செம்மொழி இலக்கியப் பரப்பில் மணிமேலையும் ஒன்று. சீத்தலைச்சாத்தனாரால் செய்யப்பட்ட இந்நூல் சொல்நயமும் பொருள் நயமும் மிக்கது. தொல்காப்பியர் கூறும் இலக்கிய வகைமைகளுள் இயைபு என்றும் வனப்பாகக் கருதப்படுவது காப்பயிமாகும். இதன் அருமை பெருமைகளை நன்குணர்ந்த நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் தம் எழுத்துக்களில் மணிமேகலையைப் பல இடங்களில் எடுத்துக் காட்டாக எடுத்துக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக மணிமேகலை பரந்த வாசிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது என்பதை உணர முடிகின்றது.
நல்லாற்றூர் சிவப்பிரகாசர் திருவெங்கைக்கோவையில் மடலேறுதல் பற்றிய கருத்தில் தோழி சிலேடையாக ‘கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வது எங்ஙனம்?” எனும் போது தலைவியின் வடிவத்தை ஓவியப்படுத்தினாலும் தலைவியின் உரையை எங்ஙனம் எழுதிக்காட்ட முடியும் என்று கூறுவதால் மணிமேகலை நூலின் உரையை அறிதல் அரிதினும் அரிது எனக் கூறுகிறார்.
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் இயைபு என்ற இலக்கிய வகைமைக்கு மணிமேகலை போல என்கிறார். ஆக காப்பிய வரிகையில் சிலம்புக்கு இணையாக மணிமேகலை கருதப்பட்டதால் இரட்டைக் காப்பியம் என்ற தகுதியை உரை செய்ய மணிமேகலை நூலின் பங்களிப்பு ஒரு கூறாம் என்பதால் பலரின் கவனத்திற்குரியதாக மணிமேகலை சிறப்படைந்தது எனலாம்.
இது பௌத்தக் கொள்கையைப் பறைசாற்றும் பைந்தமிழ் நூல் என்ற வகையிலும் இந்நூல் அனைவரது கவனத்திற்கும் உரியதாயிற்று. அங்ஙனம் பௌத்த சமயக் கொள்கையை நிறுவ பௌத்த கோட்பாடுகளை மட்டுமே வற்புறுத்தாமல் பிற சமயக் கொள்கைகளையும் ஆய்ந்தறிந்ததாகக் கூறுவதன் மூலம் பிறவற்றினும் பௌத்தம் உயர்வுடையதாகக் கூறிய பாங்குதான் மணிமேகலை நூலின் தனிச்சிறப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாகப் பிற சமயங்களைக் காயப்படுத்தாமல் விளங்கிய இந்நூலின் பாங்கு தனிச்சிறப்புக்கு உரியது எனலாம்.
பிரம்மம் என்பது முதன்மை என்ற பொருளில் நானே முதல்வன் எனக் கூறும் நிலையாகும். அதாவது தனக்குமேல் ஒரு முதன்மையும் இல்லாமல் தானே முதன்மை எனக் கருதுவது. இந்தவகையில் உலகைப் படைத்த முதன்மை காரணமாக எழுந்து விவாதிக்கப்பட்ட தத்துவ விசாரணையே பிரம்மவாதமாகும். இதுபற்றி;
பேருலகெல்லாம் பிரம வாதியோர் தேவன் இட்ட முட்டை என்றனன்(சமய. 96-97)
எனச் சாத்தனார் கூறும் இரண்டு வரிகளே காப்பியத்தில் உள்ள பிரம்மவாதத் தொடர்களாகும். சமயக் கோட்பாட்டின்படி பிரம்மனால் இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுகிறது என்பது புராண வழக்காகும். இதனால் இவ்வுலகமாகிய அண்டம், பிரமாண்டம் எனப் பிரமனைத் தொடர்பு படுத்தியே கூறுவது வழக்காயிற்று. இக்கருத்தின் விரிவை மனுதரும சாத்திரத்தின் முதல் அத்தியாத்தின் ஒன்பதாம் சுலோகத்தில் காணலாம்.
எது யாராலும் இயற்றப்பெறாமலே தானே முகிழ்த்து இயங்குமோ எதனைத் தர்க்க நியாயங்களையும் கொண்டு விசாரித்து அடைய முடியாதோ அத்தகைய விசாரணை பற்றிய வேதத்தின் சாரமே பிரம்மவாதம்.
சைவ சித்தாந்த்தில் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் யாவராலோ யாதொன்றாலோ படைக்கப்படாமல் தாமாகவே உள்ள பொருள்கள் எனக் கூறுவதைப் பிரம்மவாதத்தின் சாயல் எனலாம். இதனையே மனுதருமம் உலகம் படைப்பின் முதல் காரணமான பொருள் எதுவெனில் பொறி புலன்களின் எல்லைக்குக் கட்டுப்படாது. அதாவது, இந்திரிய அனுபவங்களுக்குக் கட்டுப்படாது எல்லாப் பொருள்களிலும் இயங்கும் வல்லமையுடையதாகய் இருந்து, தன்னில் தானே தோற்றமுடையதாய் உள்ளது எதுவோ அதுவே பிரம்மம்.
இந்த பிரம்மமானது பொன்னொளியான இயற்கைச் சுடர் போல் அண்டத்தில் தோன்றும் போது தான் வீற்றிருக்கும் இவ்வண்டம் இரு கூறாக வேண்டும் என எண்ணியவாறு விண்ணுலகு, மண்ணுலகு என இரண்டானது. இந்த விண், மண்களுக்கு இடையே காற்று, நெருப்பு, நீர் என்ற மூன்றும் படைக்கப்பட்டன.
இயற்கையாக அமைந்த இவற்றை (விண், மண், காற்று, நீர், நெருப்பு) அனுபவிக்க சீவராசிகள் படைக்கப்பட்டன. அச்சீவராசிகளுக்கான பொறிபுலன் உணர்வுகளும் படைக்கப்பட்டன. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற காலக் கணக்குகளும் உடன்பாடு எதிர்மறை என்ற வகையில் பிறப்பு இறப்புகளும் சீவராசிகள் உணருமாறு உருவாக்கப்பட்டன.
இங்ஙனமாகப் படைக்கப்பட்ட சீவராசிகள் யாவும் வகுக்கப்பட்ட எல்லாவற்றையும் பொதுவாகிய பிரம்ம சொரூபமான பரம்பொருளானது ஆண், பெண் இருவரைக் கொண்டே உருவாக்கியது. இந்த உருவாக்கம் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால்தான் இதன் உண்மைணை உணர்த்தும் குறியீடாக பேருலகெல்லாம் தேவன் இட்ட முட்டை எனச் சாத்தனார் பிரம்மவாதியின் கருத்தினைக் கூறினார்.
முட்டை வட்ட வடிவமானது. உலகமும் வட்டமானது. வடடத்தின் சுழற்சி மேலும் கீழுமாக எப்போதும் இயங்குவதுபோல உலகமும் உலகச் செயல்களும் ஏதோ ஒரு அச்சின் கீழ் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கக் கர்த்தாவையே பிரம்மவாதி தேவன் இட்ட முட்டை என்றான். ஆக இயற்கை தொடர்ந்த வண்ணம் இருப்பதால் ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக உள்ள உயிர்க் கூட்டங்கள் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரச் சாலையாக உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் பேருண்மையை உணர்த்தும் குறியீடே முட்டை.
இந்த முட்டையின் தோற்றம் தத்துவ விசாரணைக்கு உட்பட்டதோர் அரிய உண்மையை உணர்த்துகிறது. உலகில் கண்டறியப்பட்ட தோற்றம், வாழ்வு, மறைவு என்ற மூன்று உண்மைகளில் தோற்றம் பற்றியதற்கான கருத்தில் உணர்த்தப்பட்ட பிரம்மவாதத்தின் முழுமையையே சாத்தனார் தேவன் இட்ட முட்டை என்று பிரம்மவாதி உரைப்பதாக அறிவித்தார்.
கோழியிலிருந்து பெறப்படுவதே முட்டை என்பது கண்கூடாயினும், முட்டையிலிருந்தே கோழி வெளிப்படுவதும் உண்மை என்பதை யாவரும் உணரும் உண்மையாகும். இந்தச் சுழற்சியில் முட்டை முந்தையாதா, கோழி முந்தையதா என்ற வாதத்தில் தீர்வு காணமுடியாத எல்லையில் வேறொன்றால் தீர்வை அனுமானிக்கலாம்.
வயலில் நெல் விதைக்கப்படுகிறது. வளர்ந்து முற்றி அறுவடையாகின்றது. அறுவடையின் ஒரு கூறு விதை நெல்லாகச் சேமிக்கப்படுகிறது. அந்த விதையே அடுத்த வேளாண் தொழில் தொடர உதவுகிறது. இந்த உழவுச் சுழற்சியே உண்மையானாலும் அதாவது விதையின் காரணமாக விளைச்சல் என்ற காரியம் நடக்கிறது. இது ஒருவகையான சுழற்சி (வட்டம்- முட்டை) இதன் ஊடே ஓர் உண்மை உள்ளடக்கமா;க உள்ளது. அதாவது விளையும் களைக்கு விதையில்லை. விதையில்லாமலே அது முளைக்கின்றது. விதைப்பதான காரணம் இல்லாமலேயே பிடுங்கி எறியும் காரியம் நடைபெறுகிறது. எனவே களை விளைந்த காரியத்திற்கான காரணம் இல்லை. இந்த இல்லாத காரணத்திற்கான உண்மையினை எவ்வாறறிவது? இத்தகு மயக்கநிலைக்கான தெளிவையே மேற்காட்டிய வேதவாதியின் தொடர் காட்டுகின்றது.
விச்சியின்றியே விளைவு செய்குவாய் என்பார் மணிக்கவாசகர். காரணத்தோடும் காரணம் இன்றியும் காரியம் நடைபெறுவதற்கான செயலைச் செய்யவல்ல கர்த்தா ஒருத்தர் தேவை. அவனே தேவன். அவனது தோற்றமே பிரபஞ்சம். எந்த ஒன்றும் தோன்றாமல் அதற்கு வாழ்வும் மரணமும் இல்லை. ஆக தோற்றம் முந்தி என்பதால் அத்தோற்றத்தின் முந்தியதாக, அதாவது முதன்மையானதாக உள்ளதே பிரம்மம்.
இந்தத் தத்துவ விசாரணையில் உள்ள ஐயப்பாட்டால்தான் மணிமேகலை பிரம்மவாதியின் கருத்தை ஏற்காமல் வைணவவாதியிடம் உண்மை கேட்கச் செல்வதாகக் காப்பியக் கதை நகர்கிறது.
நெல்லுக்கு விதை உண்டு. களைக்கு விதை இல்லை. நெல்லும் விதையும், விதையும் நெல்லும் காரண காரியத் தொடர்ச்சி உடையன. ஆனால் ஏதும் விதைக்காத நிலையில் களை முளைப்பதற்கான காரிய நிகழ்ச்சிக்குக் காரணம் கூற முடியாத ஒன்றுக்கு பொறிபுலன்களுக்கோ இந்திரியங்களுக்கோ கட்டுப்படாமல் எல்லாப் பொருள்களிலும் இயங்கும் வல்லமையுடன் தன்னில்தானே தோற்றமுடையதாய் இருப்பது எதுவோத அதுவே கர்த்தர் (பிரம்மம்) எனக் கூறுவது பொருத்தமாகப்படாததால் மணிமேகலை பிரம்மவாதியை நீக்கி அடுத்தவராகிய வைணவவாதியை நாடி உண்மையிணை உசாவினாள்.
ஆக உலகத் தோற்றத்திற்குக் கர்த்தா உண்டெனினும், தேவன் உண்டெனினும் அந்த்க் கர்த்தாவைத் தோற்றுவித்தது எது? என்பதில் தீர்வு காணமுடியாததான நெருடல் இருந்தாலும் பிரம்மவாதி கூறிய முட்டை என்ற குறியீட்டின் உண்மையை மறுத்தற்கில்லை எனலாம். முட்டையின் வடிவம் வட்டம். இந்த வட்டத்தை வரைய ஒரு தொடக்கம் உண்டு. தொடங்கிய இடத்திலேயே வரையப்படும் கோடு வந்து சேரும். இந்தக் கருத்து நுட்பத்தின் அடிப்படையில் வைதீகக் கோட்பாடான வினை பற்றிய கருத்து பொருத்தமானதாக உள்ளது. பழவினை, தொடர்வினை போன்றவைகளே சீவராசிகளின் பிறப்புகளுக்குக் காரணம். இந்த வினையையே, ஆசையே பிறவிக்குக் காரணம் எனப் பௌத்தம் உணர்த்திற்று. இந்தச் சுழற்சிக்கான குறியீடே முட்டையின் வட்ட வடிவம். இனி இந்த வினைக் கோட்பாட்டினை விரிவாக எடுத்துரைப்பது இக்கட்டுரையினை வளர்த்துச் செல்ல உதவும் என்பதால் இங்கு அது விவரிக்கப்படுகிறது.
பாத்திரங்கள் காலத்தின் சாத்திரங்கள் என்றார் கண்ணதாசன். காலத்தின் உரைகல் இலக்கியங்கள் என்றார் ஜெயகாந்தன். ஆக இலக்கிய எழுத்துகள் என்பன வெறும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களால் ஆன சடங்கள் இல்லை. அவை நம்மோடு வாழும் உயிர்கள். அதனால்தான் அவை சாகா வரம் பெற்றுள்ளன. அந்த எழுத்துருவான கதாபாத்திரங்கள், வழி வழியாகச் சலிப்பின்றி உண்மையை உணர்த்திக் கொண்டு நடைபோடுகின்றன.
எந்த ஒன்றும் வட்ட வடிவத்தின் தத்துவப் பிரதிபலிப்பாகும். இந்த உண்மையைத்தான் சைவ சித்தாந்தம் ‘தோற்றிய திதியே ஒழுங்கிய மலத்துளதாம்’ என்கிறது. எங்கே முடிவோ அங்கேயே தோற்றம். எங்கே தோற்றமோ அங்கேயே முடிவு. இப்பேருண்மையின் அடிப்படையில் வித்திலிருந்து முளை, முளையிலிருந்து வித்து எனப்படும் காரணகாரியம் உணர்வதைப் போலவே வினைக் கோட்பாட்டின்படியான பிறப்பு இறப்பு நடைபெறுகிறது.
பிறப்பு இறப்பை உணர்வது உடலும் ஆன்மாவுமேயாகும். உருவமில்லாத ஆன்மா உருவத்திற்கான பாவனையில் உடலைப் பெறுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஆன்மா கண்ணுக்குத் தெரிந்த உடலுடன் வாழ்ந்தாலும் உடல் மறைய பழையநிலையில் கண்ணுக்குத் தெரியாததாய் வேறொரு உடலை நாடும்.
தண்ணீருக்கு உருவம் இல்லை. ஆனால், அது எந்தப் பாத்திரத்தைச் சார்கிறதோ அந்தப் பாத்திர வடிவத்தைத் தற்காலிகமாகப் பெறுதல் போல ஆன்மா வடிவைக் கொள்வதற்கான பாவனையில் ஓர் உடலுடன் வாழ்ந்து இன்ப துன்பம் பெறுகிறது. சுவரும் கூரையும் சேர்ந்ததை வீடு என்கிறோம். அவை பிரிந்து விட்டால் வீடில்லை என்பதுபோல ஐம்புல நுகர்வைப் பதிந்த ஆன்மா வேறொன்றைப் பற்றும்போது எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என மாணிக்க வாசகர் கூறியது போல அமைந்து சேரும். இந்தச் சுழற்சி அறுபட வேண்டுமெனில் பற்று நீங்கும் பாவனையை ஆன்மா பெற வேண்டும். அங்ஙனம் பெறும்போது உடலுடன் வாழும் ஆன்மா வாழுங் காலத்தில் பெறுகின்ற ஐவகை பாவனையை உணரவேண்டும். அவை பின்வருமாறு.
1. இரக்க உணர்வான கருணை பாவனை
2. எல்லோரும் நம்மைப் போல ஈடேற வேண்டும் என உணரும் முதித பாவனை
3. எல்லா உயிரும் வாழவேண்டும் என எண்ணுகிற அன்புணர்வான மைந்தீரிய பாவனை
4. உடம்பை பற்றுக் கோடாகக் கொள்ளாத அசுப பாவனை
5. எல்லாவற்றையும் எல்லாரையும் சமமாகக் கருதும் உபேட்சா பாவனை
இந்தத் தத்துவ பாவனை பற்றிய விசாரணைகள் யாவற்றையும் சாத்தனார் இந்திரவிழாவின்போது சமயக் கணக்கர்கள் பட்டிமண்டபத்து விசாரணையாகக் கொண்டதாய்க் கூறுகிறார். ஆக படுக்க படுக்கை உருவாக்கிக் கொள்வதைப் போன்று ஆன்மா தான் அனுபவம் பெற உடம்பைத் தேடிக்கொள்ளும் நிலையில் பிறப்பும் இறப்பும் பின்னர் வீடுபேறும் பெறும்.
இக்கருத்து விசாரணையில் பிரகிருதி என்னும் புருடன் என்று கூறும் பரியாயச் சொற்களால் விளக்கும்போது, கண்ணால் அறியப்படாத கருத்தால் அறியும் ஆற்றலுடைய புருடன் செயல்படுத்த செயல்படுவதானது பிரகிருதிப் பொருளாம் என்க. இப்பிரகிருதி கண்ணால் அறியப்படும் பொருளாம் என்க.
இப்படியாகப் புருடன் பிரிகிருதியாகிய பிரபஞ்சத்தில் உயிர்களின் தோற்றம் ஒரே தரத்தினதன்று. வித்திலிருந்து தோன்றுவது. பதியம் போடுவதால் தோன்றுவது. முட்டையிலிருந்துத் தோன்றுவது. கருவுயிர்ப்பால் தோன்றுவது போன்ற சீவராசிகள்- நீர்வாழ்வன, பறப்பன, நடப்பன, தாவர சங்கமமாவன என்பனவாக விகசித்து இயங்கி வாழ்ந்து இறுதியில் அழிகின்றன. இந்தப் பிரபஞ்சத் தோற்ற மறைவில் பிரபஞ்சத்தின் ஆதிகாரணமானவன் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சீவராசிகளுடன் தானுமாய்ச் சென்று ஒடுங்கிவிட மீண்டும் படைப்புச் சக்தி காரியப்படும் போது விழிப்படைந்து உவகை வெளிப்படுத்துவான்.
இதில் ஓர் உண்மையை உணர வேண்டியுள்ளது. அதாவது செய்த வினைக்கேற்பச் சுழற்சியாகச் சரீரம் எடுக்கும் சீவராசிகள் படைப்புக் கடவுளான பிரம்மா ஒடுங்கும் போது ஒடுங்கி விழிக்குங்கால் பிறப்பு இறப்பான முகிழ்ப்பைப் பெறும். ஆக தனது விழிப்பால் உலகைப் படைத்தும் தன் உறக்கத்தால் அதனை அழித்தும் விளங்கும் பிரம்மா தான் மட்டும் அழிவின்றித் தோன்றும் நிலையில் அவர் செய்யும் விளையாட்டான தோற்ற ஒடுக்கம்தான் பிரம்மவாத மறை பொருளாகும். இந்தச் சுழற்சியே பிரம்மவாதியால் உணர்த்தப்பட்ட முட்டையாகும்.
ஆக மேற்கூறியவற்றையெல்லாம் தொகுத்து மொழிவதாயின் ‘‘எந்த விளக்கம் பிரதானமாகக் கூறப்படுகிறதோ, அதைப்பற்றி மட்டும் ஆராய்வது பிரம்மவாதம்’’ எனலாம். இந்த உணர்வில் பிரபஞ்சத்தை உணரும் போது பேதா பேத வாதம் பற்றிய உண்மை வெளிப்படுகிறது. அதாவது வித்தியாசம், வித்தியாசம் அற்றதன் இணைப்பே பிரபஞ்சம் என்பதாம். முட்டையின் மேலுள்ள ஓடு சேதனம். அதனால் மூடப்பட்டுள்ள மஞ்சள் கரு உயிர்ப்புடைய அசேதனப் பொருள்.
தேவையும் தேவையில்லாததுமான கூட்டுறவே பிரபஞ்சம். தேவையுடையதை மட்டுமே காணமுடியாது. அதுபோல தேவையில்லாதது மட்டுமே இருக்க முடியாது. ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்த தன்மையே உலகச் சுழற்சியின் ரகசியம். உயிருள்ள உயிரற்ற கூட்டு உருவம்தான் இப்பிரபஞ்சம் என்தையே வேறு வகையாகக் கூறும்போது சூட்சுமமாகவும் தூலமாகவும் உள்ளவைகளே ஒன்றாய் வேறாய் இணைந்துள்ளன என்பதாகும். இதன் அடுத்த நிலையை உணரும்போதுதான் ஒன்றை யூகிக்க முடிகிறது. அதாவது உயிர்த் தோற்றத்தில் பொதுவான நுகர்வுக்குரிய புலன்களுக்கும் மேலான மனம் என்ற ஒன்றால் படைக்கப்படுவதும் அது அல்லாத நிலையில் உள்ளதுமான இருவேறுபட்டதால் பரிணமித்துக் கொண்டே இருப்பதே உலகம் என்பதாம். இந்த மனமுடைய சீவராசிக்கே காலக் கணக்கு உண்டு. மேலும் இரவு, பகல் என்ற வகையில் நாள், வாரம், மாதம் ஆண்டு, யுகம் என்றெல்லாம் மனமுடைய சீவராசி உணரும் போது நில்லா உலகில் தான் நிலைக்கச் செய்து கொள்ளுகின்றன.
இந்தக் காலக்கணக்கின் உண்மையில் உலகம் மாறி மாறி பலவற்றைத் தோற்றுவிக்கும் போது அவற்றை அனுபவிக்க மனமுடைய சீவராசிகளான மக்கள் கூட்டத்தில் சில பிரிவுகள் கண்டறியப் பெற்றன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என மக்களுள் பாகுபாடுகள் தோன்றின. இந்தப் பாகுபாடுகள் காலப்போக்கில் பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கினாலும், படைக்கப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு ஈறானவையாவும் சேர்ந்ததே பிரபஞ்சம் என்பதும், அவை யாவும் சேர்ந்ததே பிரபஞ்சம் என்பதும், அவையாவும் படைக்கப்பட்ட துய்ப்புகளின் நுகர்ச்சியால் பலனையும் பலனின்மையையும் அடைகின்றன என்பதே பிரம்மவாத சுழற்சி எனலாம்.
பிரம்ம வாத நிலையில் இறுதியாக ஒன்றை உணரவேண்டும். மனத்தின் விரிவே உலகம். நம்பகத் தன்மையான அறிவே மன வளர்ச்சிக்கான ஆதாரம். ஆக மனமுடைய மனம் இல்லாத சீவராசிகளாலான இவ்வுலகை ஒருவன் படைத்தான் என்றால் படைக்கப்பட்ட இவ்வுலகிற்கு முன்பே அவன் இருந்திருக்க வேண்டும் என்பதால் அவன் படைக்கப்படாத முதல்வன் ஆகின்றான். அதாவது எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்றுக்குக் காரணம் இல்லாமல்தான் இருக்க முடியும் என்பது பிரம்மவாத முடிவாகும்.
ஆக யாராலும் படைக்கப்படாமல் தானே சுயம்புவாகத் தோன்றிய பரம்பொருள் தன் அம்சமாகப் படைத்த பிரம்மாவால் அனைத்தையும் தோற்றுவித்து, தோற்றுவிக்கப் பெற்ற யாவும் தாம் செய்வினைகளுக்கேற்ப வாழ்வையும் சாவையும் வண்டிச்சக்கரம் போல் பெறுகின்றன என்பதும் பிரம்மவாத மறு பக்கமாகும்.
இந்த உண்மையை புத்தரும் புத்தமதமும் ஏற்கவில்லை. தம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் நிதர்சனமானாலும், அதனை உணர்ந்து வாழவல்ல மனம் தேவை. அதற்குப் பங்கம் ஏற்டுத்தும் ஆசை போன்ற எந்த ஒன்றும் துன்பம் தரும். அம்பு உடலில் தைத்துவிட்டால் பிடுங்கி எறிய வேண்டுமே தவிர யார் போட்டது, எங்கிருந்து வந்தது என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. காலமில்லை என்பது புத்தவாதம். இந்தப் பௌத்தக் கோட்பாட்டின்படி மணிமேகலை பிரம்மவாதி கூறிய காரணமின்றிக் காரியம் உண்டு என்றபடிக் காரணமில்லாக் காரியமாகிய பிரம்ம தோற்றத்தை ஒப்புக் கொள்ளாததால் பிரம்மவாதியை நீக்கி வைணவவாதியிடம் சென்று அவன் கருத்தை வினவி அறிய முற்படுகிறாள் மணிமேகலை என்க.