கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த கௌதம புத்தரின் நெறிகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கை முறை பௌத்தம் எனப்படுகின்றது. இந்தியாவில் தோற்றம் பெற்ற இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, தாய்லாந்து, திபெத், கொரியா, மங்கோலியா, தென்கிழக்கு ஆசியா, சீனா, வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பரவியது. இன்னும் பிற நாடுகளில் பௌத்த சமயத்தின் பரவல் இருந்துள்ளது. தற்காலத்தில் 230 மில்லியனிலிருந்து, 500 மில்லியனுக்கும் இடையில் பௌத்தர்கள் இருப்பதாக உலகக் கணக்கீடு கணக்கிட்டுள்ளது. பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயானமே சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம் பெயர்ந்த சீனர் மகாயான பௌத்தத்தை மலேசியா, இந்தோனீசியா, புரூணி ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர்.
தேரவாதமே மியன்மார், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும் முதன்மையாகக் பின்பற்றப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு. வஜ்ரயானம் திபேத், மங்கோலியா ஆகியவற்றிலும், ரஷ்யா, சைபீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஐரோப்பாவில் அமைந்துள்ள கல்மிக்கியா, பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல்நாட்டுப் பௌத்தத்தை விட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது.
ஜப்பானில் பௌத்த சமயம்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே பௌத்த மதம் ஜப்பானில் பரவத் தொடங்கியது. ஜப்பானில் பகோரவில் உள்ள புத்தர் கோவில் கோபுரம், நாராவில் உள்ள ஹார்யூ என்னுமிடத்தில் உள்ள புத்தவிகாரம் ஆகியன தற்காலத்தில் ஜப்பானில் பௌத்த மதம் இருப்பதற்கான சான்றுகளாக விளங்குகின்றன. கியாட்டோ நகரில் அமைந்துள்ள கியாமிசு டேரா கோயில் என்னும் புத்தக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோயில் ஆகும். இது தற்போது யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளது. ஜப்பானில் இவ்வாறு பௌத்த சமயம் வளர்ந்து வருகின்றது.
வச்சிராய பௌத்தம் என்ற பிரிவில் ஒரு பிரிவான ஷிங்கோன் பௌத்தம் ஜப்பானில் வளர்ந்து வருகிறது. மஹாவைரோசன சூத்திரம், மற்றும் வச்சிர சேகர சூத்திரம் ஆகியவற்றை இது அடிப்படையாகக் கொண்டதாகும். இது கூக்காய் என்ற பௌத்த துறவியால் தோற்றுவிக்கப் பெற்றது.
பர்மாவில் பௌத்த சமயம்
பர்மாவில் உயர்ச்சி பெற்ற பௌத்த சமயம் இசுலாமியப் பரவலால் நெருக்கடி ஆளானது. எனவே, அதனைத்தடுக்க 969 என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதன் தலைவர் தேரர் எனப்படுகின்றார். இசுலாமியப் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பௌத்த சமயத்தவர்கள் தீவிரவாதம், மதவெறி போன்றவற்றில் ஈடுபடுவதான வெளிவரும் செய்திகளை மறுத்து பௌத்த மதத்தை அன்பின் மதமாக இக்கொள்கை காட்டுகின்றது. மேலும் இதில் உள்ள முதல் ஒன்பது புத்தரின் ஒன்பது இனிய பண்புகளையும், அடுத்த ஆறு புத்தர் போதித்த அறங்களையும், அடுத்த ஒன்பது பௌத்த சங்கப் பண்புகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பௌத்த சந்திப்பில் இதன் தேரர் கலந்து கொண்டு, இரு நாடுகளுக்கு இடையே உலக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினார்.
சீனாவில் பௌத்த சமயம்
சீனாவில் பௌத்தம் மிக்க ஆளுமையுடன் விளங்குகின்றது. சுகவதி பௌத்தம், மகாவைரோசன புத்தர், யமன் போன்ற பல நிலைப்பாடுகள் சீனாவில் காணப்படுகின்றன. இவை பற்றி குறிப்புகள் பின்வருமாறு.
சுகவதி பௌத்தம்
இந்தியாவின் சிறு பிரிவாக அமைந்திருந்த இந்த சமயம், சீனாவில் பெருத்த அளவில் வளர்ந்துள்ளது. சுகவதி என்பது சுகமாக வதிதல் என்ற பண்பால் அமைந்ததாகும். சுகவதி பௌத்தம் மகிழ்வான ஓர் உலகை நிர்மானித்துள்ளது. அதில் வாழ்வது தூய பௌத்தர்களால் இயலும் என்கிறது. இப்பிரிவிற்கென தனித்த மந்திரங்கள் நூல்கள் ஆகியன உள்ளன.
மகாவைராசன பௌத்தம்
சீனாவில் பெருவழக்கில் இருந்த இந்த பௌத்தம் தற்போது சுகவதி பௌத்தத்தால் சற்றுப் பின்னடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மகாவைராசன புத்தரின் சிலை தற்போது உடைக்கப்பட்டது. மகாயான பௌத்தப் பிரிவின் ஐந்து முக்கியமான தியானிகளுள் ஒருவர் மகாவைராசன பௌத்தர். இவரே சூன்யத் தன்மை என்ற பௌத்த அடிக்கொள்கைக்குக் காரணமானவர்.
யமன்
தேரவாத பௌத்தத்தில் யமன் என்ற கால முடிவு பற்றிய சிந்தனை உண்டு. யான்வாங் யான்லுவோ என்ற பெயர்களால் இவர் அழைக்கப்பெறுகிறார். உயிர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளைத் தீர்ப்பாக வழங்குபவர் இவர் ஆவார். இவர் அரசர், தர்மவாதி என்றெல்லாம் போற்றப் பெறுகிறார். இவனை வணங்கும் நிலையும் சீனாவில் காணப்படுகிறது.
சீனர்கள் பரவியுள்ள சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பௌத்தம் ஆளுமை பெற்று விளங்குகின்றது.
திபெத்தில் பௌத்தம்
திபெத் நாட்டில் திபெத்திய பௌத்தம் நிலவிவருகிறது. இப்பௌத்தம் பூட்டான், இந்தியாவின் லடாக் பகுதி, நேபாளம், வடசீனா, மங்கோலியா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் பரவியுள்ளது. வஜ்ராயணம் திபெத் பௌத்தத்தின் ஒரு பகுதி எனவே கொள்ளப்படுகின்றது. மகாயான பௌத்த கருத்துகளுக்கு மேம்பட்ட நிலைப்பாட்டை உடையதாக இது விளங்குகின்றது.
திபெத்திலும் யமன் என்ற வடிவம் ஏற்கப்படுகிறது. இவரே வாழ்வை நிறுக்கும் நீதிபதியாகின்றார்.
ஹாங்காங் பௌத்தம்
சீனாவை அடியொற்றிய பௌத்த மதமே ஹாங்காங்கில் பின்பற்றப்படுகிறது. இவர்கள் ஹாங்காங் பௌத்தர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். புத்த விகாரைகளை வரலாற்றுச் சின்னங்களாகக் கொள்பவர்கள் அன்றி, அவற்றில் வழிபாடு நிகழ்த்த முன்வராதவர்கள். இருப்பினும் இவர்களிடத்தில் பௌத்த நிலைப்பாடு காணப்படுகிறது.
இலங்கையில் பௌத்தம்
இலங்கையில் நடைபெறும் முரண்பாடுகளுக்கு பௌத்த மத ஆளுமை, சிங்கள இன ஆளுமை ஆகியன காரணங்கள் என்றாலும் இந்திய பழமை மதமான புத்த மதம் இங்கு ஆட்சியாளர்கள் மதமாக உள்ளது. இந்நாட்டில் உள்ள எழுபது சதவீதத்தினர் பௌத்த சமய நிலைப்பாட்டை உடையவர்கள் என்பது பௌத்த ஆளுமையைக் காட்டுவதாக உள்ளது. அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் காலத்தில் பௌத்தம் அறிமுகமானது என்றும், அப்போது மரக்கிளை ஒன்று இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பெற்று நடப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு உதவியுடன் பௌத்தமடங்கள் இங்குப் பராமரிக்கப் பெற்று வருகின்றன.
இவ்வாறு உலக நாடுகளில் பௌத்தம் பரவியதன் வாயிலாக இந்தியத் தத்துவ ஞானம் உலக நாடுகளுக்குப் பரவியுள்ளமையை அறிய முடிகின்றது. இதன் வாயிலாக இந்திய தத்துவச் செழுமை பெற்ற நாடு என்பது விளங்குகின்றது.