New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 07. மணிமேகலையில் ஆசீவகம் - முனைவர் வேல். கார்த்திகேயன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
07. மணிமேகலையில் ஆசீவகம் - முனைவர் வேல். கார்த்திகேயன்
Permalink  
 


7. மணிமேகலையில் ஆசீவகம்  - முனைவர் வேல். கார்த்திகேயன்

 

மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றெனத் திகழ்வதாகும். இந்நூலைப் பாடியவர் மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவர் பௌத்த சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே இயற்றினார் என்றால் மிகையாகாது. மேலும் தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த சமயங்களைப் பற்றியும் பற்றி எடுத்துரைத்து, அதில் தம் சமயத்தை முன்னிறுத்தும் பாங்கு போற்றுதற்குரியது. குறிப்பாகப் புத்த மதக் கருத்துகளைத் தொடக்கம் முதல் இறுதிவரை கூறி வலியுறுத்துகின்றார்.

கம்பர் தாம் இயற்றிய காவிய நூலுக்கு இராமகாதை என்றுதான் பெயரிட்டார். அது கம்பராமாயணம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்குத் திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். ஆனால் காலப்போக்கில் திருத்தொண்டர் புராணம் என்றாகிப் பின் பெரியபுராணம் என்று தற்காலத்தில் வழங்கப்படுகிறது. அதுபோல சீத்தலைச் சாத்தனார் இந்நூலுக்கு மணிமேகலை துறவு என்று பெயரிட்டார். காலப்போக்கில் மணிமேகலை என்று நூற்பெயராக இன்று வழங்கப்படுவது குறிக்கத் தக்கதாகும்.

மணிமேகலையில் முப்பது காதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இருபத்தேழாவது காதையாக சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை அமைந்துள்ளது. மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பலவகையான சமயவாதிகளையும் கண்டு அவரவர் சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி அவர்பால் சென்று அளவைவாதி முதல் பூதவாதி இறுதியாகவுள்ள அனைவரையும் வினவ, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை உரைத்தனர். இந்நூலின்கண் அளவைவாதம், சைவவாதம், வைணவ வேத வாதம், ஆசீவக வாதம் நிகண்ட வாதம் சாங்கிய வாதம் வைசேடிகவாதம், பூதவாதம் என்னும் பல சமயங்கள் நிகழ்த்திய வாதங்களோடு குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசீவகவாதம் பற்றிய செய்திகளைப் பற்றிப் பாடலடிகளில் 110 - 170 அடிகள் ஈறாக 60 அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

 

 



ஆசீவக மதம்

 

ஆசீவக மதம் இன்று அழிந்து போனதும் மறந்து போனதும் எனக் கூறுகின்ற வகையில் இந்த ஆசீவக மதம் குறிக்கப் பெறுகின்றது. இந்த மதம், வடஇந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தினைத் தோற்றுவித்தவர் மக்கலி புத்தர் என்று கூறுவர். மக்கலி புத்தர் என்னும் சொல் பாலி மொழிச் சொல்லாம். இச்சொல்லுக்குத் தமிழில் மாட்டுத்தொழுவம் என்று பொருள்படும். தமிழில் கோசால என்னும் அடைமொழி கொடுத்து கோசால மக்கலி புத்தர் என்றும் இவரை அழைப்பர். குறிப்பாகத் தமிழ் நூல்கள் மற்கலி என்று கூறுவது குறிக்கத்தக்கது. 

ஆருகத மதத்தை ( சமண மதத்தை ) உண்டாக்கிய மகாவீரரும் பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே சமகாலத்தில் வாழ்ந்தவர் மக்கலி புத்தர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்விப்பட்டு அவரிடம் சென்று சீடராக விரும்பினார். ஆனால் மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர் மற்கலியை சீடராக ஏற்கவில்லை. இருப்பினும் மற்கலி விடாமுயற்சியோடு மகாவீரரின் இசைவினைப் பெற்று அவருடன் சில காலம் தங்கியிருந்து பிறகு அவருடன் வேறுபட்டு தனியே பிரிந்து சென்று ஒரு புதிய மதத்தைத் தோற்றுவித்தார். அந்த மதந்தான் ஆசீவக மதம் அல்லது ஆஜீவக மதம் என்பதாம். ஆருகத மதக்கொள்கைகள் சிலவற்றையும் தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி உருவாக்கியதே ஆசீவக மதம் என்று சொல்லப்படுகிறது. 

· ஆசீவகர், பௌத்தர், சமணர், வைதீகர் ஆகிய மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது. 

· ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட்சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாக்கப் பரணியுரையினால் அறியப்படுகின்றது.

தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப் 
பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே ( தக்கயாக.376 )

· ஆசீவக மதத்தவரும் திகம்பர சமண மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். ஊடையின்றி இருத்தலும் குளியாமல் அழுக்கு உடம்புடன் இருத்தலும், இவைபோன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு இவ்விருசமயத்தவரும் ஒரே சமயத்தவர் என்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம்.

வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை என்பது அறியத் தக்கது.

 

 



ஆசீவகம் - நூல்கள்

 

ஆசீவகம் பற்றி அறிந்திட உதவும் நூல்கள் நவகதிர், மணிமேகலை, சிவஞான சித்தியார் பரபக்கம் தக்கயாக்கப் பரணி திவாகர நிகண்டு பிங்கல நிகண்டு நீலகேசி, முதலியனவாம்.

 

மணிமேகலையில் கூறப்படும் ஆசீவக மதக் கொள்கைகள்

 

இறைவன் 

எல்லையில்லாத பொருள்களி;ன் இடத்தில் எங்கும் எப்பொழுதும் நீங்காமல் பொருந்தி விளங்குபவனும் வரம்பில் அறிவினையுடையவனுமாகியன் எங்கள் இறைவன் மற்கலி யாவான். 

எல்லையில் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பில் அறிவன் (27: சமயக் 110-112 )

ஐந்து பொருள்கள்

நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு ஆகிய ஐந்தும் மற்கலி உரைத்த நூற்பொருள்கள் ஆகும். மேலே கூறிய உயிர் தவிர்த்த நால்வகை அணுக்கள் தாம் தம்மை உற்றும் கண்டும் உணர்ந்திடுமாறு ஒன்று ஒன்றினுள் புகுமாறு செறித்த வழியும் ஒன்றாகா வகையில் கூடுதலும் பிரிதலும் செய்யும். மேலும் மலையாகவும் மரமாகவும் உடம்பாகவும் திரண்டு உருவாவதுமுண்டு. அவை வெவ்வேறாகப் பிரிந்து விடுவதும் உண்டு. உயிர் என்பது திரள்வதும் விரிவதுமாகிய அணுக்களின் அக்கூறுபாடுகளை அறிவது ஆகும். என்பதைக் குறித்த பாடலடிகள்

இறைநூற் பொருள்களைந்
துரந்தரும் உயிரோடு ஒருநால் வகையணு
அவ்வணு வுற்றுங் கண்டும் உணர்த்திடப் 
பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும்
நிலம் நீர் தீக்காற் றென நால் வகையின 
மலைமரம் உடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்
வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும் 
அவ்வகை யறிவது உயிர் எனப்படுமே (27: சமயக்.112 - 119)

 


ஐந்து பொருள்களின் இயல்புகள்

நில அணுவின் இயல்பு வன்மையுடையதாக இருக்கும். நீரணுவின் இயல்பு குளிர்ச்சியும் சுவையும் உடையதாகவும் நிலத்தையடைந்து நீரும் விரிந்து நிற்கும். தீயணு எர்ப்பதும் மேல்நோக்கி எழுவதும் இயல்பாக உடையதாகும். காற்று அணு குறுக்கிட்டு அசையும் இயல்பினையுடையதாகும். உயிர் அணு பிரிந்தால் நான்கு வகைப் பொருள்களோடு சேர்ந்து கரைந்து விடும் என்கிறார்.

வற்ப மாகி யுறுநிலந் தாழ்ந்து
சொற்படு சீதத் தொடு சுவை யுடைத்தாய்
இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத்
தெறுதலு மேற்சேரியல்புமுடைத்தாம்
காற்று விலங்கி யசைத்தல் கடன் (27:சமயக் 120 - 124 )

இக்கருத்தினையொப்பு நோக்கிக் கூறும் நிலையில் நீலகேசி என்னும் நூலில் காணலாகும் பாடலடிகளை நோக்கி உணரலாம். 

நிலநீர் எரிகாற்றுயிரின் இயல்பும்,
பலநீ ரிவற்றின் படுபாலவைதாம், 
புலமா கொலியொன்றொழிய முதற்காம்.
சசுலமா யது தண்மை யையே முதலாம் ( நீலகேசி பா.எண் 675)

எரித்தல் முதலாயின தீயினதாம் 
செறித்தலிரை யோடிவை காற்றினவாம்.
அறித்தல் அறிதல் அவைதாம் உயிராங் 
குறித்த பொருளின் குணமாமிவையே (நீலகேசி பா.எண்.676)

 

வேறாகிய இயல்புகளையும் எய்தும் விகாரமுடையவாயினும், கேடுற்றுச் சிறிதும் இல்லையாமாறு அழிவது கிடையாது. புதிதாக ஓரணுத் தோன்றி வேறோர் அணுவுக்குட் புகுவதுமில்லை. மேலும் அநாதியான நீரணுக்கள் அத்தன்மையவான நிலவணுக்களாய் மாறுவதில்லை. ஓரணு இரண்டணுக்களாய்ப் பிளந்து போவதும் கிடையாது. மேலும் நெல் முதலியவற்றைக் குற்றிப்பெறும் அவல்போல் பரப்பதும் விரிவதும் இல்லை. உலாவுவதும் தாழ்வதும் உயர்வதுவவும் உண்டு. 

நில அணுக்களால் பொருந்திய மலை கரைந்து மணலாகிக்ப பிறவற்றோடுகூடும். பலவாய்த் தம்மிற் செறிந்து கூடியிருக்கும் அவை பின்னரும் அக்கூட்டத்தில் பிரிந்து தனித்தனி அணுவாகவும் மாறும். மரம் மன்னிய வைரமாகி, வன்மையுடைய மரமுமாகும். விதையாகி முளைக்கும் தேயாத முழுத் திங்கள் போல வட்டமான செழுமை பொருந்திய நிலப்பரப்பாகும்.

இவை வேற்றியல் பெய்தும் விபரீதத்தால் 
ஆதி யில்லாப் பரமா ணுக்கள் 
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா 
புதிதாய்ப் பிறந்தொன் றொன்றில் புகுதாம்
முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா 
ஓன்றிரண்டாகிப் பிளப்பதுஞ் செய்யா
அன்றியும் அவல் போல் பரப்பதுஞ் செய்யா
உலாவுந் தாழுமுயர்வதுஞ் செய்யும்
குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தந் தன்மைய வாகும்
மன்னிய வயிரமாய்ச செறிந்து வற் பமுமாம்
வேயாய்த் துறைபடும் பொருளா முளைக்கும்;
தேயா மதிபோல் செழுநில வரைப்பாம்( 27 சமயக் 124 - 137)

தொழில்களும் அளவுகளும்

எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் இந்த நிலமுதலிய நால்வகையணுக்களும் நில நீர் முதலிய பூதங்களாக நிலவுமிடத்து தத்தமக்குரிய அளவிற் குறைதலும் சமமாதலுமின்றி நிலமாகிய பூத நிகழ்ச்சிக்கு நிலவணு ஒன்று கூடின் நீரணுவுக்கு முக்காலும் நெருப்புக்கு அரையும் காற்றுக்கு காலுமாய்ப் பொருந்தும். பொருந்தும் அணுக்களுள் மிக்கவற்றால் இன்ன பூதமெனப் பெயர் கூறப்படும். இவ்வளவாக அணுக்கள் செறிவுற்றாலன்றி நிலமாய் வன்மையுற்றிருப்பதும் நீராகிப் பள்ளம் நோக்கி ஓடுவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் இயங்குவதும் ஆகிய தொழில்களை செய்யாது.

இவ்வணுக்கள் பூதமாய் நிகழுமிடத்து ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டும் அணுத்திரள் தம் அளவிலர் குறைந்தர் தம்மோடு கூடும் பிற அணுக்களின் அளவிற்கொப்பவோ கூடாது. 

நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழிற் 
குறைந்தும் ஒத்துங் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரைகாலாய் உறும் 
துன்று மிக்கதனாற் பெயர் சொலப்படுமே ( 27 சமயக் 138-145)

இவ்விடத்திற்கு அரண் சேர்க்கும் நிலையில் சிவஞான சித்தியார் பரபக்கம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

இரண்டும்கூடும் நெறி நில நான்கு நீர் மூன் 
றின்றிரண் டழல்கா லொன்றா விசைந்திடும் 
பூமி யிவ்வா றென்ளு நீர் தீ 
காலாதி யீண்டுவ தென்றியம்பும் ( சிவ. சித். புர. ஆசிவ .பா.7)

 

கண் முதலிய பொறிகளால் எளிதில் காணமுடியாத அணுக்களை நுண்ணுணர்வு கொண்டு நுணுகிக் கண்ட ஞானக்கண்ணுடையவர்கள் ஒவ்வோர் அணுவினையும் கண்டறிகுவர். புதுமாய் திரண்டு நின்ற வழியும் அணு உண்மையை யறிகுவார் அல்லர். அது எது போல் என்றால் ஞாயிறு மறைந்த மாலைப்பொழுதில் மயிர் ஒவ்வொன்றாய் இருத்தலைக் காணமுடியாது. மிகுதியாய்த் திரண்டுள்ள மயிர்க்கற்றையின் அடர்த்தியான தோற்றத்தைக் காண்பதை ஒத்து நிற்கும். 

இங்கு அறியாமை சூழ நிற்கும் இயல்பு காட்டி நிற்கின்றது இவ்வணுவாதம். சுருங்கக் கூறின் புத்தர், சமணர், வைபாசிகர், சௌத்திராந்திகர் என்ற பலர்க்கும் உடன்பாடு உண்டு. 

இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச்
சிக்கென் பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சடுவதும் காற்றாய் வீசலும் 
ஆய தொழிலை யடைந்திட மாட்டா
ஓரணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுளேனோர் 
மாலைப் போதில் ஒரு மயி ரறியார்
சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும் ( 27 சமயக் 146-149 )

வீடுபேறு

வீடுபேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக உயர்ந்த சுழி வெண் பிறப்புற்று வீடுபேறு அடைவர்என்று சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார். கருமை. பச்சை நீலம் செம்மை பொன்மை வெண்மை ஆகிய இவ் ஆறுவகைப் பிறப்புகளிலும் பிறந்து முடிவில் தூய வெண்மை ( மிக உயர்நிலைப்பிறப்பு ) இவர்களே வீட்டுலகம் சென்று வீடுபேறடைவர். துன்பத்தை விரும்பாதோர் அவ்வீடு பேற்றிற்குரிய சுழி வெண்மை பிறப்பு எய்தும் தன்மையினை அடைந்தவர் ஆவார். இவ்வாறு முறையே பிறந்து வீடெய்தும் நெறி செம்போக்கு எனப்படும் நல்ல நெறியாம். இந்நெறியில் தவறித் துன்பமடைவது மண்டல நெறி என்று அறிய வேண்டும் என்கிறார் சாத்தனார்.

கரும் பிறப்புங் கருநீலப் பிறப்பும்
பசும் பிறப்புஞ் செம் பிறப்பும்
பொன் பிறப்பும் வெண் பிறப்பும்
என்றிவ் வாறு பிறப்பினு மேவிப்
பண்புறு வரிசையிற் பாற் பட்டுப் பிறந்தோர்
சுழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர்
அழியல் வேண்டா ரதுவுறற் பாலார்
இதுசெம்போக்கி னியல்பிது தப்பும்
அதுமண் டலமென் றறியல் வேண்டும் ( 27 சமயக் 150 -158)

இக்கருத்திற்கு வலுவூட்டும் வகையில் சிவஞான சித்தியார், பரபக்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்தியினைக் கண்டுணரலாம்.

வெண்மை பொன்மை செம்மை சுழிவெண்மை 
நீலம் பச்சை யுண்மை யிவ்வாறினுள்ளும் 
சுழி வெண்மை யோங்கு வீட்டின் 
வண்மையதாகச் சேரு மற்றிவை யுருவம் பற்றி
யுண்மையவ் வெட்டுத் தீட்டுக் கலப்பின லுணருமென்றான். ( சிவ சித். பர.ஆசீவ பாடல் 8)

மேலும் பல்வகைப் பிறப்புக்கட்கும் நிறங்கூறும் இயல்பு சீவக சிந்தாமணியிலும் இடம் பெறுவதனையும் கண்டுணரலாம். பெரியாழ்வார் முத்திப் பேற்றுக்கு உரிய உயிரை வெள்ளுயிர் என்று திருப்பல்லாண்டில் குறிப்பது வியப்பாக உள்ளது.

 

84 இலடசம் மகா கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திருந்து உழலும் என்றும் அந்தக் காலம் கடந்ததும், அவை வீடுபேறு அடையும் என்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடு பேறடையா வென்றும் கொண்டது இந்த ஆசீவக மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும் ஒரு நூலுருண்டையைப் பிரித்தால் நூல் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ நீளாதது. போல உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான். அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் காலநியதியைக் கடந்து. தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திருந்து உழல வேண்டும் என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி, அவன் வீடுபேறு அடைந்தாக வேண்டும் என்பதும் இம்மதக்கொள்கைகளில் சிலவாம்.

முற்பிறப்பில் நிகழ்தல் -- விதி

நற்பேறுகளைப் பெறுவதும் செல்வம் முதலியன யாவும் பெற்றவற்றை இழந்து விடுவதும, இன்பம் பெறுதலும், பல்வகை இடையூறு உண்டாதலும் பொருந்திய விடத்தே பொருந்தியிருத்தலும், இடத்தினின்று இடத்தையும் ஒக்கல் பொருள்ஏவல் முதலியவற்றையும் பிரிந்து நீங்குதலும் (வெளிநாட்டுக்குச் செல்லுதல் ) மூப்பு அடைதலும், துன்பமும் இன்பமும் அடைவதும் பிறப்பு இறப்புகளும் ஆகியன யாவும் கருவயின் தோன்றிய போதே உயிர்களைச் சார்ந்துவிடும். இன்பமும் துன்பமுமாதகிய இவைகளும் அணுவென்று கூறப்படும் முன்னே எய்திய நலந் தீங்குட்கு ஏதுவாகிய ஊழே அவை பின்னரும் அவை எய்துதற்கேதுவாம்.

பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும்
உறுமிடத் தெய்தலுந் துக்ககக முறுதலும் 
பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும் 
கருவிற் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத் தகும்
முன்னுள வூழு பின்னுமுறு விப்பது
மற்கலி நூலின் வகையிது வென்னச்
சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு ( 27 சமயக் 159- 166)

நிறைவுரை

மணிமேகலை என்னும் நூலில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையின் வழியாக பலவகைச் சமயவாதிகளையும் கண்டு அவர்கள் தம் சமயப்பொருள்களைக் கேட்க விரும்பினாள். அக்காலத்து நிலவிய பிறசமய வாதங்களையும் எடுத்து மொழிந்து அதில் தமது முன்னிறுத்திப் பாடுவதே சீத்தலைச் சாத்தனாரின் நோக்கத்தினை அறிய முடிகிறது. மணிமேகலை நீலகேசி என்னும் நூல்களில் ஆருகமதம் ( சமணம் ) வேறு ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் இந்த மதம் சமண மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதுவது என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. யாதும் செய்யாதே; சும்மா இரு என்பது ஆசீவகர் குறிக்கோள் என்பது வெளிப்படுகிறது. இறைவன் ஐந்து பொருள்கள், ஐந்து பொருள்களின் தன்மை, ஐந்து பொருள்கள் மாறும் நிலை அணுக்களின் குண்ங்கள், ஆறுவகைப் பிறப்பு வீடுபேறு முதலான பல செய்திகள் விரவிக் கிடப்பதனை ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.


-- Edited by Admin on Wednesday 22nd of March 2023 12:38:14 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard