New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் - முனைவர் கோ. குணசேகர்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் - முனைவர் கோ. குணசேகர்
Permalink  
 


21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும்

முனைவர் கோ. குணசேகர்

சமய நூல்கள் அவ்வத்துறையில் பயின்றாலும் அறிந்து கொள்ள முடியாத அளவைகள், துணிமுறைக்கு அணுகும் உபாயம் இவற்றைத் தமிழர்களுக்கு அறிவிக்கின்ற நூல் மணிமேகலையாகும். இது பௌத்த மதக் காப்பியமாய்ப் பௌத்த தத்துவங்களையே உணர்த்த எழுந்ததாயினும் காக்கைக்குத் தன் குஞ்சே பொன்குஞ்சு என்றாற் போலின்றிப் பல்வேறு சமயக் கொள்கையறிவுகளும் தலையிட்டு ஆராய்ச்சி நிறைகல்லால் நிறுத்த முடிவு காணும் முறையை முதலில் தந்தது எனலாம் என அந்நூலின் தனிச்சிறப்பினை எடுத்துரைப்பார் ச. தண்டபாணி தேசிகர். மணிமேகலை பழம் பிறப்புணர்வது, பசிப்பிணி போக்குவது, பௌத்த பெருமையை நிலைநாட்டுவது, இறுதியில் துறவு மேற்கொள்வது என்ற முறையில் அமைந்துள்ளது இக்காப்பியத்தின் தனிச்சிறப்பாகும். அவ்வகையாயினும் இக்காப்பியத்தில் தெய்வங்கள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடவுள் தெய்வம் வரையறை

கடவுள் என்பவன் யாரெனில் அண்டசராசரத்தைப் படைத்தவன் (ஐம்பூதங்கள், உலக உயிர்கள்); பிறப்பு இறப்பு இல்லாதவன்; தாய் தந்தை இல்லாதவன் எனப் பல்வேறு நிலைத் தன்மையுடையவன் ஆவான். 

தெய்வம் என்று சொல்லக்கூடியது மக்களுள் யார் ஒருவர் சீரும் சிறப்புமாய் வாழ்கிறார்களோ, வாழும் வாழ்க்கையில் போற்றப்படுகிறார்களோ அவர்களே இறந்த நிலையில் தெய்வங்கள் எனப் பெயர் பெறுகின்றனர். வாழும் காலத்தில் இவர்கள் பெரியோர்கள் எனவும் சான்றோர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதனைத் தான் திருவள்ளுவர், 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

எனக் குறிப்பிட்டுச் செல்கிறார். பௌத்த சமயத்தின் நோக்கமே கடவுள் மறுப்புக் கொள்கையை வலியுறுத்துவதாகும். அவ்வகையில் பௌத்தச் சமயத்தை வலியுறுத்தும் மணிமேகலையில் தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் காணப்படுகின்றன. மணிமேகலையில் குறிப்பிடும் தெய்வங்களாக புத்த பெருமான், மணிமேகலா தெய்வம், அறவணர், ஆபுத்திரன், ஆதிரை, சதுக்கபு+தம், மற்றும் பிற தெய்வங்களும் கடவுளர்களான சிவபெருமான், திருமால், முருகன், கொற்றவை ஆகியோர்களின் சிறப்புகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.



புத்த பெருமான்

புத்த சமயத்தில் கடவுள் கோட்பாடு இல்லை. அதனாலே சீத்தலைச் சாத்தனார் தெய்வத்தை மட்டுமே கூறினா. புத்த பெருமான், தனக்கென வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்ததொரு பெருந்தகையாளராவார். இவர் வடநாட்டில் ஒரு மன்னனுக்கு அரும்பெறல் மகவாகத் தோன்றியவர். இவர் பிறந்த நாள் தொடங்கிக் கட்டிளங் காளைப் பருவம் எய்தும் அளவும் பிறவுயிர்கள் படும் துயர் கண்டு ஆற்றாமல் பெரிதும் வருந்தும் இயல்புடையவராக இருந்தார். மேலும் தமக்குரிய அரசாட்;சி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றில் சிறிதும் பற்றில்லாதவருமாக இருந்தார். இவருடைய இத்தகைய இயல்பைக் கண்டு தந்தையாகிய கத்தோதன மன்னன் பெரிதும் கவலையுற்றான். இவர் துறவியாய் விடுவரோ என்று அஞ்சினான். இவர் துறவியாகாமைப் பொருட்டுச் சிறந்த அழகும் குணமும் செறிந்த அசோதரை என்னும் கோமகளைக் கடிமணமும் செய்து வைத்தான். அணித்தாகவே புத்தருக்கும் அசோதரைக்கும் ஆண்மகவும் ஒன்று பிறந்தது. மகன் அன்பு தம்மைப் பற்றி ஈர்த்தலை உணர்ந்த புத்தருடைய உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. அதன் தூண்டுதலாலே உலகப்பற்றினைத் துவர நீத்துத் துறவுமேற் கோடற்குத் துணிந்தனர். 

ஒரு நாளிரவின் முற்பகுதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவருடைய கனவில், சுத்த வாசுதேவர் என்னும் தெய்வம் துறவுக் கோலத்தோடு தோன்றி ஏதோ அறஞ்சில் கூறி மறைந்தது. விழிப்புற்ற புத்தர் அப்பொழுதே துறக்கும் துணிவு பு+ண்டு எழுந்து துயில் கொண்டிருக்கும் தம் அன்பு மனைவியாகிய அசோதரை அறியாவண்ணம் படுக்கையறையின் வாயில்வரையில் சென்றார். சென்றவர் உள்ளத்தே மகன் அன்பு முனைத்து எழுந்து அவரைத் தடை செய்து மடக்கியது. மயங்கியவர் மீண்டு சென்று மணிவிளக்கின் ஒளியிலே துயில்கின்ற மனைவியின் மருங்கே இளங்கதிர் எனத் துயில் கொண்டிருந்த மகன் இராகுலன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் சிறிதுபொழுது நின்று மயங்கினர். அப்பொழுது அவர் உள்ளுணர்வு தலையெடுத்து அவர் மயக்கத்தைத் தெளிவிப்ப இதுவோ காமத்தியற்கை இதுவே ஆயின் கெடுக அதன் திறம் என்று தெளிவும் துணிவும் பெற்றுத் தேரிலேறி அந்நள்ளிரவிலேயே அரண்மனையையும் நாட்டையும் கடந்து மெய்ப்பொருளை நாடிக் கானகத்தினூடே தொலைதூரம் சென்றார். அவர் போக்கினை உலகத்தவர் அறியா வண்ணம் தெய்வங்கள் உதவி செய்தன. தேர்ப்பாகனைத் தேற்றித் தம்மிருப்பிடத்தைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டா என்று அறிவித்துத் தாம் தமியராகவே மக்கள் வழக்கற்ற அக்காட்டினூடு பின்னும் நெடுந்தொலைவு சென்றார். பின் பிற உயிர்களுக்கு இன்பம் விளைவித்து, அந்தணர்களோடு வாதிட்டு, தெய்வமானார். புத்தருடைய தூய உள்ளத்தில் பிறந்த அறவுரைகளைக் கேட்டு மாந்தர் அவர் காலத்தில் திரள் திரளாக அவர் காட்டிய நன்னெறியிலே ஒழுகலாயினர். புத்தர் பின்பற்றியதைப் பௌத்த சமயமாக உருவாக்கியவர் கௌதம புத்தர் ஆவார். 

உள்ளத்தால் பொய்ய தொழுஇன் உலகத்தார் 
உள்ளத்துள் எல்லாம் உளன் 

என்னும் திருவள்ளுவர் மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் புத்தபெருமான் என்பது தேற்றம். இளங்கோவடிகள் புத்தபெருமானை,

பணையைத் தோங்கிய பாசிலைப் போதி 
தணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி 

என்று மொழிகிறார். புத்தபெருமானையும் அவர் திருமொழியையும் ஒரு சேரப் பாராட்டுகின்ற அவருடைய இத்திருவாக்கே நன்கு புலப்படுத்தும்.



புத்தரைப் போற்றல்

பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரையே அச்சமயம் சார்ந்தவர்கள் இறைவனாகக் கொண்டு பக்தி செய்து வருகின்றனர். அவர் வழி நின்று அவர் காட்டிய தத்துவங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். மணிமேகலையும் அவ்வழியே நடைபோடுகிறது. புத்த பெருமானையும் அவரது கொள்கைகளையும் போற்றதலையும் நோக்கமாக விளங்குகின்றது. புத்தரைப் புத்த ஞாயிறு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. 

மற இருள் இரி மன்னுயிர் ஏமுற
அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றுங் காறும் (மணிமேகலை கந்திற்பாவை வருவது உரைத்த காதை - 25922594)

மறந்து மழைமறா மகத நன்னாட்டுக்கு
துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி

எனப் புத்தரைப் புத்த ஞாயிறு என்று குறிப்பிட்ட உலக ஒளி என வருணிக்கிறது.

பௌத்த சமயம்

இறைவனாகிய புத்தனை வழிபடுவது மட்டுமன்றி அவரது கொள்கைகளைக் கடைப்பிடிப்பதே இச்சமய பக்தி நெறியாகக் கொள்ளப்படுகிறது. கொலை, களவு, காமம், பொய்கூறல், புறங்கூறல், கடுஞ்சொல் கூறல், பயனில் கூறல், பிறர்பொருளைக் கவர நினைத்தல், வெகுளல், குற்றம்பட உணர்தல் போன்றவற்றைச் செய்யாது ஒழுகுதல், மெய்யுணர்வால் இவற்றைக் களைந்து வாழும் வாழ்வே மனித வாழ்விற்கு உயர்வு தரும் என்ற அறநெறியே பக்தியாகக் கொள்ளப்படுகிறது. இம்மை, மறுமை இன்பங்களை அடிப்படையாகக் கொண்டே மணிமேகலை பக்திநெறியைக் காட்டுகிறது. பௌத்தம் துறவறத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. துறவறம் கொண்டால் முக்தி நிலை பெறலாம் என இயம்புகிறது. துறத்தல் என்பது ஆசையைத் துறத்தல் என்பதாகும்.

 



பௌத்த தருமம்

 

இது துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என நான்கு வாய்மைகளையும் அட்டாங்க மார்க்கத்தையும் கூறுகிறது. 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது (மணி, 2: 136139)

என்றுரைக்கின்றது. 

மணிமேகலையின் 30வது காதையில் பௌத்த தத்துவங்கள் கூறப்படுகின்றன. 

பேதைமை செய்கை, உணர்வே, அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றும் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல் ஈராறும் 
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர் (மணி.30: 45404545)

எனப் பன்னிரு சார்பு கூறப்படுகின்றது. 

பௌத்தம் மிகச் சிறப்பாகக் கூறுவது பஞ்ச சீலக்கொள்கையான ஐந்து ஒழுக்கங்களாகும். கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமமின்மை, கள்ளுண்ணாமை என இவ்வைந்து சீலங்களும் இல்லறத்தார்க்குச் சிறப்பாக உரியன என்றுரைக்கின்றது. ஆண், பெண், போன்ற பிரிவினை இல்லாதன்மையே இல்லறம் என உணர்த்துகிறது. 

புத்த தன்ம சங்கமென்னும் 
முத்திற மணியை மும்மையின் வணங்கிச் 
சரணாகதியாய்ச் சரணம் சென்றடைந்த பின் (30:44984500)

எனத் திரிசரணத்தை (புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி) மும்முறை ஓதிச் சங்கத்தில் சேர்தலை வலியுறுத்துகின்றது. புத்தரையும் அவருடைய தன்மத்தையும் அவருடைய சங்கத்தையும் மும்மணிகள் எனப் பௌத்தவர்கள் வழங்குவர். இதனைப் பௌத்தர்கள் சரணடைய வேண்டும் என்கிறது. புத்த பெருமனைப் பிறவிப்பிணி மருத்துவன் என மணிமேகலை குறிப்பிடுகிறது. 

பிறவிப்பிணி மருத்துவன் இருத்தறமுரைக்கும் 
திருந்தொளி ஆசனஞ் சென்று கைதொழுதி (பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை - 10561057)

எனக் கூறுவதுடன் அருள், அன்பு, ஆருயிர் ஓம்புபவன் என மலர்வனம் புக்க காதையிலும் தனக்கென வாழாமல் பிறர்க்குரியாளன் எனவும் புத்தர் பெருமைகளை மணிமேகலை உரைக்கிறது.

 

புத்தரை மணிமேகலை போற்றிய திறம்

 

 

புத்தரை மணிமேகலை எங்ஙனம் போற்றினாள் என்பதைப் பாத்திரம் பெற்ற காதை வழி அறியலாம். 

மாரனை வெல்லும் வீர நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி
பிறர்க்கருள முயலும் பெரியோய் நின்னடி 
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
என்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி
கண்பிறர்களிக்கும் கண்ணோய் நின்னடி
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி 
வணங்குதல் அல்லது வாழ்த்த என்னாவிற் கடங்காது (பாத்திரம் பெற்ற காதை 12201231)

என்று தனக்குப் புத்தர் பிறவிப்பிணிக்கு ஞான மருந்து கொடுத்துப் பிறவிப் பணியைத் தீர்த்தார் என்று மணிமேகலை போற்றி உரைக்கிறது.

 

மணிமேகலா தெய்வம்

 

மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது. மணிமேகலையைத் துறவியாக்கி அறநாயகியாக மாற்றும் செயலில் ஈடுபடுவது இந்தத் தெய்வமாகும். இத்தெய்வம் கோவலனின் குலதெய்வம் போலப் பேசப்படுகிறது. இத்தெய்வத்தைப் பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 

இடைஇருள் யாமத்தெறிதிரைப் பெருங்கடல் 
உடைகலப்பட்ட வெங்கோன் முன்னாள் 
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் 
நண்ணு வழியின்றி நாள்சில நீந்த 
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் 
வந்தேன் அஞ்சல் மனமேகலையான் 
உன்பெருந் தானத் துறுதி மொழியாது 
துன்ப நீங்கித் துயர்க் கடலொழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந்தீர்த்த 
எங்குல தெய்வம் 

எனக் கோவலன் தன் குலதெய்வமான மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறுகிறான். இத்தெய்வம் ஒரு கடல் தெய்வம். இந்தியாவில் வேறெங்கும் காணப்படாத தெய்வம். தமிழர்களின் தொல் தெய்வம். அரசு உருவாக்கம் முழுமையாகி விட்ட நிலையில் அரசர்க்கு நிகராக வாழ்ந்த வாணிகர்களின் தெய்வம். மேலும் தொல் தமிழர் வாழ்வில் கடல் தெய்வமும் இடம் பெற்றிருத்தது என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. 

இந்திரன் ஏவலில் இங்கு வாழ்வேன் என்ற குறிப்பு மூலம் பௌத்தர்கள் இந்திரனை மணிமேகலா தெய்வத்துடன் இணைத்துப் புதிய கதையை உருவாக்கினர் என்பதை அறியமுடிகிறது. வைதீக நெறியின் வேள்விச் சடங்கு, வருண வேறுபாடு ஆகியவற்றிற்கு எதிராகத் தோன்றியதுவே பௌத்த மதம். ஆயினும், தொல் வேத மரபில் உள்ள தெய்வங்களைப் பௌத்தர் தம் நெறியுடன் இணைத்துக் கொண்டனர். இது பண்பாட்டு இணைவு. திரிபீடகத்தின் மூலம் இந்திரன் புத்தரை நாடியதாக ஒரு கதைக் குறிப்பினை அறியமுடிகிறது. இந்திரன் புத்தரை அடைய முதலில் கந்தர்வனை அனுப்பியதாகவும் கந்தர்வன் காதல் பாடலுடன் புத்தரிடம் வந்து பேசியதாகவும் பின் இந்திரனைப் புத்தர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறது அக்கதை. 

கடல்கெழு செல்வியாக இருந்த மணிமேகலா தெய்வம் குலதெய்வமாக இருந்ததில் வியப்பில்லை. ஏனெனில், கடல்கடந்தும் வணிகம் செய்த குலத்தில் வந்தவன் கோவலன். இவ்வணிகனின் காவல் தெய்வமே மணிமேகலா தெய்வம் எனலாம்.

 

 

அறவணவடிகள்

 

இவரின் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகின்றது. கோவலன் கொலையுண்டது கேட்டு வருந்திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும், சீலம் ஐந்தும் உணர்த்தித் தவக்கோலம் பூணச் செய்தவர். மணிமேகலை, உதயகுமரன் வெட்டுண்டதன் காரணமாகச் சிறையுண்டிருந்தபோது அவளைச் சிறையினின்றும் மீட்டற்காக மாதவி சுதமதி என்னும் இருவருடன் இராசமாதேவிபால் வந்து அவட்கு அறங்கூறி, பின் மணிமேகலைக்குப் பேதைமை முதற் பன்னிரு நிதானங்களையும் விளக்கி, அவற்றின் பகுதிகளைப் பின்பு சொல்வதாகக் கூறிவிட்டுச் செல்கின்றார்.

மணிமேகலை காஞ்சிநகரில் இருந்து அறஞ்செய்வதாகக் கேள்வியுற்று மாதவி சுதமதியுடன் அவள்பால் சென்று அவள் இட்ட உணவையுண்ட அவள் தனக்கு அறவுரை கூறவேண்டுமென்று வேண்ட, அவ்வாறே அவட்கு உரைக்கின்றார்.

இவர் முற்றும் பற்றற்ற முனிவராயினும் மணிமேகலை சிறையிலிருந்த புன்கண் நிலைகண்டு இரங்கி இராசமாதேவிபால் விடுவிக்க எண்ணி வந்ததால் அவரின் அருட்பண்பு காணக்கிடக்கின்றது.

 

ஆபுத்திரன்

 

மணிமேகலையில் ஒரு பாத்திரமாகப் படைக்கப் பட்டிருக்கின்ற ஆபுத்திரன் புத்தர் அறத்தை முழுதும் மேற்கொண்டு ஒழுகுபவனாயினும் தான் மேற்கொண்டொழுகும் அறத்தின்பால் பெரும்பற்றுடையவனாகின்றான். இவற்றால் அறம் செய்யவேண்டும் என்று அவாவுவது தானும் பிறப்பீனும் வித்தாகி விடும். ஆதலின் அறமே செய்ம்மின் செய்யுங்கால் அதன் மீதும் பற்றின் செய்திடுக! என்பது புத்தர் கருத்தென்று தோன்றுகிறது. இக்கருத்து ஆசைஅறுமின் ஈசனோடு ஆயினும் ஆசையறுமின் என வருகின்ற சைவ சித்தாந்தத்தோடு ஒத்ததாகவே திகழ்கின்றது. ஆபுத்திரன் அறவோனாய் இருந்தும் மாறிப் பிறக்கும் ஆற்றலால் இக்கருத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான். பின்னர் தெய்வமாகின்றான்.

 

 

ஆதிரை

 

தன் கணவன் கடலுள் மூழ்கி இறந்தான் என்று பிறர்கூறிய பொய்ச் செய்தியை வாய்மையாகக் கொண்டு தீ மூட்டிய ஈம விறகின் மேலேறுகின்றாள் ஆதிரை. இந்த ஆதிரை நல்லாளின் கற்பு மாண்பினால் அவ்வீமத் தீ நாற்புறமும் கொழுந்து விட்டெரியும் பொழுதும் அவளைச் சுடாமல் அவளுக்கென, 

படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் 
உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது 

அவள் தீயின் முழுகுதற் பொருட்டு, 

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலிற் 
சூடிய மாலையும் தொன்னிறம் வழாது 
விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த
திருவின் செய்யோள் போன்று 

இனிது அத்தீயினால் சிறிதும் இன்னல் உறாதிருந்தாள். இந்நிகழ்ச்சி பற்றி அவள் செருக்குறவும் தகும். ஆயினும் கணவன் மாண்டபின் மாளாதிருத்தல் பற்றியே வருந்தி,

தீயுங் கொல்லா தீவினை யாட்டியேன் 
யாது செய்வேன் என்று அவள் ஏங்கலும் 

அப்பொழுது அசரீரி அந்தரம் தோன்றி ஆதிரை கேள்! உன் அரும்பெறற் கணவன் ஆருயிர் உய்த்து இருக்கின்றான். கவலற்க! என்று தேற்றத்தேறி அழுதுயர் நீங்கி உள்ளங் குளிர்ந்து பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று மனையகம் புகுகின்றாள். பின்னர் தெய்வமாகிறாள்.

 

மணிமேகலையில் பிற சமய பக்தி (அல்லது) கடவுளர்களும்

 

புகார் நகரத்தில் வாழும் மக்கள் பல கோயில்களில் வழிபாடு நடத்தினர். அவற்றுள் நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானையும் மக்கள் வழிபட்டதாகத் தெரிகிறது. 

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப் 
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக 
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
யாறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் 

கடல்வண்ணனான திருமால் வணக்கம்

பொன்னணி நேமி வலங்கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் 

முருகன் வணக்கம்

மணிமேகலை புகார் நகர வீதியில் கண்ட காட்சியாக 
ஆலமர்செல்வன் மகன் விழாக்கால் கோள்
காண்மினோவென்று கண்டு நிற்கு நரும் 
சக்கரவாளக் கோட்டத்தில் காடமர் செல்வியாகிய கொற்றவைக்குக் கோயில் அமைந்திருந்ததை, 

காடவர் செல்விகழி பெருங்கோட்டமும் 

என்பதால் புலனாகும். விந்தியமலையில் கொற்றவையாகிய துர்க்கைக்குக் கோயில் உண்டு என்பதும் விந்தாகடிகை அம்மலையைக் காத்து வந்தாள் எனச் சாத்தனார் குறிப்பிடுகின்றார். 

மணிமேகலையில் சிந்தாதேவி, காமன், பிரம்மன், திருமகள் தெய்வங்களையும் கடவுள்களையும் சாத்தனார் குறிப்பிடுகின்றார். மணிமேகலை சமயங்கள் பலவற்றையும் அவ்வச்சமய தலைவிபாற் கேட்டனள் எனச் சாத்தனார் குறிப்பிடுகின்றார். 

ஒட்டிய சமயத்தறு பொருள் வாதிகள் 
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் 
பற்றாமக்கள் தம்முடனா யினும் 
செற்றமுங்கலாமும் செய்யாத கலுமின் 

என்னும் குறிப்புகளால் பிற சமய பக்தி செய்திகளும் பேசப்பட்டமை அறிய முடிகிறது. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பதற்கு இணங்க ஆபுத்திரனை அந்தணர்கள் விரட்ட மதுரை சென்று சிந்தாதேவியின் அம்பலத்தில் அடைக்கலமாகின்றான். பசிக்காகப் பிச்சையெடுத்துத் தானும் உண்டு வழங்க இயலாத நிலையில் சிந்தாதேவியினை வேண்ட அவள் அருளால் அமுதசுரபியை பெற்றான். கடவுளை நம்பனார் கைவிடப்படார் என்பது இதன் வழி வெளிப்படுகின்றது.

 

முடிவுரை


எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும். அந்த அன்பே பிற உயிர்களிடத்தில் அறத்தைச் செய்ய முற்படும். எனவே எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை, அன்பு பூண்டொழுக வேண்டும் என்ற பேரறத்தைச் சமுதாயத்தில் பரப்பியது. ஒரு சமுதாயத்தில் உயர்வு தாழ்விற்கும், மேன்மைக்கும் சான்றாண்மைக்கும் நல்லொழுக்கமுடைய சான்றோர்கள் காரணமாதலால் சமுதாய அறநெறிகளை அரசர்களுக்குக் கொடுத்தும் அச்சமுதாயத்தை நல்வழியில் இழுத்துச் செல்லும் பெரும்பணியைச் சான்றோர்கள் செய்தனர். அவ்வகையில் இத்தகு சிறப்புச் செயல்கள் செய்தவர் தெய்வம் என்று அழைக்கப்பட்டனர். தெய்வம் பின் தொடர்ந்து நடப்பவர்கள் தெய்வமாகப்பட்டனர் என்பதை மணிமேகலை காப்பியம் எடுத்துரைப்பதை அறியமுடிகிறது என்பது தெள்ளத்தெளிவு.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard