தவறு என்றும் காட்சி பொருளாக உள்ளதே தெளிவு பொருள் என்றும் நினைக்காதே. தெய்வ அருள், தெய்வ முத்தி, தெய்வநிலை போன்ற வற்றில் அறியாமை என்பதே தெய்வ நிலையின் முதற்படியாகும் என்று மணிமேகலை பூதவாதியிடம் கூறினாள்.
முற்பிறப்பு என்பது அறிதற்கு அரியதாகும் அது எளிய செயலன்று என்று மணிமேகலை உரைத்தாள்.
முற்பிறப்பு என்பது ஐயத்திற்கு இடமானது காட்சியாகக் காண இயலாதது. அப்படிப்பட்டவற்றை சரியானது என அறிவதற்கு நல்லருளும் அனுமானமும் தெய்வ நிலையும் மூலமாக அமையும் என்று மணிமேகலை கூறினாள்.
தெளிவுடன் புலப்படும் பொருள் அல்ல அவைகள் வெறும் கனவுக் காட்சியாகும். ஆயினும், மெய்நிலையை உணரும் ஆற்றல் பெறும் உள்ளம்.
முற்பிறப்பு அறிதல் என்பது இயலும் செயலாகும் என்று பூதவாதியிடம் மணிமேகலை கூறினாள்.
மனதில் உதிக்கும் நம்பிக்கை, இறைகாட்சியாக மெய்ப்பொருளாகத் தோன்றுவதும் சமய நிலையில் மேல்நிலை என்றும் கூறலாம். அதன் வழி இம்மை மறுமை என்றும் வேறுபாடு அறியலாம் என்றாள் மணிமேகலை. இப்படியாக மணிமேகலை பூதவாதியிடம் தன் கருத்துக்களை பேசிவிட்டு ஆண்வடிவம் பூண்டிருந்த மணிமேகலை ஐவகை சமயங்களின் பொருளையும் கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
மணிமேகலை பூதவாதியின் கருத்துக்களை ஏற்கவில்லை. காரணம், மணிமேகலை பின்பற்றிய சமயமும் பூதவாதி சமயமும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் உடையதாக இருந்ததே அதற்கு காரணமாக அமைந்தது எனலாம்.
மெய்யுணர்வு என ஒன்றில்லாமல் மெய்ப்பொருளின் உணர்வு என்பது வாய்ப்பதற்கு இடமில்லை எனவே, மெய்ப்பொருளே மெய்யுணர்வை உண்டாக்குகிறது என மணிமேகலை கூறினாள்.
எந்தெந்த வற்றால் துன்பம் வேண்டாமோ அவற்றின் மேல் வைத்துள்ள ஆசையை விட்டுவிடு. அவற்றால் துன்பமில்லை என்ற வள்ளுவன் சொல், மெய் என்றாள். மணிமேகலையின் வாய்மொழி அவ்வாறே புலப்பட்டது.
ஒவ்வொரு சமயமும் தான் காட்டுகின்ற வழிகளில் பேசப்படுகின்றன. இன்று பின்பற்றப்படும் சமயங்கள் ஆகிய இந்துமதம் இறந்தவரை எரிக்கும் இயல்பைக் காட்டுகிறது. கிறித்துவமதம் புதைக்கும் வழக்கத்தைக் காட்டுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மதமும் தன் கருத்துக்களால் மாறுபடுகின்றன. வேறுபடுகின்றன.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் வட இந்தியாவில் எழுந்த சமயக் கோட்பாடுகள் தென்னாட்டு அறிவாளரையும் கவர்ந்திருக்கிறது. மதங்களின் தோற்றம் உருவாகுவது போலவே பல மதங்கள் மறைந்தும் இருக்கின்றன என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.