காப்பியம் என்பது கதை நிகழ்ந்த காலச் சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். நாம் எறத்தாழ 2000 ஆண்டுகள் பின் நோக்கிப் பயணம் செய்து அன்றைய பூம்புகாரில் வாழ்ந்த மக்களை அவர்களின் எண்ண ஓட்டத்தை காலம் காலமாக மக்கள் மனத்தில் ஊறியிருந்த நம்பிக்கைகளை அறிந்து கொள்கிறோம்.
வழிபாடும் பயமும்
மணிமேகலைக் காப்பியம் ‘விழாவறை காதை’ யோடு தொடங்குகிறது. காலம் காலமாக மனித மனத்தில் தோன்றும் பய உணர்வும் விழா எடுப்பதற்கு வழிபாட்டுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இந்திரவிழாக் கொண்டாடாவிட்டால் பூதங்கள் ஊரை அழித்துவிடும் என்ற பய உணர்வு இருந்தமையை மந்திரச் சுற்றத்தார் கூற்றின் வாயிலாக ஆசிரியர் காட்டுகிறார். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் மந்திரச் சுற்றமும் சமயக் கணக்கரும் ஒன்று கூடி இந்திர விழாவை நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கின்றனர்.
என்றும் சீத்தலைச் சாத்தனார் பாடும் பாடலில் ஆகத்திய முனிவன் ஆணையின்படி தூங்கெயிலெறிந்த தோடித்தோன் செம்பியன் இந்திரனை வேண்டி அவன் உடன்பாடு பெற்று இருபத்தொட்டு நாள் அந்நகரிலேயே நிகழத்தியதும், அதன் பின் சோழமன்னர்கள் தொடர்ந்து நடத்தியதுமான இந்திரவிழாவை நடத்த எண்ணி சமயக் கணக்கர் முதலானோர் ‘இந்திரவிழாச் செய்தலை மறப்பின், முசுகுந்தன் துயரைப் போக்கிய நாளங்காடிப் பூதம் இடுக்கண் செய்யும், நரகரைப் புடைத்துண்ணும் சதுக்க ஓதமும் பொருந்தாது ஒழியும். ஆதலின் விழாச் செய்வோமாக’ என்று முரசறையும் முதுகுடிப் பிறந்தோனுக்கு அறிவித்தனர். அச்சத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு நிகழ்ந்தமையை இது காட்டுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் சக்கரவானக் கோட்டம் என்றொரு பகுதி இருந்தது. அதன் ஒரு பகுதியில் சுடுகாடு இருந்ததால் அதனைச் சுடுகாட்டுக்கோட்டம் என்றழைப்பர். அங்கு ஏராளமான சிறுதெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. பேய் பிசாசுகளும் நடமாடுவதாக மக்கள் நம்பினர்.
மணிமேகலைக்கும் சுதமதிக்கும் மணிமேகலா தெய்வம் சக்கரவானக் கோட்டம் பற்றி எடுத்துரைத்தது. கோதமை மகன் சாரங்கலன் என்னும் சிறுவன் வழி தவறி இங்கே வந்துவிட்டான். அங்கே பிணந்தின்று களித்தாடும் பேய் ஒன்றைக் கண்டு பயந்து கதறியவாறு ஓடிவந்து உயிர் துறந்தான். அவன் உடலை ஏந்தியவாறு சக்கரவானக்கோட்டம் வந்த கோதமை கம்பாபதித் தெய்வத்திடம் சென்று தன் மகன் உயிரை மீட்டுத் தருமாறு வேண்டினாள்.
‘‘வேறு ஒரு துணையில்லாது எனக்கு ஒரே துணையான இவன் உயிரைப் பறித்தல் நியாயமாகுமா? இவனுக்குப் பதிலாக என் உயிரைப் பெற்றுக்கொண்டு இவனை உயிர்ப்பிக்க வேண்டும்’’ என்று முறையிட்டாள். அதற்குச் சம்பாபதி ‘‘உயிர் மீட்டுத் தரும் தெய்வம் இங்கில்லை. ஒரு உயிருக்குப் பதிலாக வேறு ஒரு உயிரை வாங்க முடியுமானால் இத்தனை அரசர்கள் இறந்து போக விடுவாரோ? ஆதலின் நியதியை ஏற்று நிம்மதியாக வாழ்வாயாக!” என்று கூறியது.
‘‘தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றினம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந் தொழிலாளன் குகான்றனன் குவிய்யஇங் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழியெடுஞ் செல்வம் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்கனிற் இறந்த மடவார் உண்டோ?
என்று மணிமேகலா தெய்வம், மக்கள் இயல்பைப் பேசுகிறது.
பசுவழிபாடு- பசுவைப் போற்றுதல்
தமிழகத்தில் தொன்று தொட்டுப் பசு போற்றப்பெறுவதை மணிமேகலை காட்டுகிறது.
ஆ காத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கைவர் கொடும்பாடில்லை
எனச் சிலப்பதிகாரம் பசுவைப் போற்றுவோரைப் பாராட்டும் . மணிமேகலையில் ஆபுத்திரன் என்ற பாத்திரத்தையே ஆசிரியர் படைக்கிறார். பெற்றோரை இழந்த சிறுவனைப் பசு பால்தந்து வளர்க்கிறது.
அறத்தின் மேன்மையை விளக்க, அறம் செய்வோர் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வது மட்டும் அல்லது தேவர் தலைவனாம் இந்திரப் பதவியும் பெறுவர் என மக்கள் நம்பினர்.
ஆபுத்திரனுக்குக் சிந்தாதேவித் தெய்வம் அமுதசுரபி பாத்திரம் வழங்கியது. எடுக்க எடுக்க உணவு பெறும் அப்பாத்திரம் கொண்டு ஆபுத்திரன் இயலா மக்கள் எல்லோர்க்கும் உணவு அளித்தான். ஆபுத்திரனின் அறச்செயலால் இந்திரனின் யாண்டு கம்பளம் நடுங்கியது, இந்திரன் ஒரு அந்தணன் வடிவில் கையில் தண்டு ஊன்றியவாறு வந்தான். வந்தவன், ‘‘நீ செய்த அறப்பயன் துய்க்க இந்திர உலகத்துக்கு வருக’’ என்று அழைத்தான்.
ஆபுத்திரன், ‘‘இந்திர லோகம் வந்து நான் இன்பம் அனுபவிக்க விரும்பவில்லை. வருந்தி வந்தவர்கள் தம் பசியை நீக்கி அவர்களது முகம் மலர்ந்திருப்பதைக் காண்பதுவே பேரின்பமாகும். இந்த இன்பம் இல்லாத தேவர் உலகத்திற்கு வருவதால் என்ன பயன்?’’ எனச் சொல்லி மறுத்துவிட்டான். ஆபுத்திரன் தன்னை அவமதித்தாக கருதிய இந்திரன் நாட்டில் மழைவளம் பெருகச் செய்து வளம் பெருகச் செய்தான். ஆபுத்திரன் அளிக்கும் உணவை வாங்க வருவோர் இல்லையாம்.
இருவேறு பிணிகள்
மணிமேகலை தீராய் பிணிகள் இரண்டு எனப் பேசுகிறது. ஒன்று பிறவிப் பிணி, மற்றொன்று பசிப்பிணி
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது. பின்னது அற்றோர் உறுவது அறிக
என மாதவி வாயிலாகச் சாத்தனார் பேசுகிறார்.
பசிப்பிணி பற்றியும் அதனைத் தீர்ப்போர் பெருமையையும் மணிமேகலை போல் வேறு எந்த நூலும் பேசவில்லை.
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் பூண்டுவை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்றும் பாவிது நீர்ந்தோர் இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது ‘‘மண்திணி காலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’
என்றும் மணிமேகலை கூறுகிறது.
தவம்-தவத்திறம்
உயிராற்றலை மிகுதிப்படுத்தலே தவம். உயிர் சார்ந்துள்ள உடம்பின் மனம், மொழி, மெய் ஆகியவற்றில் தோன்றும் குற்றம் கடியும் சாதனையே தவம் என மணிமேகலை பேசும்.
ஆய்தொடி நல்லாய் அங்கது கேளாய் கொலையே தகளவு காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோற்றுவ நான்கும் வெட்கம் வெகுளம் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தனில் உருப்பன மூன்றும்... காமம் வெகுளி மயக்கம் காரணம்
என்றும் அறவண அடிகள் கூறக்கேட்டு மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகென நோற்றனன் எனச் சாத்தனார் கூறுகிறார்.