New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்
Permalink  
 


28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள்

 

முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்

 

இதிகாசம் என்ற சொல்லை இதி, ஹ, ஆஸ என்று பகுக்கலாம். இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘‘இப்படி உண்மையில் இருந்தது’’ என்பதாகும். அதாவது ஒரு காலத்தில் உண்மையாக நடந்த கதை என்பதாக அமைவது இதிகாசங்கள் ஆகும். இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும் நீதி நெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறு என்று பொருள் கொள்ளுவர் அறிஞர்.

இந்தியாவின் இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் கொள்ளப்பெறுகின்றன. இவை இரண்டும் தேசியத்தன்மை வாய்ந்த இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியங்கள் இந்திய மொழிகளின் பலவற்றில் தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இராமாயணமும், மகாபாரதமும் இந்திய அளவில் போற்றத்தக்க கூறுகளை தாம் கொண்டும் பிற இலக்கிய மொழிகளுக்குக் கொடுத்தும் இருநிலைகளில் அமைகின்றன. 

தமிழில் சங்க இலக்கியங்கள் முதலாக இராமாயண மகாபாரத இலக்கியங்களின் தாக்கங்கள் இருந்துள்ளன. குறிப்பாக புறநானூறு, அகநானூறு ஆகியவற்றில் இராமாயண, மகாபாரத பாத்திரங்கள், காட்சிகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. அடுத்ததாக எழுந்த காப்பியங்களிலும் அவற்றின் தாக்கங்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இராமன் புகழ்பாடும் இலக்கியமாகவே விளங்குகின்றது. மேலும் அதில் பாண்டவர்க்காகத் தூது நடந்த நிலையும் பாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்த மணிமேகலையிலும் இராமயண மகாபாரத இலக்கியங்களின் தாக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை எடுத்துரைப்பதாகவும், இதனுடன் தொடர்புடைய புராணக்கூறுகளை இடம்பெறச் செய்யப்பெற்றிருப்பதையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

 



இராமாயணச் செய்திகள்

 

இராமாயண இதிகாசத்தில் இராமனின் மனைவியான சீதையை இராவணன் கொண்டுபோய் இலங்கையில் அசோகவனத்தில் அடைத்துவிடுகிறான். சீதையை இழந்த இராமன் அவளைத் தேடி தன் தம்பி இலக்குவணனுடன் பயணம் மேற்கொள்ளுகின்றான். இந்நிலையில் சுக்ரீவன் என்ற குரங்கு அரசனுடன் நட்பு பூண்டு அவ்வரசன் வழியாகச் சீதையைத் தேட முற்படுகிறான். அனுமன் என்ற சுக்ரீவனின் முதலமைச்சனின் வழியாக சீதை இலங்கையில் இருக்கிறாள் என்பதை அறிந்து இராமன் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்கிறான். இவ்வாறு பாலம் அமைக்க குரங்கு இனத் தலைவனான சுகரீவன் ஆணையிட, அதனை மயன் என்ற தேவதச்சன் கட்ட, குரங்குக் கூட்டங்கள் கற்களையும் மலைகளையும் கொண்டு வந்துச் சேர்க்கின்றன. அப்போது அக்குரங்குகள் இட்ட கற்கள், மலைகள் போன்றவை இருந்த இடம் தெரியாமல் கடலுள் அமிழ்ந்துபோகின்றன. இந்த நிகழ்ச்சியை உவமையாக மணிமேகலைக் காப்பியத்தில் படைக்கிறார் சீத்தலைச் சாத்தனார். 

காயசண்டிகை என்ற பெண் தன் கணவன் காந்தருவனுடன் மலைவளம் காண பொதிகை மலைக்கு வந்தபோது அங்கு ஒரு கருநாவல் கனியை காலால் மிதித்து விடுகிறாள். அந்நாவல் கனி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கும் தன்மையது. அதனை ஒருமுறை உண்டால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியே எடுக்காது. இவ்வரிய கனியைக் காலால் சிதைக்கிறாள் காயசண்டிகை.

விருச்சிக முனிவர் என்ற முனிவர் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இக்கனியை உண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் உண்ணாமல் தவம் இயற்றிவந்தார். அவரின் பன்னிரண்டு ஆண்டுகாலப் பசியை இக்கனி போக்க இருந்தபோது, பின் பன்னிரு ஆண்டு காலப் பசியை போக்கவும் இக்கனி இருந்தபோது அது காயசண்டிகையால் சிதைவு படுகிறது. இதனால் கோபம் கொண்ட விருச்சிக முனிவன் யானைப் பசி நோயால், இப்பெண் துன்புறட்டும் எனச் சாபம் தருகிறான். இதன் காரணமாக அவள் பசிப்பிணி அடைகிறாள். அவளின் கணவன் அவளின் பசியைப் போக்க எவ்வளவோ உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தபோதும், அவை போதுமானதாக அவளுக்கு இல்லை. 



அவள் உண்ணும் உணவு இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்று உவமை வழியாக இங்கு இராமயணக் கதை எடுத்தாளப்பெற்றுள்ளது.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி 
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் 
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு 
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் 
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் (உலக அறவி புக்க காதை, 10-20)

என்ற பாடலடிகளின் வழியாக இராமயண இதிகாசத்தின் தாக்கம் மணிமேகலையில் ஏற்பட்டுள்ளது. நெடியோன் என்ற சொல் இராமனைக் குறிக்கின்றது. நின்றசீர் நெடுமால், திருமால் என்றழைக்கப்படும் பெருமாளுக்கு மணிமேகலை தரும் பெயர் நெடியோன் என்பதாகும். நிலமிசை தோன்றி என்பது பெருமாள் அவதாரமாக மண்ணிற்கு வந்ததைக் குறிப்பதாகும். அணங்குடை அளக்கர் என்பது காவலை உடைய கடலைக் குறித்தது. இலங்காதேவி இலங்கைக் கடலைக் காப்பவள் என்ற செய்தியும் பதிவு செய்யப் பெற்றுள்ளது. மேலும் குரங்கு கொணர்ந்த என்பதின் வழியாக குரங்குக் கூட்டம் செய்த அருஞ்செயல் காட்டப்படுகிறது. 

இவ்வாறு உரிய இடத்தில் மணிமேகலை இராமாயணத்தின் காட்சிகளை எடுத்தாண்டு உள்ளது. இதன் வழியாக கடலில் மனித முயற்சியால் பாலம் கட்டுதல் என்பது எவ்வளவு அரிதானது என்பதும், மணிமேகலை கடல் பற்றி குறிப்புகளை அதிகம் பேசுவது என்பதாலும் இங்குக் கடல் பற்றி குறிப்பு எடுத்தாளப்பெற்றுள்ளது.

மேலும் மற்றொரு இடத்தில் இராமன் இராவணன் என்ற இருவரின் செயல்களும் சுட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் ஆங்கில ஆசிரியர்கள் செய்வினை, செயப்பாட்டுவினை ஆகியவற்றைப் பாடமாக நடத்தும்போது இராமன் இராவணனைக் கொன்றான் என்ற தொடரையும் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான் என்ற தொடரையும் கையாளுவர். இது தற்கால நிலைப்பாடு. இதே நிலை மணிமேகலை காலத்தில் சமயக்கணக்கர்கள் ஒரு பொருளை அறிவிக்கவும் இராமயணப் பாத்திரங்களை எடுத்துக்காட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.

அளவைகளுள் ஒன்றான மீட்சியளவை பற்றிச் சமயக்கணக்கர்கள் திறம் அறிய விரும்பியபோது பின்வரும் பகுதி எடுத்தாளப்படுகிறது. 

மீட்சி என்பது ”இராமன் வென்றான்” என 
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் 
உள்ள நெறி என்பது ”நாராசத் திரிவில் 
கொள்ளத் தகுவது காந்தம்” எனக் கூறல்” (சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

என்ற இப்பகுதியில் இராமன், இராவணன் இருவரும் இடம்பெற்றுள்ளனர். மீட்சியளவை என்பதில் இராமன் வென்றான் என்று சொன்னால் பெருமையற்ற இராவணன் தோற்றான் என்பது பெறப்படும். இதுவே மீட்சிஅளவை ஆகும். இவ்வாறு இராமாயண தாக்கம் மணிமேகலையில் காணப்படுவதாக உள்ளது.

 



மகாபாரதத் தாக்கம்

 

இதிகாசங்களில் மற்றொன்றான மகாபாரதம் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் காணக்கிடைக்கின்றன. விராட பருவம் மிக முக்கியமான பருவம் ஆக மகாபாரத்தில் விளங்குகின்றது. பாண்டவர் ஐவரும் அவர்களின் பத்தினியும் மாறுவேடத்தில் ஓராண்டு காலம் வாழ ஏற்ற இடம் விராட நாடு என முடிவெடுக்கப்படுகிறது. தருமன் நீதி ஆலோசனை சொல்பவனாகவும், பீமன் சமையல் கலை வல்லுநனனாகவும், நகுலன் குதிரை சேனாதிபதியாகவும் அமைய அருச்சுணன் பேடியாக அங்குச் செல்கிறான். இதற்குக் காரணம் அவன் ஊர்வசியிடத்தில் பெற்ற சாபமாகும்.

இதனை மணிமேகலை எடுத்துரைக்கின்றது. 

‘‘விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக் 
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்’’ (மலர்வனம் புக்க காதை, 47-48)

என்ற பகுதியில் விராடன் நாட்டில் சென்ற விசயன் ஆம் பேடியைக் காணவந்த மக்கள் கூட்டம்போல மணிமேகலையைக் கண்டனர் மக்கள் என்று குறிப்பிடுகின்றார் சீத்தலைசாத்தனார்.

இதில் விசயன் ஆம் பேடி என்ற தொடர் அருச்சுணனுக்கு பேடி வடிவம் வந்த நிலையை எடுத்துரைத்து அவன் விராட நாடு சென்றதைக் குறிக்கிறது. இராமயணத்தில் கடற்பாலம் கட்டுவது சிறப்பு போல மகாபாரத்தில் விராட பருவம் என்பதும் சிறப்பானது. அதனைச் சீத்தலைச் சாத்தனார் எடுத்தாண்டுள்ளார்.

 

பாகவதக் குறிப்புகள்

 

இதுபோன்று பாகவதக் கதையின் பகுதியும் இதிகாச நிலையில் எடுத்தாளப்பெற்றுள்ளது. பாகவதம் என்பதும் ஒரு இதிகாசமாகக் கொள்ளத்தக்கது. இவ்விதிகாசம் தமிழில் இன்னும் செய்யுள் வடிவமாக ஆக்கப்பெறாத ஒன்றாகும். ஆனால் இந்திய மரபில் இதுவும் ஒரு இதிகாசமாகும். இதனுள் இடம்பெறும் வாமன அவதாரம் பற்றிய செய்திகளையும் மணிமேகலை தருகின்றது. 

கிள்ளிவளவன் என்பானின் பட்டத்தரசியான சீர்த்தி என்பவள் மாவலிமரபில் வந்தவள் என்ற குறிப்பு இடம் பெறுகிறது. அப்போது மாவலி பற்றிய குறிப்பும் வாமண அவதாரம் பற்றிய குறிப்பும் இடம்பெறுகின்றன.

‘‘நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்துதன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரின் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர் கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு’’ (சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கியகாதை,51-54)

என்ற பகுதியில் நெடியோன் என்ற திருமாலின் வாமண அவதாரமாகிய குறள் உரு எடுத்துக்காட்டப் பெறுகிறது. அது நீர் பெய்ததால் பேருருவமான வகையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வகையில் பாகவத இதிகாசச் செய்திகள் மணிமேகலையில் காணப்படுகின்றன.

 

 

முருகன் பற்றிய குறிப்புகள்

 

முருகப்பெருமான் பற்றிய பல குறிப்புகள் மணிமேகலையில் கிடைக்கின்றன. இவை கந்தபுராணக் கதைச் சார்புடையனவாகக் கருதத்தக்கன. 

கார் அலர் கடம்பன் அல்லன்(பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து ( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

போன்ற குறிப்புகள் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகள் ஆகும். இக்குறிப்புகள் வழியாக கடம்ப மாலை அணிந்தவன் முருகன் என்பதும் கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன் என்பதும் தெரியவருகிறது. இங்கு கிரௌஞ்ச மலை வென்றதைக் குருகு பெயர்க்குன்றம் கொன்றவன் என்று சீத்தலைச்சாத்தனார் குறிக்கிறார். அதாவது மலைத் தூளாக்கமுடியும். உடைக்கமுடியும். ஆனால் கொன்றோன் என்பதன் வழியாக அரக்கன் மலையாக இருந்தான் என்ற குறிப்பு உள்ளமைக்கப் பெற்றுள்ளது தெரியவருகிறது.

 

காளி பற்றிய குறிப்பு

 

காளி தேவியைப் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன. 

காடுஅமர் செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள்போல
தீப்பசி மாக்கட்குச் செழுச்சோறு ஈந்து (உதய குமாரன் அம்பலம் புக்க காதை, 115-117)

என்ற குறிப்பு காளிதேவி பற்றிய குறிப்பு ஆகும். பேய்களின் பசியைப் போக்க வரும் காளிதேவியைப் போல மணிமேகலை காட்சி தந்தாள் என்று இந்தக்குறிப்பு அமைகின்றது.

 

தேவர்கள் பற்றிய குறிப்பு

 

இதிகாசப் பாத்திரங்களில் குறிக்கத்தக்கவர்களான தேவர்கள் பற்றிய பல குறிப்புகளும் மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திரவிழா என்பதே தேவர் தலைவனுக்கு எடுக்கப்படும் விழா என்பதால் அதனை முன்வைத்து மணிமேகலை தொடங்குகின்றது. இவ்வகையில் தேவர்கள் பற்றிய பல குறிப்புகள் மணிமேகலையில் அமைந்துள்ளன.

தேவரும் மக்களும் ஒத்து உடன்திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் (விழாவறை காதை 64-65)

என்ற குறிப்பு தேவரும் காவிரிப்பூம்பட்டிணம் வந்து இந்திரவிழா கண்ட செய்தியைக் குறிக்கின்றது. 

ஆபுத்திரனைக் காண இந்திரன் வந்ததாக ஒரு குறிப்பும் மணிமேகலையில் இடம்பெறுகின்றது. இந்திரனின் கட்டளைக்குக் கீழ் படியாமல் வாழ்ந்தவன் ஆபுத்திரன் என்பதும் தெரிய வருகிறது. இதுபோன்று இந்திரசாபம் ஒன்று இருப்பதாகவும் மணிமேகலா தெய்வம் குறிக்கிறது.

இவ்வகையில் இதிகாசங்கள் பற்றிய கருத்துகளும், இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய செய்திகளும் மணிமேகலையில் இடம்பெற்று அதற்கு இந்தியத் தன்மையை மிகுவிக்கின்றன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard