New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 10. மணிமேகலை சித்தரிக்கும் அறம் முனைவர் எம். தேவகி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
10. மணிமேகலை சித்தரிக்கும் அறம் முனைவர் எம். தேவகி
Permalink  
 


10. மணிமேகலை சித்தரிக்கும் அறம்  -முனைவர் எம். தேவகி

 

முன்னுரை

 

உலகமாந்தர்கள் இவ்வுலகியல் வாழ்வு நன்னெறியை, தர்மத்தை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது. மானுடத்தில் நலனைப் பிரதான நோக்கமாகக் கொண்ட சான்றோர்கள், நன்மார்க்கத்தில் நடைபோட்டு, தம் சந்ததியினரையும் தம் பின்னே நன்னெறியிலேயே முன்னேறச் செய்தனர். இச்செய்கைகள் மனித சமுதாயத்தை உயர்வடையச் செய்தன. இவை மண்ணுயிர்களை புவியியல் நிலைக்கச் செய்யும் மேல்வரிச் சட்டமாகவும் அமைந்தன.

 

உயிரைவிட மேலான நன்னெறி

 

பண்டைத் தமிழர்கள், தன்னலம் துறந்த பொதுநலத்தை உயிரினும் மேலாகக் கருதினர். தம்மிடம் வந்து இரந்த எளியமக்களுக்கு இல்லை என்று கூறும் அவலச் சொல்லைக் கூறுவதைத் தாழ்வாகக் கருதினர்.

இடும்பையால் இன்மையுரைத்தார்க்கு அது நிறைக்கலாற்றாக்கால்
தன் மெய் துறப்பான் மலை

என்னும் கலித்தொகை அடிகள், தன்னிடம் இரந்தவர்க்கு ஈய இயலாதபோது சாதலே இனிது என்று உரைக்கின்றது.

 

பசிப்பிணி போக்கும் அறம்

 

பசிப்பிணி போக்கும் அறத்தின் சிறப்புகளைச் சாத்தனார், இந்திரவிழா புகார்நகரில் நடைபெறப் போவதை வள்ளுவன் முரசறைந்து தெரிவிப்பதாக,

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தான். (விழாவறை காதை 70,72)

என்ற பாடலில், ஒருநாட்டில் முதலில் களையப்பட வேண்டியது பசி என்பதனை உணர்த்துகிறார். பசியின் கொடுமையைக் குறிப்பிடும்போது, பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பர். 

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பக் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண் அணிந்து களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் மலை மாதரொடு புறங்கடை நிறுத்தம்
பசிப்பிணி என்னும் பாவி (பாத்திரம் பெற்ற காதை 76-80)



மழைக்காலத்து நள்ளிரவில் வழிநடையில் வருத்ததும், வாட்டமும், பெரும்பசியும் கொண்ட சிலர் வந்து, ஆபுத்திரனிடம் பசியின் மயக்கத்தைக் கூறுகின்றனர். மழை பெய்யும் நள்ளிரவில் அவர்களின் பசியைப் போக்க வழியில்லையே என்று வருத்தம் கொள்கிறான். அதனை சாத்தனார்,

ஏற்று ஊண் வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர்ஆஞர் எய்த. (பாத்திரமரபு கூறிய காதை 7-8)

தெய்வமாகிய சிந்தாதேவி, இத்தகைய அருள் உள்ளம் கொண்டவருக்குத்தான் அமுதசுரபியைக் கொடுப்பது பொருந்தும் என்று எண்ணி, ஆபுத்திரனிடம் அமுதசுரபியினைக் கொடுக்கிறாள். இதனை ஆசிரியர், அறம் செய்தே ஆகவேண்டும். அறம் செய்வதே உயிர் வாழ்வதன் நோக்கம் என்ற கொள்கை உடையவனுக்கு ஆதரவாகத் தெய்வமும் துணை நிற்கும் என்பதை இந்நூலின் வழியாக நன்றாகப் புலப்படுத்துகிறார். 

மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் செய்யும் அறச்செயல்கள் இந்திரனையே அச்சம் கொள்ளச் செய்யும் அளவிற்கு அமைந்துள்ளது. தனக்கென்று தனித்தேவை எதுவுமில்லாத ஆபுத்திரனிடம், இந்திரனின் ஆசை வார்த்தைகள் கூட பயனற்று போகின்றன என்பதை, 

அறம் செய் மாக்கன் புறம்காத்து ஓம்புநர்
நல்தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத தேவர் நல்நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே. (பாத்திர மரபு கூறிய காதை 40-43)

இப்பாடலில் இந்திரனை ஆபுத்திரன், அறஞ்செய்வோர், ஏழைகளைக் காப்போர், தவம் செய்வோர், பற்றின்றி நெற்போர் எல்லோரும் இந்நிலவுலகில்தான் வாழ்கிறார்கள். இவர்களில் யாருமேயல்லாத உலகம்தான் தாங்கள் தலைவனாக இருக்கும் தேவர்நாடு என்கிறான். அந்நாட்டைவிட அறம்செய்யும் இந்நிலவுலகமே சிறந்தது என்கிறான். இதன்மூலம் அறம் செய்யும் நிலவுலகமே பெரிது என்பதை மணிமேகலைக் காப்பியம் தெளிவுபடுத்துகிறது. சாத்தனார் கூறுவதுபோல், திருவள்ளுவரும் ஈகையின் சிறப்பினைக் கூறும்போது,

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (குறள் - 222)

வீடுபேற்றை விட மேலானது ஈகை அறம் என்று கூறுகிறார்.

மேலும், ஆபுத்திரன் அமுதசுரபியின் சிறப்பைக் கூறுவதாக ஆசிரியர்,

வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
திருந்துமுகம் காட்டும் என் தெய்வக் கடிஞை (பாத்திர மரபு கூறிய காதை 44-45)



இப்பாடலில் பசியாறிவர்களின் முகத்தைப் பார்க்கும் போது, தேவர் உலகில் இருப்பதைவிட சிறப்பானது இந்நிலவுலகில் இருப்பது சிறப்பானது என்று ஆபுத்திரன் கூறுகிறான். பிறர் பசியைப் போக்குவதைவிட வேறு இன்பம் ஒன்றுமில்லை என்பதை ஆபுத்திரன் வாயிலாக இக்காப்பியத்தின் ஆசிரியர் அறத்தின் சிறப்பைத் தெளிவாக எடுத்து இயம்புகிறார்.

அமுதசுரபியை பயன்படுத்தி மக்களின் பசியைப் போக்கியதால் இந்திரன் சினம் கொண்டு, 12 ஆண்டுகள் மழை இல்லாமல் இருந்த பாண்டியநாட்டில் மழை பெறச்செய்தான். இதனால் பாண்டிய நாடு செழித்தது. இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது ஆபுத்திரன் செய்த நல்லறத்தில்தான் என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

அமுதசுரபியைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் மக்களின் துன்பத்தை போக்கி, அவர்கள் இன்பமாக வாழ வழி செய்தான். இவ்வாறு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய தலைசிறந்த அறத்தினை மணிமேகலை காப்பியம் எடுத்துக் காட்டுகிறது. 

பாண்டிய நாட்டில் அமுதசுரபியினால் பயன் இல்லை என்று நினைத்த ஆபுத்திரன், வறண்டு போயுள்ள சாவக நாட்டிலாவது அமுதசுரபியினால் பயன் செய்யலாம் என்று எண்ணி புறப்படுகிறான். செல்லும் வழியில் மணிபல்லவத் தீவில் தன் அறத்தை செய்ய முடியவில்லையே என வருந்துவதாக ஆசிரியர்,

மன் உயிர் ஒம்பும் இம் மாபெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன். (பாத்திர மரபு கூறிய காதை 87-88)

என்று இப்பாடலில் கூறுகிறார்.

அறம் செய்யாமல் உயிர் வாழ்வது வீண் என்று எண்ணிய ஆபுத்திரன் உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டதாக இக்காப்பியம் குறிப்பிடுகிறது. அமுதசுரபி பொருத்தமான ஒருவரிடம் சென்றுசேர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி பொய்கையில் விட்டுச்சென்றதாக ஆசிரியர் கூறுகிறார். இதனை,

அருள் அறம் பூண்டு ஆங்கு உயிர் ஓம்புநர்
உளர் எனில் அவர் கைப புகுவாய் (பாத்திர மரபு கூறிய காதை 93-94)

இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

 



மணிமேகலை செய்யும் அறம்

 

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார் தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திவோம் என்றார். இக்கருத்தை அன்றே சாத்தனார் மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று பாடியுள்ளார். 

பொய்கையில் விட்டுசென்ற அமுதசுரபியானது, மணிமேகலையின் கையில் கிடைக்கிறது. அறவணஅடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனின் வரலாற்றைக் கூறுகிறார். இதனை,

வறன் ஓடு உலகின் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது. (பாத்திரம் கொண்டு பிச்சைபுக்க காதை 53-54)

என்கிறார். ஆபுத்திரன் வரலாறு கேட்ட மணிமேகலை, பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளத் துறவுக்கோலம் கொள்கிறாள். துறவுக் கோலம் கொண்டு காயசண்டிகை கூறியபடி ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள். காய சண்டிகையின் மூலம் ‘யானைத்தீ என்னும் அடங்காப் பசி நீங்க, பசி நோய் போக்கத் தன்னுடைய நாட்டிற்கு மணிமேகலை புறப்பட்டுச் செல்கிறாள். 

மணிமேகலையின் துறவு வாழ்க்கையை விரும்பாத சித்ராபதி உதயகுமாரனைத் தூண்டிவிடுகிறாள். இதனால் அரசன் மூலம் சிறை செல்லும் நிலைமைக்குக் கூட மணிமேகலை தள்ளப்படுகிறாள். தேவி அவளைத் துன்புறுத்துகிறாள். அத்துன்பத்திலிருந்து தன் மந்திரத்தால் விடுபடுகின்றாள். சிறையிலும் அறத்தினைச் செய்கிறாள். அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்குகிறாள். காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களை தேவிக்கு எடுத்துரைக்கின்றாள். அறவண அடிகள், மாதவி, சுதமதி ஆகியோர் மணிமேகலையை மீட்டுச் சென்றனர். இதன்மூலம் ஆசிரியர், துன்பமான நிலையிலும் மணிமேகலை அறம் செய்யத் தவறவில்லை என்பதை உணர்த்துகிறார். 

மணிமேகலை காப்பியத்தலைவியாக உயர்வு பெற்றதே அவள் பசிப்பிணி போக்கும் அறத்தினை மேற்கொண்டதால்தான் என்று இக்காப்பியத்தின் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார். அறம் செய்வோரின் தகுதியை,

பத்தின் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்து. (பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை 73-74)

முதலில் அமுதசுரபியில் பிச்சையிடும் தகுதியுள்ளவள் ஆதிரை என்று காயசண்டிகை கூறுவதாக இந்நூலின் ஆசிரியர்,

வான் தருகற்பின் மனை உறை மகளரில்
தான் தனி ஓங்கிய தனமையன் அன்றோ. (பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை 77-78)

இதன்மூலம் மணிமேகலைக் காப்பியத்தில் அறத்துடன், அறம் செய்வோரின் தகுதியும் வரையறுக்கப்படுகிறது. பசிப்பிணி போக்கும் அறத்துடன் கற்பறத்தையும் இந்நூலின் ஆசிரியர் போற்றுகிறார். மேலும் திருவள்ளுவர் திருக்குறளில்,

அற்றார் அழிபசி தீர்த்தல் அதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் - 226)

இக்குறளில் செல்வம் பெற்றவர்கள் தம் எதிர்காலத்துப் பயனுக்கென அதனைச் சேமித்து வைப்பர். சேமித்து வைப்பதற்குரிய நல்ல இடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது பசியால் வாடும் மக்களின் வயிறுதான் என்று வள்ளுவர் கூறுகிறார். மணிமேகலை வலியுறுத்தும் இப்பேரறத்தினையே, வள்ளுவரும் தன் குறளில் எடுத்துக் காட்டுகிறார்.

பசியை நீக்கும் மருத்துவன் பசிப்பிணி மருத்துவன். சங்ககால வள்ளல் பெருமக்கள் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்களாகவே விளங்கினர். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் தேசியக்கவி பாரதி. இன்றும் பசி என்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது மனமுவந்து உணவு வழங்கும் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்தான். பசிப்பிணி போக்குவதே தலைசிறந்த அறம் என்று சாத்தனார், தன் காப்பியத்தில் குறிப்பிடுகிறார்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard