இந்தியச் சமயங்கள் அனைத்தையும் ஆதரித்து ஏற்று அவற்றினிடையே பொதுமையையும், அவற்றின் வழி புதுமையையும் தமக்கென ஆக்கிக்கொண்ட மொழி தமிழ். அதற்கான தரவுகளை விரித்து மேலும் மேலும் எழுத்தாக்கம் புரிந்தவர்கள் இலக்கியவாணர்கள். இலக்கணவல்லுநர்கள்கூடத் தத்தம் சமயப்பணிகளின் ஊடே மொழிப்பணியையும் முன்னெடுத்திருப்பது தமிழுக்குக் கிடைத்திருக்கிற சிறப்பு. இவற்றின் ஊடாக நமக்குத் தெரியவருகிற இன்னொரு உண்மை, வாழ்வின் இயங்குதளத்தில் மொழிகளோடு சமயங்கள் கைகோர்த்திருக்கின்றன என்பதை அவர்கள் கண்டு கொண்டதாகும்.
எனவே, தம் சமகால வாழ்வை, இலக்கியமாகப் புனைய வருகிற ஒருவர், தம் புனைவியல் தன்மைகளோடு யதார்த்த வாழ்வியலின் நிலைப்பாடுகளையும் சித்திரித்தாக வேண்டிய தேவையிருக்கிறது. என்னதான் சமயப் பரப்புரை ஒத்ததாகத் தன் காப்பியத்தை அமைத்துக் கொண்டபோதிலும், காப்பியத் தேவை கருதித் தன் காலச் சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டியாக வேண்டியிருக்கிறது சாத்தனாருக்கு. அதிலும், பௌத்த சமயத்தைச் சொல்லவேண்டிய கதை என்பதால் ஏனைய சமயத்தரவுகளையும் உள்ளடக்க வேண்டியாகியிருக்கிறது அவருக்கு, அந்த அடிப்படையில், பௌத்த சமயக் காப்பியமாகக் கருதப்பட்டாலும் மணிமேகலை, பௌத்த சமயத்தை மட்டும் பேசுவதாக இல்லை. தன் காலத்துச் சமயங்களை எடுத்துக்காட்டி, தத்துவப்பொருளோடு வாழ்வியல் நிலையில் அவை இயங்குந்திறங்காட்டி, மணிமேகலை பௌத்த நெறி சார்ந்தமைக்கான காரண காரியங்களை அவற்றினூடே அலசுகிறது; விளக்கம் சொல்லிப் பார்க்கிறது.
மணிமேகலைக்கு முன்பு
சங்ககாலத்தில், இயற்கையோடு இயைந்த தமிழர்தம் வாழ்வில் சமயம் பேரளவில் தனித்துவம் பெறவில்லை. சாதிய நிலைப்பாடும் அவ்வாறே! தத்தம் தொழில் அடிப்படையில், வாழ்வியல் போக்கில் கண்டு உணர்ந்து கடைப்பிடிக்கத் தகுந்த சீலங்களை மேலெடுத்துச் சென்ற ஒழுங்குகளை ஒன்றுதிரட்டிச் சமயங்களாகப் பின்னர் பகுத்து விரித்திருக்க வேண்டும். சைவ, வைணவ, பௌத்த, சமணம் முதலான சமயக்கூறுகள் கொண்டு விளங்கிய சங்ககாலத்திற்குப்பின்னர், கள்ளும் காமமும் பெருத்த நிலைப்பாட்டில் அறநெறிபுகட்டும் ஆக்கங்கள் தோன்றின. மனிதநேயத்தின் அடிப்படையில் தாமறிந்த சிந்தனைகளைக் குறுகிய பாவகைகளில் அவை விரித்தன.
பின்னர் சங்கமருவிய காலத்தில் எழுந்த இருபெருங்காப்பியங்கள் சிலம்பும் மணிமேகலையும். இரட்டைக் காப்பியங்களாக அறியப்பெறும் இவற்றுள் சிலம்பானது சமணசமயத்தை வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் அது சமயப் பொதுமையை, சிறுதெய்வ மற்றும் பெருந்தெய்வ வழிபாடுகளை, மரபுகளை, பெரிதும் சார்புநிலை காட்டாது பொதுமை நிலையிலேயே விரித்துச் செல்கிறது. காப்பிய நாயகியாகிய கண்ணகியின் சிலம்பினை முன்னிறுத்திக் கொண்டு விரியும் அக்கதையில் வரும் கௌந்தியடிகள் சமணத்தின் பெருவிளக்கமாக அமைகிறார். அக்காலத்துப் பிற சமயங்களையும் சமணத்தையும் விளக்கிப் பேசும் அக்காப்பியத்துள் சமயப் பொதுமை எளிது துலங்குகிறது. வைதிகத் தாக்கமும் மறுப்பும் நிலவுவதையும் அறிய இயலுகிறது.
சிலம்போடு கதைத்தொடர்புடைய மணிமேகலை காலச் சமுதாயத்தில் சமயம் நிறுவனமயமாக்கப்பட்டதாக அமைகிறது. சைவம், வைணவம், சமணம் இவற்றோடு சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளும் ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. அனைத்துச் சமய நெறிகளையும் கற்றுக் கொள்ள முனைகிற மணிமேகலையின் வாழ்க்கைப் பதிவில், சமயங்கள் தனித்த நிலை பெற்றமைகின்றன.
சமயமும் சமுதாயமும்
“சமுதாயத்திலேயே தோன்றி, சமுதாயத்திலேயே வளர்ச்சியுறுகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகக் சமயம் விளங்குமாற்றால் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் காணப்பெறுமாற்றை அறியலாம். சமுதாயமும் சமயமும் நெருங்கிய உட்தொடர்புடையன என்றும், ஒன்றின் இயக்கமின்றி மற்றொன்று செயல்பட முடியாது என்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். சமூகவியலாளர்கள் சமயம் என்ற நிறுவனத்தைக் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள் பலவும் சமயத்தின் செயற்பாடுகளை (Social functions) விளக்குகின்றன. டாக்கியாம் என்பவர் சமயம் ஒருவகையான சமூகவியல் என்றும், மனித வாழ்க்கையையும், மனித இனங்களுக்கிடையேயுள்ள உறவுகளையும் சுற்றுப்புற உலகை அடிப்படையாகக் கொண்டு அது விளங்குகின்றது என்றும் குறிப்பிடுகிறார். சமயமே சமூகம் என்பதும், சமூகமே சமயம் என்பதற்கும் அவர் கொண்டுள்ள துணிவு, மேலும் மசயம் சமூகத்தால் புனிதமானதெனக் கொள்ளப்பெறும் மனித வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு சமூக இயல் நிகழ்ச்சி (Social phinomenon) என்ற கருத்தும் நிலவுகின்றது. மக்களால் உருவாக்கப் பெறுவனவும், விளக்கப் பெறுவனவுமே சமயமுறைகளாக (Religious systems) திகழ்கின்றன. எனவே, சமயம் சமுதாய உற்பத்திகளுள் (Social products) ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. மக்களே அதனைக் கூட்டாகச்சேர்ந்து உருவாக்குகின்றனர். இவற்றால் சமுதாயத்துடன் சமயம் என்ற நிறுவனம் கொண்டுள்ள தொடர்புகள் புலனாகின்றன.” (முனைவர் தா.ஈசுவரப்பிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, பக்.12-13) இவ்வாறு சமயமும் சமுதாயமும் பின்னிப் பிணைந்து இயங்கும் தமிழ்ச்சூழலில் மணிமேகலைக் காலச் சமுதாயத்தில் நிலவும் சமயங்களின் போக்கை ஒரு சமயக் காப்பியமாகக் கருதப்பெறும் மணிமேகலை நுட்பமாகப் பல வகைகளில் சித்திரிக்கின்றது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். முன்னதாக மணிமேகலைக் காலச் சமயங்கள் குறித்துக் காணலாம்.
மணிமேகலை காலச் சமுதாயம்
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்பெறும் மணிமேகலை தன் காலச் சூழலைக் காப்பியப் போக்கில் சித்திரித்து நிற்கிறது. தத்தம் தொழில் அடிப்படையில் வளர்ந்த மனித சமுதாயத்தில் சாதிய உறுதிப்பாடுகள் நிலைபெற்று விடுகின்றன. வருணாசிரமக் கருத்தாக்கமும் சாதிய நிலைப்பாடும் மணிமேகலைக் காப்பியத்தில் அழுத்தமாகவே இடம் பெற்றுள்ளன. தொழில் அடிப்படையில் தோன்றிய குடிகள், குலங்களாக விரிந்து, சாதிகளாக நிலைபெற்று விடுகின்றன. கொள்வினை கொடுப்பினை என்கிற மணவினைகளில் சாதிய முக்கியத்துவம் பேணப்பட்ட போது அது இன்னும் உறுதி பெற்றுவிடுகிறது. காமத்துய்ப்புக்கு இடமளிக்கும் மணவினைகள் சாதிய எல்லைகள் கடந்து போகிறபோது பிறக்கும் குழந்தைகள் இழிவானதாகக் கருதப்பட்டனர். காமத் துய்ப்பிற்கென்றே பரத்தையர் குலம் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது. அந்தந்தக் குலத்தில், சாதியில் பிறந்தவர்கள் அந்தந்த ஒழுகலாறுகளுடனேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவற்றைப் பேணிக்காக்கும் கடமை மன்னருக்கு இருந்தது.
வருணக்காப்பிலள் பொருள்விளையாட்டி (மணி.5-87)
என்று மணிமேகலை குறித்த கருத்தாக்கத்தை உதயகுமாரன் வைக்கிறான்.
ஆக, வருணக்காப்பு மன்னனால், மக்களால், தெய்வத்தின் பெயரில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் உருவாகிய சாதிய ஒழுக்கங்களை ஏற்று வாழ்தல் ஒன்றே நியதி என்கிற நிலை உறுதிப்பட்டுவிடுகிறது. பிறப்புத் தொடங்கி, இறப்பு வரை இத்தகு சாதிய அழுத்தங்களில் இருந்து மனிதத்திற்கு விடுபாடு இல்லை.
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் (மணி. 6-59-58)
என்ற அடிகளில் நால்வகை வருணத்தார்க்கும் தனித்தனியான சுடுகாடுகள், இறுதிச்சடங்குகள் செய்யும் முறை அமைக்கப்பட்டிருப்பது பதிவாகின்றன. பிறப்பில் வாய்த்த சாதியத்தின் வழி நின்று தத்தம் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதே வாழ்வியல் கடப்பாடு. அதனை மீறுவோர் அரசனால் தண்டிக்கப்படுவர். சாதிய நிலைப்பாட்டைக் காப்பாற்ற, தத்தம் சாதியினரிடையில் மட்டுமே மணவினை அமைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதனை மீறி நடந்தோர்க்குத் தத்தம் சாதியத்தில் இடம் இல்லை. அது பிழைமணம் என்றே சாத்தனாரால் குறிக்கப் பெறுகிறது.
இதனை எதிர்த்துக் குரல் கொடுப்பவனாக, ஆபுத்திரன் வருகிறான். அந்தணப்பெண் சாலி, முறை தீயொழுக்கத்தால் வழியில் பெற்ற சூழலால் பிறந்த பிள்ளையை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கிவிடுகிறாள். பசு ஒன்று பால் சொரிந்து பேணிய அக்குழவியை, வழிப்போக்கனாகக் கண்ட பூதி என்னும் அந்தணன் ‘தன் மகன்’ என்று கொண்டுபோய் வளர்க்கிறான். கல்வியும் ஞானமும் எய்தி அந்தணக் குழந்தையாகவே அவன் வளர்ந்த போதிலும் அவனை அச்சமூகம் ஏற்கவில்லை. வேள்விச்சாலையில் துயருறும் பசுவைமீட்டுப் போகும் அவனைப் பிற பார்ப்பணர்கள் நீசமகன் என்றும், புலைச்சிறுவன் என்றும் ஏசுகிறார்கள். ஆவின் துயருக்காகப் பரிந்து காக்கும் அவனை ஆவின் புத்திரன் என்றே ஏசுகிறார்கள். அதனைச் செவிமடுத்த ஆபுத்திரன்,
ஆன்மகன் அசலன் மான் மகள் சிருங்கி புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேசம்பளன் ஈங்கு இவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நல்நூல் அகத்து?” (மணி-13-62-69)
என்று ரிஷிகணங்களுள் சிறப்புப் பெற்று விளங்கும் அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசம்பளன் உள்ளிட்டோரின் பிறப்புக் குறித்த கதைகளை முன்னிறுத்தி வினாத் தொடுக்கிறான். உடனே, எதிர்நின்ற பிராமணர்களுள் ஒருவன் இவனது பிறப்புச் செய்தியை விரித்து இவன் ஆபுத்திரன் என்றே உறுதிப்படுத்துகிறான். ஆயினும் அவற்றைக் கேட்டுச் சிரித்துவிட்டுத் தம்பணி தொடர்பவனாக ஆபுத்திரன் கதைப்போக்கில் வளர்கிறான். இந்த இடத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்று விடுகின்றது. பிறப்பில் பிறழ்ந்த சாதியினர் பெற்ற குழந்தைகளைப்போலவே, மாற்றுத் திறனாளிகளாக இன்றைக்குச் சுட்டப்பெறுகிற ஊனமுற்றோரும் ஒதுக்கப்பெற்றிருக்கின்றனர். காணார், கேளார், கால்முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணிநடுக்குற்றோர் பலரும் புகலிடமாகத் தங்கியிருந்த இடம் சிந்தாதேவி கோவில் முன்பிருந்த அம்பலம். அங்கிருந்து அம்மக்கட்கு உணவளித்து மீந்ததைத் தான் உண்டு வாழ்ந்தவனாக ஆபுத்திரன் விளங்குகிறான்.