17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் -முனைவர் கரு. முருகன்
மனிதன் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளைப் பகுப்பதே அறம் எனலாம். “அறு” என்ற வினைச்சொல்லின் அடிப்படையாகப் பிறந்ததே அறம். இதற்கு ‘அறுத்துச்செல், வழியை உண்டாக்கு’என்று பொருள். மேலும்,‘கிரேக்க மொழிச்சொல்லான எதிக்ஸ் (Ethics) கூறும் நடத்தை, வழக்கம், மரபு’ என்கிற பொருளையே உணர்த்தி வந்திருக்கிறது. மாசு இல்லாத வாழ்க்கையை மானுட வாழ்க்கையாகத் தரிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
தமிழனின் அறத்திற்கு பெருமை சேர்க்கின்ற இலக்கியங்களில் மணிமேகலை போற்றத்தக்கது. உலகம் முழுவதும் பசிப்பிணியை நீக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, மாதர்குல மேன்மையை மேம்படுத்திய காப்பியம் ஆகும். பரத்தன்மை என்கிற சமூகத்தினிடையே புறையோடிக்கிடந்த பண்பாட்டு இழுக்கைத் துடைத்தெறிந்த கவிஞன் சீத்தலைச் சாத்தனார்.
“திரு.வி.க” அவர்கள், மணிமேகலையை “யான் இலக்கிய உலகத்துடன் உறவு கொண்டபோது, மணிமேகலையைக் கண்டேன். அக்காட்சியை என்னென்று கூறுவேன்! அது தமிழ் அமுதமா? அற ஆழியா? சீல இமயமா? பௌத்த நீதியா? எல்லாஞ் சார்ந்த ஒன்றா? அச்செல்வ நூலை யாத்த ஆசிரியரை, தமிழ்ப்பெருமானை, என்போன்றோர் உய்யும் பொருட்டு பௌத்த தர்ம சாத்திரத்தைத் தமிழில் இயற்றிய வள்ளலை, அறவோரை எம்மொழியால் வாழ்த்த வல்லேன்! என்று தன் வாழ்க்கைக் குறிப்பில் இருந்து கூறியதை அறியலாம்.
இன்றைய கணிணியுகத்தில் அறங்கள், புகழை மையப்படுத்தியே பெருகி இருக்கின்றன. அறங்கள் செய்ய மிகப்பெரிய பெருளாதார வசதி தேவையில்லை. இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரம் இருந்தாலே போதும். இதனை வள்ளுவப் பெருந்தகை,
என அறம் செய்தலை வலியுறுத்திச் சொல்கிறார். தமிழில் தொல்காப்பியர் முதற்கொண்டு இன்றைய காலம்வரை நிறைய அறக்கருத்துக்கள் இருக்கின்றன. அறத்தைக் காலந்தோறும் மக்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக இறைவனுடைய அவதாரங்களில் அறத்தை வலியுறுத்ததும் பெயர்களே முன்னிலை பெறுகின்றன. உமையவளுக்கு தர்ம சம்வர்த்தினி (திருவையாற்றில் இருக்கும் அம்பிகை) என அறம் வளர்த்த நாயகி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பசி, பெண்ணடிமை இவை இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த அறக்காப்பியம் மணிமேகலை எனலாம். மனிதனுடைய வாழ்க்கை முறையில், காலத்தினுடைய பரிணாம வளர்ச்சியில் அறங்களை இருவகையாகப் பகுத்துக் கொள்ளலாம்.
1. இடச்சூழ்நிலை அறங்கள்
2. நிரந்தர அறங்கள்
எனப் பகுக்கலாம்.
அறம் என்பது காலத்திற்குட்பட்டவை. சங்ககாலத்தில் காதலும், வீரமும் வாழ்வில் ஒழுங்கங்களாக இருந்தன.
அறம் எனப்படுவது …
“அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின், மறாவது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அல்லது கண்டது இல்” (பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 116-117)
என அறத்திற்கான கோட்பாட்டினை வலியுறுத்துவதற்காக எழுந்த காப்பியமான மணிமேகலையின் வெளிப்படுத்தி நிற்கிறது. மணிமேகலைக் காப்பியம் என்பது,
1. மாதவியின் தாய் சித்ராபதி, வயந்தமாலையைத் தூது அனுப்பி ஏற்கவில்லை. அத்தோடு நின்றுவிடாமல் தன்மகளை மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள், “இத்தீந்தொழில் படால்” என்று பரத்தமை ஒழிப்பை வெளிப்படுத்திய மானுட மகத்துவம்.
2. ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது அனுவிக்கின்ற மாலை, அவன் இறந்துவிட்டால் அந்த மாலை தூய்மை இழக்க நேரிடும் என்பதைத் தந்தையின் இறப்புச் செய்தியை கூறக்கேட்ட மாதவி, அவள் கட்டிக்கொண்டிருந்த மாலை தூய்மை இழந்தது என, ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டை உணர்த்தி நிற்கிறாள்.
3. மணிபல்லவத்தீவுக்குக் கொண்டு சென்ற மணிமேகலைக்குப் பழம்பிறப்பு உணர்த்தி (அ).வேற்றுவுறு கொள்ளவும், (ஆ) வான்வெளிச்செல்லவும், (இ).பசியின்றி வாழவும் மூன்று மந்திரங்களை கூறிச்செல்கிறாள்.
4. மணிமேகலை ஆற்றா மாக்களைக்கூவி அழைத்து பசிப்பிணி தீக்கினாள்.
5. காதல் வயப்பட்ட உதயகுமாரனுக்கு நல்வழி காட்டினாள்.
மானுடப்பிறப்பில் ஆணும், பெண்ணும் சமம். ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதனை, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (குறள் - 972)
என்கிறார் வள்ளுவர்.
இக்காப்பியம் கன்னிப்பருவத்தில் ஏற்படக்கூடிய மனவளர்ச்சியையும், பட்டறிவையும் மணிமேகலையின் வாயிலாக உணர்த்தி நிற்கிறது.
இழிகுலத்தில் பிறந்ததை நினைத்து மாதவி வெறுப்பு கொண்டாள். “மாபெரும் பத்தினி கண்ணகி, திருந்தாற் செய்கை தீத்தொழி படாஅல்’ என்று வயந்தமாலையிடம் கூறிய வாய்மொழியே மணிமேகலையின் வாழ்வு மாற்றிய வரிகளாகும். கற்பைக் காக்க துறவு செல்லல்கூட தவறில்லை என காட்டிய நூல் மணிமேகலை ஆகும். இக்காப்பியத்தில் மாதவி, மணிமேகலை, சுதமதி, ஆபுத்திரன், மாசாத்துலான், ரசாமாதேவி, விசாகை, தருமத்தன் ஆகிய அனைவரிலும் இளமையில் துறவு ஏற்றவள் மணிமேகலை. மணிமேகலையைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சூழ்நிலையால் வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டவர்கள்.
மணிமேகலை சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் கொஞ்சமல்ல. என்பது காப்பியத்தை வெளிப்படுத்த அல்ல. சமூகத்தில் கட்டமைக்க ஆண், பெண் என்கிற வேறுபாடு மறந்து வரவேண்டும் என்பதை உணர்த்துவதே ஆகும்.
மணிமேகலை வழி காட்டப்படும் அறங்கள்
உணவு, உடை, உறையுள், மருந்து ஆகிய நான்கும் ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய கடமை என “திச யா காணாம்” என்னும் பௌத்த நூல் கூறினாலும், முதன்முதலில் அமுதசுரபியில் உணவு படைக்கும் ஆதிரை மணிமேகலையில்தான் இடம் பெற்றுள்ளது.“பாரகம் அடங்கலும், பசிப்பிணி அரக” என்று சொல்லிச் சோற்றை இடுகிறாள்.
பௌத்த மதக்கோட்பாடுகள் ஒழுக்கநெறி, அரசநெறி, பசிபோக்கும் அறமாண்பு சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றியமைத்ததல், கள்ளுண்ணாமை, பரத்தன்மை ஒழித்தல் போன்ற சமுதாய சீர்திருத்த நிரந்தர அறமான கருத்துக்களை வெளிப்படுத்துவதே ஆகும். அறக்கருத்துக்களின் நிலையாமை, கள்ளுண்ணாமை, பசிப்பிணி பற்றி வெளிப்படுத்த மணிமேகலைக் காப்பியம் இளமையோடு இருக்கிறது.
நிலையாமை
தொல்காப்பியர் நிலையாமையைப் பற்றி,
“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே” (தொல்.புறத் 23)
என்னும் நூற்பா வழி உணர்த்துகிறார். மேலும், திருவள்ளுவர் நிலையாமை என்னும் ஓர் அதிகாரத்தைப் பகுத்து அவற்றில் நிலையாமையைப் பற்றிய கருத்துகளை விளக்குகிறார். நிலையாமை என்பது மாந்தர் வாழ்வில் இழி நிலையாக,
“நில்லாத வற்றை நிலையின் என்றுணரும் புல்லறி வாண்மை கடை” (குறள்331)
இக்குறளின் வழி விளக்குகிறார். மனிதன் காமப்பசியை கடந்து இருக்க வேண்டும் என்கிற அறக்கருத்துக்களை கூறுவதோடு மட்டுமல்லாமல், ஆசை வேரறுக்க வழியையும்
யாக்கை என்பது உடலும், உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப்பொருள்களும், குருதி போன்ற நீர்ப்பொருளும், சூடு போன்ற தீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப்பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப்பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவது. யாக்கை என்பது தமிழ்நெறி.
இக்கருத்துகளுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார். உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடன் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்.
மணிமேகலையிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிருக்கும்போது,
“பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும் இறத்தலுமுடைய திடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்க இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்” (மணி 18136 - 139)
என்று கூறுகின்றாள்.
மனிதன் இளமை நிலைபேறுடையது என்று உணர்கின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை உதயகுமரனிடம் ஒரு நரை மூதாட்டியைக் காட்டி, இளமையின் நிலையாமையை விளக்குகின்றாள்.
இவர்கள் அனைவரையும் காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,
“அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களின் சிறந்த மடவார உண்டோ” (மணிமேகலை 697-107)
எனவரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி. இறப்பைத் தடுக்க யாராலும் முடியாது என்ற உண்மையை இப்பாடல் உணர்த்துகிறது. இவ்வாறு யாக்கையின் நிலையாமையை சீத்தலைச் சாத்தனார் எடுத்து இயம்புகிறார். இளமை என்பது மாயை வாழ்க்கையல்ல என மானுட வாழ்க்கையின் மகத்துவம் பேசுகிறாள்.
செல்வம் நிலையாமை
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது. சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம் செய்தார்.
“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேன் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்தினை ஆவது” (சிறைசெய் காதை, 135-138)
மேலும் பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத குருடர், செவிடர், முடவர் முதலியவர்க்கு உதவுவதே உயர்வு என்கிறார்.
“காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் காவலன்” (ஆபுத்திரன் அறிவித்த காதை, 111-115)
என்று ஆபுத்திரன் இயலாத மக்கள் உண்டது போக, மிஞ்சியிருந்த உணவினை உண்டு உறங்கினான் என்கின்றார் சாத்தனார்.
மனித சமூகத்தில் தொன்றுதொட்டு மரபுவழியாக வந்த அறங்கள் என்றாலும், அதற்குள் புரையோடிக் கிடக்கின்ற பிரச்சனைகளைக் கலைவதுதான் அறமாகும். அறம் என்பது காலத்திற்குட்பட்டவை. சங்ககாலத்தில் காதலும், வீரமும் வாழ்வில் ஒழுங்கங்களாக இருந்தன. இதில் தலைவியின் காதல், தோழி அடுத்ததாக செவிலித்தாய், அடுத்ததாக நற்றாய், பிறகு தமையன், தந்தை எனத் தெரியவரும். ஆனால் காலஓட்டத்தில் உருமாற்றம் பெற்றுள்ளது. அறநெறி அணுகுமுறை என்பது இலக்கியத்தில் அறிவியலோடு இயைந்ததாகவும் இருக்க வேண்டும்.
கள்ளுண்ணாமை
பெண்களும், கள்ளும், உணவும் இல்லாமல் உலகத்திலே மக்கள் அடையக்கூடிய ஏதேனும் உண்டோ? என்று நாகர் தலைவன் கேட்டான். அப்போது சாதுவன் சொல்வதாக மதுரை கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் கூறும் மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை வரிகள்,
“மயக்கும் கள்ளும் மண் உயிர் கோறாலும் கயக்கு அறுமாக்கள் கடிந்தனர் கேளாய்”
என்றான்.
கள்ளையும், கொலையையும் அறிவுடையோர் நீக்கினர் என்று உ.வே.சா விளக்கம் தருகிறார்.
தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை ஜி.யு.போப் போன்ற பிறநாட்டு அறிஞர்களும் கண்டறிந்து பாராட்டியுள்ளனர்.
இன்றைய அறங்கள்
தற்காலச் சூழ்நிலை அறங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவருகின்றன. இந்த அறங்கள் தனிமனிதனே தன்னிறைவு பெற முயற்சிக்கிறான். காரணம், இக்காப்பியம் எழுந்த சூழல் மன்னராட்சிக் காலம். இன்றைக்கு மக்களாட்சிக் காலம். ஒன்று அரசு செய்கிறது. மற்றொன்று புகழுக்காக அறத்தை முன்னிறுத்தி மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நிரந்தர அறங்களான பசிப்பிணி, பெண்ணடிமை, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் போன்ற அறங்கள் செய்யவேண்டிய கடமை நிறையவே இருக்கிறது. போலியோ என்கிற நோயை விரட்ட முடியாது என்ற நிலைமையைப் பன்னாட்டு அமைப்பான ரோட்டரி சங்கங்கள் போன்றவை இந்தியாவில் தன்னுடைய முழு உதவியால் அந்நோயை இந்தியாவிலிருந்து விரட்டி இருக்கிறது. ஒரு நாட்டை விட்டு, ஒரு நோயினை முழுவதும் வராமல் தடுக்க முடியும் என்கிற முன் உதாரணங்கள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட நிரந்தர அறங்களை யாரும் செய்வதற்குப் பின்வாங்கும் நிலையிலேயே இன்றைய சமூகச்சூழல் இருக்கிறது. நாடு கடந்து, மொழிகடந்து, சமயம் கடந்து இன்னும் பெண்கள் பாலியலாலும், உழைப்பாலும் அவர்களை அடிமைப்படுத்துவதை நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் முன்னிறுத்தும் முதன்மைச் செய்தியாகவே இருக்கிறது.
பசி என்கிற மாபெரும் நோயினை அகற்ற இயற்கையால் மட்டுமே அகற்றமுடியும் என்கிற உண்மை அனைவரும் உணர்ந்ததே. ஆனால், இயற்கை வளங்கள் சீரழிக்கப்பட்டு வயல்கள் வீடுகட்டும் இடங்களாக மாறி விவசாயம் என்பது உயர்தட்டு மக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்கிறநிலை மாறிவருகிறது. உழுபவனுக்கே நிலம் என்கின்ற முழக்கமும், இலவச அரிசி தருகிறேன் என்கிற அரசியல் அறிக்கைகளும் உலகுக்கு உணர்த்தி நிற்கின்றன. விவசாயம் செய்வதற்கு விவசாயி இருக்கிறான், ஆனால் விவசாயம் செய்ய நிலம்தான் இல்லை.
வளர்ந்து வருகின்ற நாகரிகத்தை அடையாப்படுத்தும் விதமாகக் கள்ளைக்காட்டிலும் கொடுமையான மதுபான வகைகளே உலகம் முழுவதும் முன்னிறுத்தப்படுகின்றன. உலக மக்கள் எண்ணிக்கையில் மதுபானம் அருந்துபவர்களுடைய எண்ணிக்கையே அதிகம். குறிப்பாக, பெண்கள் கூட மது அருந்துகின்ற செய்திகள் உலகறிந்த நடப்புகளாக மாறிவிட்டன. இலக்கியங்கள் காலம்காட்டும் கண்ணாடி என்பர். இன்றைய காலகட்டத்தில் எந்த நோக்கத்திற்காக மணிமேகலைக் காப்பியம் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டதோ, அந்த இலக்கியம் இருக்கிறது. ஆனால் நோக்கம்தான் இல்லை.
முடிவுரை
இன்பமும், துன்பமும் என்பது பிறரால் நமக்கு உருவாக்கப்பட்டு வருவதல்ல. நமக்கு நாமே கட்டமைப்பது ஆகும். ஏற்றத்தாழ்விற்கு ஏற்றாற்போல் வருவதல்ல. அவரவர் செயலுக்கு ஏற்றாற்போல் வருமென மாதவி புலப்படுத்துகிறாள். அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் காமம், வெகுளி, மயக்கம் என மூன்று என வகைப்படுத்துகிறாள். இதை மணிமேகலைக்கு அறவாணர் காமத்தை அநித்தம், துக்கம், அநான்மா பற்றற்றும் அகபாவனையால் கெடுதல்வேண்டும் என வலியுறுத்துகிறார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் அறவழியில் எய்தப்படும் போது, இன்பம் என்ற வீடுபொருள் தானாக வந்துசேரும் என்கிறார். மானுட வாழ்க்கையில் மணிமேகலை வழியில் ‘அறம் செய்ய விரும்பினால்’ ‘வீடு பேறு நாம் அடையலாம்’.