New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 04. மணிமேகலைக்குப் பின் பௌத்தம் முனைவர் மு. மரகதவல்லி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
04. மணிமேகலைக்குப் பின் பௌத்தம் முனைவர் மு. மரகதவல்லி
Permalink  
 


 4. மணிமேகலைக்குப் பின் பௌத்தம்  முனைவர் மு. மரகதவல்லி

 

அச்சம் தருகின்றவைகளைப் பார்த்து வணங்கினான் ஆதிமனிதன். பின்னர் அன்பு வயப்பட்டு வந்த வழிபாடே இறைவழிபாடு எனப்பட்டது. மனித மனத்தைப் பக்குவப்படுத்தும் சமயங்கள் பல பண்டைய இந்தியாவில் நிலவியதைச் சமய நூல்கள் காட்டுகின்றன. அச்சமயங்களுள் ஒன்றான பௌத்தத்தின் தோற்றத்தையும் கொள்கையையும் அறிவதுடன் மணிமேகலை காப்பியத்திற்குப் பின்பு இருந்த பௌத்த நிலையை ஆராய்கின்ற வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

மனிதன் தன் ஆற்றலுக்கு மீறிய சக்தி ஒன்று தன்னை ஆட்டுவிப்பதாக உணர்ந்தான். அந்த சக்தியிடம் தன்னை அடைக்கலப்படுத்திக் கொண்டான். 

கோசாம்பி என்ற ஆய்வாளர், தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அச்ச உணர்வே காரணம் என்றார். பிராய்ட் மனித மனத்தில் தோன்றிய அச்சம், குற்ற உணர்வு போன்ற மனவியல் பண்புகளின் பரிணாம வளர்ச்சியே வழிபாட்டு நெறிக்கு வித்திட்டது (ச. கணபதிராமன், திருநெல்வேலி பகுதியில் சிறுதெய்வ வழிபாடு, ப.8)என்கிறார். மேலும்,

உணவைத் தேடி அலைந்து திரிந்த மனிதனுக்கு, மனம் என்று விழிப்புணர்வு பெற்றதோ, அன்றே இறைநாட்டம் தொடங்கிவிட்டது (மேலது, ப.8)

என்பன போன்ற கருத்துகள் வாயிலாக மனிதனிடம் தோன்றிய அச்சம், போராட்டம், விழிப்புணர்வு முதலிய பண்புகளே வழிபாடு தோன்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது.

மனித வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாகும். நிலங்களின் அடிப்படையில் திணைகளை வகுத்த தமிழன் முருகன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை என தெய்வங்களையும் வகுத்து வழிபடலானான். பண்டைய இந்தியாவில் வைதீக சமயம் அவை தன் சமயங்களான பௌத்தம், சமணம் போன்றவை செல்வாக்குடன் திகழ்ந்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட மதம் தான் பௌத்தமாகும்.

சாக்கிய குலத்தில் கபிலவஸ்து என்னும் நகரை ஆண்ட சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் மகனாகத் தோன்றினார் (கி.மு.563) சித்தார்த்தர். செல்வச் செழிப்பில் வளர்ந்த சித்தார்த்தருக்கு பதினாறாவது வயதில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு இருபத்தொன்பது வயதிலே இராகுலன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஒருமுறை சித்தார்த்தர் நகர்வலம் செல்லும் போது வயதில் மூத்த மனிதரையும், நோயாளியையும், பிணமான மனித உடலையும் கண்டார். அவர் கண்ட காட்சிகள் அவர் மனதில் பல வினாக்களை எழுப்பின. வினாக்களுக்கு விடை தேடி புறப்பட்டார். துன்பம் நிறைந்த மனித வாழ்க்கையை உதறித்தள்ளி உலகத்தாரை உய்விக்கும் வழி தேடி எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச் சென்றார். 



ஞானகுருவைத் தேடிச்சென்ற சித்தார்த்தர் தாமே போதி (அரச) மரத்தின் அடியில் தியானத்தில் அமர்ந்த போது மெய்ஞ்ஞான ஒளியைக் கண்டதால் புத்தர் ஆனார். புத்தரின் மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு பலர் சீடர்களானர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மொக்கல்லானர், மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யாயனர் ஆவார். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித்திரிந்து தமது கொள்கைகளைப் போதித்ததுடன் பிக்கு சங்கத்தை ஏற்படுத்தி பிக்குகளும் பிக்குணிகளும் கடைபிடிக்க வேண்டிய முறைகளை வகுத்தார். தமது எண்பதாவது வயதில் கி.மு.483 இல் குசி நகரில் மோட்சம் அடைந்தார்.

புத்தர் தமது கருத்துகளை பாலி மொழியில் வெளியிட்டார். புத்தரின் போதனைகள், அவரது சீடர்களால் விநயபிடகம், அபிதம்மபிடகம், சூத்திரபிடகம் என்று மூன்றாகத் தொகுக்கப்பட்டன. இத்திரிபிடகமே பௌத்த வேதம் என வழங்கப்படுகிறது. இப்பௌத்த வேதத்தில் பிற்காலத்தில் பல பிளவுகள் ஏற்பட்டு பிரிவுகள் உண்டாயின.

பௌத்தத்தில் ஹீனயாணம், மகாயாணம் என இரு பிரிவுகள் நிலவுவதைக் காணமுடிகிறது. புத்தரின் பழைய கொள்கைகளைப் பின்பற்றி வரும் பௌத்தமதம் தேரவாத பௌத்தம் (ஹீனயாணம்) என்றும், புத்தர் காலத்தில் இல்லாத புதிய கொள்கைகளைப் பின்பற்றி வரும் பௌத்தமதம் மகாயாண பௌத்தம் என்றும் வழங்கப்படுகிறது. ஹீனயாண பௌத்த நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்டன. மகாயாண பௌத்த நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தம் தமிழ்நாட்டில் புகுந்தது குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றன. கடைச்சங்க நூல்களுள் பௌத்தர்கள் இயற்றிய செய்யுட்கள் இடம் பெற்றிருப்பதிலிருந்து பௌத்தத்தின் தொன்மையை அறிய முடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் ஆட்சிக் காலத்தில் தான் பௌத்தமதம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் பரவியது என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாகவும் மகாவம்சம், தீபவம்சம் என்ற இரு நூல்களின் வழியாகவும் அறியலாம். மேலும் யுவான்சுவாங் என்ற சீனநாட்டுப் பயணியின் யாத்திரைக் குறிப்பும் இக்கருத்தை உறுதி செய்கின்றது. அசோகரால் அனுப்பப்பட்ட மகேந்திரன் என்ற புத்தபிக்குவால் தமிழ்நாட்டில் ஸ்தூபிகளும் விகாரைகளும் நிறுவப்பட்டன.



புத்தரின் பௌத்தமும் மகாவீரரின் ஜைனமும் (ஆருகதம்) கோசால மக்கலி புத்தரின் ஆசீவகமும் வைதீக மதமும் தமிழகத்தில் புகுந்தன. இந்நான்கு மதங்களும் முரண்பட்ட கொள்கைகளுடனும் பெரும்பகையும் கொண்டிருந்தன. இந்நான்கு மதங்களும் தமிழகத்தில் சமயப்பூசல்களைக் கிளப்பியது என்பதை மணிமேகலை,

ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண்ட பத்துப் பாங்கறித் தேறுமின்
பற்றா மாக்காள் தம்முடனாயினும்
செற்றமுங்கலாமுஞ் செய்யா தகலுமின்

என்று காட்டுகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலை என்ற காப்பியம் பௌத்த சமய காப்பியமாகும். இக்காப்பியத்தின் சிறப்பு குறித்து,

எளிய நடையில் கதை சொல்லும் தன்மையும்
பௌத்த சமய உண்மைகளையும் நீதிகளையும்
தெளிவாக எடுத்துரைக்கும் இயல்புமே இந்தக்
காப்பியத்தின் சிறப்பியல்புகள் எனலாம் (மு.வ.இலக்கிய வரலாறு, ப.97)

என்கிறார் மு.வ.

பாலிமொழியில் உள்ள பிடக நூல்களில் பௌத்த தத்துவமானது பன்னிரண்டு நிதானங்களில் கூறப்படுகின்றன. அவற்றைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் முப்பதாம் காதையில் மொழி பெயர்த்துக் கூறியுள்ளார். இதனை,

இந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின்
வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர்.
இவ்வூழ்வட்டம் சந்தி, கண்டம், காலம்,
குற்றம், வினை, பயன், நோய் காரணம்
என்னும் உறுப்பகளையுடையது. இச்சார்புகளை
அறுத்து வீடுபெறுவதே பௌத்தர்களின் 
நிர்வாண மோட்சமாகும். வீடுபேறடைவதற்கு
நான்கு உயர்ந்த உண்மைகளை அறியவேண்டும்.
நான்கு உண்மைகளாவன: 1.நோய் (துக்கம்)
2.நோய் காரணம் (துக்கோற்பத்தி) 3. நோய் 
நீங்கும் வாய் (துக்க நிவாரணம்) 4. நோய்
நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்) என்பன (மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்.19,20)

என்ற வரிகளிலிருந்து வீடுபேறு அடையும் வழிகளை அறியலாம். எனினும் பசிப்பிணி போக்குதல், ஆதரவற்றோரை ஆதரித்தல், சாதி வேறுபாட்டைக் களைதல், கல்வியின் மேம்பட்டவராயிருந்தால் அவரைத் தம் குருவாக ஏற்குந் தன்மை என விரிந்த மனப்பான்மை கொண்ட பௌத்தத்தினைத் தமிழர் ஏற்றுக் கொண்டனர் என்பதை அறிய முடிகிறது.



மணிமேகலையைத் தொடர்ந்து குண்டலகேசி, வீரசோழியம், சித்தாந்த தொகை, திருப்பதிகம், விம்பசார கதை என பௌத்தம் தமிழுக்கு வழங்கிய நூல்கள் பல. ஆனால் மணிமேகலையைத் தவிர மற்றவை செல்வாக்கிழந்து போயின. தமிழில் மணிமேகலைக்குப் பிறகு புத்தரின் வரலாறையும், பௌத்த கொள்கைகளையும் எளிய நடையில் சொல்லும் நூல் ஆசிய ஜோதி ஆகும். ஆங்கில அறிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’ (Light of Asia) என்பதைத் தழுவி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எளிய இனிய நடையில் புத்தரின் வரலாறை எழுதினார். கவிமணியின் ஆசியஜோதியில்,

உயிரைக் காப்பவனே - என்றும்
உயிர்க்கு உடையவனாம் (அருள் உரிமை, பா.எ.56)

என்றும்,

ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா! (புத்தரும் ஏழைச்சிறுவனும், பா.எ.94)

என்றும்,

வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புவதோ-ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதையா (கருணைக்கடல், பா.எ.146)

என்றும்,

முன்னைப் பிறப்பினால் செய்த வினை-யாவும்
முற்றி முதிர்ந்து முளைத்தெழுந்து
பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது
பித்தர் உரையென எண்ணினீரோ (மேலது, பா.எ.64)

என்றும்,
பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்
உலகின் இயற்கை; ஒழித்தலும் எளிதோ (புத்தரும் மகனிழந்த தாயும், பா.எ.221)

என்ற பாடல்வரிகளின் வாயிலாக உயிர்களைக் காத்தல், சாதி ஒழிப்பு, உயிர்க்கொலை புரிதலைத் தடுத்தல், வினைப்பயன் மற்றும் பிறப்பும் இறப்பும் போன்ற பௌத்தமதக் கொள்கைகள் புலப்படுகின்றன.

கவிமணியைத் தொடர்ந்து பாரதிதாசனும், புத்தரையும் அவர் கொள்கைகளையும் தன் கவிதையில் படைக்கிறார். புத்தர் கொல்லாமை என்ற நோன்பை உலகிற்கு வழங்கியவர். பாரதிதாசன், புத்தர் புகன்றார் இல்லை என்ற கவிதையில்,

பொன்னுயிர்கள் இன்னலுறப் புரிதல் வேண்டாம்
இத்தரையில் உனக்கூறு நேரும் போதில்
எவ்வாறு துடித்திடுவாய்? அதுபோல் தானே
அத்தனையாம் உயிருக்கும் இருக்கும்! (பாரதிதாசன் கவிதைகள், ப.419)

என்று உயிர்க்கொலைப் புரிதலைப் புத்தர் வன்மையாகக் கண்டிப்பதைக் காட்டுகிறார். மேலும் அன்றிருந்த சமயப் போராட்டத்தில் சமணர்களும், சைவர்களும் புத்தர்மேல் பழி சுமத்தியதை,

இன்றுவரை புத்தர்மேற் பழிசு மத்த
இடைவிடா மற்புளுகி வருகின் றார்கள்
தன்னோp லாப்புத்தர் நெறியை வீழ்த்தித்
தம் சமயம் மேnலோங்கச் செய்யும் சூழ்ச்சி
நன்றோமோ? உலகுக்குக் கொல்லா நோன்பை
நடு வாய்ந்து முதற் புகன்றோர் புத்தர்தாமே! (மேலது,ப.420)

என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.


சென்னையில் இராயப்பேட்டையில் பௌத்த சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக இருந்து பௌத்த சமயக் கொள்கைகளை அயோத்திதாசர் மக்களிடையே பரப்பினார். அயோத்திதாசருடன் கொண்ட தொடர்பால் திரு.வி.க.வும் பௌத்த சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் நூல்களில் பௌத்தம் என்னும் நூலை எழுதியுள்ளார்.

வைதீக மதத்திலுள்ள சாதியின் பெயரால் நிகழும் தீண்டாமைக் கொடுமையை வன்மையாகக் கண்டித்தவர் புத்தர் ஆவார். தீண்டாமைக்கு எதிராக முதல் குரல் கொடுத்த புத்தரைத் தான் மராட்டிய தலித் இலக்கியத்தின் தோற்றுவாயாகத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். அம்பேத்கார் மராட்டியத்தில் 1956இல் பெரும்பகுதியான மகார் இன மக்களுடன் புத்தமதத்தைத் தழுவினார் என்பர். மேலும் 1967இல் நடைபெற்ற மகாராஷ்டிரா பௌத்த இலக்கியப் பேரவை மாநாடு ஒடுக்கப்பட்டோருக்குக் குரல் கொடுத்தது. 

மனிதகுலத்திடமும் பிற உயிர்களிடமும் அன்பு பாராட்டியவா புத்தர். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தூய்மையை வலியுறுத்தினார். கண்மூடித்தனமாக நம்பாமல் எதனையும் அறிவின் அடிப்படையில் அணுகும் பகுத்தறிவாளர் புத்தர். பெரியார் தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கும், சமயச் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைக்கும் எதிரான கருத்துகளை முன் வைக்கும் போது புத்தரின் கருத்தைச் சுட்டிக் காட்டினார். எனவே பெரியாரிய இயக்கங்களும் தலித்திய இயக்கங்களும் புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதை அறியமுடிகிறது.

தமிழ்நாட்டில் செல்வாக்கு அடைந்த பௌத்தம் உட்பிரிவுகளாலும், பிக்குகளின் கடமை மறந்த நிலையிலும் நலிவு அடைந்து சமண வைதீக மதங்களுடன் போராட இயலாமல் வீழ்ச்சியடைந்து விட்டது. பௌத்தமதம் தமிழ்நாட்டில் மறைந்த போதிலும், அக்கொள்கை தமிழோடு தமிழாய்ப் போய்விட்டது. வைணவத்தில் புத்தர் திருமாலின் அவதாரமாகின்றார். சைவத்தில் சாத்தனார், ஐயனார் என்ற பெயரில் தெய்வமாகின்றார். பௌத்தமத பெண் தெய்வங்களான மணிமேகலை அன்னபூரணியாகவும், தாராதேவி திரௌபதியாகவும் வழிபடப்படுகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் தோன்றிய அத்வைதத்தில் பௌத்த மதத்தின் மாற்றுருவத்தினைக் காண்கின்றனர். தமிழ்நாட்டில் பௌத்தமதம் நிலைபெறாவிட்டாலும் அதன் கொள்கைகளும் தெய்வங்களும் வைதீக மதத்தில் இடம் பெற்றுள்ளன. தாய்மொழி மூலம் மதக்கோட்பாட்டைப் பரவச் செய்த பெருமை பௌத்தத்தைச் சாரும். கல்வெட்டு முதல் கிராமத் தெய்வ வழிபாடு வரையிலும் பௌத்தத்தின் தாக்கம் நிலவிவருகிறது. மேலும் மனிதகுலத்தை முன்னேற்றும் அறிவு ஜீவிகளின் கருத்தியல் அடிநாதமாக மணிமேகலைக்குப் பின் பௌத்தம் திகழ்கிறது என்பதை மறுக்கமுடியாது.

 

துணைநின்ற நூல்கள்

 

1. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்.

2. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, ஆசியஜோதி.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard