இலக்கியமும், சமயமும், பண்பாட்டிலிருந்து உருவெடுக்கின்றன. பண்பாடு என்னும் பெரும் அலகுக்குள் வருகின்ற எண்ணற்ற நுண் அலகுகளில் இலக்கியமும் சமயமும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நம்பிக்கைகள், வழிபாடுகள், கோட்பாடுகள், ஒழுக்க மதிப்பீடுகள் உள்ளிட்ட சமயத்தின் கிளைப்பிரிவுகள் அனைத்தும் மொழியில் வழியாக வெளிப்பட்டு மக்களுடன் உரையாடுகின்றன. மொழியின்றி சமயங்களுக்கும் மக்களுக்குமான தொடர்பு சாத்தியமே இல்லை. எழுத்து மொழி, பேச்சு மொழி இவை இரண்டு வகையினூடாகவும் சமயங்கள் மக்களைச் சென்றடைகின்றன.
இலக்கியங்களைச் சமயப்பிரசாரத்தின் கருவிகளாகவே பயன்படுத்தியிருக்கின்றனர். பெரிய சமயங்கள் என்று நாம் அடையாளப்படுத்தி வைத்திருக்கின்ற ஒவ்வொன்றும் தங்களுக்கன்று எழுதப்பட்ட புனிதப் பிரதிகளை வைத்திருக்கின்றன. கீதை, பைபிள், குர்-ஆன், குருகிரந்தம் என்று நாம் அறிந்து வைத்திருக்கின்றப் புனிதப் பிரதிகள் ஒவ்வொன்றும் இவற்றை உறுதி செய்கின்றன. தன் சமயக் கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்புவதற்கு இலக்கியங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
தமிழ் இலக்கியத்திற்குள் இதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் இருக்கின்றன. கிறித்தவம், இஸ்லாம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சாருவாகம் ஆசீவகம் என்று பல்வேறுபட்ட சமயங்களின் கருத்துக்கள் குறும்பாடலாகவும், பேரிலக்கிய வடிவங்களிலும் உள்ளன. “கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டில் அரசன் சந்திரகுப்த மெளரியரின் காலத்திலும் அவரது இரத்த தொடர்புடைய அசோக மன்னனது காலத்திலும் சமணமும், பௌத்தமும் தமிழகத்திற்கு வந்தன” என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.
தமிழகத்திற்கு வந்த இந்த இரு மதங்களும் மக்கள் செல்வாக்கும் அரசு செல்வாக்கும் பெற்று வலுவாகக் காலூன்றின. இதனூடாக இலக்கியத்திற்குள்ளும் இவற்றின் ஊடுபரவல் நிகழ்ந்தன.
இலக்கியத் தத்துவ மரபில் வைதீக அவைதீக கருத்துகளுக்கு இடையில் நடந்த போரட்டங்கள் மிக முக்கியமானதாகும். சமத்துவமின்மைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராளியாகப் புத்தர் திகழ்ந்தார். அவருடைய கொள்கைகள் ஏற்கப்பட்டு தென்னிந்தியாவில் தமிழகத்தில் பரவிய போது, அவற்றை எடுத்துக் கூறும் வகையில் திறமுடன் நிலைநாட்டும் வகையில் இலக்கிய, இலக்கண நூற்கள் உருவாயின. அவற்றுள் தலைச்சிறந்த நூலாகக் கருதப்படுவது மணிமேகலைக் காப்பியம். பெண் என்பவள் வெறும் காமக் கூடமல்ல, அவள் சாதிக்கப்பிறந்தவள், சவால்களை எதிர்கொள்ளுபவள், சகாப்தத்தைப் படைத்துக் காட்டக் கூடியவள், அதனாலேயே மணிமேகலைக் காப்பியத்தைச் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் புரட்சிக்காப்பியம் என்றார். தமிழ் காப்பிய உலகில் துறவை மட்டும் வைத்து காப்பியம் பாடிச் சிறப்பித்தார் சாத்தனார்.
தமிழில் இரட்டைக் காப்பியங்களாக இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமும், சாத்தனார் எழுதிய மணிமேகலையும் அறியப்படுகின்றன. ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம் முந்தியது, மணிமேகலை பிந்தியது என்றும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தை எழுதுவதற்கான செய்திக் குறிப்புகளை இளங்கோவடிகளுக்கு மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் எடுத்துரைத்தார் என்ற கருத்தும் இருக்கிறது. சிலப்பத்காரத்தின் காட்சிக்கதை வரிகள் (67-90) இதனைத் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுத, சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தை எழுதினார் என்னும் ஒரு வரலாற்றுப் புரிதல் இருக்கிறது.
மணிமேகலை பௌத்தத் துறவியாக, பௌத்தக் கருத்துக்களை எடுத்துரைக்க வந்த பெண்ணாக, பௌத்த அறங்களை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வந்த பெண்ணாக நமக்கு அறிமுகப்படுத்துகிற பாத்திரமாக அமைத்திருக்கிறது. மணிமேகலை பௌத்தத்தைத் தழுவிய செய்தி சிலப்பதிகாரத்தில் கிடைக்கிறது என்றாலும் சிலப்பத்காரம் குறிப்பிடுகிற பௌத்தம் தழுவிய மணிமேகலைக்கும், மணிமேகலை குறிப்பிடும் பௌத்தம் தழுவிய மணிமேகலைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
சிலப்பதிகாரம் மணிமேகலை பௌத்தம் தழுவியபோது தலைமுடியை முழுவதும் மழித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது.
இவ்விரு காப்பியங்கள் தரும் குறிப்புகள் வேறுபாடு கொண்டவையாக இருந்தாலும், அவை ஒன்றுபடும் புள்ளியாக இருப்பது மணிமேகலை பௌத்த மரபைப் பின்பற்றியவள் என்ற கருத்து உண்மையாகிறது.
மணிமேகலைக் காப்பியத்தின் 27-வது காதையாக இடம் பெற்றுள்ள சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை பிற சமயங்களுடன் பௌத்தம் நிகழ்த்திய உரையாடலின் சான்றாய் அமைந்துள்ளது. பிரமவாதி, வைஷ்ணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, தருமவாதி, அதன்மாவதி, சாக்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோருடன் மணிமேகலை என்னும் பௌத்த துறவி உரையாடுகிறாள். இந்த காதை நமக்கு சில கருத்துகளை விளக்குகிறது. மணிமேகலை காப்பியம் உருவான காலக்கட்டத்தில் தமிழ் நிலப்பரப்பில் இருந்த பல்வேறு சமயங்கள், தத்துவக் கோட்பாடுகள் சார்ந்த விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் சாரமாக அமைந்த சிந்தனைப் போக்குகள் குறித்த தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. மணிமேகலைக் காப்பியத்தில் ஒரு முக்கியக் கூறாக இருப்பது பழம் பிறப்பு பற்றிய குறிப்புகள். உதயகுமாரன் என்னும் கதாபாத்திரத்தின் வழியாகப் பழம் பிறப்பு குறிப்புகள் நிறைய குறிப்பிடுகின்றன. பூதவாதியின் வழியாக தகவல்கள் மறுபிறப்பை ஏற்க மறுப்பதாகத் தெரிகிறது. இம்மையும், இம்மைப்பயனும் ஆகியன எல்லாம் இப்பிறப்புடனே முடிந்து விடுகிறது. மறுபிறப்பு, வினைப்பயனை அனுபவித்தல் என்பது வடிகட்டின பொய் என பூதவாதி கூறுவதாக மணிமேகலை குறிப்பிடுவதை,
பௌத்தம் தமிழ் நிலப்பரப்பில் உடனடியாக எதிர்கொண்ட மற்றொரு சமயமாக இருந்தது சமணம். சமணத்தை எதிர்கொண்ட பௌத்தம் அதன் மீதான வன்மத்தை வெளிப்படுத்த சமணம் குறித்த பலவாறான புனைவுகளையும் உருவாக்கியது. அதனைப் பரப்பவும் செய்தது என்பதற்கு மணிமேகலையின் சான்று ஆதாரங்கள் இருக்கின்றன.
மலர்வனம் புக்க காதையில் இடம் பெற்று இருக்கும் சுதமதியின் வரலாறு பௌத்தம் சமணத்தின் மீதான வண்மத்தை வெளிப்படுத்துகிறது. சுதமதியின் தந்தை கௌசிகன் (அந்தணன்) தாயில்லா தனது மகள் சுதமதியை பாதுகாத்தான். சுதமதி ஒரு நாள் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒருவன் அவளைத் தூக்கிச் சென்று காவிரிப்பூம்பட்டிணத்தில் விட்டுச் சென்றான். சுதமதி சமணப்பள்ளியில் வாழ்ந்துவந்ததால் மகளைக் காணாத அவளது தந்தை கௌசிகன் ஒரு நாள் காவிரிப்பூம்பட்டிணம் வந்த பொழுது மகள் சுகமதியைக் கண்டு அங்கேயே தங்கிப் பிச்சை எடுத்து சுதமதியை பாதுகாத்தான். ஒரு நாள் கௌசிகனைப் பசு ஒன்று முட்டிக் குடல் சரிந்து விட்டது. கௌசிகன் தன் சரிந்த குடலுடன் அருகில் உள்ள சமணப் பள்ளியில் சென்று மருத்துவமும் அடைக்கலமும் கேட்டான். அவர்கள் தர மறுத்ததுடன் அவனையும், சுதமதியையும் சமணப்பள்ளியில் இருந்து வெளியேற்றவும் செய்தனர். அவ்வேளையில் அவ்விடம் வந்த சங்க தருமன் என்னும் பௌத்தத் துறவி அவர்களுக்கு உதவினான் என்று குறிப்பு வருகிறது.
இது சமணத்தின் மீதான பௌத்த வன்மமாகவே வெளிப்படுகிறது. ஏனெனில் தங்களை நாடி வந்தவர்களை அடைக்கலம் கொடுத்து பராமரிப்பதும், நோயுற்றவர்களுக்கு மருத்துவம் கொடுப்பதும், சமணத்தின் அடிப்படையான நான்கு கோட்பாடுகளில் ஒன்று. புற இரண்டு உணவு, கல்வியும் ஆகும். ஆனால் மணிமேகலையே சமணத்திற்கு இத்தகைய தன்மை இல்லை என்பதுடன் இவையெல்லாம் பௌத்ததிற்கு உரியது என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
இவ்வாறு பிற சமணங்களுடனான உரையாடலை வைக்கும் மணிமேகலைக் காப்பியம் பௌத்ததின் அடிப்படையாக தர்மமான பசித்தவர்களுக்கு உணவளித்தல் என்கிற கோட்பாட்டை மிக வலுவாக தன்னுடைய வரிகளில் பதிவு செய்கிறது. தவத்தின் அதீத நிலைக்குச் செல்லும் மணிமேகலை அந்த உலகின் பசித்த வயிறுகளுக்கு உணவளிக்கும் அமுதசுரபியுடன் அதுவும் அள்ள அள்ளக் குறையாமல் உணவை வழங்கும் அமுத சுரபியுடன் மக்களை நோக்கி செல்கிறார்.
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி : பாத்திரம் பெற்ற காதை 95-96)
என்ற பாடல் வரிகளை உற்று நோக்கும் போது பசித்தவர்களுக்கு உணவளித்தல் என்ற அடிப்படை கோட்பாடு பௌத்த நிலையில் மிகவும் போற்றப்படுகிறது.
இந்தியாவில் சமயங்களைப் பின்பற்றிய படைப்பாளர்கள் சமயங்களைப் பரப்பவும், தம் கொள்கைகளை மக்களுக்கு உணர்த்தவுமே காப்பியங்களை படைத்தனர் என்ற சிந்தனை உருவாகிறது. ஆகவே, மணிமேகலையில் பௌத்தக் கருத்துகள் எந்த நிலையில் உள்ளது என்பதனை இக்கட்டுரை உணர்த்துகிறது.